வால்மீகி இராமாயணம் கி.மு. 4 அல்லது 3-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. தசரத ஜாதகம் முதலான புத்த ஜாதகக் கதைகள் கி.மு. 5-ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. முதல் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தோன்றியவை. எனவே வால்மீகி யின் இராமாயணம் ஜாதகக் கதைகளின் அடிப்படையில் இயற்றப்பட்டிருக்கலாம் என்னும் கருத்தைச் சில அறிஞர்கள் முன் வைத்துள்ளனர். இராமன், பரதன், சீதை போன்ற தலைமைப் பாத்திரங்களின் ஒழுகலாறுகளுள் அஹிம்சை, சாந்தம் போன்ற, சத்திரியர்களுக்கு ஏலாத பண்புகள் காணப்படுவதால், அவை புத்தமதக் கோட்பாடுகளின் செல்வாக்கால் படைக்கப்பட்டிருக்கலாம் என்னும் கருத்தும் நிலவுகிறது.
வால்மீகியின் காப்பியம் இராமகாதையின் மூலம் அன்று; வால்மீகியின் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இராம காதைச் செய்திகள் பல்வேறு கதைகளின் மூலமாகவும், நாட்டுப்புற வாய்மொழிக் கதைகளின் மூலமாகவும் இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களில் வழங்கி வந்தன; அவற்றை அடிப்படையாகக் கொண்டு புத்த ஜாதகக் கதைகள், வால்மீகி இராமாயணம், சமணக் கருத்துகளை உட்கொண்ட சிறுசிறு நூல்கள் போன்றவை தோன்றின. இச்செய்தி வால்மீகி இராமா யணம் என்னும் தலைப்பின்கீழ் இந்நூலுள் விளக்கமாகக் கூறப் பெற்றுள்ளது.
புத்த ஜாதகக் கதைகளில் கூறப்படும் இராமாயணச் செய்திகள், உரைநடை வடிவில் பௌத்தக் கோட்பாடுகளை விளக்கும் முகமாகக் கூறப்படுகின்றன. தசரத ஜாதகத்தில் புத்தர் பெருமான், `பண்டைய நாளில் புராண பண்டிதர்கள், (போராணக் பண்டிதர்) தந்தையின் மறைவுக்காகச் சிறிதும் வருந்துவதில்லை எனக் கூறி தசரதன் மறைவுக்காக இராமன் வருந்தாமல் இருந்தமையை உதாரணமாகக் கூறுகிறார் என்னும் செய்தி கூறப்படுகிறது. எனவே இந்தக் கதைகளுக்கு முன்னரே இராமாயணக் கதை நாட்டில் வழங்கி வந்தமை புலனாகும் (புல்கே. ப. 57).
ஜாதகக் கதைகளைப் பொறுத்த வரையில் தசரதனின் தலைநகரம் வாரணாசி; இராமனும் சீதையும் உடன் பிறப்புகள்; வனவாசம் செல்லுமிடம் இமயமலைப் பகுதி; வனவாச காலம் 12 ஆண்டுகள். வால்மீகியின் ஆதிராமாயணத்தில் தலைநகரம் அயோத்தி; இராமனும் சீதையும் தொடக்கம் முதலே கணவன் மனைவியர்; வனவாசம் சென்ற இடம் தண்டகாரண்யம்; வனவாச காலம் 14 ஆண்டுகள்; குப்தர் காலத்திற்குச் சற்று முன்னர் வனவாசம் தண்டகாரணியத்தையும் தாண்டிச் சென்று இராவண வதத்தையும் உள்ளடக்கியதாக வான்மீகம் விரிவடைந்தது.
இத்தகைய வேறுபாடுகளை நோக்க, நாட்டில் பண்டு தொட்டே வழங்கிவந்த இராமாயணம் தொடர்பான கதை களைக் கருவாகக் கொண்டு பௌத்த நூல்களும், வால்மீகி போன்ற கவிஞர்களும் தத்தம் கோட்பாடுகளுக்கேற்பப் பாத்திரங்களையும் கதை நிகழ்ச்சிகளையும் அமைத்துக் கொண்டனர் எனஅறிகிறோம். சில பிற்கால ஜாதகக் கதைகளில் வால்மீகியின் தொடர்களும் கருத்துகளும் ஆங்காங்கே காணப்படுதலின், வான்மீகத்திற்குப் பின்னர் அவை தோன்றி யிருக்கலாம் அல்லது பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டிருக் கலாம் எனவும் அறிஞர்கள் கருதுவர்.
ஜாதகக் கதைகள்
பௌத்த மதத்தினர்க்குரிய பழைய இலக்கியம் ஜாதகக் கதைகள் என்னும் பெயரில் வழங்குகிறது. புத்த பகவான் தம்முடைய முற்பிறவிகளில் மனிதனாகவும் விலங்குகளாகவும் அவதரித்து மக்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த வரலாறுகளை இந்த ஜாதகக் கதைகள் கூறுகின்றன. மக்களிடையே வழங்கி வந்த பல்வேறு கதைகளைப் பயன்படுத்திப் புத்த மதக் கருத்துகளை உபதேசிக்க இக்கதைகள் பயன்படுத்தப் பெற்றன. இத்தகைய பழங்கதைகளுள் இராம காதைச் செய்திகள் பலவும் இடம் பெற்றுள்ளன. எனவே ஜாதகக் கதைகளுக்குள் முற்பட்ட காலத்தில் இருந்தே இராம காதை மக்களிடையே வழங்கி வந்தமை புலனாகிறது.
ஜாதகக் கதையின் அமைப்பு
தோற்றுவாய், எடுத்துக்காட்டுக் கதை, முடிவுரை என்னும் மூன்று கூறுகளை உடையதாக ஒவ்வொரு ஜாதகக் கதையும் அமைந்துள்ளது. கதை கூறுவதற்குக் காரணமான உடன்கால நிகழ்ச்சிகள் தோற்றுவாய்ப் பகுதியில் கூறப்படுகின்றன. மானுடச் சிக்கலை மையமிட்ட அந்நிகழ்ச்சிகளுக்குப் பரிகாரமாக அல்லது விளக்கமாகப் புத்த பெருமான் ஒரு கதை கூறுகிறார். அது எடுத்துக்காட்டுக் கதைப் பகுதியில் இடம் பெறுகிறது. அத்தகைய எடுத்துக்காட்டுக் கதையில் முற்பிறவியில் புத்தர் எந்தப் பாத்திரமாகச் செயல்பட்டார் என்னும் விளக்கம் முடிவுரையில் கூறப்படுகிறது.
இம்மூன்று கூறுகளுள் இடையில் அமைந்த கதைப் பகுதிகளில்தான் இராம காதைபற்றிய செய்திகள் இடம் பெறுகின்றன. இக்கதைகள் தசரத ஜாதகம், அனாமகம் ஜாதகம், தசரத சுதானம் என்னும் மூன்று தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் தசரத ஜாதகம் காலத்தால் முற்பட்டதாகவும் மிகவும் சிறப்பானதாகவும் புகழ்ந்து பேசப் பெறுகிறது.
தசரத ஜாதகம்
ஜாத கட்ட வண்ணனை என்னும் தொகுப்பில் தசரத ஜாதகம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஜாதகட்ட வண்ணனை கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு சிங்கள நூலிலிருந்து பாலியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதில் காணப்படும் கதைகள், பழைய பாலிமொழியில் இயற்றப்பட்ட பாடல்களுக்கு எழுதப்பட்ட உரைவடிவில் இயற்றப்பட்டவை.
அதாவது, பண்டைய பாலி கவிதை இலக்கியத்திற்கு எழுதப் பெற்ற உரைகளில் பல கதைகள் கூறப்பட்டிருந்தன. இவை கி.பி.5-ஆம் நூற்றாண்டளவில் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு வழங்கி வந்தன. பின்னர் இக்கதைகள் மீண்டும் புதிய பாலி மொழியில் ஜாத கட்ட வண்ணனை என்னும் பெயரில் பெயர்க்கப்பட்டன. இந்த வடிவம்தான் தற்போது வழக்கில் உள்ளது. பழைய பாலியில் அமைந்த கவிதைகளோ, அவற்றிற் கமைந்த உரைகளோ தற்போது வழக்கில் இல்லை. எனவே கி.மு.வில் தோன்றிய கதைகள் சிங்களத்திற்கு மொழி பெயர்ந்து கி.பி.யில் மீண்டும் பாலி வடிவம் பெற்றுள்ளன என அறிகிறோம். அதனால் மூலவடிவம் கருதி தசரத ஜாதகம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு உரியது எனச் சில அறிஞர்கள் கருத, பின்னைய வடிவம் கருதிக் கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு உரியது எனச் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
அனாமகம் ஜாதகம்
கி.பி. 3-ஆம் நூற்றாண்டளவில் அனாமகம் சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதற்கடிப்படையான இந்திய நாட்டின் முதல் நூல் இன்னதென அறிய இயலவில்லை. கிடைக் கவும் இல்லை. மறைந்து போன மூல நூலின் அடிப்படையிலும் தசரத ஜாதகத்தின் சாயலின் அடிப்படையிலும் இந்த நூலும் கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு உரியது என அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்த ஜாதகக் கதையில் இராமாயணப் பாத்திரப் பெயர்கள் எவையும் குறிப்பிடப் பெறவில்லை. ஆனால், இராமன் சீதை இருவரின் வனவாச வாழ்க்கை, சீதையைக் கடத்திச் செல்லுதல், ஜடாயுவின் வாழ்க்கை வரலாறு, வாலி - சுக்ரீவன் போர், சேது பந்தனம், சீதையின் அக்கினி பரீட்சை ஆகிய இராம காதை நிகழச்சிகள் பெயர் குறிப்பிடப் பெறாமல் கூறப் பெறுகின்றன. இவையெல்லாம் போதி சத்துவரின் வாழ்க்கையில் நடைபெறு வனவாகக் காட்டப் பெறுகின்றன.
தசரத சுதானம்
கி.பி.2-ஆம் நூற்றாண்டிற்கு உரியதாகக் கருதப்படும் மறைந்து போன இந்திய மூலத்தின் சீன மொழிபெயர்ப்பாகிய (கி.பி. 472) திபிடகத் தொகுப்பில் அடங்கியுள்ள 121 வீரதீரக் கதைகளில் (அவதானங்கள்) தசரத சுதானம் என்னும் கதை காணப்படுகிறது. சீன திபிடகத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பல கதைகளில் கனிஷ்க மன்னன் தலைமைப் பாத்திரமாக வருவதால் இக் கதைகள் கி.பி.2-ஆம் நூற்றாண்டிற்குரியனவாகக் கருதப்படு கின்றன. எனினும் பாலி மொழியின் மூலக் கதைதான் சீன மொழியில் பெயர்க்கப் பெற்று பின்னர் மீண்டும் பாலியில் மொழிபெயர்க்கப்பட்டிருத்தலால் முதல் நூல் கி.மு.வில் தோன்றி இருக்கலாம் என்னும் கருத்தும் அறிஞரிடையே நிலவுகிறது.
தசரத சதானத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இதில் சீதை என்னும் அரசகுமாரியின் பாத்திரமே இடம் பெறாததுதான். எனவே, சீதையின் பிறப்பு, திருமணம், வனவாசம், இராவணனால் கடத்தப் பெறல், இராம- இராவணப் போர் என்னும் நிகழ்ச்சிகள் எவையும் இல்லாத ஓர் இராமாயணமாக இக்கதை காணப்படுகிறது.
எல்லா ஜாதகக் ககைளும் இராமனைப் புத்த பகவானின் அவதாரங்களில் ஒன்றாகப் படைத்துக் காட்டுகின்றன. (புல்கே 56-62)
- ஆர். பார்த்தசாரதி - தென்னக ஆய்வு மய்யம், சென்னை
நன்றி: ``இராம காதையும் இராமாயணங்களும் நூலின் முன்னுரை
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment