Search This Blog

7.6.08

நவசண்டியாகமாம்!

பெண்கள்யாகம் நடத்துகிறார்களாம். எங்கே? சென்னை மேற்கு முகப்பேரில் - ஸ்ரீபஞ்சமுக சிவ ஆலயத்தில்.

எதற்காகவாம்? உலக க்ஷேமத்துக்காகவாம்! எத்தனை நாள்களுக்காம்? 48 நாள்களுக்காம்; அய்தீகம் என்ன?

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் `சுவாசினி அர்ச்சனப் ப்ரீதாயே நம
இதன் பொருள் என்னவாம்?

வயதில் மூத்த சுமங்கலிப் பெண்களைக் கொண்டு எனக்குப் பூஜை செய்வதும், அவர்களை அம்பாளாக நினைத்துப் பூஜை செய்வதும் எனக்குப் பிடிக்கும் என்று அம்பாளே கூறுவதாக இதன்பொருளாம்

(`அம்பாள் என்றைக்கடா பேசினாள் அறிவு கெட்டவனே? என்ற கலைஞரின் பராசக்தி வசனம் நினைவுக்கு வருகிறதோ!)

அம்பாள் பேசினாள்; சிவன் தாண்டவம் ஆடினான் என்பதெல்லாம் பழைய கதைகள்தானா! இப்பொழுதெல்லாம் பேசுவதில்லையே - ஆடுவதில்லையே - ஏன்? பெரியார் பிறந்து விட்டதாலா?
பூஜை செய்தால்தான் அம்பாள் அருள் பாலிப்பாரா? - மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைக் களைவாளா? எல்லா உயிர்களையும் படைத்தவள் என்றால் அவள் தாய்தானே! மக்களாகிய குழந்தைக்குத் தேவையானவற்றை அளிப்பது ஒரு தாயின் கடமையில்லையா?
தன்னைப் பிரார்த்தித்தால்தான், தயை செய்வாளா? அப்படியென்றால் அம்பாள் தற்பெருமைக்காரரா?

நவசண்டி யாகம் என்ற பெயரால் உணவுப் பொருள்களை நெருப்பில் போட்டுப் பொசுக்குவது எந்த வகையில் நியாயம்? இரவு சாப்பாடு இல்லாமல் இந்தியாவில் நான்கில் ஒருவர் பட்டினியால் அவதிப்படுகின்றனர்.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவால் அவதிப்படும் குழந்தைகள் 46 விழுக்காடு. இது தென்னாப்பிரிக்காவைவிட அதிகம் என்று அய்.நா. கல்வி கலாச்சார அறிவியல் (யுனிசெப்) கழகம் கூறுகிறது.

இந்த நிலையில் உணவுப் பொருள்களை நெருப்பில் கொட்டி நாசப்படுத்துவது சட்டப்படி குற்றமல்லவா! அத்தியாவசியப் பொருள் நாசத் தடுப்புச் சட்டப்படி (Essential Commodities Act) இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

இந்தியாவிலே உள்ளவர்களுக்கு மட்டுமல்ல; உலக நன்மைக்காகத்தான் இந்த யாகமாம்!
தொடர்ந்து இதுபோல யாகங்களை நடத்திக் கொண்டு தானே இருக்கிறார்கள்? கண்ட பலன் என்ன?

இராக் போரை, அமெரிக்கா தவிர்த்து விட்டதா? சீனாவில் நிகழ்ந்த பூகம்பத்தைத்தான் யாகங்கள் தடுத்தனவா?
மியான்மரை நர்கிஸ் புயல் `உண்டு இல்லை என்று ஒழித்துக் கட்டியதே இந்த உருப்படாத யாகங்களால் என்ன பயன்?

இலங்கையிலே அங்குள்ள அரசாங்கம் கோரதாண்டவம் ஆடுகிறதே - சின்னஞ்சிறு மழலைக் குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றிக் குண்டு போட்டுக் கொன்றதே - எங்கே போனாள் இந்த அம்பாள்? யாகத்துக்கு ஏற்பட்ட பலன்தான் என்ன? பஞ்சமுக சிவன் ஒரு முகத்தை அந்தப் பக்கம் திருப்பக் கூடாதா?

தமிழ்செம்மொழியானால் வீட்டுக்கு வீடு நாலு பிளேட் பிரியாணி கிடைக்குமா என்று `தினமலர் கேட்டதே - இந்த நவசண்டியாகத்தால் வீட்டுக்கு வீடு எட்டுப் பிளேட் பிரியாணி வரப் போகிறதா?

எது எக்கேடு கெட்டாலும் என்ன - இது போன்ற சடங்குகளால், யாகங்களால் பார்ப்பன சுரண்டல் மட்டும் ஜாம் ஜாமென்று தட்டுத் தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டும் - பக்தி வெள்ளத்தில் மக்களை மூழ்கடித்து, முட்டாள் தனத்தி லேயே அவர்களை முடக்கிப் போட வேண்டும் அதன் மூலம் சுரண்டல் வேட்டை ஆட வேண்டும் என்பதுதானே இதன் உள்ளடக்கம்? ஆண்களே இந்தக் காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அலுத்துப் போகும் அல்லவா? அதனால் தான் பெண்கள் நடத்தும் யாகம் என்று ஒரு புது டெக்னிக்கா?
பெண்கள் அர்ச்சகர்களாகக் கூடாது; வேதம் படிக்கக் கூடாது; பெண்களும் சூத்திரர்களும், பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையில் `பகவான் கிருஷ்ணனே சொல்லியிருக்கிறார் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் பெண்கள் நடத்தும் நவசண்டியாகம் என்பது எப்படி?

இதையெல்லாம் யார் கண்டு கொள்ளப் போகிறார்கள் - கேட்கத்தான் போகிறார்கள் என்ற `துணிச்சல்தானே?

பக்தி வந்தால்தான் புத்தி பறி முதல் ஆகிறதே - எப்படி கேள்விகள் வெடித்துக் கிளம்பும்?


----------- மயிலாடன் அவர்கள் எழுதிய கட்டுரை - "விடுதலை" 7-6-2008

நமது பொருளாதார வருவாய்களும், செல்வர்களுடைய செல்வத்தின் பயன்களும் நாட்டு நலனுக்கும், பெரும்பான்மை யான ஏழை மக்கள் பாடுபடுகின்றவர்கள் என்கின்ற கூட்டத் திற்கும், அவர்களது முன்னேற்றத்திற்கும் போக முடியாமல் சாமி பேராலும், மதத்தின் பேராலும், சடங்குகளின் பேராலும் நாசமாகும் ஒரு பெரிய மோசமான துறையேயாகும்

------------ தந்தை பெரியார் "குடிஅரசு" 5.7.1931

0 comments: