Search This Blog

19.6.08

உள்ளங்கையில் உண்டாயிருக்கும் கோடுகள் (ரேகை) தோன்றியது எப்படி?

குறி பார்த்தல் (3)

இன்றைக்கு வாலுடைய குரங்குகளும், வாலில்லாக் காட்டு மனிதக் குரங்குகளும் அம்மாதிரியாகவே தாவிச் செல்கின்றன. அப்படித் தாவிச் செல்வதால் கைகளும் மடிக்க வேண்டி வருகின்றன. கைகள் மடியுண்ட இடங்களில் வரி வரியாகக் கோடுகள் உண்டாயின. அப்படி உண்டான கோடுகள்தான் அந்தச் சந்ததி மூலமாக நமக்கும் வந்திருக்கின்றன. இதுதான் நமது உள்ளங்கையில் உண்டாயிருக்கும் கோடுகளின் உற்பவம். மரத்தைத் தாண்டி மடிந்த இடங்களைக் கொண்டு நமது நடத்தைகளை எப்படி அறியக் கூடும் எனக் கேட்கின்றோம்? இரண்டு வரி அய்ந்தாம் விரலுக்குக் கீழ் இருந்தால் அவனுக்கு இரண்டு பெண்சாதியாம்! ஆனால் ஒரு வரியுடய பலருக்கு பல பெண்சாதிகள் இருப்பதை காணலாம். ஆதலின் இந்த வரிகளைக் கொண்டு நமது நடவடிக்கைகளைக் குறிப்பது ஆங்கிலத்தில் pureguess என்று சொல்லலாம். அதாவது வெறும் உத்தேசம்! இந்த வெறும் உத்தேசத்தை உண்மையென நினைத்துக் கொண்டு மோசம் போகின்றவர்கள் அநேகர் உளர்.


இந்த ஆதாரத்திற்கு இன்னொரு நியாமும் உண்டு. விரல்கள் மடியும் இடங்களில் கோடுகளைப் பார்க்கலாம். இந்தக் கோடுகள் விரல்கள் மடியுண்டபடியால் விரல் மடிப்புகளிலெல்லாம் விரல் வரிகள் தோன்றியுள்ளன. இந்தப் பிரத்தியட்ச காட்சி போலவே மற்ற கைவரிகளும் தோன்றியுள்ளன. ஆனால் விரல் மடிப்புகள் பிரயோஜன மில்லையெனில் மற்ற கை மடிப்புகள் மாத்திரம் பிரக்யாதி பெற்றது எவ்விதம்? எவனோ ஒருவன் ஒரு காலத்தில் கைக் கோடுகளைப் பார்த்து குறிசொல்லி இருப்பான். அது முதலில் வெறும் உத்தேசமாகவே சொல்லி இருப்பான். இதை உண்மையென நம்பி, பழக்க வாசனையால் கையைப் பார்த்துக் குறி சொல்லும் பழக்கம் வந்திருக்க வேண்டும். இவ்விதமாகத்தான் நமது கையைப் பார்த்து குறி சொல்லும் பழக்கம் உண்டாகி இருத்தல் வேண்டும். எந்த மூடனும் இந்த பழக்கத்தைக் கையாளலாம். ஆனால் இந்த மூடநம்பிக்கையில் விஸ்வாசமுள்ளவர்களைப் பற்றித் தான் நாம் வருந்துகின்றோம்.


விளக்கு வைத்துப் பார்த்தல் என்னும் ஒரு மூடப் பழக்கம் பாமர மக்கள் வீடுகளில் வழங்கி வருகின்றது. ஒரு பூசாரி தன்முன் விளக்கை ஏற்றி, அந்த எரியும் சுடரை அந்த அம்மன், இந்த அம்மன் என்று வர்ணித்து, இதைச் சொல்லம்மாவென எரியும் சுடருடன் பேசுவதைப்போல் நடித்து, சுடர் அசையாமலிருந்தால் அம்மா உத்தரவு அளிக்கவில்லை என்றும், அசைந்தால் அம்மா உத்தரவு கொடுத்தாள் எனவும் அர்த்தப்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றும் விதம் ஒன்றுண்டு. இதுவும் ஒரு ஜீவன உபாயமென அறிக. கிராமாந்திரங்களில் ஏழைகள் நோய் வாய்ப்பட்டால் இம்மாதிரியான மூடப் பழக்கங்களைக் கொண்டு நிவர்த்திக்கப் பார்க்கின்றார்கள். இதனுடைய ஆபாசத்தை சற்று விளக்கிப் பார்க்கவேண்டும்.


கோடானுகோடி கோடி தீபங்கள் தெரிகின்றன. அசையாத தீபங்களையும் தற்காலத்தில் பார்க்கின்றோம். அதாவது, மின்சார தீபங்கள். இந்தத் தீபச் சுடர்கள் காற்றிலும் அசைவதில்லை. காற்றில்லாமல் போமாகில் அசைவற்று எரியும். காற்று வீசியதும் தீபச் சுடர்கள் அதைப் பார்க்கலாம். இந்தச் சுடர்கள் அசேதனங்கள்; அதாவது உயிரற்றவை. நமது சொல்லையும் கேட்க முடியாதவை. காலில் மிதிபடும் கல்லுக்கும் விளக்கில் எரியும் தீபச் சுடர்களுக்கும், மேற் கண்ட விஷயங்களில் வித்தியாசமில்லை. அப்படியிருக்க, எவ்விதம் சுடர்களுடன் பேசக் கூடுமோ அது நமக்கு விளங்க வில்லை. பைத்தியம் பிடித்தவர்கள்தான் சுடருடனும், சுவருடனும், செடி , மரங்களுடனும் பேசுவார்கள். இந்த விஷயத்தை யோசியாமல் விளக்கு வைத்துப் பார்த்து அத்துடன் பேசுவதென்றால் என்ன மூடத்தன மென்று எண்ணவேண்டும்? பூசாரிதான் அவன் ஜீவனத்திற்கு மோசம் செய்கின்றான். பகுத்தறிவுடைய ஏழை மக்கள் அவன் பித்தலாட்டத்திற்கு ஏமாந்து, அவன் பிதற்றுவதைக் கேட்டு, அவனை நம்புவதென்றால், என்ன மதி மோசம்! விளக்கில் அம்மனோ, சாத்தானோ, சனியனோ, புகுந்து கொண்டு பூசாரி கேட்பதற் கெல்லாம் விடை கொடுப்பதாகச் சொன்னாலும், முன் நம்பிக்கையைவிட இது நம்பத்தகாதது; அதனினும் ஆபாசமே ஆகும்.


தீபச் சுடர்களைக் காற்றில்லாத அறைகளில் எரிய வைத்து, திருஷ்டாந்தமாக இதனை யாரும் பரீட்சித்து பார்க்கலாம். காற்றில்லாத கூடத்து அறையில் விளக்கை ஏற்றி அதன் அருகே உட் கார்ந்து கொண்டு, காற்றை மெதுவாக வாயின் மூலமாக இழுத்தால் சுடர் அசைவற்று நிற்கும். அது நமது, இஷ்டப்படி அசையவேண்டுமானால், கையை ஆட்டினாலும், நமது தேகத்தை ஆட்டினாலும், அல்லது மெதுவாக ஊதினாலும் தீபச்சுடர் அசையும் இவ்வித இவ்விதச் சலனமற்ற நிலையையும், அசையும் நிலைமையையும் யாரும் செய்து காட்டலாம். ஆனால், இவ்விதமாகச் சுடர்களை அசையச் செய்வதையும், அசையாமல் இருக்கச் செய்வதையும், யாரும் தகுந்த இடங்களில் செய்து காட்டலாம். இவ்விதமாக யாவரும் செய்துகாட்ட முடியும்போது, எந்த அம் மனும், மாரியாத்தாளும், மதுரை வீரனும் தீபச் சுடரில் புகுந்து கொண்டதாக எண் ணுவதில்லையே. ஆனால், பூசாரி அதே மாதிரி அசைய வைத்தால், அந்த அசைவு தெய்வங்களால் உண்டானதாக எண்ணுவது பைத்தியக்காரத் தனமல்லாது வேறென்ன?
காற்றில்லாமலிருந்தால் சுடர் அசைவற்று எரிகிறது. காற்றுப்பட்டால் அசைகிறது. ஆதலின் அசைவுக்கும் அசையா தன்மைக்கும் காற்றே காரணம். இதற்கு எந்த அம்மன் தயவும் வேண்டுவதில்லையே! இந்தப் பித்தலாட்டங்களைச் செய்யும் பூசாரிகளையும், அவர்கள் சொல்வதைக் கேட்கும் பாமர மக்களையும் ஒன்று கேட்கின்றோம். அதாவது காற்றடிக்கும் அறைகளில் அதாவது ஜன்னல்களுக்கு எதிரிலாகிலும், வாசல்களிலும், தெருக்களிலாகிலும், தீபத் தைக் குத்து விளக்கில் ஏற்றி அதன் சுடரை அசைவற்று நிற்கும்படிச் செய்யுங்கள் பார்ப்போம்? என்னதான் நீங்கள் உரத்து அம்மனை வர்ணித்தாலும், அந்த அம்மன் சுடரில் நுழையவே மாட்டாள்! இந்தத் தந்திரத்தை அறிந்த பூசாரி, கூடத்து மூலையிலும் காற்றில்லா அறையிலுமே சுடரை எரியப் பார்ப்பான்; இதுதான் பூசாரிகள் செய்து வரும் தந்திரம்.



----------ம.சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: