Search This Blog

15.6.08

பார்ப்பனர்களும் - சீர்திருத்தமும்!

அன்று பிராமணர் கல்வியிலும், ஒழுக்கத்திலும் உயர்வானவர்களே. ஆனால் சீர்திருத்தங்களை வெறுக்கிறவர்கள். இவர்கள் தங்கள் வரையில், தங்களது நடையுடை பாவனைகளைப் பிரத்தியேகமாக வகித்துக் கொண்டு மற்றவர்களை ஒதுக்கி யாளும் கருத்துடையவர்கள். இத்தகையோர் தங்களருமையான வேதம், சாஸ்திரம் ஆகம முதலிய நூல்களை ஏனையோர் வாசிக்காவண்ணம் வற்புறுத்துவார்கள். இவ்வர்ணத்தவர் களுக்குள் மத பேதங்களும், ஆசார பேதங்களும் பலவுள. இவர்களில் சரியான ஒற்றுமையல்லாவிடினும், `பிராமணன் என்ற வாக்கியத்திற்கு மாத்திரம் கௌரவத்தைக் கொடுப்பார்கள். இதனால் அவ்வர்ணத்தார்கள் எல்லா விஷயங்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.

இப்படிப்பட்டவர்கள் சுதந்திரமாக ஆசாரச் சீர்திருத்தத்தைக் கைக்கொள்ளுதல் அருமையே. இவர்களின் முன்னோர்கள் இத்தென்னிந்தியாவுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகக் குடியேறியபோது இத்தென்னிந்தியத் திராவிடர்கள் ஜாதி பேதங்களையும், மத பேதங்களையும் கைக்கொள் ளாமல் சுத்த மனமுள்ளவர்களாகவும் நிஷகபடிகளாகவும், பரிசுத்த ஆஸ்திரர்களாகவும், ஒற்றுமையுள்ளவர்களாகவும், அஷ்ட அய்ஸ்வர்யங்களைப் பெற்றவர்களாகவுமிருந்ததற்கிணங்கிய தமிழ் வேதமும், சாத்திரமுமிருப்பதை நன்கறியலாம்.

இவ்வாறு சிறந்தோங்கிய திராவிடர்களிடம் அடைக்கலமடைந்த ஆரியர்கள் நயவார்த்தைகளால் தங்களிடமிருந்த பெரிய மூட்டையை அவிழ்த்து, அதிலுற்ற ஸமஸ்கிருதபாஷா வேதத்தைச் சுட்டியும் அதை மறைத்தும், `பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்னும் வர்ணங்களை ஏற்றக் குறைச்சலாய்ப் புகன்றதுமன்றியில் சண்மதங்களின் கூற்றுகளை விளக்கலாயினர். இவ்விளக்கமானது இத்தென்னிந்தியாவில் பரவ பல தேவாராதனையும், தாசிமார் கூத்துகளையும், பயன்படாச் சடங்குகளையும் இன்னும் பல மனக்கிளர்ச்சிகளைப் போதித்துத் தாங்கள் பிரம்மத்தின் முகத்தினின்று தோன்றிப் பிராமண தேவதையானதால் தங்களையே பூஜித்தும், ஆதரித்தும் வரும்படிக் கட்டாயப்படுத்தி விட்ட பிராமணச் சட்ட திட்டம் இன்றும் விடாது வருத்துகின்றது. ஆயினும் திராவிடர் அப்போதைக்கப் போது தங்களது ஆசார ஒழுக்கங்களைச் சீர்படுத்திக் கொண்டு வந்தும், சில திராவிடர்கள் ஆரியர்களை விட்டகன்று பிரத்தியேகமாய் விட்டார்கள்.

அவர்கள் விஸ்வகர்மப் பிராமணரெனவும், சிவாசார வீரசைவர்களெனவும் இன்னும் சில வகுப்பினர்களுமாவர்கள். பிராமண வகுப்பினின்று பிறர் எவ்வித சீர்திருத்தத்தை உள்ளபடி கைக்கொள்ளக் காரணமேற்படவில்லை. ஆனால், திராவிடச் சீர்திருத்தக்காரர்களிடமிருந்து நடை, யுடை, பாவனைகளை ஆரியர்கள் கற்றுக் கொண்டு நாகரிகமடைந் தேவருகிறார்கள். மேலும் ஆரியர்கள் பூர்வத்தில் திராவிட மாதர்களை மணம்புரிந்துள்ளவர்களாய், அம்மாதர்களினால் திராவிடர்களது சீர்திருத்தங்களை அனுஷ்டித்து வந்தார்கள் என்பதற்குச் சரியாக பூர்வ இருஷிகளாகவும், பிரமக்கியானி களாகவுமிருந்த பராசர், வியாசர் முதலானவர்கள் கீழ்வகுப்பு ஸ்திரீகளையே சேர்ந்து வமிசாபிவிருத்தி செய்ததாக நூல்களினா லறிகிறோம். நிற்க, நமது தென்னாட்டரசர்களாகிய பாண்டியன், சோழன் முதலியவர்கள் காலத்தில் ஆரியர்களது கருத்துகள் பிரபலமடையவில்லை. மேலும் மகமதிய அரசாக்ஷியில் ஆரியர்களது வலிவுகுன்றியது. சிறந்த ஆங்கில அரசாக்ஷியில் அவரவர்க்குரிய வைதிக, இலவுகிக விஷயங்கள் அவரவர்களால் அனுஷ்டிக்கப்படலாமென்று சுதந்திரம் அளிக்கப்பட்டமையால் ஆரியர்கள் தங்களுடைய வர்ண பேதங்களையும், மத பேதங் களையும், ஆசாரப் பேதங்களையும் திராவிடர்க்குள் பரவ தந்திரோபாயங்களால் ஊர்ச்சிதப்படுத்தி விட்டார்கள்.

இவ்வேற்பாடுகள் ஒரு நூற்றாண்டாகத் திராவிடர்களை ஆண்டு வரத் துணிவு கொண்டன வென்பதைச் சரித்திரங்களால் ஆராய்ந்தறியலாம். இவ்வாறான ஆரியர்களது மதம், ஜாதி முதலியவற்றை தற்காலத்திய ஆரிய ஸமாஜத்தார்கள் முற்றும் மறுத்து வருவது பிரசித்தம். இம்மறுப்பு நூல்களை நாம் கவனித்தால் பிரஸ்தாபப் பிராமணர் ஜாதிகளும், மதங்களும், ஆசாரங்களும் தலைகீழாய்விடும். இச்சந்தர்ப்பத்தில் வர்ணாசிரம சங்கம் ஏற்படினும் நிலைப்பதெங்ஙனம்? ஒருக்காலும் நிலைக்காது. வீண் பிரயாசையே. இவையாவுமறிந்த சில ஆரியர்கள் இங்குத் திராவிடர்களது சகல சீர்திருத்தங்களைப் பெற்றுச் சம்பந்தமடைந்து வருகிறார்கள். இவ்வாறே ஆரியரை அபிமானித்துவரும் திராவிடர்களும் சீர்திருத்தமடையக் காலம் நேர்ந்தது.

இப்போது தோன்றிய `திராவிடன் ஆரியரை மறுக்க வேண்டுமென்னும் அபிப்பிராமயல்ல. ஆரியரது மனக்கோணல்களைச் சரிவரச் செய்ய வேண்டுமென்னும் உதாரத்துவமேயாம்.


---------------திராவிட நேசன் -
"திராவிடன்" 20.6.1917

0 comments: