Search This Blog

23.6.08

பிரார்த்தனையால் நோய் தீருமா? -ஆய்வு முடிவுகள்

(1800 நோயாளிகளை வைத்துப் பரீட்சித்துப் பார்த்ததில் கண்ட விஞ்ஞான முடிவு இதோ)

மாற்று இதய ரத்தக் குழாய் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 1,800 நோயாளிகளைக் கணக்கில் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின்படி பிரார்த்தனைகளால் எவ்விதத் தாக்கமும் (பயனும்) இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

ஆய்வாளர்களின் கூற்று

சில நோயாளிகளிடம் அவர்கள் குணமாவதற்குப் பிரார்த்தனை நடக்கிறது எனக் கூறப்பட்டது. மேலும் சில நோயாளிகளிடம் அவர்களுக்காகப் பிரார்த்தனை நடக்கலாம் எனக் கூறப்பட்டது. இவ்விரண்டு பிரிவினரில், பிரார்த்தனை நடத்தப்படலாம் எனச் சொல்லப்பட்டவர்களைவிட, பிரார்த்தனை நடக்கிறது எனச் சொல்லப்பட்டவர்கள் மோசமாகக் காணப்பட்டனர். இந்த வேற்றுமை ஏன் என்பதை விளக்க முடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
ஆய்வுக்கு உள்ளான நோயாளிகள், அமெரிக்க நாட்டில் உள்ள ஆறு மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். முதலாவதாக, இவர்களில் 604 பேர்களிடம், அவர்களுக்காகப் பிரார்த்தனை நடத்தப்படலாம் அல்லது நடத்தப்படாமலும் இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் அந்த 604 பேர்களுக்கும் பிரார்த்தனை நடந்தது.

597 நோயாளிகளிடம்

வேறு 597 நோயாளிகளிடம், அவர்களுக்காக பிரார்த்தனை நடக்கலாம், நடக்காமல் போகலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் அவர்களுக்காகப் பிரார்த்தனை நடக்க வில்லை. மற்றும் ஒரு பிரிவைச் சேர்ந்த 601 நோயாளிகளிடம், அவர்களுக்காகப் பிரார்த்தனை நடக்கும் எனக் கூறப்பட்டதுடன், அவ்வாறே நடந்தது.

கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை

துறவியர் மடங்களிலும் (மொனாஸ்டரீஸ்), பிற இடங்களிலும் உள்ள மூன்று கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரார்த்தனை நடத்தினர். அவர்களில் இரு பிரிவினர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்; ஒரு பிரிவினர் புராடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் ஆவர். பிரார்த்தனைப் பாடல்களை எழுதி அவர்களிடம் அவற்றைக் கொடுத்தனர். அத்துடன், யாருக்காகப் பிரார்த்திக்கிறார்களோ அவர்களுடைய பெயரின் முன்பகுதி முழுமையாகவும், பின்பகுதியின் முன் எழுத்தும் (இனிஷியல்) தரப்பட்டன.

சிகிச்சைக்குப் பின் சிக்கல்!

முதலாவது பிரிவில் பிரார்த்தனைக்கு உள்ளான (அதாவது பிரார்த்தனை செய்யப்பட்ட) 604 பேர்களில் 52 விழுக்காட்டினர், அறுவைச் சிகிச்சைக்குப் பின் சிக்கல்களுக்கு உள்ளாயினர். இவர்களிடம், இவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யப்படலாம் எனக் கூறப்பட்டு, அவ்வாறே பிரார்த்தனையும் செய்யப்பட்டது. இரண்டாவது பிரிவில் பிரார்த்தனைக்கு உள்ளான 597 பேர்களில், 51 விழுக்காட்டினர் சிக்கலுக்கு உள்ளாயினர். இவர்களிடம், இவர்களுக்காகப் பிரார்த்தனை நடக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், பிரார்த்தனை அவர்களுக்காக நடக்கவில்லை. மூன்றாவது பிரிவில், 601 நோயாளிகளில் 59 விழுக்காட்டினர், அறுவை சிகிச்சைக்குப் பின்பு சிக்கலுக்கு உள்ளாயினர். இவர்களிடம், இவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யப்படும் எனக் கூறி, அவ்வாறே நடத்தப்பட்டது. முப்பது நாள்களுக்குப் பின்பு, இறந்தவர்களின் விகிதமும், பெரிய சிக்கலுக்கு உள்ளானவர்களின் விகிதமும் மேற்காணும் மூன்று பிரிவு நோயாளிகளிடமும் முந்தைய போக்கிலேயே இருந்தன. இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்காவின் `ஹார்ட் ஜர்னல் எனும் இதழில் மார்ச் 31-இல் வெளியிடப்பட்டுள்ளன.


---------------------'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' 1.4.2006

0 comments: