Search This Blog
19.2.09
இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கொலை வெறியை தடுத்து நிறுத்துங்கள்!
(இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையினர், புதுடில்லியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி அவர்களை அமைச்சர் துரைமுருகன் அவர்களுடன் பேரவையின் செயலாளர்கள் தமிழர் தலைவர் கி. வீரமணி, மய்ய அமைச்சர் ஆ. இராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரும், நீதியரசர் மோகன், நீதியரசர் கோகுலகிருட்டிணன், நீதியரசர் ஜனார்த்தனம், நீதியரசர் இராஜன், நீதியரசர் பாஸ்கரன், நீதியரசர் சாமிதுரை, நீதியரசர் சண்முகம், பேராசிரியர் தனபாலன் முதலானோரும் சென்று சந்தித்தனர் (18.2.2009).)
நல்ல முடிவை எதிர்பார்ப்போமாக!
இலங்கைத் தமிழர் நலவுரிமைப் பேரவையின் துணைக் குழு உறுப்பினர்கள் புதுடில்லி சென்று குடியரசுத் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதலியோரைச் சந்தித்து ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவல நிலையை விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் அண்மையில் ஆற்றிய உரையில், ஈழத் தமிழர்களின் நிலையை எடுத்துக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற குழுவினர் குடியரசுத் தலைவரிடம் நிலைமையை விளக்கிக் கூறியுள்ளனர்.
அதேபோல, காங்கிரஸ் தலைவரிடமும் அடுத்துச் செய்யப்பட வேண்டியவை குறித்து ஆக்க ரீதியான யோசனையைக் கூறியுள்ளனர்.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவேண்டும். அய்.நா. அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும், இலங்கைக்குப் பொருளாதாரத் தடையைக் கொண்டுவர வேண்டும் என்கிற முக்கிய கருத்துகளையும், ஆலோசனைகளையும் காங்கிரஸ் தலைமையிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இலங்கைப் போரினால் பலியாகும் தமிழர்களை அந்த நாட்டுக் குடிமக்களாகப் பார்க்காமல் அழிக்கப்படும் தமிழினத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தியா உடனடியாக தலையிடவேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இனப் பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட சர்வதேச சமூகம் மற்றும் அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில்மூலம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலியுறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
அழிவின் விளிம்பில் இருக்கும் ஈழத் தமிழர்களை, இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது போக மீதியுள்ள தமிழர்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட மிகச் சரியான நடவடிக்கைக்கு நற்பலன் கிட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலகத் தமிழர்கள் மத்தியிலே இருந்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் அளித்துள்ள உறுதி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எத்தனையோ வகைகளிலான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உணர்ச்சிவயப்பட்ட தமிழர்கள் சிலர் தற்கொலை வரை சென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் சார்பிலேயே அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவைத் தீர்மானங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினையில் ஈழத் தமிழர்கள் மட்டுமல்லர்; தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எவ்வளவு பெரிய இழப்புகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகியுள்ளனர் என்பதையும், இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 700 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினர் திரு. ஏ.கே. விஜயன் மக்களவையில் கூறியிருக்கிறார்.
வெளியுலகைப் பொறுத்தவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா முதலிய நாடுகளும் இந்தப் பிரச்சினையில் அக்கறை செலுத்தி, இலங்கையில் போர் நிறுத்தம் உடனடியாகச் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அய்.நா. மன்றமும் வேண்டுகோள் விடுத்தது உண்டு.
இவ்வளவுக்குப் பிறகும்கூட இலங்கை அதிபர் ராஜபக்சே, எங்கள் நாட்டு விஷயத்தில் யாரும் தலையிடவேண்டாம் என்றும், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ஆணவத்துடன் கூறிவருகிறார்.
இந்த அழுத்தங்களையெல்லாம்விட, இந்திய அரசு சொல்வதில்தான் - இந்தப் பிரச்சினைக்கான தீர்வு இருக்கிறது என்கிற நிலை உள்ளது.
இதனைப் புரிந்துகொண்ட நிலையில், இலங்கைத் தமிழர் உரிமைப் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் துணைக்குழு டில்லிக்கு அனுப்பப்பட்டு, குடியரசுத் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவரைச் சந்தித்துத் தேவையான அழுத்தங்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்பொழுது இந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்ற பந்து - ஆட்சி ரீதியாக குடியரசுத் தலைவரிடமும், கட்சி ரீதியாக காங்கிரஸ் தவைரிடமும்தானிருக்கிறது.
குடியரசுத் தலைவரைப் பொறுத்தவரை பிரதமர்தான் - மத்திய அரசுதான் இதில் முடிவு எடுக்கவேண்டிய நிலை; ஆட்சிக்கு வழிகாட்டும் இடத்தில் இருக்கும் கூட்டணியின் தலைவர் எடுக்கும் முடிவுதான் மிகமிக முக்கியமானது.
தமிழ்நாட்டிலிருந்து வந்த துணைக்குழுவிடம் ஒப்புதல் அளித்தபடி அதற்கான முயற்சிகளை காலம் தாழ்த்தாமல் அவர் எடுக்கவேண்டும்.
அரசியல் ரீதியாகப் பார்த்தாலும்கூட, ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாக அவர் எடுக்கவிருக்கும் சாதகமான முயற்சி - மக்களவைத் தேர்தலுக்குக்கூட கைகொடுக்கக் கூடியதுதான்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து 40-க்கு 40 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்களின் பலத்தால்தான் மத்திய அரசு கடந்த அய்ந்தாண்டுகளாகச் செயல்படுகிறது என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
ஈழத் தமிழர்ப் பிரச்சினை என்பது குறிப்பாக இந்த இரு மாநிலங்களுக்கும் அதிக பாத்தியதை உடைய ஒன்று என்று சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.
மனித உரிமை மற்றும் அரசியல் பார்வை என்று எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை நிலை நிறுத்தும் வகையில் மத்திய அரசும், காங்கிரஸ் தலைவரும் தெளிவான, உறுதியான முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
--------------நன்றி:-"விடுதலை" 19-2-2009
Labels:
பொதுவானவை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எத்தனையோ வகைகளிலான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உணர்ச்சிவயப்பட்ட தமிழர்கள் சிலர் தற்கொலை வரை சென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் சார்பிலேயே அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவைத் தீர்மானங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.//
இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத்தில் தக்க பாடம் புகட்டியாக வேண்டும்.
தி.மு.க . இவ்விசயத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். காங்கிரஸை நம்பி மோசம் போய்விடக்கூடாது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு
Post a Comment