Search This Blog

27.6.08

13, 8அய் கண்டால் நடுக்கமா?

மூட நம்பிக்கைகளில் எத்தனையோ வகை உண்டு. ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; மூடநம்பிக்கைகளின் வகைகளை மட்டும் கணக்கிடவே முடியாது.
நேரம், காலம், நல்ல நாள், கெட்ட நாள், சகுனம், வாஸ்து, எண் ஜோதிடம், இராசிபலன் என்று ஒரு நீண்ட தூரம் மூடத்தனம் பயணித்துக் கொண்டேயிருக்கும்.
எல்லாம் கடவுள் படைப்பு என்றால், இந்த மூடத்தனங்கள் யார் படைப்பு?
அதற்கும் அவன்தான் காரணம் என்றால், அவனைவிட அயோக்கியன், பொறுப்-பில்லாதவன் வேறு ஒருவன் இருக்க முடியுமா?



சிலருக்கு 8 இராசி இல்லாத எண்ணாம்; இன்னும் சிலருக்கு 13 பீடை எண்ணாம். எட்டாம் எண்ணைப் பிடிக்காதவர்கள் 13 அய் ஏற்றுக் கொள்கிறார்கள்; 13 அய் பிடிக்கா-தவர்கள் எட்டை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலையில், எந்த எண் யாரைப் பாதிக்கும்? எட்டும், பதிமூன்றும் கெட்ட சகுனங்கள் என்று யாரும் சேர்த்துச் சொல்லுவதில்லையே!
ஏதோ கண்மூடித்தனமாக எதையோ கிறுக்குத்தனமாக கோணங்கித்தனமாக, மது குடித்தவன் மதி மயங்கி உளறுவதுபோல இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.
சரி, இங்கு மட்டும்தான் முட்டாள்கள் இருக்கிறார்களா? முட்டாள்கள் இந்தியாவுக்கு மட்டுமே தான் சொந்தம் என்று கூற முடியாதுதான்.
13 அய் கெட்ட நாள் என்று கருதக் கூடிய முட்டாள்கள் உலகம் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். விஞ்ஞான பூர்வமான நிரூபணம் இதற்கு உண்டா என்று கேள்வி கேட்டால், இது போன்ற பிரச்சினைகளில் எல்லாம் விஞ்ஞானம், பகுத்தறிவு என்ற அளவுகோல்கள் எல்லாம் கூடாது - நம்பிக்கை - அய்தீகம் என்று கூறி ஓட்டமாக ஓடி-விடுவார்கள்.
இலண்டனில் அரசி குடும்பத்தில்கூட இந்த 13 மூட நம்பிக்கை இருந்திருக்கிறது. பிரிட்டீஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் தங்கை இளவரசி 1930 ஆகஸ்ட் 21 இல் பிறந்தார்.
ஆனால், பிறந்த அந்தக் குழந்தையை உடனடியாகப் பதிவு செய்யவில்லை. மூன்று நாள்கள் காத்திருந்தனராம். ஏன் தெரியுமா? பிறந்த நாளன்று பதிவு செய்திருந்தால், அந்தக் குழந்தை 13 ஆம் எண் வரிசையில் இடம்பெற நேரிட்டிருக்குமாம்.
அய்ரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் விஞ்ஞானத்தில் விண்ணை முட்ட வளர்ந்-திருந்தாலும், அங்கும் படித்த மூடர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டும்போது 12 ஆவது மாடிக்குப் பிறகு 13 என்று குறிப்பிட மாட்டார்களாம். மாறாக 12-ஏ என்றோ 14 என்றேதான் குறிப்பிடுவார்களாம். அறைக்குக்-கூட இந்த முறையைத்தான் கடைபிடிப்-பார்களாம்.
1965 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசி எலிசபெத் ஜெர்மனி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஒரு இடத்தில் இரயில் பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருந்தது; டூயிஸ்பெர்க் என்பது அந்த ரயில் நிலையத்தின் பெயர்.
ராணியார் பயணம் செய்யவேண்டிய அந்த இரயில் 13 ஆவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படத் தயாரானது! அவ்வளவுதான் பதிமூன்றா? அய்யோ வேண்டாம் என்று அலறினார்கள். இங்கிலாந்து நாட்டு அரசியாயிற்றே - என்ன செய்தார்கள்? அந்த இரயிலை வேறு பிளாட்பாரத்திலிருந்து புறப்படும்படிச் செய்தனர்.
கிறித்தவ மதமும் இந்த மூட நம்பிக்கைக்குத் துணை போகக் கூடியதாகும். 12 சீடர்களுடன் 13 ஆவது நபராக ஏசு, இரவு உணவைச் சாப்-பிட்டார். அப்போதுதான் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார் - சிலுவையிலும் அறையப்-பட்டார் - எனவே 13 என்பது மரண எண்ணாம். அப்படி என்றால், அவர் மீண்டும் எப்படி உயிர்த்தெழுந்தாராம்? மத விவகாரங்களில் இதுபோன்ற அறிவார்ந்த வினாக்களுக்கு இடம் கிடையாதே!



மாவீரன் நெப்போலியனுக்குக்கூட 13 ஆம் எண் பயம் இருந்ததுண்டாம். குறிப்பிட்ட விஷயத்தில் வீரனாக இருப்பவன். இன்னொரு விஷயத்தில் கோழையாக, மூடனாக இருக்கக் கூடாதா என்ன?
இந்த மூட நம்பிக்கை குளிர் ஜூரத்தை ஓட்டிய பகுத்தறிவுவாதி-களும் அமெரிக்காவில் இருந்திருக்கிறார்கள்.
1882 சனவரி 13 இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 13 துணிவான பகுத்தறிவுவாதிகள் கூடினார்கள். 1882 சனவரி 13 இல் ஒரு சங்கத்தை நிறுவினார்கள். அதன் பெயரே 13 ஆவது சங்கம்(Thirteenth Club) என்பதாகும்.
ஓர் உணவு விடுதியில் 13 ஆவது அறையில் 8.13 பணிக்குத் தொடக்க விழா நடத்தி 13 மணிக்கு (அதாவது 1 மணிக்கு) விழாவினை முடித்தனர்.
சங்கத்தில் சேர நுழைவுக் கட்டம் 1.13 டாலர். ஆயுள் சந்தா 13 டாலர்.
ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி 13 பேரும் கூடி விருந்துண்டு மகிழ்வார்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்தது. நாளடைவில் கிளைச் சங்கங்களும் உற்பத்தியாகின. இணையும் சங்கத்திடமிருந்து 13.13 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
மூடத்தனத்தை இப்படி சவுக்குக் கொண்டு அடித்தனர்.
சென்னை மாநகராட்சிகூட வீடுகளுக்குக் கதவு இலக்கம் குறிப்பிடும்போது 13 அய் தவிர்ப்பது உண்டு.
அதற்கு விதிவிலக்காக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் அடையாறு இல்லத்தின் பழைய எண் 13 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயிக்கு டில்லியில் ஒதுக்கப்பட்ட இல்லத்தின் எண் எட்டாக இருந்தது. அவருக்கு எட்டாம் எண் இராசியில்லாத ஒன்றாம். அந்த எண்ணை மாற்றச் சொல்லி கோரிக்கை வைத்தாராம். உடனே 6-ஏ என்று மாற்றப்பட்டதாம். வீடு மாற்றப்படவில்லை; எண் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.
மனிதனிடம் இருக்கக் கூடிய விலை மதிக்க முடியாத பகுத்தறிவைப் பயன்படுத்த அஞ்சுவதும், தன்னம்பிக்கையைத் தூக்கி எறிவதும், மரணத்தைக் கண்டு மிரளுவதுமான குணங்கள் ஒருவரிடம் இருக்குமேயானால், அந்த மனிதன் எவ்வளவு படித்திருந்தாலும் பயனற்ற பட்டியலிலேயே வைக்கப்படவேண்டியவரே ஆவார்.
பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் பொன்மொழி ஒவ்வொரு ஊரின் நுழைவு வாயிலிலும் கல்வெட்டாகப் பொறித்து வைக்கவேண்டும்.

--------------- கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் "உண்மை" இதழில் எழுதிய கட்டுரை

0 comments: