Search This Blog

13.6.08

முதல்வரா, பூசாரியா?

கருநாடக மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக்கு இடையூறப்பாவாக தொடக்கத் திலேயே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டார்.

கருநாடக மாநிலத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 34 ஆயிரம் கோயில்களிலும் நாள்தோறும் முதலமைச்சரின் பெயரில் பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.

இதனை எதிர்த்து கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும், சமூகநீதிக்கான வழக்கறிஞர்களின் அமைப்பைச் சேர்ந்தவரு மான ரவிவர்மகுமார் அவர்களின் மகள் - வழக்கறிஞர் பெல்லி, பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளார். எந்தச் சட்டப் பிரிவின்கீழ் இந்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்ற வினாவையும் அவர் எழுப்பியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த - இந்துத்துவாவாதி இவர் என்பது வெளிச்சமாகத் தெரிந்திருந்தாலும் சட்டத்தை தன் விருப்பப்படி பயன்படுத்தும் கைப்பந்தாக ஆக்கிவிட முடியாதல்லவா!

இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் முதலமைச்சரா? சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள், மத நம்பிக் கையற்றவர்களுக்கும் சேர்த்துத்தானே முதலமைச்சர்? இவருக்கு குறிப்பிட்ட மதப் பற்றும், அந்த மதத்தைச் சேர்ந்த கடவுள்கள்மீது அபார நம்பிக்கையும் இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும்; அது அவர் வீட்டின் பூஜையறையில் இருக்கவேண்டுமே தவிர, அரசையும், அரசின் நிதியையும் தம் மத உணர்வுகளுக்கான கிள்ளுக்கீரையாக நினைக்க முடியுமா? அது சட்ட விரோதம் அல்லவா? வழக்கைத் தொடுத்திருப்பவரும் சாதாரணமானவரல்லர் - அவரும் ஒரு வழக்கறிஞர் என்பதை நினைவில் கொள்ளட்டும்!
தன் ஆட்சி அதிகாரத்தை, இப்படி தான் கொண்டுள்ள மத உணர்வுக்குப் பயன்படுத்துபவர் எப்படி ஒரு நடுநிலையோடு ஆட்சி செலுத்த முடியும்? தொடக்கத்திலேயே இதன்மூலம் வெகு மக்களின் நம்பகத் தன்மையை அவர் இழந்துவிட்டார் என்றே கருதப்படவேண்டும்.
எதற்காக இந்த ஏற்பாடாம்? மாநிலத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றனவாம்; அமைதியை நிலை நாட்ட கடவுளைத் திருப்திப்படுத்தத்தான் இந்த ஏற்பாடாம்!


இதன்மூலம் தனது அறிவு, ஆற்றல், உழைப்பு இவற்றின்மூலம் நாட்டுக்கு நல்லாட்சியைத் தர முடியாது என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார். கடவுளால்தான் அது முடியும் என்றால், ஆட்சியின் - தலைமைச் செயலகத்தில் முதல மைச்சரின் நாற்காலியில் விநாயகரையோ அல்லது அவர்கள் விரும்பும் ராமன் பொம்மையையோ வைத்துவிட்டு நாள் தோறும் தோப்புக்கரணம் போட்டு குறைகளை எடுத்துச் சொல்லி - பரிகாரம் தேடும் காரியத்தில் ஈடுபடவேண்டியது தானே?
எதற்காக ஆட்சி - நிருவாகம் அதிகாரிகள் இத்தியாதி, இத்தி யாதி ஏற்பாடுகள் எல்லாம்?
ஒரு வார காலம் முதலமைச்சராயிருந்தாரே - அந்தக் குறுகிய காலகட்டத்தில் கூட கோயில் கோயிலாகச் சுற்றினாரே - சிறீரங்கப் பட்டிணத்தில் உள்ள ராமன் கோயிலுக்குச் சென்று ராமன் பாதத்திற்குப் (ஒரு கல்தான்) பூஜை செய்து அந்தக் கல்லில் தன் தலையை வைத்து முட்டிக்கொண்டாரே - - என்ன பலன்? ஒரு வார காலத்திற்குமேல் முதலமைச்சராகத் தொடர முடியவில்லையே! விளக்கெண்ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லையே!
ஒரு ஆட்சியாளர் அறிவைச் செலுத்தக்கூடியவராகவும், முற்போக்கு எண்ணம் கொண்டவராகவும், மக்கள்மீது நம்பிக் கைக் கொண்டவராகவும், திட்டங்களை நல்ல முறையில் தீட்டி செயல்படுத்துபவராகவும் இருக்கவேண்டுமே தவிர, கோயில் பூசாரி மனப்பான்மையில் இருந்தால், நாடு எப்படி வளர்ச்சி காணும்?

தண்ணீர் பஞ்சம் வந்தால் ஜெபம் செய்யுங்கோ என்பதும், உணவுப் பஞ்சம் வந்தால் உடலை வருத்தி பஜகோவிந்தம் போடுங்கோ என்பதும்தான் ஒரு ஆட்சியாளருக்கு அழகா? அறிவியல் சகாப்தத்தில் இந்த அநாகரிகக் கூத்தா?

பொதுமக்கள் சிந்திப்பார்களாக!

---------நன்றி: "விடுதலை" தலையங்கம் 13-6-2008

0 comments: