Search This Blog

10.6.08

இன்னொரு உத்தபுரமா?

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் அயன் நத்தம்பட்டி கிராமத்தில் நிலவிவரும் தகவல்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவைகளாக உள்ளன.

அந்த ஊரில் உள்ள அனைத்து நிலப் பகுதிகள், அரசு கட்டடங்கள் உள்பட தாழ்த்தப்பட்டவர் அல்லாத ஜாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன. அரசு கலையரங்கத்தைக்கூட தங்களுக்கு உரிமையானது என்று கல்வெட்டுப் பதித்துள்ளனராம்.
கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் சார்பில் இக்கிராமத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் நடனம் ஆடினர் என்பதற்காக நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டதாம்.

எல்லோருக்கும் பொதுவான விவசாயக் கடன், மீன் பாசி ஏலம், மர ஏலம் ஆகியவையும் இதர ஜாதி மக்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றனவாம். தங்களுக்கென்று ஆதிதிராவிட மக்கள் தங்கள் சொந்த செலவில் சமுதாயக் கூடம் கட்டு வதையும்கூட மற்ற ஜாதியினர் தடுக்கிறார்கள் என்றால், 2008 ஆம் ஆண்டில்கூட இப்படியெல்லாம் நடக்குமா என்று நினைக்க வேண்டியுள்ளது.

பலமுறை தேர்தலே நடத்தப்பட முடியாது இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, விருதுநகர் பகுதியில் உள்ள கொட்டக்கச்சியேந்தல் ஊராட்சிகளுக்கே முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டு, அவ்வூராட்சிகள் சீராக இயங்கும் ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டிய ஆட்சி மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி.

இன்றைக்கு அதே விருதுநகர் மாவட்ட வட்டாரத்திலே இப்படி ஒரு கிராமம்; அதிலே தீண்டாமை விரியன் நச்சு நாக்கை நீட்டுகிறது என்றால், இதனை இதற்கு மேலும் வளர விடாமல் ஆட்சியின் கண்கள் பாயவேண்டும்; நடவடிக்கைக் கரங்கள் நீளவேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளில் தயவு தாட்சண்யம் பார்க்கப்படக் கூடாது.

தீண்டாமைப் பிரச்சினை ஒருபுறம்; குறிப்பிட்ட ஜாதிகளின் ஆதிக்கம் இருப்பதால், அரசு நிலங்களையும், கட்டடங்களையும் கூட ஆக்கிரமித்துக் கொள்ளும் சட்ட விரோத நடவடிக்கைகள் இன்னொருபுறம்; இரண்டும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களைச் சேர்ந்தவையாகும்.
மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல்துறைக் கண் காணிப்பாளரும் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தி, சட்டப்படியான நடவடிக்கைகளை போர்க் கால வேகத்தில் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்களின் கூட்டங்களைக் கூட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுபற்றியெல்லாம் தெளிவான வழிகாட்டுதல்களைக் கொடுத்துள்ளார்; இதற்குப் பிறகும் குறிப்பிட்ட பகுதிகளில் இத்தகு சட்ட மீறல்கள் எப்படி நடக்கின்றன - அனுமதிக்கப் படுகின்றன?

உத்தபுரத்தில் எப்படி சுவர்கள் இடிக்கப்பட்டு பிரச்சினைக்குத் தீர்வுகள் எட்டப்பட்டதோ, அதே அணுகுமுறையை அயன் நத்தம்பட்டி விஷயத்திலும் அரசு கடைபிடிக்கவேண்டும்.
உத்தபுரத்தில் அரசின் முடிவை எதிர்த்து மலை, காட்டுப்பகுதிக்குச் சென்ற உயர்ஜாதிக்காரர்கள், ஒரு சில நாள்களிலேயே, உடும்பு வேண்டாம் - கைவந்தால் போதும்! என்ற தன்மையில் இறங்கி வந்தார்களே அதே நிலைதான் மற்ற இடங்களிலும் நடைபெறும். தொடக்கத்தில் காட்டப்படும் உயர்ஜாதி கித்தாப்பு - வீறாப்பு இரண்டொரு நாள்களைப் பொறுமையாக விட்டால் தானாகக் கீழே இறங்கி வந்துவிடும்.


இதுபோன்ற பிரச்சினைகளில் அரசின் நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்ற நிலை உணரப்பட்டால், அடுத்தடுத்த வட்டாரங்களைச் சேர்ந்த பகுதிகளிலும் இந்தத் தொற்றுநோய் பரவாமல் தானாகவே தடுக்கப்பட்டுவிடும்.

ஏடுகளில் வரும் செய்திகளைச் சற்றும் அலட்சியப்படுத் தாமல், அவற்றைக் கோடிட்டு வைத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தானே தொலைபேசி வழி தொடர்பு கொண்டு ஆணைகளைப் பிறப்பிக்கும் இயல்பு கொண்டவர் நமது தமிழக முதலமைச்சர் கலைஞர் ஆவார்கள். இந்தப் பிரச்சினையிலும் அத்தகைய அணுகுமுறையை மேற்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

--------- "விடுதலை"-தலையங்கம் -10-06-2008

0 comments: