Search This Blog

2.6.08

அய்யர் மாடு வெட்டச் சொல்றார்.--அதுவும் மணமேடையில் சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்?

ஆணையும், பெண்களையும் வளர்த்து அவர்கள் கழுத்திலே பூ வளர்த்து எதிரிலே தீ வளர்த்து... சுற்றம் சொந்தங்களையெல்லாம் வளர்த்து தாலி கட்டும் நிகழ்ச்சி.
இது புனிதமான மங்களமான திவ்யமான சடங்கு. சமஸ்கிருதத்தில் புனிதமான மங்களமான நல்ல காரியத்துக்கு கல்யாணம் என்று பெயர்.

அப்படிப் பார்த்தால் நாம் நல்ல மனதோடு தூய அன்போடு அடுத்தவர்க்கு செய்கின்ற உதவிகள் செய்யலாம். அதற்குப் பெயரும் கல்யாணம் செய்வதுதான்.

இப்படிப் பார்த்தால் ஒரு மனுஷனோ, மனுஷியோ பிறந்ததிலிருந்து இறக்கும் வரை தினமும் கல்யாணம் செய்தபடியே இருக்க வேண்டும். அதாவது நல்லது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படியென்றால்... இப்போது நாம் குறிப்பிடும் கல்யாணத்துக்கு என்ன பெயர்?...
கன்யா வரணம். இதுதான் பெயர். அப்படி யென்றால்... கன்னிகையைக் கோருவது. அதாவது முன்காலத்தில் பெண்ணோடு சேர்ந்து இல்லற வாழ்வு நடத்த வேண்டும் என விரும்புகிற ஒருவன் தன் குலம், ஒழுக்கம், வயது, குணம், செல்வம் இவைகளுக்கு ஏற்றபடி ஒரு கன்னிகையைத் தேடி அந்த கன்னிகைக்கு உரியவரான தந்தை அல்லது முக்கிய உறவினர்களிடம் செல்ல வேண்டும்.

‘உங்களுடைய கன்னிகையை எனக்கு மணமுடித்துத் தாருங்கள்...’ என வேண்டுகோள் வைக்கவேண்டும்.

இதற்குப் பெயர்தான் கன்யாவரணம். அதாவது பெண் கேட்பது. இந்த பெண் கேட்கும் சடங்கான கன்யாவரணம்தான் பிற்காலங்களில் மருவி மருவி ‘கல்யாணம்’ என ஆகிவிட்டது என்றும் நாம் நம்ப வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

திருமணம் என்றாலே நம் எல்லோரின் நினைவிற்கு வருவது?... அல்ல... அல்ல... வரவைக்கப்பட்டிருப்பது.

மாங்கல்யம் தந்துநாநேந மமஜீவந ஹேதுநா
கண்ட்டே பத்நாமி ஸுபகே ஸஞ்ஜீவ ஸநத... ஸதம்...

டி.வி., சினிமா, ரேடியோ, கீடியோ என எல்லாவற்றிலும் கல்யாணம் என்றாலே... இந்த சுலோகம்தான் ஒலிக்கிறது. இதை வைத்து தாலி கட்றான் என அடையாளப்படுத்துகிறார்கள்.
இந்த சுலோகத்துக்கு வயது என்ன?... என்ன என்று பார்த்தால்.. வேத காலத்திலோ... வேத மந்த்ரத்திலோ இந்த தாலி என்ற சடங்கே இல்லை.

மாங்கல்ய தாரணம் அதாவது தாலி கட்டுவதற்கென்று வேதத்தில் மந்த்ரமே இல்லை. அது குறிப்பிடப்படவே இல்லை.

அதனால் இந்த சுலோகம் நுழைக்கப்பட்டது. கட்டப்பட்டது. சரி இதற்கு என்ன அர்த்தம்?...
“இது மங்கள சூத்ரம். நான் ஜீவித்திருப்பதற்கு ஏதுவானது. இதை உன் கழுத்தில் கட்டுகிறேன். ஸெளபாக்யவதியே... நீ நூறு வருடங்கள் சுகமாய் வாழ்ந்திருப்பாயாக..” என்பதுதான் இதன் அர்த்தம்.

இதன் பிறகு நடப்பது தான் பாணிக்ரஹணம்: அதாவது ‘கைத்தலம் பற்ற கனா கண்டேன் தோழீ...’ - என ஆண்டாள் சொன்னாரே... அந்த கைத்தலம்தான் பாணிக்ரஹனம்.

அதாவது மணமகன் இருக்கிறானே... அவன் தனது வலது கையை தாழ்த்தி மேலே குவிந்துள்ள மணப்பெண்ணின் வலது கையை அப்படியே கொத்தாகக் கவ்விப் பிடிக்க வேண்டும். அதாவது எல்லா விரல்களையும் சேர்த்து ஸ்பரிசம் பண்ண வேண்டும்.
இப்படி கையைப் பிடிக்கும் போது வாத்யார் கடகடவென 4 மந்த்ரங்களை நாக்கை சுழட்டி சுழட்டி சொல்லி முடித்து விடுவார். இதுவும் ஒரு சடங்காம்.

அந்த சடங்கின் 4 மந்த்ரங்கள் என்ன?... பார்த்து விடுவோம்.

முதல் மந்திரம்...

க்ருப்ணாமிதே ஸுப்ரஜாஸ்த்வாய ஹஸ்தம்
மயாபத்யா ஜரதஷ்ஷர் யதாஸ பகோ அர்யமா
ஸமிதா புரந்திர் மஹ்யம் த்வாதுர்
கார்ஹபத்யாய தேவ.

அடியே.... உன்னை என் வீட்டின் தலைவியாக இருக்கும் பொருட்டு பகன், அர்யமா, °மிதா, இந்திரன் ஆகிய தேவர்கள் உன்னை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். நீ என்னோடு இணைந்து நல்ல பிள்ளைகளைப் பெற்றுக் கொடு.

கிழத்தனம் அடையும் வரை என்னுடன் இருந்து என்னை ஆதரி.. காதலி... அதனால்தான் நான் உன்னை கைப்பிடிக்கிறேன். விரல் சேர்க்கிறேன்.

இரண்டாவது மந்த்ரம்?..

தேஹ பூர்வ ஜநாஸோ யத்ர பூர்வவஹோ
ஹிதா: மூர்த்தந்வாத் யத்ர ஸெளப்ரவ பூர்வோ
தேவப்ய ஆதபத்

முன்சொன்ன மந்த்ரத்தில் சொன்னேன் இல்லையா நான்கு தேவ புருஷர்கள் அவர்களுக்கு அக்னி அல்லது சூரியன் இவ்விருவரில் யார் தலைவனாக விளங்கினாரோ அவர்தான் உன்னை எனக்குக் கொடுத்தார்.

ஆக முதல் மந்த்ரத்துக்கும் இரண்டாவது மந்த்ரத்துக்கும் சிறு முரண்பாடு மூள்கிறது.

உன்னை எனக்கு யார் கொடுத்தார் என்றால் அந்த தேவர் கொடுத்தார், இந்த தேவர் கொடுத்தார் என மணமகன் சொல்வதாக வாத்யார் மந்த்ரம் முடைகிறார்.
பக்கத்தில் தான் மணப்பெண்ணின் அப்பா இருக்கிறார். ‘அடப்பாவி மாப்பிள்ளையே... இந்த புஷ்பகுமாரியை... லட்டு பெண்ணை, அழகிய மணப்பெண்ணை நான்தானடா உனக்குக் கொடுத்தேன்...’ என அவர் சொல்ல மாட்டார். ஏனென்றால் அவருக்கு இந்த மந்த்ரத்தின் அர்த்தம் தெரியப் போவதில்லையே...

முழு முதல் மூடத்தனமான சடங்கு ஒன்றை இப்போது பார்க்கலாம். அதாவது நம்மூர் எலிமெண்ட்ரி ஸ்கூல்களில் ‘ஈயடிச்சான் காப்பி...’ என ஒரு வழக்கு மொழி உண்டு.
அதென்ன ஈயடிச்சான் காப்பி? ஒரு மாணவன் பக்கத்திலிருக்கும் படித்த மாணவனைப் பார்த்து காப்பியடித்து விடுகிறான். எப்படி தெரியுமா?...

ஒரு வாக்கியத்தை எழுதும்போது அதில் ஒரு வார்த்தையை தவறாக எழுதிவிட்டதால் அதை அடித்துவிட்டு திருத்தி எழுதியிருப்பான் அம்மாணவன். இதைப் பார்த்து எழுதுகிற மாண-வனும்... அதே போல தவறாக எழுதி அடித்து விட்டு மறுபடியும் சரியாக எழுதுவான். அதாவது காப்பியடிப்-பதில் கூட புததிசாலித்தனம் காட்டாமல் எழுத்துக்கு எழுத்து அப்படியே காப்பியடிப்பதற்கு பெயர்தான் ‘ஈயடிச்சான் காப்பி.’

இதே தான் விவாஹ விஷயத்திலும்! விவாஹம் என்ற சொல்லுக்கு நாம் என்ன அர்த்தம் பார்த்தோம்? தூக்கிக் கொண்டு ஓடுதல் என்பது. அதாவது அந்தக் காலத்தில்... மனதுக்குப் பிடித்தவளை தூக்கிக் கொண்டு போதல்தான் விவாஹத்தின் ஆரம்பம். விவாஹம் என்ற சொல்லே தூக்கிக் கொண்டு ஓடுவதுதான். அதற்குப் பிறகு வேதங்கள் மந்த்ரங்களால் மணமேடை அமைத்தன. அதற்கும் பின்னர் சூத்திரக்காரர்கள்... அக்னி வளர்த்து அதில் மேலும் பல சடங்குகளைக் கட்டினார்கள்.

இன்றும் ‘விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிகை’ என அச்சடிக்கிறார்கள். எவனாவது சுபமுகூர்த்தம் பார்த்து தூக்கிக் கொண்டு ஓடுவானா?... அப்பா வெளியே போயிருக்கும் நேரம் பார்த்து... அம்மா உள்ளே சமையலோ வேறு ஏதோ காரியமாய் இருக்கும் நேரம் பார்த்து...
வீட்டுப்பக்கம் வந்து கண் ஜாடை காட்டி காத்திருக்கும் காதலியை டூவீலரிலோ, ஆட்டோவிலோ, காரிலோ ஏற்றிச் சென்றால் அதுதான் விவாஹம். அது கூட முழுமையான விவாஹம் அல்ல. அந்தக் காலம் போன்று அந்த பருவ மங்கையின் மெல்லிடையை முறிந்து விடாமல் பிடித்து வாளிப்பான கால்களில் தன் கரம் பற்றி அலேக்காக அந்த பருவப் பதார்த்தத்தை தன் உள்ளங்கையாலும் உடம்பாலும் தாங்கிக் கொண்டு ஓடினால்தான் அது விவாஹம்.

இப்போதெல்லாம் அப்படி செய்ய முடிகிறதா?... சினிமாவில் வில்லன்களும், நிஜத்தில் ரவுடிகளும்தான் இப்படி ‘விவாஹம்’ செய்கிறார்கள்.

இப்படியொரு விவாஹத்தை பகவான் கிருஷ்ணனும் செய்திருக்கிறார்... எங்கே?...
பீஷ்மகன் என்னும் மன்னன் தன் மகள் ருக்மணிக்கு மணம் முடிப்பதற்காக பல்வேறு நாட்டு ராஜாக்களை அழைத்திருக்கிறான். ராஜசபையில் சுயம்வரம். எல்லா தேசத்து ராஜாக்களும் குழுமியிருக்கிறார்கள்.

ருக்மணி என்னும் மலர்... யார் கழுத்தில் மாலையிடப் போகிறாளோ? அவன்தான் ருக்மணியை சூடிக்கொள்ளும் பேறு பெறுவான். ருக்மணியின் அண்ணன் ருக்மியோ, தன் தங்கையை கிருஷ்ணனின் அத்தைப் பிள்ளை சிசுபாலனுக்குக் கொடுக்க முடிவு செய்திருந்-தான். எல்லா மன்னர்களும் வந்து என்ன பிரயோஜனம். சுயம்வர நாயகி ருக்மணி...?
முதல்நாள் இரவு... ஒரு பிராமணன் மூலமாக தூது அனுப்பப்படுகிறது. ‘பக்கத்திலுள்ள கோயிலுக்கு வந்துவிடு. நான் காத்திருக்கிறேன்’ இதுதான் பிராமணன் விடு தூது சொன்ன செய்தி.
ருக்மணி கோயிலுக்கு வந்தாள். கிருஷ்ணனும் வந்தான். தன் ரதத்தில் தூக்கிச் சென்று விட்டான்.
இது கதை... இதில் கிருஷ்ணன் செய்தானே அது விவாஹம்.

இன்றும் செய்கிறார்கள்... என்னுடைய புத்ரியான சௌபாக்யவதி புஷ்பாவை (ஒரு பெயருக்கு வைத்துக் கொள்ளுங்கள்) ஸ்ரீ ராமசாமியின் புத்ரன் சிரஞ்சீவி முரளி நிகழும் விய வருஷம் தை மாசம் 10-ந்தேதி காலை 8.00-மணிக்கு மேல் 10.00-மணிக்குள் சுபயோக சுபதினத்தில் தூக்கிக் கொண்டு ஓடப் போகிறான்.

தேவரீர் குடும்பத்தோடு வந்திருந்து அவன் என் பெண்ணை தூக்கிக் கொண்டு ஓடுவதைப் பார்த்து அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும்... என்று கல்யாணப் பத்திரிகை அடித்தால் விவாஹ முகூர்த்தம் என்பதற்கு பொருத்தமாக இருக்கும்.

சரி அந்த ஈயடிச்சான் காப்பி சடங்குதான் என்ன?...

இன்று நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, ஆள் பார்த்து, குடும்பம் பார்த்து, பையன் என்ன வேலை பார்க்கிறான் என பார்த்து, மண்டபம் பார்த்து, வாத்யம் பார்த்து, எந்த சமையல்காரனிடம் கொடுத்-தால் விருந்து சுவையாக இருக்கும் என விசாரித்துப் பார்த்து...
இத்தனையும் பார்த்து கல்யாணம் பண்ணிவிட்டு ‘தூக்கிக் கொண்டு ஓடறான்’ என சொல்வது முட்டாள்தனம் அல்லவா?...

இந்த முட்டாள்தனத்தை நியாயப்படுத்துவதற்காகவே ஒரு சடங்கும் பின்னப்பட்டது. அது என்னவென்றால்... மணப்பெண்ணின் மாமா பெண்ணை தன் தோளில் தூக்கிக் கொள்கிறார். மணமகளின் மாமா அவனைத் தன் தோளில் தூக்கிக் கொள்கிறார். ரெண்டுபேரும் மணமகளையும், மகனையும் தோளில் தூக்கிக் கொண்டு... அந்த சிறு பரப்பு கொண்ட மணமேடையில் இப்படியும் அப்படியுமாய் நகர... அப்போது மாலை மாற்றிக் கொள்கிறார்கள். இதுதான் விவாஹமாம். அதாவது தூக்கிக் கொண்டு ஓடுவதாம்.
அடப்பாவிகளா?... வீரத்தை இப்படியா கேவலப்படுத்துவது? அந்தக் காலத்தில் அவனுக்கு தேவையிருந்தது. பெண்ணை தூக்கிக் கொண்டு ஓடினான்.

இன்றுதான் அதற்குத் தேவையில்லையே. பின் ஏன் விவாஹம் என வைத்து தூக்கிக் கொண்டு ஓடுவதைப் போல பாவலா செய்கிறீர்கள்? இதற்கு வாத்யார் மந்த்ரம் வேறு ஓதுகிறார்.

கல்யாணத்தில் பெண் நன்றாக இல்லை, மாப்பிள்ளை நன்றாக இல்லை. என்றால் கூட பிரச்சினை வராது. ஆனால்... சாப்பாடு நன்றாக இல்லை என்றால் போரே வெடிக்கும். இதனால் விருந்தோம்பலை தமிழ்ப்பண்பாடு காலச் சிறப்பாகச் செய்தது; செய்து வருகிறது. இப்போதைய கல்யாணச் சடங்குகளே... தமிழர்களின் தாராள விருந்தோம்பலுக்கு சாட்சி.
கல்யாணத்தில் தேங்காய் உருட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். மணப்பெண்ணும், மணாளனும் பந்து உருட்டுவது போல் தேங்காய்களை உருட்டிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு சடங்கு... இதற்கொரு விளக்கமா.. என்று கேட்கிறீர்களா?...

பெண்ணும், மாப்பிள்ளையும் தேங்காய் உருட்டும் போது வாத்யார் கௌஹீ.. கௌஹீ... என்ற சொற்களை உச்சரிக்கும்படியாக மந்த்ரங்களை எடுத்துச் சொல்வார்.

“ம்... வெட்டு வெட்டு மாட்டை நன்றாக வெட்டு. கத்திய தீட்டிக் கொண்டாயா?... ஒரே வெட்டில் கழுத்து துண்டாகி தலை தனியா வந்து விழணும். ம்... தாமதமாக்காதே ரத்தத்தை அப்படியே பிடி... வெட்டின மாட்டை எடுத்துக் கொண்டு போய் துண்டு போடுங்க. சீக்கிரம்... மாட்டுக் கறிப்பா வேக... லேட் ஆகும். நன்னா வேக வச்சு ஊட்டுங்கோ, அம்பி... பீஃப் சாப்பிடணும். ம்... சீக்கிரம்..”

இந்த வார்த்தைகளை கல்யாணம் நடத்தி வைக்கும் பிராமணர்... மணமேடையில் சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? சொல்கிறார். இந்த அர்த்தம் வரும்படியாக சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்கிறார். ஆனால்... அந்த நேரத்தில் மணப்பெண்ணும், மணப்-பையனும் தேங்காய் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

‘என்னடா இது அய்யர் மாடு வெட்டச் சொல்றார். நாம தேங்காய் உருட்டிக் கொண்டிருக்கிறோமே...’ என அந்த மணமக்களுக்கும் தெரிவதில்லை.” அடாடா... நாம சொல்ற மந்த்ரம் மாடு வெட்றதப் பத்தியா?... அய்யய்யோ... அப்புறம் அவா தேங்கான்னா உருட்டிண்டிருக்கா...” என அதை உச்சரிக்கிற வாத்யாருக்கும் அறிவதில்லை.

---------- அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் - நூல்: சடங்குகளின் கதை (இந்துமதம் எங்கே போகிறது? - பாகம் 2)

0 comments: