Search This Blog

21.2.09

இடதுசாரிகளை பரிதாபகரமான இடத்தில் கொண்டுபோய் நிறுத்திய ஜெயலலிதா


ஏனிந்த முரண்பாடு?

காங்கிரஸ் எதிர்ப்பின் அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க.வின் போயஸ் தோட்டத்துக் கதவைத் தட்டினார்கள் இடதுசாரிகள். கூட்டணிபற்றி முதற்கட்டப் பேச்சுவார்த்தையெல்லாம் மங்களகரமாக நடந்தேறியும் விட்டது. மாநில அளவிலான தலைவர்கள் மட்டுமல்ல; அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர்களே அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளருடன் மேசைமுன் அமர்ந்து தேர்தல் மற்றும் கூட்டணிபற்றி விரிவாகவே பேசியுள்ளனர்.
அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தும் விட்டன.

இந்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா - கூட்டணிக்கு வருமாறு பகிரங்கமாகவே காங்கிரசுக்கு அழைப்புக் கொடுத்துவிட்டார். இது இடதுசாரிகளை ஒரு பரிதாபகரமான இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது!

செல்வி ஜெயலலிதா காங்கிரசுக்குக் கொடுத்த அழைப்பிற்குப் பிறகும் அ.இ.அ.தி.மு.க.வுடன் இடதுசாரிகள் கூட்டணி வைத்துக் கொண்டால், அதைவிடக் கொள்கைச் சேதாரம் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது; மக்கள் மன்றம் பரிகசிக்கும் நிலைதான் ஏற்படும்.


இத்தகு நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் என். வரதராசன் செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா காங்கிரசிற்கு அழைப்பு விடுத்துள்ளாரே என்ற கேள்விக்கு நேற்றுதான் இந்தக் கருத்தை அவர் கூறியுள்ளார். பொறுத்திருந்து தனது நிலைப் பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்துரைக்கும் (தீக்கதிர், 20.2.2009, பக்கம் 3) என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரசுடன் கூட்டு என்று நேற்று சொல்லியிருந்தால் என்ன - அதற்கு முதல் நாள் சொல்லியிருந்தால் என்ன? அடிப்படையில் இரண்டும் ஒன்றுதானே! இதில் பொறுத்திருந்து பார்ப்பதற்கு என்னவிருக்கிறது?

இதில் தயக்கம் காட்டுவதற்கு - தெளிவான முறையில் பதில் சொல்லிட முடியாத நிலை ஏற்பட்டதற்குக் காரணம் அக்கட்சி எடுத்துள்ள தவறான நிலைப்பாடே!

மாநிலச் செயலாளர் இப்படி ஒரு கருத்தினைத் தெரிவித்திருக்க, அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி என்ன சொல்கிறார்?

காங்கிரசுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எங்களைப் பொறுத்தவரை கட்சியின் பொதுச்செயலாளர் - ஜெயலலிதா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதி உடன்பாடு காண்போம் என்று கூறியிருக்கிறார். இந்தச் செய்தியும் அதே தேதியிட்ட தீக்கதிரில்தான் (20.2.2009) வெளிவந்துள்ளது. என்ன வேறுபாடு என்றால், யெச்சூரி சொன்னது முதல் பக்கத்திலும், மாநிலச் செயலாளர் என். வரதராசன் அவர்கள் கூறியிருப்பது மூன்றாம் பக்கத்திலும் வெளிவந்துள்ளது - அவ்வளவுதான்.

ஆனால், ஒரு கட்சியின் இரு வேறு பொறுப்புகளில் இருப்பவர்களிடையே நிலவும் முரண்பாடு இதில் முனைப்பாகவே தெரிகிறது
.
ஜெயலலிதா கூறியிருப்பது குறித்து மாநிலச் செயலாளர் கட்சி தன் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் என்று கூறுகிறார். தலைமைச் செயற்குழு உறுப்பினரோ அதற்கு நேர் எதிராக ஏற்கெனவே கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் பேசியபடி தேர்தல் உடன்பாடு காண்போம் என்று உறுதியாக - வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

மாநிலச் செயலாளர் அதுகுறித்து விவாதித்து முடிவு செய்வோம் என்ற கருத்துப்பட கூறியுள்ளார். அகில இந்திய அளவில் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) உள்ள ஒருவரோ யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை; ஏற்கெனவே மேல்மட்டத்தில் தலைவர்கள் பேசியது பேசியதுதான் - தேர்தல் உடன்பாடு தொடரும் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டார்.
இம்முரண்பாட்டுக்கு என்ன காரணம்? காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற கண்மூடித்தனம் - ஜெயலலிதா என்ற சந்தர்ப்பவாதியிடம் இவர்களைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது என்பதுதானே பொருள்.


மாநிலச் செயலாளர் தோழர் என். வரதராசன் கூறியுள்ளதிலாவது கொஞ்சம் பொறுப்புணர்ச்சியிருக்கிறது. ஆனால், அகில இந்தியப் பொறுப்பில் இருக்கும் தலைவரின் கருத்தோ போதிய சிந்தனையின்றி, கொள்கைப் பார்வையின்றி சொல்லப்பட்டதாகவே கருதப்படவேண்டியுள்ளது.

தேர்தலில் இரண்டொரு இடங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் இப்படி நடந்துகொள்வதன்மூலம், கம்யூனிஸ்ட் கட்சியின்மீது வெகுமக்களுக்கு நம்பகத்தன்மையில்லாது செய்து விட்டது.

இந்த நிலையில் உள்ளவர்கள்தான் எழுதுகிறார்கள், தி.மு.க. வின் பட்ஜெட்டை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பாராட்டியதற்கு, தி.மு.க. எதைச் செய்தாலும் பாராட்டுவதற்கு அறிக்கையோடு தயாராக இருப்பவர் என்று தீக்கதிர் எழுதுகிறது (தீக்கதிர்,20.2.2009).

தேர்தலில் உடன்பாடு எழுத்து ரீதியாக ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்பே அ.தி.மு.க. பொதுச்செயலாளரைக் கண்டித்து எழுதுவதற்குத் தயங்குகிறவர்கள்தான் இப்படி எழுதுகிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

------------------- நன்றி:- "விடுதலை" தலையங்கம் 21-2-2009

2 comments:

ராவணன் said...

கருணாநிதியை எல்லாம் ஒரு மனிதனாக நினைத்து அந்த ஆளின் அறிக்கையை வாந்திஎடுக்கும் மானமில்லா வீரமணிக்கு இடதுசாரிகளின் நிலை பரிதாபமானதா?

வீரமணி அண்ணாத்தே
பாப்பாத்தியின் முந்தானையில் தொங்கிக்கொண்டு அலைந்த அந்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன.

தமிழ் ஓவியா said...

கருணாநிதி மனிதன் அல்ல, வீரமணியையும் கொச்சைப்படுத்தியாகி விட்டது. உலகில் ஒரே யோக்கியன் நீங்க மட்டும்தான்.

இருந்துவிட்டுப் போங்கள். அதற்காக யாரையும் கொச்சைப்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை என்பதையும் நினைவில் வையுங்கள்.

விமர்சனம் நாகரிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த விமர்சனத்திற்கு மதிப்பு.