Search This Blog

11.6.08

கல்வியின் நிலைபற்றி தந்தை பெரியார்கல்வியின் குறிக்கோள் பற்றிப் பொதுவாக அய்யா என்ன கூற விரும்புகிறீர்கள்?

நம் நாட்டுக் கல்விக்கு இலட்சியமே இல்லை என்பதோடு நம் வாழ்வுக்கும் இலட்சியமில்லை.
நம் நாட்டுக் கல்வியின் போக்கு எப்படி அமைந்துள்ளது என்று கூறமுடியுமா?
பொதுவாக நான் சொல்லுவேன். நம் மக்களுக்குக் கல்வி கற்பதில் இலட்சியம் ஒன்றுமே கிடையாது. யார் எதைப் படிக்க வேண்டும், எடித்த படிப்பு எதற்குப் பயன்படும் என்கிற ஒரு யோசனையே பெற்றோர்களுக்குக் கிடையாது. படிப்பு என்பது எதையோ படிப்பதும், படிப்பு வரக் கூடிய பிள்ளையாயிருந்தால் படித்துக் கொண்டே போவதும், படிப்பு வராவிட்டால் நிறுத்தி விடுவதும், படித்துப் பட்டம் பெற்றுவிட்டால் அன்று முதலே வேலை தேடித் திரிவதும் ஏதோ கிடைத்த வேலையை ஒப்புக் கொண்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்துவதும், தன் தனிப்பட்ட குடும்பம் முன்னுக்கு வரப் பார்ப்பதும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதும் ஆகிய இவைதான் கல்வியின் தன்மையாய் இருக்கிறது.

அப்படியானால் இக் கல்வியினால் ஒரு பயனுமில்லை என்பது தான் அய்யாவின் கருத்து என்று முடிவு செய்து கொள்ளலாமா??

நீங்கள் படித்த கல்வியும், நீங்கள் கற்றுக் கொடுக்கப் போகும் கல்வியும், வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும், ஏற்பட்டிருக்கிறதே அல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விசயமேயாகும். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலாக் கல்வி என்பது வரையிலும் கவனித்தால் தற்காலம் அடிமைத் தனத்தையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமை யான ஆட்சி முறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவி செய்து வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?

வேறு எதுதான் கல்வி என்று கூறுங்களேன்?

படிப்பு என்றாலே மக்களை அறிவுடையவர் களாக ஒழுக்க சீலர்களாக ஆக்குவதற்கும், நாணய முள்ளவர்களாகச் செய்வதற்கும்தான் பயன்பட வேண்டும். அதில்லாமல் உத்தி யோத்திற்காகவே படிப்பு. அந்த உத்தியோகத்தை, அயோக் கியத்தனத்தை, பித்தலாட்டத்தைச் செய்வதற்குச் சொல்லிக் கொடுப்பதைப் படிப்பு என்று சொல்லுவது என்றால் என்ன நியாயம்?
எப்படிப்பட்டதாயினும் இக் கல்வியினால் சிறிதேனும் அறிவு பெற முடியாதா?
கல்வியானது அரசாங்கத்தின் கையில் வைத்துக் கொண்டு மக்கள் பகுத்தறிவு பெற முடியாத வகையில் அறிவிற்குப் பொருத்தமில்லாத வகையில் பரப்பப்பட்டு வருகிறது. இத னால் பயில்கின்ற மாணவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பிற்கு இக் கல்வி பயன்படுமே தவிர, அறிவிற்குப் பயன்படுவது கிடையாது. அறிவு வேறு, கல்வி வேறு. கல்வி என்பது ஒரு வித்தை, அவ்வளவுதான்.

அரசுகள் கல்விக்காகச் செய்யும் முயற்சிகள், செலவிடும் பணம் இவை பற்றித் தங்கள் மேலான கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்?

சர்க்காரும் கூட இவ்வளவு பணத்தைப் படிப்புக்காகச் செலவு செய்தும் படிப்பு இலாக்கா விசயத்தில் எவ்வளவோ கவலை செலுத்தியும் வந்தாலும் தங்கள் அரசாங்கம் தங்கள் இஷ்டப்படி நடைபெறக் கூலிகளைத் தயார் செய்யும் கருத்தோடுதான் செய்கிறார்கள். அதனால் பல வழிகளிலும் தற்காலக் கல்விக்கு வயிற்றுப் பிழைப்புக் கல்வி என்றும், அடிமைக் கல்வி என்றும் சொல்லப்படுகின்றது.

அப்படியானால் இன்றைய படிப்புக்குக் கல்வி என்பதை விட வேறு ஏதேனும் பெயர் வைக்க முடியுமா?

இன்றைய படிப்பு என்று கூறப்படுவதைச் சாதாரணமாக ஒரு வித்தை என்றுதான் கூற வேண்டும்.

அது எப்படி? விளங்கவில்லையே!

வண்ணானுக்கு எப்படி சரித்திரப் பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. ஆகவே, வண்ணான் . . . முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர் கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளி களுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களு மல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில் தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள் களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதை யற்றவர் களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படியாதவர்கள் பரோ பகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதை உள்ள வர்களாகவும் இருக்கலாம். எனவே, இவைகளல்ல கல்வி என்பது நமக்கு விளங்கவில்லையா?

படித்தவர்களிடம் சில திறமைகள் காணப்படுகின்றன. மற்றவர்களிடம் அந்தத் திறமைகள் காணப்படுவதில்லை. அதனால் இன்றைய கல்விக்கும் ஒரு சிறப்பு இருப்பதாகத்தானே கொள்ள வேண்டி இருக்கிறது?

சக்கிலி தைக்கிற செருப்புப் போலவோ, அல்லது வண்ணான் வெளுக்கிற நல்ல வெள்ளைத் துணியைப் போலவோ காரியம் செய்ய நம்மால் முடியுமா? அந்தந்த வித்தைகளிலே அவரவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அது போலவேதான் இன்றைய படிப்பும் நன்றாக உருப் போடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று பட்டம் தரப் படுவதாகும்.

அரசு அலுவல்களுக்கு மேல்படிப்புப் படித்தவனுக்கு முன்னுரிமை என்று வைத்துள்ளது பற்றி அய்யா என்ன கூற விரும்புகிறீர்கள்?

எஸ்.எஸ்.எல். சி. படித்தவன் தாசில்தாராகிறான். பி.ஏ. படித்தவனும் தாசில்தாராகிறான். வேலையில் என்ன குறை ஏற்படுகிறது? 30 வருடம் பார்க்கின்ற உத்தியோகத்தில் ஒரு இடத்தில் கூட அவனுக்குச் சரித்திரமும், பூகோளமும் பயன் படுவதில்லை. அதிகம் பேர் அந்த உத்தியோகத்திற்கு வந்து விடக் கூடாதென்பதற்காகவே பி.ஏ. வேண்டும், எம்.ஏ. வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன?

இந்நிலை சீர் பெறத் தாங்கள் காட்டும் வேறு வழிதான் என்ன?

சாதாரண உத்தியோகத்திற்கு பி.ஏ., படிப்புத் தேவை யில்லை என்று செய்து விடுவது நலமாகும். சர்க்காருக்கும் செலவு குறையும். உத்தியோகத்திற்கும் ஒழுக்கம், நாணயம் உயரும்.

0 comments: