Search This Blog

14.6.08

'சர்க்கரை நோயாளித் தமிழர்கள்'

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இனி சட்டைக் காலரைத் தூக்கி விட்டு பெருமைப்பட்டுக் (?) கொள்ளலாம். காரணம், உலக அளவில் சர்க்கரை நோயின் தாக்குதல் இந்தியாவில்தான் அதிகம். அதிலும் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது என்பதுதான் கொடுமை! கடந்த வாரத்தில் தேசிய நீரிழிவு தடுப்பு மையத்தின் தலைவர் வெளியிட்ட சர்வே அறிக்கையில், `தமிழ்நாட்டில் நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமங்களை யும் சர்க்கரை நோயின் தாக்குதல் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 4 கோடியே 10 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் அறுபது லட்சம் பேர் தமிழர்கள். இதில் ஐந்து சதவிகிதத்தினர் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

இந்தியாவில் ஏழு பேரில் ஒரு தமிழர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் சென்னையில் மட்டும் நாற்பது சதவிகிதம் அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்குதல் அதிகரித் துள்ளது. தமிழ்நாட்டில் நூற்றில் ஐந்து பேர் சர்க்கரை நோயாளிகள். இதன் பாதிப்பு அதிகம் ஏற்படுவது ஐ.டி. துறை இளைஞர்கள் மற்றும் தொடர்ந்து டி.வி. பார்க்கும் குடும்பப் பெண்கள்தான்' என்ற ரீதியில் வெளியான தகவல்களும், சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் பருவத்தினர் சர்க்கரையின் தாக்குதலுக்கு ஆளானதாக தமிழக பொதுசுகாதாரத் துறையின் ஆய்வில் வரும் புதிய தகவல்களும் எதிர்காலத் தலை முறையினரை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. பரம்பரைக் காரணங் களால் மட்டும்தான் இந்நோய் வருகிறது என்ற நிலை இப்போது அடி யோடு மாறிவிட்டதாகவும் சர்வே விவரங்கள் கூடுதல் அதிர்ச்சி யளிப்பதுதான் வேதனையிலும் வேதனை.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தேசிய நீரிழிவு தடுப்பு நடவடிக்கை அமைப்பு மூலம் இந்த அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியான அதே `முகூர்த்தத்தில்' நம்மைத் தொடர்பு கொண்டார், கல்பாக்கத்தில் `மக்கள் நல மருத்துவமனை' நடத்தி வரும் டாக்டர் புகழேந்தி. பொதுமக்களுக்காக குறைந்த செலவில் கிராமப்புற மருத்துவ சிகிச்சை அளித்து வரும் இவர், `மருத்துவ உலகின் மர்மங்கள்' குறித்து சர்ச்சைக்குரிய பல்வேறு கட்டுரைகள் எழுதியவர். அவர் நம்மிடம், "தமிழக மக்கள் உற்று கவனிக்க வேண்டிய சர்வே விவரம் இது. சர்க்கரை நோயின் பெருக்கத்திற்கு மத்திய அரசின் பசுமைப் புரட்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உள்ளன. பாரம்பரிய உணவு முறைகளைத் தவிர்த்ததன் விைளவுதான் சர்க்கரை நோயின் தாக்கம் பெருகக் காரணம். இனி எதிர்காலத்தில் உலகத்திற்கே தமிழ்நாடு `முன்னோடியான' சர்க்கரை நோய் மாநிலமாக உருவாகும் அவல நிலைதான் ஏற்படப் போகிறது. இதன் பின்னணியில் நகர்ப்புறமயமாதல் உள்பட பல மர்மங்கள் அடங்கியுள்ளன'' என தனது கவலையை டெலிபோனில் பகிர்ந்து கொள்ள, அவரை கல்பாக்கத்தில் சந்தித்துப் பேசினோம்.

"முன்பெல்லாம் நகர்ப்புறத்தில் வாழும் பெரும் செல்வந்தர்களுக்கு மட்டும்தான் சர்க்கரை நோய் என்கிற நிலை இருந்தது. அதனால் அது பணக்காரர்களுக்கான `பணக்கார வியாதி' என்றும் பேசப்பட்டது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் நகரம், கிராமம் என்ற பாகுபாடில்லாமல் தமிழகத்திலுள்ள மிக சாமான்யப்பட்டவர்களையும் இந்நோய் ஆக்கிர மித்துவிட்டது. காரணம், தற்போது தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்கள் நகர்ப்புறமயமாகி வருவதுதான். மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, `இந்தியாவில், நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தமிழ்நாட்டில்தான்' என தெரிவித்திருந்ததைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

தேசிய நீரிழிவு தடுப்பு அமைப்பினரால் எடுக்கப்பட்ட இந்த சர்வே விவரத்தில், சென்னையில் மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் நாற்பது சதவிகிதம் அளவுக்கு சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது. 2000-ம் ஆண்டுகளில் தமிழகத்தின் நகர்ப்புறங்களில் 29.8 சதவிகிதமாக இருந்த சர்க்கரை நோய், தற்போது 40.8 சதவிகிதமாகக் கூடிவிட்டது. கிராமங்களில் இருபத்தேழு சதவிகிதமாக இருந்த இந்த நோய், கடந்த ஆறு ஆண்டுகளில் முப்பத்து நான்கு சதவிகிதமாகக் கூடிவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் சர்க்கரை பாதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது சிறுவர்களும் அதிகப்படியான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் இருபத்தைந்து சதவிகித இளவயதினருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, 100 மி.லி. ரத்தத்தில் சர்க்கரை வெறும் வயிற்றில் இருக்கும்போது 120 மில்லி கிராம் அளவும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 200 மில்லி கிராம் அளவும் இருக்க வேண்டும். இதன் எல்லைக்கோடு தாண்டினால் சர்க்கரை நோயின் தாக்கம் இருப்பதைக் கண்டறியலாம். இதற்கு பெரும்பாலும், பரம்பரை முறை அதாவது தாத்தாவுக்கு இருந்தால், அப்பாவுக்கும், பிறகு மகனுக்கும் வரும் என்ற நிலையை உதாரணமாகக் காட்டுவர். ஆனால், தற்போது மனிதர்களின் வேகமான வாழ்க்கை முறை, உடல் உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், கிருமிகளின் தாக்கம், ரசாயனக் காற்று ஆகியவைதான் சர்க்கரை நோய் பெருகுவதற்குக் காரணம் என்று கூறலாம்.

குடும்பப் பெண்கள் முன்பு அம்மிக் கல்லில் அரைப்பது, கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது போன்ற உடல் உழைப்பு மிகுந்த வீட்டு வேலைகளைச் செய்து வந்தனர். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் வீட்டில் அமர்ந்தபடியே `ரிமோட்' மூலம் எல்லா வேலைகளையும் செய்கின்றனர். பெரும்பாலும், டி.வி. சேனல்கள் முன்பே உட்கார்ந் திருக்கின்றனர். 2000-ம் ஆண்டில் 24 டி.வி. சேனல்கள்தான் இருந்தன.

தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட சேனல்கள் பெருகிவிட்டன. உடல் உழைப்பு என்பது மிகமிகக் குறைந்து போனதால், தேவையற்ற கொழுப்பு உடலில் தங்கி, சர்க்கரை நோயின் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன.

மற்ற எந்த நோய்களுக்கும் இல்லாத சிறப்பு, சர்க்கரை நோய்க்கு உண்டு. இந்த நோய் வந்துவிட்டால் மனிதன் இறப்பின் கடைசி நொடி வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். 2005-ம் ஆண்டு உலகில் 53 சதவிகித இறப்புகளுக்குக் காரணம், இதயக் கோளாறு, பக்கவாதம், புற்றுநோய், சளித்தொல்லை ஆகியவற்றோடு சர்க்கரை நோயும் ஒரு முக்கியக் காரணம் என்கின்றனர். இந்த நோய்களால் 2005-ம் ஆண்டு இந்தியாவில் 8.7 பில்லியன் டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதுவே, 2015-ம் ஆண்டில் 23.6 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றும் சொல்கின்றனர். சர்க்கரை வியாதியோடு கூடிய எண்பது சதவிகித மரணங்கள் இந்தியாவில்தான் ஏற்படுகிறது. இதுவே, வளர்ந்த நாடுகளில் இந்நோயின் தாக்கம் பெருமளவு கிடையாது. ஏனெனில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் மக்களுக்கு ஏதேனும் ஒரு விளைபொருளால் ஆபத்து என்று தெரிந்துவிட்டால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு அப்பொருட்களை ஏற்றுமதி செய்துவிடுகின்றனர்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் 20 வயதில் இருந்து நாற்பது வயதுக்குட்பட்டவர்கள்தான் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கின்றனர். அமைச்சர் அன்புமணியும், `இந்தியாவில் இளவயதி னருக்குத்தான் அதிகம் மாரடைப்பு ஏற்படுகிறது' என்கிறார். மாரடைப்பை ஏற்படுத்துவதில் சர்க்கரை நோய்க்கு முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, தமிழ்நாட்டில் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சுமார் ஐந்து சதவிகித குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இக்குழந்தை களுக்கு சிகிச்சையளிக்க மாத்திரையே கிடையாது. காலை, மாலை என இரண்டு நேரமும் இன்சுலின் ஊசிதான் ஒரே வழி'' என நொந்து கொண்டவர், சிறிது இடைவெளிவிட்டுப் பேசினார்.

"தமிழர்களை இந்நோய் அதிகம் தாக்குவதற்கு அதி முக்கியக் காரணமே, நாம் தினம்தோறும் சாப்பிடும் அரிசிச் சாப்பாடுதான் என்றால், கண்டிப்பாக அதிர்ச்சிக்கு ஆளாவீர்கள். ஆனால் அதுதான் உண்மை. பாரம்பரியமான உணவு முறைகளை நாம் மறந்துவிட்டோம். முன்பு சம்பா நெல், குதிரை மூக்கு நெல் உள்பட பல வகையான நெல் வகைகளைப் பயிரிட்டோம். அந்த அரிசிகளில் மாவுச் சத்தும், புரதமும் இருந்தது. இதனால் நாற்பத்தைந்து வயதுக்கு மேல்தான் சர்க்கரை நோய் வந்தது. கேழ்வரகு, கம்பு போன்ற கிராமப்புற உணவு முறைகளை இப்போது முற்றிலும் மறந்துவிட்டோம். 1960-ம் ஆண்டுக்குப் பிறகு எம்.எஸ்.சுவாமிநாதனால் கொண்டு வரப்பட்ட பசுமைப் புரட்சிதான் நம்மை அழிவுப்பாதைக்குக் கொண்டு சென்றது. ஐ.ஆர்.8, ஐ.ஆர்.20 என கலப்பின நெல்லை அறிமுகப்படுத்தினர். இதில் புரதச் சத்து சுத்தமாக இல்லை.

அரிசியில் உள்ள மாவுச்சத்தால் உடலில் போதுமான அரவை ஏற்படாமல் கணையத்தில் இன்சுலின் சுரப்பு குறைந்து போகிறது. போதாக்குறைக்கு இந்த நெற்பயிர்களின் வளர்ச்சிக்காகப் போடப்படும் பூச்சிக்கொல்லிகளும் ஜீரண உறுப்புகளை பெரிதும் பாதிக்கின்றன.

இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால், பாரம்பரியமான உணவு முறைக்கு நாம் மாற வேண்டும். ஒருநாள் அரிசி, ஒருநாள் கோதுமை, மறுநாள் வேறு வகையான உணவு முறை என உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டு வர வேண்டும். குழந்தைகள் பிட்ஸ்ஸா, பர்கர் என கண்டதையும் சாப்பிட்டுக் கொண்டு உடற்பயிற்சி இல்லாமல் சதா கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருப்பதுதான் ஆபத்து நெருங்குவதற்குக் காரணம். பெற்றோர்கள் நாகரிகத்திற்காக அறிமுகப்படுத்தும் இதுபோன்ற உணவுகள், அக்குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தத்துவ அறிஞர் சூசன் ஜார்ஜ், `சர்க்கரை நோய் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், சரிவிகித உணவு,
புரதம், மாவுச் சத்து, மினரல், நார்ச்சத்து கொண்ட உணவை சாப்பிட வேண்டும்' என்று சொல்வதையும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் மேலாக, நமது பொது சுகாதாரத் துறையும் இதற்கென போதிய அக்கறையை எடுத்துக் கொள்வதில்லை. இந்த நோயால் தனியார் நடத்தும் மருத்துவமனைகள்தான் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கின்றன. சர்க்கரை நோய்க்காகப் போடப்படும் ஒரு பாட்டில் இன்சுலின் விலை முன்பு ஐம்பது ரூபாயாக இருந்தது. இப்போது நூற்று எழுபத்தைந்து ரூபாயாகிவிட்டது. மாத்திரை விலையும் மூன்று ரூபாயில் இருந்து ஏழு ரூபாயாகிவிட்டது.

போதாக்குறைக்கு குழந்தைகளுக்குச் செலுத்தும் தடுப்பூசியாலும் சர்க்கரை நோய் பரவுகிறது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மெடிக்கல் ஜர்னல் பத்திரிகை வெளியிட்ட ஓர் அறிக்கையில், `மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டதால், சர்க்கரை நோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அறுபது சதவிகிதமாக உயர்ந்துவிட்டது' என குறிப்பிட்டுள்ளது. சென்னை சேத்துப்பட்டு பகுதியில் ப்ளஸ் டூ மாணவர் ஒருவருக்கு, வெறிநாய்க்கடி ஊசி போட்டதால் சர்க்கரை நோய் ஏற்பட்டதையும் கவனிக்க வேண்டும். எனவே, தமிழர்கள் இனியும் முன்னெச்சரிக்கையாக இருக்காவிட்டால்,
`சர்க்கரை நோயாளித் தமிழர்கள்' என்ற அடைமொழியைத்தான் சுமக்க வேண்டியிருக்கும்'' என ஆதங்கத்தோடு கூறி முடித்தார் டாக்டர் புகழேந்தி.

இதையடுத்து, நாம் சர்க்கரை நோய் சர்வே எடுத்த தேசிய நீரிழிவு தடுப்பு நடவடிக்கை அமைப்பின் தலைவர் ராமச்சந்திரனைச் சந்திக்க முயற்சி செய்தோம். அவர் சார்பாக நம்மிடம் பேசிய இந்திய நீரிழிவு ஆராய்ச்சி மையத்தின் திட்ட இயக்குனர் டாக்டர் முருகேசன், "நாங்கள் காஞ்சிபுரம், சென்னை நகரம், பண்ருட்டி பகுதிகளில் கடந்த 89-ம் ஆண்டில் இருந்தே ஆய்வு செய்து வருகிறோம். பண்ருட்டி, நெய்வேலி, காடாம்புலியூர் உள்ளிட்ட பல கிராமங்களில் ஒன்பது சதவிகிதம் அளவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளோம். உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொதிப்பு போன்றவை இந்நோய் வருவதற்கு முக்கியக் காரணிகள். இந்நோய் தமிழக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கொள்ளை நோய் போல் பரவி வருகிறது. ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது. உட்கார்ந்தபடியே வேலை பார்க்கின்றனர். பசியைப் போக்க அவர்கள் கண்டதையும் சாப்பிடுகின்றனர். இது போன்றவைதான் சர்க்கரை அளவு அதிகரிக்க முக்கியக் காரணம்.

சர்க்கரை நோயால் பாதிப்படைபவர்களுக்கு ரத்த நாளங்களில் சர்க்கரை படியும். இதனால் உணர்ச்சி குறையும். காலில் அடிபட்டால்கூட தெரியாது. எளிதில் புண் ஆறாமல் கால்களை வெட்டியெடுக்கும் நிலைதான் ஏற்படுகிறது. இதுவரை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த எந்தவிதமான அமைப்பும் இல்லாமல் இருந்தது. கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி இதற்காகவே புதிய அமைப்பை அமைச்சர் அன்புமணி ஏற்படுத்திக் கொடுத்தார். பல்வேறு மாநிலங்களில் இதற்கான விழிப்புணர்வு முகாம் களை நடத்த உள்ளோம். எங்களின் தனிப்பட்ட பல முயற்சிகளுக்கு டென்மார்க்கில் உள்ள உலக நீரிழிவு நோய் நிறுவனம், உலக சுகாதார நிறுவனம் போன்றவை போதிய ஆதரவை அளிக்கின்றன. இனி தமிழகத்தின் பல மாவட்டங்களில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வுக் கூட்டங்களையும், முகாம்களையும் நடத்த உள்ளோம்'' என்றார் புதிய நம்பிக்கையோடு.

இறுதியாக, தமிழகத்தின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோவை சந்தித்துப் பேசினோம். "நம் நாட்டில் சர்க்கரை நோய்க் கென்று தனியாக நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால், `வருமுன் காப்போம்' திட்டத்தின் மூலம் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் சர்க்கரை நோயின் தாக்குதல் அதிகரித்து வருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் போதிய அளவுக்கு இல்லை. நாங்கள் 2006 ஜனவரியில் இருந்து கடந்த மே மாதம் வரை சர்க்கரை நோய் குறித்து ஒன்பதாயிரம் முகாம்களை 30 மாவட்டங்களில் நடத்தியிருக்கிறோம். சுமார் அறுபத்தெட்டு லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் இரண்டு லட்சத்துப் பதினான்காயிரம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சிறு குழந்தைகள் மட்டும் ஆயிரத்து எண்ணூறு பேர். பதினைந்து வயதுக்கு மேற்பட்டோரில் ஆண், பெண் என இரண்டு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சர்க்கரையின் அளவு கூடும். குழந்தை பிறந்ததும் குறையும். இதனால் குழந்தைகளுக்கு அதிக எடை கூடும் வாய்ப்பு உள்ளது. நாங்கள் பதினெட்டாயிரம் கர்ப்பிணிகளுக்கு நடத்திய சோதனையில் 692 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதைக் கண்டு பிடித்தோம். ஒவ்வொரு குடும்பத்திலும் உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அத்தியாவசியமான ஒன்று.

இந்நோய் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கின்றன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஊசி குத்தினால் வலி தெரியாது. வலி இல்லாத மாரடைப்பு வரும். மிகுந்த கவனம் இல்லாவிட்டால் கை, கால் போன்ற உடல் உறுப்புகளை இழக்கும் நிலைதான் ஏற்படும். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், பெருகிவரும் இந்த சர்க்கரை நோயால், தமிழ்நாட்டில் சர்க்கரை நோய் சிகிச்சை டாக்டர்களுக்கு வரும் காலங்களில் அதிகளவில் பற்றாக்குறை ஏற்படும்'' என வேடிக்கையாகச் சொன்னார் டாக்டர் இளங்கோ.

`மதுமேக' மர்மம்...!

சர்க்கரை நோய்க்கான இன்சுலின் மருந்து 1922-ம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே நமது நாட்டில் அகத்தியர் மூலிகைக் குறிப்புகளில் `மதுமேகம்' என்ற பெயரில் மருத்துவக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. `மது' என்றால் இனிப்பு என்றும், `மேகம்' என்றால் நோய் என்றும் பொருளாம். இதற்காக சிறுகுறிஞ்சான், சர்க்கரைக் கொல்லி, நெல்லிக்காய் போன்றவைதான் முக்கிய மருந்தாக உட்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கத்தரிக்காயை அதிகளவில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளது. நம்மூரில் கத்தரிக்காய் முக்கிய உணவுப் பொருளாக இருப்பதால் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இதுகுறித்த ஆராய்ச்சி முழு வேகத்தில் நடக்கிறதாம்.

அன்புமணியின் `பைலட் பிளான்!'

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தில் இதுவரை சர்க்கரை நோய்க்கென எந்தவித பட்ஜெட்டும் ஒதுக்கப்படாமல் இருந்தது. காரணம், இதற்கு நிதி ஒதுக்கும் நிலை ஏற்பட்டால் ஒட்டுமொத்த சுகாதாரத்துறை பட்ஜெட்டையும் தாண்டிவிடும் என்பதுதான். தற்போது பெருகி வரும் சர்க்கரை நோயைத் தடுப்பதற்கு தேசிய அளவில் `பைலட் பிளான்' எனப்படும் முன்னோடித் திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி அறிமுகப்படுத்தினார். சுமார் ஆயிரத்து அறுநூற்றிருபது கோடியில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கம், அறுநூறு மாவட்டங்களிலும் சர்க்கரை நோயைப் பெருமளவு கட்டுப்படுத் துவதுதானாம். முதல்கட்டமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அஸ்ஸாம், ஒரிஸா, சிக்கிம் ஆகிய பத்து மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகள், ஐ.டி நிறுவனங்கள், பிற தனியார் நிறுவனங்களில் விழிப்புணர்வு முகாம்கள், கார்ட்டூன், அனிமேஷன் படம் காண்பித்தல், பயிற்சி டாக்டர்களுக்கு சர்க்கரை நோய் சிகிச்சைக்கான பயிற்சியளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கிவிட்டன. இத்திட்டத்தின்படி சென்னையில் மட்டும் பதின்மூன்று முதல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட 3,500 குழந்தைகளுக்கு சமீபத்தில் சர்க்கரை நோய் சோதனை நடத்தப்பட்டது. இதில் அறுபத்தேழு சதவிகித குழந்தைகளுக்கு இருதய நோய்க் கோளாறு வர வாய்ப்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாம்.

டென்மார்க் தகிடுதத்தம்...!

சர்க்கரை நோயால் பாதிப்படையும் இளவயதினருக்கு காலை, மாலை என இரண்டு வேளையும் இன்சுலின் ஊசி போட வேண்டும்.

பெரியவர்களுக்கு சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாவிட்டால் ஊசி போட வேண்டும். இதற்கான ஊசி தயாரிப்புப் பணிகளில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பல நிறுவனங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாகச் செயல்பட்டு வந்தன. கிளைபெண்ட் கிளைபைடு, பிளைன் இன்சுலின், ஹிமிலின், ஆக்ட்ரேபிட், மெட்பாபின், கிளப்பிசைடு உள்பட ஆறு வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒருகட்டத்தில் இந்திய மார்க்கெட்டை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற நினைத்த டென்மார்க் நிறுவனம் ஒன்று, இங்குள்ள சர்க்கரை வியாதி சிகிச்சை டாக்டர்களுக்கு வலை வீச ஆரம்பித்தது. `இந்தியாவில் தயாராகும் பிளைன் இன்சுலின் மருந்துகள் தரமற்றவை' என அந்த டாக்டர்கள் ஓயாமல் ஓதி வந்ததன் விளைவு, இங்குள்ள மருந்துச் சந்தையை டென்மார்க் நிறுவனமே ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த `சேவைக்காக' சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அந்த நிறுவனம் லட்சக்கணக்கில் பரிசுப் பொருட்களை வாரியிறைத்ததாம். இந்த நிறுவனம்தான் உலகம் முழுவதும் சர்க்கரை நோய் ஆராய்ச்சிக்காக நடக்கும் பல்வேறு பணிகளுக்கு கோடிக்கணக்கில் நிதி உதவியையும் அளிக்கிறதாம்.

--------நன்றி: குமுதம்

0 comments: