Search This Blog

15.6.08

சிவப்புச் சட்டைக்காரர் பெரியார்






மக்களினம் தோன்றி அது பிற இனங்களிலிருந்து மாறுபட்டு தழைத்தோங்க தலைப்பட்டபொழுது அதன் சிந்தனை வடிவங்களில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. பொருளாதாரம், ஆண், பெண், தனியுடைமை பொதுவுடைமை போன்றவற்றின் மீதும் அதன் வளர்ச்சி படிநிலைகளிளும் புதிய சிந்தனைகள் தோன்றின. மதமும், சாதியும் உழைத்துப் பிழைக்க அச்சப்படுவோரின் கண்டுபிடிப்பு என்றாலும் அதனுடைய தளமும் காலந்தோறும் மாறுபாடு அடைந்தது.

அடிமைத் தனத்திலிருந்த பண்ணையடிமை வடிவத்திற்கு மாறி முதலாளித்துவ வடிவத்திற்கு மாறிய பொழுதும் கூட வடிவம் தான் மாறியதே தவிர அதன் உள் கட்டமைப்பான ஆண்டான் அடிமைமுறை மேலும் மேலும் வலுப்பெற்றது. காலந்தோறும் புனிதர்களும், புரட்சியாளர்களும் தோன்றி புதிய தத்துவ சித்தாந்தங்களை மக்களிடையே விதைத்தாலும் அவர்கள் மேல் கீழ் போன்ற நிலைகளில் சமரசம் செய்து கொள்ள முடியாமல் போராட்டம் புரட்சியாக மாறி அவர்கள் காலத்துக்குள்ளாக மட்டும் அல்லது ஒரு குறுகிய சிந்தாந்தமாக மட்டும் வடிவம் பெற்று தோற்றுப் போனது.

காலந்தோறும் அதன் நிகழ்வின் மீது சமரசம் செய்து கொள்ளாமல் கருத்தை வெளியிடும் சிந்தாந்தம் மறுமலர்ச்சிகான புரட்சியாகும். அப்புரட்சிக் கருத்துக்கள் வரலாற்று மறைப்புக்குள்ளாகும் பொழுது அதனை மீட்டெடுக்க வேண்டிய தளமும் உருவாகவேண்டியுள்ளது. அத்தளத்தில் நிற்பவரே சிவப்புச் சட்டைக்காரர் பெரியார்.

அரசும் ஆளும்வார்க்கமும் சமுதாய சலுகையை நியாயப்படுத்தும் வகையில், சுரண்டல் நிகழ்வதை நியாயப்படுத்துவதும் குறிப்பாக மறைமுக முதலாளித்துவத்தை நியாயப்படுத்தும் பொழுது அதனை தகர்த்தெறிந்து ''சாதியம், சமயம், தேசியம் என்பனவற்றில் பொதுவுரிமையுடன் கூடிய பொதுவுடைமை சித்தாந்தை நிறுவியவர் 1973 டிசம்பர் 23 வரை நவீன யுகத்தில் ''தீண்டதகாதது'' என ஒதுக்கிவைக்கப்பட்ட/ ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட மார்க்கத்தினை முன்னுக்கு வார்த்தெடுத்தவர்.

ஏங்கல்ஸ் போன்றோர்கள் பொதுவுடைமை கருத்துக்களைக் மொழிந்தாலும் அவரையடுத்து காரல் மார்க்ஸ் சிந்தனையை அனைத்துத் தளங்கலாலும் பரப்பி வெற்றியடைந்தார். குறிப்பாக, 1919 ஜூலை 11-ல் ஸ்வேர்திலோப் பல்கலைக் கழகத்தில் தோழர். லெனின் அவர்கள் ஆற்றிய ''அரசு'' என்னும் உரை வெகுவாக மக்களைக் கவர்ந்தது. அவ்வுரை நூல்வடிவம் பெற்று உலகமொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. அதே தளத்தில் நின்றே தமிழ்நாட்டில் பெரியார் தம் பணியினைச் செய்தார்.

ருஷ்ய நாட்டிற்குச் சென்று பல தலைவர்களுடன் உரையாடி தாம் பெற்ற கருத்தாக்ககளையும் சோசலிசப் பொருளாதாரம் என்னும் நிலையிலும், மார்க்சிய சோசலிசவாதிகளின் கருத்துக்களை மட்டுமல்லாது, இராமலிங்க அடிகளாரின் சமரச சன்மார்க்கக் கருத்துக்களையும், ரஸ்ஸல், போன்ஸ்யொ, பெர்னாட்ஷா போன்ற கம்யூனிஸ்ட் அல்லாத சோசலிஸ்டுகளின் படைப்புகளையும் வெளியிட்டார். ''கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரும், ''மே'' தின நிகழ்வை முதன்முதலில் தமிழகத்தில் கொண்டாடிய பெருமையும் இவரேயே சாரும்.

தான் சார்ந்த ''குடியரசு'' இதழில் பொதுவுடமைத் தத்துவங்கள் ( Principles of communision) என்றக் கட்டுரையை 26.03.1933 இல் வெளியிட்டார் (1) ரசியாவைக் கண்டு அஞ்ச வேண்டாம்'' - இலங்கையைச் சேர்ந்த காலிவின் டி. சில்வா (சிரிலங்கா சமமாஜக் கட்சி) எழுதிய கட்டுரை '' (குடியரசு 27.11.1933) (2) "போல்ஷ்விசம்" அல்லது பொதுவுடைமை - இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.எ. லாஸ்கி எழுதியது (குடியரசு 23.4.1933) (3) ''போல்ஷ்விக் அரசாட்சி எல்லா தேசங்களிலும் நன்மை பயக்குமா?'' - அமெரிக்க மார்க்கியர் ஸ்காட் நியறிஸ்குக்கும் பெட்ரண்ட் ரஸ்ஸலுக்கும் இடையே நடந்த விவாதம் ( புரட்சி 11.02.1934. 18.02.1934 ) (4) ஸ்டாலினுக்கும் எச்.ஜி. வெல்ஸ“க்கும் இடையே நடந்த உரையாடல் (பகுத்தறிவு 25.11.1934) (5) சமத்துவ சிந்தனை என்றால் என்ன? ஜவஹர்லால் நேருவின் கட்டுரை ( புரட்சி 26.11.1933) (6) ருசியாவும் ரவீந்திரநாத் தாகூரும், ஸன்யாஸ் கட்டுரையின் தமிழாக்கம் (குடியரசு 13.8.1933) போன்ற கம்யூனிஸ்ட் கருத்தாக்ககளைத் தமது இதழில் எழுதி வந்தார்.

(1) பொதுவுடடைமை தத்துவங்கள் (2) லெனினும் மதமும் (3) சோஷ்யலிசம் (4) புது ரஷ்யா (5) காரல்மார்க்ஸ் போன்ற நூல்களையும் 1940 - முதலே வெளியீடு செய்தார்.

25.03.1944ல் வெளியான குடியரசு நாளேட்டில் ''பொதுவுடைமை வேறு, பொதுவுரிமை வேறு, பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.'' என்று பொதுவுடைமை சித்தாந்தத்தை புதிய புரிதலுக்குட்படுத்தினார்.

பொதுவுடைமை என்பது நாட்டுமக்களிடையே தோன்றினாலும் அதனை அனுபவிக்கும் பொதுவுரிமை நம்மிடையே தோன்ற வேண்டும்.

ஒரு இல்லத்தில் அனைத்துவிதமான பொருட்களும் உணவும் இருந்தாலும் அதனை ''அரசு'' என்கிற தலைமகனுக்கு மட்டும் பொதுவுரிமையுடன் நுகர முடியுமேயானால் அங்கு பொதுவுடைமை என்பது பயனற்று போகிறது. அதனை மாற்றி பொதுவுரிமையுடன் கூடிய பொதுவுடைமை என்பது வேண்டுமென்கிறார்.

பொதுவுடைமை, பொதுவுடைமை ஆட்சி என்பதினை பொதுவாக பொருட்களை அனைவருக்கும் சமமாக பங்கிட்டு கொடுப்பதனால் என்ன பயன்? பொதுவுடைமை என்பது மக்கள் வாழ்க்கைக்கான நெறிமுறையே தவிர அதுவே வாழ்வாக முடியாது. மக்களைப் பக்குவப்படுத்தாமல் பொருளியலில் மட்டும் பொதுவுடைமையை அடிப்படையாக கொண்ட சமூகத்தை கட்டமைப்பது என்பது சரியான அடித்தளமில்லாத கட்டிடத்திற்கு சமமானதாகும். எனவே மக்களையும் பக்குவப்படுத்தும் நிலைப்பாட்டில் அதன் உள்ளர்ந்த நிகழ்வான சாதிய மத ரீதியான, சமுதாயம் சார்ந்த படிநிலைகளை வேரறுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

மக்களின் வாழ்வியல் படிநிலைகளுக்கு ஏற்ப அவர்களின் புரிதலுக்கு உட்படுத்தி பொதுவுடைமையினை சுயமரியாதைக்கான நிகழ்வாக மாற்றி காட்டினார். '' பொதுவுடைமைத் தத்துவமென்பது என் கருத்துப்படி மனித சமுதாயத்திற்கு இருந்து வரும் இழிவுகளும், குறைபாடுகளும் நீக்கப்படுவதுதான்'' (விடுதலை 04.02.1966) என தனது பொதுவுடைமை சிந்தாந்தினை வெளிப்படுத்திக் காட்டினார்.

சமூகத்தினை அதன் நிலைப்பாட்டிலிருந்து மாற்றி புதிய சமன் செய்த சமூகத்தினை உருவாக்கும் பொதுவுடைமை தளத்தினை வாழ்நிலையின் எளிய சிந்தனையுன் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார். ''தேவை நிறைவேறாமல் ஏற்படும் குறைபாடும், அளவுக்கு மேற்பட்ட ஆசை நிறைவேறாததால் ஏற்படும் குறைபாடும் பொதுவுடைமையினால் தான் தீருமென்று'' (உண்மை 14.02.1972) திட்டவட்டமாகக் கூறினார் மக்களின் வாழ்நிலையை இவ்வாறு இருவிதமாக பகுத்துக்கொண்டு, அதன் மூலம் மக்களுக்குரிய பொதுவுடைமையினை வலியுறுத்தினார்.

பொதுவுடைமைவாதிகளும் சோசலிசவாதிகளும் தங்களின் இயக்கம் சார்ந்து கொள்கையினை விளங்கி கொள்வதற்கும், பெரியார் பொதுவுடைமையை விளங்கி கொள்வதற்கும் வேறுபாடே காணப்பட்டது. ''பொதுவுடைமை என்பது பகுத்தறிவின் எல்லையாகும்'' (விடுதலை 24.04.1967) என்று பெரியார் கூறியதை உணர்வோமையானால் அவர் எப்பொழுதும் பொதுவுடைமைக் கோட்பாட்டை நழுவ விடவில்லை என்பதினை அறிய முடிகிறது.

1950-51-ல் திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைப் பெரியார் மிகக் கடுமையாக ஆதரித்து வந்த பொழுதும் கூட '' இந்த நாட்டிலே உண்மையான கம்யூனிசக் கொள்கையுடைய ஆட்சி ஏற்படுமானால் திராவிட நாடு பிரிவினைக் கிளர்ச்சிக்கு அவசியமில்லாமல் போய்விடும்'' (விடுதலை 05.01.1951) என கம்யூனிசக் கொள்கையின் மீது அதீத நம்பிக்கைக் கொண்டவர் பெரியாராவார்.

பெரியார் நீதிக்கட்சிகளுடன் சமரசம் செய்துகொண்டு ''சரச சல்லாபம்'' காட்டுவதாக தோழர் சிங்காரவேலர் கூறியக் கருத்து, உண்மையான தோழர். பெரியாரை புரிந்து கொள்ளவில்லை என்றே உணர முடிகிறது.

சுயமரியாதை இயக்கத்தால் ஆதரிக்கப்பட்ட சில நீதிக்கட்சி அமைச்சர்கள் அன்றைய தாழ்த்தப்பட்டோர், பெண் உரிமை, தேவதாசி ஒழிப்பு, இரட்டை வாக்குரிமை, உள்ளாட்சி மன்றங்களிலும் தேவஸ்தானங்களிலும் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்க வேண்டி உரிமைகளை பார்ப்பனரின் கடும் எதிர்ப்புகளுக்கிடையிலும் செய்துவந்தனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனை சிங்கார வேலர் கருத்தில் கொள்ளவில்லை. மேலும், பெரியாரின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் அனைத்தும் ''பகுத்தறிவு'' ''குடி அரசு'' இதழில் வெளிவந்ததை யாரும் மறுத்துகூறவும் இயலாது.

''நாங்கள் பிராமனர்கள் என்ற தனிப்பட்ட வகுப்பார் மீது துவேஷம் காட்டுபவர்களரல்லர், மாறாக பிராமணத்துவம் என்ற கருத்தியலை எதிர்ப்பவர்கள்'' என்ற கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் பார்ப்பனர்களின் சிறப்புரிமைகளை மட்டுமல்லாது தாங்கள் மொட்டையாக வரையருக்கும் ''பிராமணத்துவம்'' என்பதைக்கூட கேள்விக்குட்படுத்துவதில்லை என்பதையும் பெரியார் சுட்டிக்காட்டினார்.

1931- ஆம் ஆண்டு விருதுநகர் சுயமரியதை மாநில மாநாட்டில் கலந்து கொண்ட ஜ“வா ''சுயமரியாதை" இயக்கம் இந்தியா முழுவதும் பரவவேண்டும் என்று விரும்பி அம் மாநாட்டிலேயே ஒரு தீர்மானமும் தொடங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அதன் பயனாகத் தொடங்கப்பட்டது தான் ''ரிவோல்ட்'' என்ற ஆங்கில ஏடு ஆகும்.

பெரியார் தான் வாழ்ந்த காலம் முழுமைக்கும் பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்தார். பொதுவுடைமை சிந்தாந்தத்தை புதிய புரிதலுக்குட்படுத்தி மக்களின் வாழ்வியல் படிநிலைக்கு ஏற்ப பொதுவுடைமையை எளிய உடைமையாக்கி சிவப்புச் சட்டைக்காரரின் வாழ்வியலை கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ளாமல் விலகியது வருந்த வேண்டிய நிகழ்வே.

பெரியாரியமும், கம்யூனிஸமும் சரியான புள்ளியில் இணையாமல் போனது தமிழகத்துக்கு மட்டுமல்ல திராவிட இனத்துக்கும் மாபெரும் சரிவே. இந்தச் சரிவை சரியாக பயன்படுத்திக்கொண்ட ''பிராமனியம்'' மூங்கில் போல கண்முன்னே வளர்ந்து உச்சாணிக்கு போய்விட்டது. இன்றைய காலகட்டத்தில் திராவிடமும், கம்யூனிசமும் அதன் சில தலைமைகள் மறைமுக பார்ப்பனியத்தை ஆதரிக்காமல் ஒரே புள்ளியில் இணையுமானால் பன்னெடுங் காலமாக கனவாக உள்ள ''சமூகவிடுதலை'' சாத்தியமாகும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை எனலாம்

பார்வை நூல்கள்:-

1) ஏ. எர்மக்கோவா, வி.ராட்னிக்கவ், ''வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?''.

2) லெனின், ''அரசு.''

3) எஸ்.வி. ராஜதுரை, வ.கீதா, பெரியார்: சுயமரியாதை சமதர்மம்.

4) பொன்னீலன், ஜ“வா என்றொரு மானுடன்.

5) நன்னன். மா., பெரியாரியல்.

6) பெரியார், மெட்டிரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்.


---------- வே. சிவக்குமார் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: