Search This Blog
19.6.08
சுப்பிரமணியன் சுவாமி `அகாசுகா' பேர் வழி + கட்டுக்கதையாக, பொய்யாகப் பேசுகிறார்
தி.மு.க. - பா.ம.க. பிரச்னை ஒருபுறமிருக்க, `ராஜீவ்காந்தி படுகொலையில், வெளிநாட்டு சதிவலைத் தொடர்புகள் உள்ளதா என்பதை விசாரிக்க, சி.பி.ஐ.யின் டீம் ஒன்று, ஜெர்மன் நாட்டிற்குப் பயணிக்க உள்ளது. அங்கே கே. பத்மநாபன் என்பவரிடம் விசாரணை நடத்தவுள்ளது. இந்த கே. பத்மநாபன் வேறு யாருமல்ல; விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி நிர்வாகப் பொறுப்பாளர். `கே.பி.' என்று புலிகளால் அன்போடு
அழைக்கப்படுபவர். அவ்வளவு எளிதில் நெருங்க முடியாத நபர்!
இப்படிப்பட்ட `கே.பி.'யைத்தான் டாக்டர் ராமதாஸ் ரகசியமாகச் சென்று சந்தித்துப் பேசினார். எனவே, ஜெர்மன் சென்று கே.பி.யை விசாரிக்கப் போவதாகச் சொல்லும் சி.பி.ஐ., அதற்கு முன்பு டாக்டர் ராமதாஸிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் கிடைக்கும். எனவே, ராம தாஸிடம் விசாரணை நடத்தவேண்டும்!' என்கிறார் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி. இந்த நிலையில் நாம் அவரைச் சந்தித்தோம்.
என்ன, திடீரென்று இப்படியொரு குற்றச்சாட்டை எழுப்புகிறீர்கள்? எப்போது நடந்தது அந்தச் சந்திப்பு?
``நான் சொல்வதென்றால் எதையும் ஆதாரத்தோடுதான் சொல்வேன். இல்லையென்றால் பேசவேமாட்டேன். 2006-ம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட ஒரு டீம் மலேசியாவுக்குச் சென்றது. கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் இவர்கள் இறங்கி னார்கள். அங்கே அடையாளம் தெரிந்த விடுதலைப்புலி நிர்வாகிகள்தான் இவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். ஓர் இடத்தில் தங்கினார்கள். பிறகு, அடுத்தடுத்து சில இடங்களுக்குச் சென்று கூட்டங் களில் கலந்துகொண்டார்கள். அப்படியே தாய்லாந்துக்குச் சென்றார்கள். அங்கேதான் கே. பத்மநாபன் இருக்கிறார். அங்கேதான் இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இதை வழிநடத்தி முடித்தது டாக்டர் ராமதாஸ்தான். `கே.பி.' என்பவர் புலிகளின் பண விஷயத்தைக் கையாள் பவர். ராஜீவ்காந்தி கொலையில் இவரையும் சி.பி.ஐ. விசாரிக்கப் போகிறது என்ற செய்தி வெளிவந்தது. அதற்குத்தான் `எதற்காக ஜெர்மன் நாட்டிற்குச் செல்லவேண்டும்? ராமதாஸிடமும், திருமாவளவனிடமும் விசாரித்தாலே கே.பி.யைப் பற்றியும் மற்ற தொடர்புகள் பற்றியும் தெரிந்துவிடுமே' என்று நான் கூறுகிறேன்.''
சந்தித்தார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? என்ன ஆதாரத்தில் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகிறீர்கள்?
``சமீபத்தில் நான் தாய்லாந்துக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கே உள்ள `ரா' உளவுப் பிரிவு அதிகாரிகள் என்னைச் சந்தித்தார்கள். சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில்தான் `என்ன இந்த ராமதாஸும், திருமாவளவனும் வந்து இப்படிச் செய்கிறார்கள்' என்ற விஷயத்தைக் கூறினார்கள். உடனே நான், `புலிகளைச் சந்தித்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?' என்றேன். `ஆமாம். கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் வந்து வரவேற்ற டீமில் புலிகளின் நிர்வாகிகள் இருந்தார்கள். போட்டோ ஆதாரம்கூட இருக்கிறது' என்றார்கள். அதைத்தான் நான் சொல்கிறேன்.''
அந்த போட்டோ ஆதாரம் உங்களிடம் உள்ளதா?
``எதற்கு? தேவைப்படும்போது மத்திய அரசோ சி.பி.ஐ.யோ கேட்டால் அப்போது வெளியிடுவேன்'' என்றார் சுவாமி.
சுவாமியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து `விடுதலைச் சிறுத்தைகள்' அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவனிடம் பேசினோம்.
``சுப்பிரமணியன் சுவாமி தான் ஓர் `அகாசுகா' பேர் வழி என்பதை அவ்வப்போது இப்படித்தான் காட்டிக் கொள்கிறார். தமிழ்ப் பாதுகாப்புச் சங்கத்தைத் தொடங்கி வைப்பதற்காக நாங்கள் அங்கே சென்றோம். அதிகாலை மூன்று மணி தூக்கக் கலக்கத்தில் விமான நிலையத்தில் இறங்கியபோது, `சுவாமி' சொல்வதுபோல் யாருமே எங்களை வரவேற்கவில்லை. வன்னியர் சங்க நிர்வாகிகள் நான்கைந்து பேர்தான் அங்கே வந்து எங்களை வரவேற்றார்கள். அடுத்து, கே. பத்மநாபன் என்கிற அந்தப் பெயரை சுப்பிரமணியன் சுவாமி சொல்லித்தான் இப்போது அறிகிறேன். அவரை நான் பார்த்ததோ சந்தித்துப் பேசியதோ கிடையாது. சுத்த பொய்ப் பிரசாரம் இது. அந்த மலேசியப் பயணத்தின் போது மட்டுமல்ல, எப்போதுமே நான் தைவானோ, தாய்லாந்தோ சென்றதில்லை. அப்படிச் சென்றிருந்தால், என் பாஸ்போர்ட்டில் அந்த நாட்டின் முத்திரை விழுந்திருக்க வேண்டுமே. இதிலிருந்தே, சுவாமி பேசுவது ஒவ்வொன்றும் இப்படித்தான் கட்டுக்கதையாக, பொய்யாகப் பேசுகிறார் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. அவரது குற்றச்சாட்டு எல்லாம் இப்படித்தான் போலிருக்கிறது!'' என்றார் திருமா.
-----------------------------நன்றி: "குமுதம்" -22-6-2008
Labels:
நேர்காணல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment