Search This Blog

16.6.08

கடலூர் மாநாட்டில் கனிமொழி பேச்சு --"பெரியார் வாழ்வே போராட்டம் தான்"


கடலூரில் நடைபெற்ற தி.மு. கழக மகளிரணி மாநில மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்து கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

மகளிரணி மாநாடு ஒன்றை நடத்தவேண்டுமென்ற கோரிக்கையை மகளிரணியைச் சேர்ந் தவர்கள் பல ஆண்டுகளாக தலைவர் அவர்களிடம் முன் வைத்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கருணையோடு ஏற்றுக் கொண்டு, அதற்கு அனுமதியும் அளித்து அந்த மாநாடு இன்று வெற்றிகரமாக இந்தக் கடலூரில் நடந்து கொண்டிருக் கிறது.

பல பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள், ஏன், கடலூர்? என்று. அதற்கு பல காரணங்களையும் அவர்கள் யூகித்து எழுதிக் கொண்டிருக்கிறார் கள். ஆனால் முதன்முதலாக சட்டசபைக்கு இந்தக் கடலூரிலிருந்துதான் ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று 33 சதவிகிதத்திற்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தத் தருணத்தில், அம்மையார் சோனியா காந்தி அவர்கள் நமக்கு அனுப்பியிருக்கும் வாழ்த்துக் கடிதத்தில்கூட, இதைத்தான் முதன்மையாக குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.

இன்று எத்தனையோ போராட்டங்கள், வன்முறை களையும் தாண்டி அந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப் பதை எல்லோரும் அறிவீர்கள். இந்த நாட்டில் ஒரு சட்டம் இயற்றப்படும் பொழுது, ஒரு மாற்றம் வரும்பொழுது அரசியல் ரீதியாக ஒரு முடிவெடுக் கப்படும்போது பிற்படுத்தப் பட்டவர்கள் அதில் பங்கு வகிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தது, திராவிட இயக்கம்! சிறுபான்மை மக்களின் குரல் அங்கு ஒலிக்கவேண்டு மென்று குரல் கொடுத்தது திராவிட இயக்கம்! அதைத் தொடர்ந்து, இந்த தேசத்தில் சரிபகுதியாக இருக்கும் பெண்களின் குரல் மட்டும் சரியாகக் கேட்கவில்லை; அதற்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அத்தனை தீர்மானங்களும், மாற்றங்களும் அவர்களது குரலையும், எண் ணங்களையும் கருத்தில் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், தொடர்ந்து நாம் அந்த 33 சதவிகிதத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம், போராடிக் கொண்டிருக்கிறோம், பேரணிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பெரியார் படத்தை திறந்து வைப்பதில்...

எரிமலையாய், சுடுதழலாய்,
இயற்கைக்கூத்தாய், எதிரி களை
நடுங்க வைக்கும் இடி யொலியாய்,
இனஉணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்,
இழிவுகளைத் தீர்த்துக் கட்டும் கொடுவாளாய்,
இறைவனுக்கே மறுத்துச் சொன்ன இங்கர்சாலாய்,
எப்போதும் பேசுகின்ற ஏதென்ஸ் நகர் சாக்ரடீஸாய்
ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்,
என் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்!


என்று எழுதிய என் தந்தை யின் முன்னால் - தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைப்பதில் நான் அகமகிழ்ந்து நெகிழ்ந்து போய் நிற்கிறேன். அதற்கு எனது நன்றியை நான் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பிற்படுத்தப்பட்ட ஒரு வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண், உங்கள் முன்னால் இந்த மேடையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால், இந்த மேடையில் இருக்கும் எத்தனையோ இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த பெண்கள் எல்லாம் தலைவர்களாக பரிமளித்திருக்கிறார்கள் என்றால், இத்தனை லட்சம் பெண்கள் சமையலறைகளையும் வீட்டு வாயிலையும் தாண்டிவந்து இங்கு கூடியிருக்கிறீர்கள் என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியாரும், திராவிட இயக்க மும்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

அதனை நான் நினைவு கூரும் நேரத்தில் பலருக்கு இது புரியாமல் கூடத் தோன்றலாம். ஏனென்றால், கடந்த காலத்தை சரியாகத் தெரிந்து கொண்டு வைத் திருப்பது தமிழனின் பழக்கமில்லை. இந்தத் தலை முறையைச் சேர்ந்த எத்தனை பேருக்குத் தெரியும்; உணவ கங்களின் வாசலில், சூத்திரர்கள் உள்ளே வரக்கூடாது எனும் பலகை தொங்கிக் கொண்டிருந்த காலம்? பேருந்துகளில் சீட்டுகளுக்குப் பின்னால், இந்தப் பேருந்துகளில் பஞ்சமர்கள் ஏறக்கூடாது என்று அச்சிடப் பட்டிருந்த காலம் ஒன்று இருந்தது.

தமிழச்சி அவர்கள் பேசும் போதுகூட மேற்கோள் காட்டினார்களே, பெரியார் அவர்கள் 1921 ஆம் ஆண்டு, கண்ணீரோடு நெஞ்சு பொருமிச் சொன்னாரே; இந்த நாட்டில் 30 வயதுக்கு உட்பட்ட விதவை களின் கணக்கு ஏறத்தாழ 27 லட்சம் என்று! அதிலும் நினைவில் வைத்துக் கொள் ளுங்கள்; 5 வயதுக்கு உட்பட்ட விதவைகளின் எண்ணிக்கை 11,892. இப்படிப்பட்ட அந்தக் காலங்களை எல்லாம் நாம் கடந்து வந்துவிட்டோம். திரா விட இயக்கத்தின் உழைப்பால், திராவிட இயக்கத் தலைவர்களின் உழைப்பால் அந்த காலகட்டங்களை நாம் கடந்து வந்து விட்டோம்.

பெரியார் வாழ்வே போராட்டம் தான்

தனது 95 ஆவது வயதுவரை இந்தத் தமிழக மக்கள் மூடநம்பிக்கை இருளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து பயணம் செய்து, ஓடோடி உழைத்து அவர்களுக் கெல்லாம் ஒரு பகுத்தறிவுப் பகலவனாக மிளிர்ந்தவர், தந்தை பெரியார் அவர்கள்! அவரது வாழ்க்கையே ஒரு போராட்டக் களமாக, தொடர் போராட்டங்களாகத்தான் இருந்திருக்கிறது. எத்தனையோ தலைவர்கள் இந்த உலகத்தில் இருந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரு போராட்டம்தான் அடையாளமாக இருந்திருக்கிறது.
ஆனால் தந்தை பெரியார் அவர்களுக்கு போராட்டமே வாழ்க்கையாக இருந்திருக்கிறது. போராட்டங்களைத் தாண்டித்தான் அவர்களது வாழ்க்கைப் பயணம் இருந்திருக்கிறது என்பதை நாம் மறந்து விட முடியாது.


வைக்கம் போராட்டத்தில் தொடங்கி, சேரன் மாதேவி குருகுலப் போராட்டம், இந்தித் திணிப்புப் போராட்டம், கோயில் நுழைவுப் போராட்டம், வகுப்புரிமைப் போராட்டம், வடவர் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம், பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம், அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம், ராமன் பட எரிப்புப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், காந்தி பட எதிர்ப்புப் போராட்டம், தேசியக் கொடி எரிப்புப் போராட் டம், கர்ப்பக்கிருகத்துக்குள் நுழைவுப் போராட்டம் என்று ஒரு தொடர் போராட்டமாகவே, ஒரு களமாகவே அவரது வாழ்க்கை இருந்திருக்கிறது.

1929 ஆம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில்...

இதையெல்லாம் நான் நினைவுகூரும் இந்த நேரத்தில், பெண்களின் நிலை இந்த நாட்டில் - அதுவும் கல்விக்கு ஒரு பெண்ணைத் தெய்வமாக வைத்து வழிபடுகிறோம் என்று பெரு மைப்பட்டுக் கொள்ளும் இந்த தேசத்தில் பெண்களின் நிலை எதுவாக இருந்தது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

4000 ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வந்தவர்கள் சொல்லித் தந்தார்கள். மனு சாஸ்திரம் எழுதப்படுகிறது. அந்த மனு சாஸ்திரத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதுகிறார்கள்.

பெண்களும், சூத்திரர்களும் பாவத்தின் சம்பளங்கள் என்று! அவர்கள் வாழ்க்கை, பாவப்பட்ட வாழ்க்கை! அவர் களது தருமம் என்பது, பெண் கள் ஆண்களுக்கு அடிமை களாக, சூத்திரர்கள் உயர் சாதி யினருக்கு அடிமைகளாக வாழுவதுதான் அவர்களது வாழ்க்கையின் தர்மம் என்று மனு சாஸ்திரம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொல்கிறது. ஆனால் 1929 ஆம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள், இதை எதிர்த்து - நான்காயிரம் ஆண்டுகளாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, பெண்களுக்கு இருந்த இழிநிலையை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்.

முதன்முதலாக அதன் மீது விழுந்த சம்மட்டி அடியாக பெரியாரின் குரல் தான் இருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் உரிமை வேண்டும்! பெண்களுக்கும் ஆண்களைப் போலவே, சொத்துரிமையும் வாரிசுரிமையும் எந்தத் தொழிலையும் மேற்கொண்டு நடத்துவதற்கான சமஉரிமைகள் அனைத்தும் தரப்பட வேண்டும் என்று அவர் ஒரு தீர்மானம் நிறை வேற்றுகிறார்.


பெண் உரிமை தந்த கலைஞரின் பேனா

பெரியார் நிறைவேற்றிய அந்தத் தீர்மானம் அந்த தினத்திலிருந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பேனா தலை வணங்குகிறது! தன் கோப்புக்களை நோக்கி! அது நிமிரும் போது பெண் உரிமையோடு நிமிர்கிறது! பெண்ணுக்கு எதிராக இருந்த அந்தக் கடைசி தடையையும் தகர்த்தெறிந்து விட்டு நிமிர்கிறது. அதுதான் நம் தலைவர் கலைஞர் அவர்களின் பேனா!
ஏனென்றால் இந்த சமூகத்தில் ஒடுக்கப்படும் ஒவ்வொரு வர்க்கத்திடமிருந்தும் முதலில் பறிக்கப்படும் உரிமை, சொத்துரிமையாகத்தான் இருந்திருக்கிறது.

அது கறுப்பர்களாக இருக்கட்டும், யூதர்களாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் அவர்களிடமிருந்து பறிக்கப் பட்ட முதல் உரிமை; சொத்தை தன்னகப்படுத்திக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லை என்றுதான் முதலில் சொல்லப்படுகிறது.

இதையே முன்கூட்டியே அனுமானித்து 4000 ஆண்டு களுக்கு முன்னால், பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் சொத்துரிமை இல்லை என்று ஆக்கிவிட்டால், அவர்கள் நிலைக்க முடியாது, தழைக்க முடியாது என்று தெரிந்துதான், இப்படிப்பட்ட சாத்திரங்களை அவர்கள் எழுதி வைத்திருந்தார்கள்

பெரியாரின் ஒவ்வொரு கனவும்...

பிறகு பள்ளி ஆசிரியை வேலைக்கு பெண்கள் அதிகமாக நியமிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும், ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் வேலை முழுமைக்கும் பெண்களையே நியமிக்கவேண்டும் என்ற தீர்மானமும், சர்க்கார் புறம்போக்கு நிலங்களை தாழ்த்தப் பட்ட மற்றும் நிலமில்லா ஏழை விவசாய மக்களுக்கு கொடுத்து பயிர் செய்வதற்கான பண உதவியும் செய்யவேண்டும் என்ற தீர்மானத்தையும் அந்த சுயமரியாதை மாநாட்டிலே தான் பெரியார் அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். அந்தக் கனவை இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அரசு தி.மு. கழக அரசு தான் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

இப்படி பெரியாரின் ஒவ்வொரு கனவாக நிறைவேற்றிக் கொண்டு வந்திருப்பவர்தான் தலைவர் கலைஞர் அவர்கள்!

பெரியார் அவர்களின் வாயால்
பராட்டப்பட்டவர் கலைஞர்


பெரியார் அவர்களிடமே, அவர்களது வாயாலேயே, டாக்டர் (கலைஞர்) செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர்களைச் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள். அவைகளை வெகு எளிதில் செய்து முடித்துவிடுகிறார். இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருவது ஒன்றும் புதிதல்லவே! காரணம், டாக்டர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நீடித்து விடுமோ என்ற பொறாமையும் வேதனையும்தான் என்றாலும் டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல், எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரிய மாற்றி வருகிறார்.
- என்று தந்தை பெரியார் அவர்களாலேயே distinction -ல் pass செய்தவர்தான் தலைவர் கலைஞர் அவர்கள். இவருக்கு மார்க் போட இன்னும் யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் முடி யாது என்பதை நான் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படி பெரியாரிடமே certificate வாங்கிய தலைவர், தான் எது செய்தாலும், இன்னும் போதவில்லையே! போதவில்லையே! என்று நினைத்துக் கொண்டு, பெரியார் மறைந்த போது, அவர் நெஞ்சில் ஒரு முள்ளோடு வைத்துப் புதைத்து விட்டோம் என்று வருத்தத்தோடு தெரிவித்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தார். அதற்காகத்தான் வருணாசிரமத்தைப்பற்றிப் பேசும் பொழுது, வருணாசிரமம் மக்களை பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் - இதில் எந்தக் கணக்கிலும் வராத பஞ்சமர்கள் என்று பிரித்து வைத்திருந்தது. பிராமணர்கள் கடவுளுக்கு பூஜை செய்யக் கூடியவர்கள், அறிவைத் தேடக் கூடியவர்கள். ஷத்திரியர்கள், இந்த நாட்டைக் காக்கக் கூடியவர்கள், அரசர்களாக இருந்தவர்கள்! வைசியர்கள் என்பவர்கள், உழவுத் தொழிலை மேற்கொண்டவர்கள் - வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள். சூத்திரர்கள், இவர்களுக்கெல்லாம் அடிமைகளாக, அவர்கள் சொல்லும் வேலைகளை செய்து கொண்டிருந்தவர்கள். பஞ்சமர்கள் என்பவர்கள் இந்த அத்தனை பேரின் கழிவுகளையும்; மனிதனே கழிவான பிறகு அவனையும் நீக்கும் ஒரு தொழிலைச் செய்யக் கூடி யவனாக விதிக்கப்பட்டிருந்தான், வாழவேண்டிய நிர்பந்தத்திலிருந்தான்.

மக்களைப் பிரித்த வருணாசிரமம்

இப்படி மக்களைப் பிரித்துப் போட்டிருந்த அந்த வருணாசிரம தர்மம், காலப் போக் கில் திராவிட இயக்கத்தின் கடினமான உழைப்பால், அந்தத் தலைவர்களின் பேச்சால் குறைந்துபோகத் தொடங்கியது. பொருளாதார மாற்றங்கள் வந்தன. கல்வி வந்தது. அதனால் பல மாற்றங்கள் வந்தபொழுது, ஒரு ஷத்திரியன் வேறு தொழிலுக்குப் போக ஆரம்பித்தான். வைசியன் வேறு தொழிலைச் செய்ய ஆரம்பித்தான். எதையும் தொடக் கூடாது என்று பிரித்து வைக்கப்பட்டிருந்த பஞ்சமன்கூட, மிலிட்டரி வேலைக்குப்போக ஆரம்பித்தான். அதனால் பல நிகழ்வுகள் - பிராமணர்கள் கம்ப்யூட்டர் என்ஜினியர்களாகப் போனார்கள், கலைஞர்களாகப் போனார்கள்.
இப்படி பல நிகழ்வுகள், பல மாற்றங்கள் சமுதாயத்தில் ஏற்படத் தொடங்கியது. ஆனால் ஒரு இடத்தை நம்மால் யாரும் தொட முடியாமல் இருந்தது. கடவுளிடம் போகும் அந்த ஒரு வேலை. கர்ப்பகிருகத்துக்குள் போகும் அந்தப் பணியை மட்டும் அவர்கள் யாருக்கும் விட்டுக் கொடுக்கவில்லை. அதையும் உடைக்க வேண்டும் என்று, யாரை நீ வெளியில் நிறுத்தி வைத்து, அந்தத் தெருவில்கூட நடக்கக் கூடாது என்று சொன்னாயோ, எந்தப் பஞ்சமனை நீ உள்ளே வரவேண்டும் என்றால், உன்னை நெருப்பில் போட்டு பொசுக்கித்தான் உள்ளே விடுவேன் என்று சொன்னாயோ, அவனை, அந்தத் தோழனை நான் கர்ப்பகிருகத்திற்குள் கொண்டு வந்து வைப்பேன்! அவனை நோக்கி நீ கைகூப்பிய பிறகுதான், பிரசாதத்தை வாங்கிக் கொள்ள முடியும்! என்று இங்கு ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்!


கீதையில் அர்ஜூனன் சொல்கின்றான்

இந்த தேசத்தில் வருணாசிரமம் தொடங்கிய அந்தக் காலகட்டத்திலிருந்து, அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன், கீதையே கூட அதன் எதிர்ப்பாகத்தான் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

கீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான்;

பெண்ணின் துர்புத்தியால் தான்
இங்கு வருணாசிரம தர்மம்
அழியப் போகிறது என்று!


அப்படியானால் உங்களுக்கெல்லாம் இருக்கும் பொறுப்பு என்ன என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனமாற்றத்தினால்தான் இந்த ஜாதி அழியும் என்ற பொறுப்பை 4000 ஆண்டுகளுக்கு முன்னால், அர்ஜுனன் நம்மீது ஏற்றி வைத்து விட்டுப் போயிருக்கி றான். ஆனால் கீதையே, இப் படி பல இடங்களில் திரும்பத் திரும்ப ஜாதியத்தை வலியுறுத்தி, அது இந்த எதிர்ப்புகளுக்கு எதிர்ப்பான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஏன், அம்பேத்கர் ஒரு ஆய்வில் சொல்லியிருக்கிறார். இந்த நாட்டில் ஆரியர்கள் வந்த பொழுது, வர்ணாசிரம தருமத்தை எதிர்த்தவர்களைத்தான் ஆதிதிராவிடர்களாக, அவர்கள் இந்த சமூகத்திலிருந்து, இந்த கிராமங்களிலிருந்து ஒதுக்கி வைத்து வெளியே தள்ளினார்கள் என்று!
சாத்திரங்களை கேலிபேசிய சித்தர்கள்
அதன் தொடர்ச்சியாக நமது பாரதிதாசன் அவர்கள் கூட, தனது கவிதை வரிகளில், ஆரியர்தம்மை ஒப்பா ஆதிதிராவிடரை சேரியில் வைத்தாரடி சகியே! சேரியில் வைத்தாரடி!
- என்ற கவிதை வரிகளாக மிளிர்கிறது.


அதைத் தொடர்ந்து, சித்தர்கள் வருகிறார்கள், நாம் கேட்டு அசந்துவிடக் கூடிய வார்த்தைகளில் அவர்கள், இந்த சாத்திரங்களை கேலி பேசுகிறார்கள் சிவவாக்கியர் கேட்கிறார், சாத்திரங்கள் ஓதுகின்ற சட்ட நாத பட்டரே வேர்த்து, இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ என்று. என்ன நகைச்சுவை என்ன எள்ளல்! இந்த சாத்திரங்களை கிழித்துப் போடுவதில் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

தொடர்ந்து புத்தர் வருகிறார். புத்த மதமே இந்த ஜாதீயத்தை எதிர்த்து கேள்வி கேட்கிற மதமாகத்தான் இருந்திருக்கிறது.
அயோத்திதாசபண்டிதரும், அம்பேத்கரும் இந்து மதமே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு புத்த மதத்திற்குப் போகிறார்கள். நம் பக்கத்து ஊரான நாராயணகுரு அவர்கள் வருகிறார்கள். ஈழவர்களை தூக்கிச் சுமந்து, அவர்களை மேன்மையுறச் செய்ய வேண்டும் என்று எழும் குரலாக மாறுகிறது.

அப்பொழுது, கோயில்களுக்குள் நீங்கள் எங்கள் ஈழவர்களை விடுவதில்லை என்றால், நான் தனியாக ஈழவர் களுக்கென்று ஒரு கோயில் கட்டிக் கொள்கிறேன் என்று அங்கே ஒரு சிவனை அவர் வைக்கிறார்.

அப்போது நம்பூதிரிகள் கேட்கிறார்கள்; யார் இவன், நாராயண குரு! எப்படி இவனுக்கு அந்த உரிமை வருகிறது? என்று! அதற்கு நாராயண குரு பதில் சொல்கிறார், நான், உயர்ந்த ஜாதி நம்பூதிரிகளின் சிவனை அங்கு வழிபடவில்லை. அங்கு உச்சாடனம் செய்ய வில்லை. ஈழவச் சிவனைத் தான் நான் உச்சாடனம் செய்கிறேன். உங்களுக்கு அதைக் கேட்க அருகதை இல்லை என்று சொல் கிறார். இப்படி இந்து மதத்திற்குள்ளாகவே, இன்னொரு மதத்தை உருவாக்கினார், நாராயண குரு!

மதமே வேண்டாம் என்றார் பெரியார்

அப்போது பெரியார் வருகிறார். மதமே வேண்டாம். தூக்கி எறிகிறேன் என்று நாத்திகத்தை அங்கு வைக்கிறார்கள், ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக! ஆனால் இந்த மண்ணில் ஜாதி என்பது மதத்தைத் தாண்டிய ஒன்றாக, இந்த சமுதாயத்தை தாண்டிய ஒன்றாக இந்த மண்ணில் ஊடுருவிய ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது என்பதை நம்மில் பலர் கண்ணால் பார்த்தும், கருத் தால் அறியாதவர்களாக இருந்திருக்கிறோம்!

ஒரு கிராமத்திற்குப் போகிறீர்கள், அந்த கிராமத்தில் பலபல தெருக்கள் இருக்கும். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு பெயர் இருக்கும். அந்தணர் வீதி, ரெட்டியார் வீதி, செட்டியார் வீதி, சேரி என்று ஒரு வீதியில் இருப்பவர் எந்த உயர்ந்த நிலைக்குப் போனாலும், அந்த வீதிக்கு வந்து வீடு கட்ட முடியாது, வாழ்ந்துவிட முடியாது. ஆனால் இப்படி தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த ஒன்றை அறிந்து கொண்டு, அதையும் உடைத் தெடுப்பேன்! அதன் ஆணி வேரையும் நான் அறுத்தெறிவேன்! என்று சமத்துவபுரங்களைக் கொண்டுவந்து அதையும், நம் கண்ணுக்குத் தெரிந்தாலும், நாம் புரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தோமே, அதையும் உடைத்தெறிந்தவர், தலைவர் கலைஞர் அவர்கள்தான்!

அம்பு எய்தி பார்க்கிறார்கள்

இன்று நம்மீதும், தந்தை பெரியார் அவர்கள் மீதும் பலர் அம்புகளை எய்தி பார்க்கிறார்கள். அதில், நாத்திகம் என்பது ஏதோ தீண்டத்தகாத வார்த்தை, கேட்கக் கூடாத வார்த்தை என்று சொல்லிப் பார்க்க நினைக்கிறார்கள். அதே குற்றச்சாட்டைத்தான் தலைவர் மீதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் வீசிப் பார்க்கிறார்கள். ஆனால் பெரியார் அவர்கள், நாத்திகத் தைப்பற்றிச் சொல்லும் போது நகைச்சுவையோடு, ஒரு எள்ளலோடு சொல்கிறார்;
சாதி, உயர்வு, தாழ்வு, செல்வம், தரித்திரம், எசமான், அடிமை ஆகியவைகளுக்கு கடவுளும் கர்மமும்தான் காரணம் என்று சொல்லுவதானால்; கடவுளையும் தர்மத்தையும் ஒழித்தால் ஒழிய, மனிதன் எப்படி முன்னேற முடியும்? என்று கேட்கிறார்.

மேடும் பள்ளமும் கடவுள் செயல் ஆனால், மேட்டை வெட்டி பள்ளத்தில் போடுவது கூட, கடவுளுக்கு எதிரான செயலாகத்தானே ஆகவேண்டும்? என்ற கேள்வியை அவர் நம் முன்வைக்கிறார்.
அதைவிட ஒருபடி மேலே போய், தலையிலும் முகத்திலும் மயிர் முளைப்பது கடவுள் செயல் ஆனால், சவரம் செய்வது கூட கடவுள் செயலுக்கு எதிரானதாக ஆகும் அல்லவா! - என்று கேட்கிறார்.

நாமெல்லாம் கோயிலுக்குப் போகிறோம். பிச்சைக்காரர்களுக்கு அன்னதானம் செய்வதை யெல்லாம் ஒரு பெரிய புண்ணியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்போது பெரியார் கேட்கிறார்; பிச்சைக்காரனுக்கு சோறு போடுவதும் நாத்திகமாகும். ஏனென்றால், கடவுள் பார்த்து ஒருவனை, அவனது கர்மத்திற்காக பட்டினிபோட்டிருக்கும் பொழுது, நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியம் ஆகிவிடாதா?
- என்று கேட்கிறார். இப்படி நம் வாழ்வின் ஒவ்வொரு விஷயங்களையும், அவை மத நம்பிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவற்றை நகைப்பிற்குரிய விஷயமாக மாற்றி சிந்திக்க வைக்கிறார்.மக்கள் மேன்மையுறவே பெரியார் பாடுபட்டார்

பெரியாரின் நாத்திகத்தில் எப்போதும் தழுவியிருந்தது, அதன் அடிவேராக, ஆணிவேராக, அடித்தளமாக அமைந்திருந்தது, சமூகமாற்றம், மனிதநேயம் என்பதுதான்.

பெரியாருக்கு நாட்டுப் பற்றோ, மொழிப்பற்றோ, மண்பற்றோ நம்மைப்போல் உணர்வு தோய்ந்த விஷயமாகக் கூட இருந்ததில்லை, அவர், நாட்டுக்கு நல்ல நிலை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை போகாது என்ற நிலை இருந்தால், இந்த நாட்டுக்கு சுயராஜ்யமே தேவை யில்லை. நான் ஒரு தேசாபிமானி இல்லை. அதை எதிர்த்தும் சொல்லியும் வரும் ஒரு தேச துரோகியாகவே இருக்க விரும்புகிறேன் என்று பறை சாற்றிக் கொண்டவர் தான் பெரியார்! அவருக்கு வேண்டு மென்று இருந்தது; மக்கள் மேன்மையுற வேண்டும், தமிழர்கள் மேன்மையுற வேண்டும். ஒருவனுக்கு ஒருவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற அந்த பேதங்கள் மறைய வேண்டும் என்பதில்தான் அவருக்கு ஆர்வம் இருந்ததே தவிர, நாம் உணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்டு திரியும் எந்த விஷயங்களிலும் அவருக்கு நாட்டமோ, அக்கறையோ இருந்த தில்லை.
மொழி என்பதைக் கூட, நான் தமிழை என் தாய் பாஷை என்று தூக்கிப் பிடிக்கவில்லை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற முன்னணியினருக்குத் தலைமையேற்று வழி நடத்திய பெரியார் அவர்கள் சொல்கிறார்கள்;
தமிழ் தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் மீது எந்தப் பற்றும் பாசமும் இல்லை. தமிழ் இந்நாட்டு மக்களுக்கு சகல துறைகளுக்கும் முன்னேற்றம் அளிக்கக்கூடியதும் மானத்துடனும் அறிவுடனும் வாழத்தக்க வகை செய்யக்கூடியது மாகும் என்பது எனது அபிப்பிராயம்!- என்று சொல்கிறார்.


இப்படி இந்த நாட்டில் நாத்திகம் சாதித்தது, பகுத்தறிவு சாதித்தது என்னவென்று நாம் இப்போது பார்ப்போம். நாம் அதற்கு உதாரணங்களாக இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறோம்.
இது ஒருபக்கமிருக்க, இந்த நாட்டில் மதவாதத்தையும் இந்துத்துவாவையும் சற்று சிந்தித்துப் பார்ப் போம்!

தலைவர் எழுதுகிறார், கீதைக்கு ஒரு விரிவுரை!

தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்களோ, பெரியாரின் வாரிசுகளோ எழுதவில்லை. திலகர் எழுதுகிறார்.
கீதை பொது நலத்திற்காக எதிரிகளைச் கொல்வதைக்கூட நியாயம் என்கிறது என்று திலகர் அறிக்கையில் எழுதியிருக்கிறார். எந்த கீதையை வைத்துக் கொண்டு இந்த நாட்டு மக் களையெல்லாம் இணைத்து விட முடியுமென்று அண்ணல் காந்தியடிகள் நினைத்தாரோ, எந்த கீதையை வைத்துக் கொண்டு நம்மை அன்பால் கட்டிப் போட்டு விட முடியும் என்று காந்தி கனவு கண்டாரோ, அந்த கீதையைப்பற்றி திலகர் இப்படி எழுதுகிறார்;
இதே கீதையைப் பயன் படுத்திதான் நாதுராம் கோட்சே என்ற வெறியன் காந்தியடிகளை கொன்றுவிட்டு, அதற்கு நியாயம் கற்பிக்கும் பொழுது, கீதையில் முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை மனப்பாடமாகச் சொல்லத் தெரிந்த அந்த நாதுராம் கோட்சே, இதே கீதையின் வரிகளைத்தான் காந்தியின் கொலையை நியாயப்படுத்த பயன்படுத்துகிறான் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.


இந்தக் கொலை வெறியைத் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் கண்டோம். எத்தனை பெண்களை, எத்தனை இளைஞர்களை, அவர்கள் கொலைவெறியோடு தாக்கிச் சென்றார்கள் என்பதை நாம் கண்டோம். அந்த மோடி இப்படிப்பட்ட காரியங்களைச் செய்தவர்களின் வீடு தேடிச் சென்று பாராட்டுப் பத்திரம் வழங்குகிறார். அந்த மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து, வரவேற்று விருந்தும் தருகிறார் அம்மையார் ஜெயலலிதா அவர்கள்!

புதிதாக கட்சியைத் தொடங்கியவர்

அந்த ஒட்டு, உறவு, பாசம் என்ன என்பதை நான் உங்களுக்கு விளக்கிச் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் இதுவும் வன்முறை, அதுவும் வன்முறை. நாம் கண்ட வன் முறையை மறந்துவிட முடியாது. அது சாலைப் பணியாளர்கள் போராட்டமாக இருந்தாலும், அரசுப் பணியாளர்கள் போராட்டமாக இருந்தாலும், ஆசிரியர்கள் போராட்டமாக இருந்தாலும், அடக்கியே தீருவேன், வன்முறையை நான் வீழ்த்தியே தீருவேன், நான் சொல்வதை விஞ்சி எந்த நியாயமும் இருக்கமுடியாது என்பதுதான் இந்துத்துவாவின் கொள்கை! அம்மையார் ஜெயலலிதாவின் கொள்கை! இவை இரண்டுக்கும் பெரிய மாறுபாடு எதுவும் இல்லை. இவரை நாம் இங்கு வளர விட்டோம் என்றால், தமிழ் நாடு குஜராத்தாக மாறும் அபாயம் வெகு தூரத்திலில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்!

இப்போது புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகி இருக்கும் ஒரு நண்பர், பேசியிருக்கிறார், கலைஞர் அவர்களின் நாத்திகத்தைப்பற்றி! அவர் சொல்கிறார்; சேது சமுத்திரத் திட்டம்வேண்டும் என்று சொல்லும் கலைஞர் அவர்கள், சில நாள்களுக்கு முன்னால், ராமர் யார்? அவன் எந்தப் பொறியியல் கல்லூரியில் பயின்றான்? என்று கேட்டார். இப்போது, அந்தத் திட்டத்திற்கே, சேது ராம் என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள், என்று கூறுகிறார். பாருங்கள், பாருங்கள். அவரது நாத்திகம் எந்த அழகில் இருகிறது என்று சொல்லியிருக்கிறார். ராமன் யார்? என்ற கேள்வியை கலைஞர் கேட்டார். அன்றும் கேட்டார், இன்றும் கேட்கிறார், என்றும் கேட்பார்! அவர் மாத்திரமல்ல, தனது சந்ததிகள் எல்லாம் கேட்கவேண்டும் என்று நினைத்தார். சந்ததிகள் என்றால் நேரடி வாரிசுகள் மட்டு மில்லை. அவர் சொல்வது போல, என்னுடைய குடும்பம் என்பது ஒரு சிறிய புகைப்படத்துக்குள் அடங்கிவிடாது. அது கலிபோர்னியாவிலிருந்து தொடங்கி, அய்ரோப்பாவின் எல்லை வரை விரிந்திருக்கக்கூடிய தமிழ்க் குடும்பம்! என்று சொல்வாரே, அந்தத் தமிழ்க் குடும்பத்தின் ஒவ்வொரு தளிரும், துளிரும், விதையும் அந்தக் கேள்வியைத் தான் கேட்கவேண்டும்.

இன்று மட்டும் இல்லை. எதிர்காலத்திலும் கேட்க வேண்டும். அந்த அறிவுக்கூர்மையும், தெளிவும் அவர் களுக்கு இருக்கவேண்டும் என்று நிச்சயமாக கேட்டார் என்பதை அந்த நண்பருக்கு சொல்லிக் கொள்கிறேன். ஆனால் தந்தை பெரியாரை விட ஒரு பெரிய நாத்திகரை நாம் கண்டிருக்கிறோமா? அவரையும் பார்த்து இந்தக் கேள்வியை நீங்கள் கேட்பீர்களா? பெரியார் சொல்கிறார்; சமூகத்திற்குப் பயன்படும் என்றால், எந்த வேஷமும் போடுவேன், மனிதர்களுக்குப் பயன்படும் என்றால் நான் விபூதி கூட பூசுவேன்! என்கிறார். வெறும் ராமனின் பெயர்தானே, வைத்துக் கொண்டு போங்கள். சந்தோஷமாக இருங்கள். என் தமிழன் வாழ வழிவிடுங்கள்! என்று சொல்லும் தலைவரைப்பற்றிப் பேசவேண்டுமென்றால், நாங்கள் யார்? திராவிட இயக்கம் என்றால் என்ன? பெரியார் யார்? அவர்கள் வழிவந்த தலைவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொண்டு பேசுங்கள், தெரியாமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்பதை உங்களுக்கு நான் பாசத்தோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற காலம் போய், இன்று வடக்கு, வாழும் தமிழ கத்தை அண்ணாந்து பார்க் கிறது! இன்று தமிழகத்திடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தக் காலம் இன்று வந்திருப்பதற்குக் காரணம், நமது பகுத்தறிவும் நமது திராவிட இயக்கமும் வகுத்துத் தந்த பாதையும் தான் என்றால் அது மிகையாகாது. அப்படி நாமெல்லாம் ஏதேதோ சொன்னோம். இராமனை அழைத்தோம், இந்திரனை அழைத்தோம், சந்திரனை அழைத்தோம் ஒரு புண்ணியமும் இல்லை. கடவுளே வேண்டாம் என்று கூறிய பகுத்தறிவுவாதிகள் திராவிட இயக்கத்தினர் ஆண்டு கொண்டிருக்கும் இந்த தேசத்தில் இத்தனை செழிப்புகள் - உலகில் உள்ள பணக்காரர்கள் எல்லாம் இங்கே வந்து முதலீடுகளை கொட்டுகிறார்களே இவ்வளவு அமைதியாக இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே என்று கடவுளின் பெயரால் காலம் கடத்திக்கொண்டிருப் பவர்களுக்கு மனதில் ஒரு புதிய அச்சம் ஏற்பட்டுவிட்டது.

கலைஞருக்கு புகழ்வந்து சேரும் என்ற அச்சம்

அதனால்தான் இந்த தமிழகம் பொருளாதாரத்தில் இன்னும் பீடுநடைபோட்டு எழுந்துவிடுமோ, எட்டாத தூரத்திற்கு போய் விடுமோ அந்த புகழ் எல்லாம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வந்து சேர்ந்து விடுமோ, திராவிட இயக்கத்திற்கு, பகுத்தறிவு இயக்கத்திற்கு பெரியாருக்கு வந்து சேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில்தான் எந்த அறிவான கேள்வியையும் கேட்காமல், அறிவுப் பூர்வமான கேள்வி எதுவும் கேட்காமல் - கேட்கலாம் பொருளாதாரத்தைப் பற்றி கேட்கலாம், இயற்கையைப் பற்றி கேட்கலாம், சுற்றுச்சூழலைப்பற்றி கேட்கலாம், கேட்டார்கள் பதிலும் சொல்லியாகிவிட்டது. மாற்று வழி இருக்கிறதா என்று கேட்டார்கள். ஆராய்ந்து பார்த்து இல்லை என்று தெளிவாக சொல்லியாகிவிட்டது. ஆனால் இப்போது அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் அறிவுப்பூர்வமானது அல்ல. கண்ணுக்கு புலப்படாத ஒன்றை எடுத்துக் கொண்டு, ஆயுதமாக அதை வைத்துக் கொண்டு அவர்கள் சொல் கிறார்கள். அது ராமன் கட்டிய பாலம் தான் -அதனால் சேது சமுத்திர திட்டத்தை நிறை வேற்ற முடியாது என்று எங்கிருந்தோ ஒன்றை தூக்கிக் கொண்டு வந்து நிற்கிறார்கள். ஒரு காலத்தில் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த இந்துத்துவாவும் தீவிரவாதமும் தமிழகத்தின் தென்கோடியில் நின்று கொண்டு - நாம் தூக்கி எறிந்ததால் அங்கே நின்று கொண்டு மீண்டும் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தத் திட்டம் என்பது ஒரு பொருளாதார திட்டமாக இருக்கும் இடத்தையும் தாண்டி நமக்கெல்லாம் ஒரு மாற்றத்தைக் கொண்டு - அதையும் தாண்டி நாம் இத்தனை ஆண்டுகளாக கண்ணீரையும் செந்நீரையும் சிந்தி பெற்றிருக்கும் சுய மரியாதையை கேள்விக் குறியாக்கும் ஒன்றாக அது மாறியிருக்கிறது. அதை நாம் விட்டுவிட்டோம் என்றால் நாம் இன்றுவரை போராடிப் பெற்ற உரிமை களையும் இழக்கும் முதல் படியில் நிற்போம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

இந்துத்துவா தலைநீட்டத் தொடங்கினால்...

இந்துத்துவா வாதமாக இருக்கட்டும், மதவாதமாக இருக்கட்டும் அது எதுவாக இருந்தாலும் அது தலை நீட்ட தொடங்கினால் உலகத்தின் அத்தனை மூலையிலும் தலிபானாக இருக்கும் ஒரு காலத் தில் மேற்கத்திய நாடுகளில் சூனியக்காரர்களை விரட்டி கொளுத்தினார்களே அப்படிப் பட்ட மதவாதமாக இருக் கட்டும் - அது தனது முதற் கணைகளை வீசுவது பெண்களை நோக்கித்தான். பெண்களை கொண்டுபோய் மீண்டும் வீட்டின் கொட்டடியில் அடைக்கும் அடிப்படை வாத மாகத்தான் எப்பொழுதுமே இருந்திருக்கிறது. பெண்ணே! நீ இத்தனை ஆண்டுக் காலமாக போராடி போராடி பெற்ற அத்தனை சுதந்திரங்களை இந்த தேசத்தில் இந்த மண்ணில் மதவாதம் என்ற ஒரு தீ துவங்கும் போது அது பொசுக்கிவிடும் என்பதை மறந்துவிடாதே. நீ மட்டுமல்ல; உன் சந்ததிகளும் அந்த தீயில் பொசுங்கி போவார்கள் என்பதை மறந்துவிடாதே. அதனால் தயவு செய்து அலங்காரத்திலும் பேதைமையிலும் அச்சத்திலும் முடங்கிக் கிடக்காதீர்கள். அதை எல்லாம் விட்டுவிட்டு வீரத்தோடு தலைவர் கலைஞரின் பின்னால் அணி வகுப்போம். குலவிளக்கே வா என்றாரே, பகுத்தறிவு என்ற தீப்பந்தத்தோடு அவர் பின்னால் அணி வகுப்போம். நமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உறுதி கூறிவிடை பெறுகிறேன்.
- இவ்வாறு அவர் பேசினார்.

0 comments: