Search This Blog

8.6.08

கம்பராமாயணத்தையும், பெரியபுராணத்தையும் கொளுத்துக



இனத்தை தாழ்த்தும் கருத்துரைகளை நாங்கள் கண்டிக்கவே பெரியபுராணத்தையும் கண்டிக்கிறோம். அந்த புராணத்திலே வரும் அடியவர்களின் கதையினால் ஏற்படும் கடவுட் கருத்துரைகள், எவ்வளவு அறிவீனமாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். பக்திக்காக அடியவன் ஏதும் செய்வான் என்று அவன் பெருமையை கூறப் பெரியபுராணம் எழுதப்பட்டதென்றால், ஆண்டவன் இத்தனை கடுமையும், கொடுமையும், நிரம்பிய சோதனைகள் செய்தார் என்று கூறுவது, கடவுள் இலக்கணத்துக்கே இழிவைத் தராதோ என்று கேட்கிறேன். உலகிலே எந்த நாட்டிலேயும், எந்த பக்திமானுக்கும் நேரிடாத சோதனை இங்கு மட்டும் நேரிடக் காரணம் என்ன? ஆண்டவனுக்குமா இந்த நாட்டிடம் ஓர வஞ்சனை மற்ற எங்கும் நேரிடாத நிகழ்ச்சி, துர்பாக்கிய மிகுந்த இந்நாட்டிலே மட்டுந்தானே நடந்திருக்கிறது. பிள்ளை கறி கேட்பதும் பெண்டையை அனுப்பச் சொல்லிக் கேட்பதும் கண்ணை பறித்துக் கொடுக்கச் செய்வதுமான கடவுட் சோதனைகள், இங்கு மட்டுமே உள்ளன. காரணம் என்ன? இவைகளைப் படித்து நம்பும் மக்களின் மனப்பான்மை எவ்வளவு கொடுமை என்பதைக் கண்டே, நாங்கள் பெரியபுராணத்தைக் கண்டிக்கிறோம். இத்தகைய புராணங்களால் மக்களின் அறிவு பாழ்படுவதைக் கண்டே நாங்கள் அப்புராணங்களைக் கண்டிக்கிறோம். எனவே கலை, இடம், இனம், காலம் என்பவற்றிற்கேற்ப உளது. ஆரிய கலை வேறு, திராவிட கலை வேறு. ஆரியக்கலை நம்பொணாக் கருத்துக்களும் ஆபாசமும் நிரம்பியிருப்பதுடன், திராவிட இனத்தை அடக்கவும் பண்பை அழிக்கவும் பயன்பட்டுப் பாமரரின் மனதை பாழாக்குகிறது என்ற குற்றச்சாட்டுகளைக் கூறி கம்பராமாயணத்தையும், பெரியபுராணத்தையும் கண்டிக்கிறோம், கொளுத்துக என்று கூறுகிறோம்.

------------------- 09.02.1943 -அண்ணா அவர்கள் சொற்பொழிவு - "தீ பரவட்டும்" நூலிலிருந்து

0 comments: