Search This Blog

3.6.08

தந்தைபெரியார் பற்றி அறிஞர் அண்ணா


பெரியார் எப்படிப்பட்டவர் . . . . ?

கல்லூரி காணாத கிழவர்!

காளைப்பருவம் முதல் கட்டுக்கடங்காத முரடர்!

அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்க வேண்டுமென்று அறியாது கிளர்ச்சிக்காரர்!

பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாக பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்!

யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்!

கவர்னரைக் காண வேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அல்லவர்!

தமிழ், ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்!

ஆரிய மதம், கடவுள் எனும் மடுமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்கினரின் இச்சைக்குக் கட்டுப்பட மறுப்பவர்!

ஆம்! இராமசாமியின் கட்சியிலே தோட்டக் கச்சேரி கிடையாது!
முனிசிபல் வரவேற்புகளும், முடுக்கான விளம்பரங்களும் கிடையாது!
இலண்டன் கிளை கிடையாது; இலட்சாதிபதிகளின் பிச்சை கிடையாது.

சாமான்ய மக்களின் - இது அரசியல், இது மதம் என்று பகுத்துப் பார்க்கவும் முடியாத மிகமிகச் சாதாரண மக்களின் கூட்டுறவை மட்டுமே பெற்றவர்!

தேர்தலா . . . ? வேண்டாம்! பதவியா? கூடாது! துரைமார் தயவா? தா! அது இனிப்புப் பூச்சுள்ள எட்டி! என்றெல்லாம் கூறுபவர்!

சிறைச்சாலை என்ற பேச்சுக் கேட்டால் முகம் மலர்கிறது!

கிளர்ச்சி என்ற கருத்து இனிக்கிறது, இந்தக் கிழவருக்கு!

இவ்வளவு வயதாயிற்று - இவ்வளவு ஆண்டுகளாகப் பொதுவேலை செய்தார் - ஒரு ‘சர்’ பட்டம் பெற்றாரா?

ஜெனீவா போனாரா அரசு செலவில்?

அமெரிக்கா போனாரா அரசாங்கத்தில் செலவில்?

எதைக் கண்டார்?

எட்டுமுறை சிறைக்கோட்டம் போய்வந்தார்!

இவர்தானய்யா இராமசாமி நாயக்கர்!

பெரியார் ஒரு மாயாவி
தாசரான தமிழர்!
கிழவரான கிளர்ச்சிக்சாரர்!
சரி!

இப்படிப்பட்ட இராமசாமி, இப்படிப்பட்ட தமிழரைக் கொண்டு, எப்படிப்பட்ட காரியம் செய்ய முடியும் என்ற தைரியம் கொண்டிருக்கிறார்?
“தமிழர்கள் மட்டுமே தேசத்தை ஆளலாம்” என்ற தைரியத்தைக் கொண்டிருந்தார்!
எப்படி?

எப்படி எனில், அவர் ஒரு மாயாவி!
ஜால வேடிக்கைக்காரர்!

‘வேடிக்கை பேசாதே’ என்று கூறுவீர்!
வேடிக்கையல்ல நாம் கூறுவது!

தாசரான தமிழரைக்கொண்டு, வெறும் கிளர்ச்சிக்காரக் கிழவரொருவர் தேசத்தை ஆளலாம் என்று தைரியம் கொண்டுள்ளார் என்றால், மாயவித்தை தெரிந்தவராக இருந்தாலன்றி வேறு எப்படி முடியும்?

அவர் மட்டுமா, அன்பர்களே!
சிற்பி, ஓவியக்காரன், தொழிலாளி, இசைவாணன் இவர்களெல்லாம் மாயாவிகளே!
அந்த மாயாவி இனம்தான் பெரியார்!


பெரியாரின் பெரும்பணி

நாலைந்து சிறு வட்டில்கள், அவற்றிலே வண்ணக் குழம்புகள், கையிலே ஓடு, சிறு பூச்சிடும் கோல், எதிரே ஒரு திரை, இவ்வளவுதான்! இவற்றைக் கொண்டு கடலை, கன்னியரை, கனி குலுங்கு சோலையை, காவலர் அஞ்சும் களத்தை, புன்னகையை, மெல்லிடையை, கண்ணீரை, விண்ணழகை, கதிரோனை, மாலை மதியை, இன்னொரன்ன பிறவற்றைப் படைக்க முடியுமா? அதோ ஓவியக்காரனாகிய மாயாவியைப் பாருங்கள்!
இப்படி அப்படி தீட்டுகிறான்; ஏற இறங்கக் கவனிக்கிறான். இரவும் பகலும், களமும் வளமும், கனியும் பணியும், அவன் இடும் ஏவலுக்காகக் காத்துக் கிடக்கின்றன. ஓவியக்காரன் ஒரு மாயாவி! மண்ணிலே பொன் காண்பீரோ? மாயாவியான தொழிலாளி காண்கிறான்!

உப்பு நீரிலிருந்து முத்து எடுக்கிறான்!
காட்டிலிருந்து வாசனை எடுக்கிறான்!
விஷத்தைப் போக்கி விளையாட்டுக் கருவியாக்குகிறான்.

எதைத் செய்யாமல் இருக்கிறான் அம் மாயாவி?
தோலைத் தட்டுகிறான்; நாம் கனிக்கிறோம்!
நரம்புகளைத் தடவுகிறான்; நாம் நாத வெள்ளத்தைப் பருகுகிறோம்!
என்னவோ கூறுகிறான் - அது நம்மை ஏதேதோ உணர்ச்சிகளில் கொண்டுபோய் ஆழ்த்துகிறது.
இவை இசைவாணனாம் மாயாவியின் செயல்!

இதனால் அது ஆகுமோ என்ற கேள்விக்கு இடமுண்டோ இங்கு?
மண்ணிலே தங்கம் ஏது? கடலிலே முத்து ஏது?
தட்டுத் தடவலிலே இன்பம் ஏது?
எண்ணத்திலே படைப்பு ஏது?
“எப்படி முடியும்” என்று தொழிலாளி, இசைவாணன், ஓவியக்காரன் ஆகியோரைக் கேட்டால், அவர்கள் நகைப்பார்கள். “என்னே இவன் குறை மதி” என்று எள்ளி நகையாடுவர்.

மண்ணுக்குள்ளே நெடுந்தூரத்திலே புதைபட்டுக் கிடக்கும் பொன் இருக்குமிடமும், எடுக்கும் விதமும் பாட்டாளி அறிவான். தெரியாதான், ‘இதிலே இதுவா, எப்படி?’ என்று கேட்பான்.

பெரியார் இராமசாமியின் பெரும்பணி இதுபோன்றதே!

பெரியார் அறிவார்

அவர் அறிவார், தாசராக உள்ள தமிழர் தரணி ஆண்டவர் என்பதும், தரணி ஆண்ட காலத்திலே தன்மானத்தை ஓம்பினர் என்பதும் மானத்தையும் உரிமையையும் பெரிதெனக் கொண்ட தமிழரிடை சாதிப்பித்தும், வைதீக வெறி, அடக்கியாளும் ஆணவம், சுரண்டிப் பிழைக்கும் சூது ஆகியவை கிடையா என்பதும், களத்திலே கடும் போரிடும் வீரர்கள் கவடரின் பொறியிலே வீழ்ந்தனர் என்பதும், மீண்டும் தம்மை உணரும் தன்மை பெற்றுவிட்டால், தமிழ் இனம் தாசரானதற்குள்ள காரணத்தைக் கண்டறிந்துவிட்டால், அவர்கள் கொலைவாளினை எட்டா, மிகு கொடியோர் செயல் அறவே என்று முழக்கமிட்டுக் கிளம்புவர் என்பதும், தமிழரின் இன்றைய நிலை தாழ்வுடையது, இடர் மிகுந்தது என்ற போதிலும் தங்கள் இனத்தைக் கெடுக்கும் கொள்கைகளை அவர்கள் நீக்கிவிட்டால், களை எடுத்த வயலாவர் - விழித்தெழுந்த வேங்கையாவர் என்பதும் பெரியார் அறிவார்.

மனி மேலே மாசு! மடு மேலே பாசி! வயலிடையே களை!

தமிழர் - அவர்களுக்குள் இந்நாள் நிலவும் தகாதாரின் கூட்டுறவு!

மாசு துடைத்திடுக - பாசி போக்கிடுக - களை நீக்குக - கவடரின் பிடியைப் போக்குக என்று கனிவுடன் கூறுகிறார் கடமை வழி நிற்கும் கிழவனார்!

தைரியம் தந்த தளரா உழைப்பு

அது மட்டுமல்ல, எங்ஙனம் - பிறர் முடியுமா என்று கேட்கும் போதும், உண்மையாகவே செய்ய முடியாதிருக்கும் போதும், ஓவியக்காரனும் இசைவாணனும் தங்கள் திறமையினால் இன்பத்தை அளிக்கின்றனரோ, அதுபோல, இவ்வளவு தாழ்நிலை அடைந்துள்ள தமிழரைக் கொண்டு காலவேகம், கருத்து வேகம், பொதுவாகவே மக்களிடையே உள்ள விழிப்பு ஆகியவற்றையும் அறிந்திருக்கும் - இரசனைக்காகவோ சொற் பெருக்காற்றவோ மட்டும் பயன்படும் அறிவாக அதனைக் கொள்ளாமல், மக்கள் விடுதலைக்கு, மறுமலர்ச்சிக்கு, இன எழுச்சிக்கு அந்த அறிவைத் துணைகொள்ளும் திறனும் அவரிடம் இருப்பதால், அந்தத் திறமை, இன்பதுன்பம் எனும் சாணையிலே தீட்டப்பட்டுக் கூராக்கப்பட்டிருப்பதால், அந்த இராமசாமியால் தமிழர்களும் ஆள முடியும் என்று தைரியமாகக் கூற முடிகிறது.

அந்த இராமசாமியும் ஏடு தாக்கியதாக இருந்திருப்பின், நாடு ஆள்வது என்பதற்காகக் கூடுவிட்டுக் கூடு பாய்வது அரசியல் யூகம் என்று கொண்டிருப்பார்; கனமாகி இருப்பார்; ஆனால் இனம் மெலிந்து போயிருப்பார்.

துரைமாரின் தயவைத் தேடுபவராக இருந்தால், ஒரு ‘சர்’ ஆகியிருப்பார். ஆனால், இனவிடுதலைக்கான எழுச்சி ஏற்பட்டிராது.

அவர் கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான் அரசியல் என்றால், பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கிப் பாராளும் உறுப்பினராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர் மிகுந்த காரியத்தில் இறங்கினார்.

அவருக்கு நிச்சயமாகத் தைரியம் இருக்கிறது. வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று!

அவர் ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை; தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை!

தமிழன் ஒரு நாட்டுச சொந்தக்காரன்!
தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன்!

இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு மாற்றாரின் அடிமையாக உழல்கிறான்!

ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு.

இகம், பரம் என்ற மாய மொழி கேட்டு ஏமாந்ததால், இகத்தை இவன் இகழ்ந்து வாதைப்படுகிறான்.

எனவே, பெரியார் “தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவுப் படை தொடு! விடுபடு!” என்று கூறினார், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால், “கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம்” என்று கவிபாடும் காட்சியாகும் அது!

எனவேதான், பெரியார் தைரியம் பெற்றிருந்தார்!

அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது, தளரா உழைப்பு!

அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது!

----------- அந்த தைரியம் - திராவிடநாடு - 03.06.1945

0 comments: