Search This Blog
9.6.08
சூத்திரப் பட்டம் சொல்லாமல் ஓடியது
பெரியார் சிலை திறப்பில் பெரியார் - கலைஞர்
பெரியாருடைய சிலையை நாம் இன்றைக்குத் திறந்திருக்கின் றோம். பல சிலைகள் இதற்கு முன்னால் திறக்கப்பட்டிருக்கின்றன.
ஏன் பெரியார் சிலை திறக்கும் பொழுதே பெரியார் அய்யாவே இருந்தார்கள். கடலூரிலே பெரியார் சிலை திறக்கப்பட்டது. `செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அன்றைக்கு கடலூரிலே எந்த இடத்திலே செருப்பு போட்டார்களோ, இன்றைக்கு அதே இடத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை வைத்தோம்.
கடலூரில் தந்தை பெரியார் சிலையை கலைஞர் அவர்கள் திறந்துவைத்தார்கள். கலைஞர் அவர்களுடைய பக்கத்திலே பெரியார் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
`செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்
இங்கே சகோதரர் கல்யாணம் அவர்கள் வரவேற்புரையிலே சொன்னார்கள். அதுபோல கடலூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின் பொழுது நான் வரவேற்புரையாற்றும் பொழுது சொன்னேன். உங்கள்மீது பாம்பை வீசினார்கள். அதற்காக கழுவாயாக, பிராயச்சித்தமாக பத்தாயிரம் ரூபாயை அளிக்கின் றோம் என்று சொல்லி கொடுத்தபொழுது அய்யா அவர்கள் மகிழ்ந்தார்கள். உங்கள்மீது செருப்பு ஒன்று போட்டார்கள். அதனால் உங்களுக்கு இங்கே நன்றி உணர்வோடு சிலை வைத்திருக்கின்றார்கள்.
உலக சரித்திரத்திலே இப்படி ஒரு நிலை
உலக சரித்திரத்திலே உங்கள் காலத்திலே உங்களுடய கொள்கை வெற்றி பெற்று அறுவடை செய்த தலைவர் ஒரே ஒரு தலைவர் நீங்கள்தான். இதை அண்ணா அவர்கள் பதிவு செய்தார்கள். சுருக்கமாக சொல்லுகின்றேன். பள்ளிக் கூடங்கள் திறப்பதெல்லாம் சிறப்பான சாதனைகள்.
காலம் காலமாக பல ஆண்டு காலமாக இந்த நாட்டில் பாசி படிந்த சமுதாயத்தை மாற்றியமைக்கக் கூடிய அதைப் புரட்டிப் போடக் கூடிய துணிவு கலைஞர் ஆட்சியைத் தவிர வேறு எந்த ஆட்சிக்கும் வராது.
அண்ணா சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் தந்தார்
அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் கொடுத்தார்கள். எப்படி ஒரு பண்பாட்டுப் புரட்சியை நடத்தினார்களோ, அதேபோலத்தான் கலைஞர் அவர்கள் அண்ணா செய்ததைப் போல் தொடர்ந்து ஒவ்வொரு செயலை யும் சாதனை சரித்திரங்களாக செய்துகொண்டு வருகின்றார்.
பெரியாருக்கு அரசு மரியாதை கொடுக்க அதிகாரிகள் தயங்கினர்
ஒவ்வொருநாளும் பொன்னேட்டில் பதிய வைக்கக் கூடிய அளவுக்கு சாதனைகளை செய்துகொண்டு வருகின்றார். அய்யா அவர்கள் மறைந்தபொழுது கலைஞர் அவர்கள் அரசு மரியாதையோடு உடலை அடக்கம் செய்யவேண்டும் என்று நினைத்த நேரத்திலே அதிகாரிகளிடம் இதை சொன்னபொழுது பெரியாருக்கு அரசு மரியாதை கொடுக்கத் தயங்கினர்.
என்னுடைய ஆட்சி பல தடவை போனாலும் பரவாயில்லை
என்ன சங்கடம் எனக்கு வந்தாலும் பரவாவில்லை என்னு டைய ஆட்சியே போனாலும் எனக்குக் கவலை இல்லை. என் னுடைய தலைவருக்கு நான் மரியாதை கொடுத்தாகவேண்டும். அதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் ஆட்சியை இழக்கத் தயார் என்ற துணிச்சலோடு அய்யா அவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்தவர்தான் கலைஞர் அவர்கள். (கைதட்டல்)
காமராஜர், கலைஞரைப் பற்றி சொன்ன ஒரு செய்தி
ஒரு தகவலை உங்களுக்குச் சொல்லுகின்றேன். தந்தை பெரியார் அவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்தார் என்ற தகவல்தான் உங்களுக்குத் தெரியும். தந்தை பெரியார் அவர்கள் மறைந்த பிறகு பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், அன்னை மணியம்மையார் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்தார். அப்பொழுது நாங்கள் எல்லாம் உடன் இருக்கின்றோம். அவர்கள் அப்பொழுது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த நிலையிலே அவர் சொல்லும்பொழுது சொன்னார். நனே முதலமைச்சராக இருந்தால் கூட நானே முதலமைச்சராக இருந்தால்கூட எனக்கு பெரியார் அவர்களுக்கு இராணுவ மரியாதை கொடுக்கக் கூடிய அளவுக்கு துணிச்சல் வந்திருக்காது. இது கலைஞர் கருணாநிதிக்கு மட்டுமே உள்ள துணிச்சல் என்று சொல்லிவிட்டு, அம்மா அவர்களிடத் திலே நீங்கள் வருத்தப்படாதீர்கள். அவர் சிறப்பாக தொண்டு செய்திருக்கின்றார். அவர் தொண்டுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை சிறப்பாகக் கிடைத்திருக்கின்றது.
அவருடைய பிள்ளைகள் தொடர்ந்து செய்து வருகிறோம் அவர் செய்ததைவிட அவருடைய பிள்ளைகளும் நல்ல அளவுக்குத் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றார்கள். இன்னும் மகிழ்ச்சி தன்மையோடு அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அந்த நேரத்திலே கூட கலைஞர் அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள்.
பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை என்ன தெளிவாக சொன்னார்கள் என்று சொன்னால், தந்தை பெரியார் அவர்களுடய நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமல் அடக்கம் செய்திருக்கின்றேன். அவர் நெஞ்சில் தைத்த முள் என்னவென்று சொன்னால், அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதுதான். இன்னமும் உங்களை சூத்திரனாக விட்டு விட்டு சாகிறேன் என்று பெரியார் அவர்கள் சென்னை தியாகராயர் நகரிலே கடைசியாக முழங்கினார்கள். 19-12-1973-லே அவர்கள் சொன்னார்களே. அதை நினைவூட்டுக் கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.
கலைஞர் ஆதங்கப்பட்டார் எனவே பெரியார் அவர்களின் குறையான அந்த முள்ளை அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளோடு அவரைப் புதைத்திருக் கின்றோம். அந்த முள்ளை எப்பொழுது எடுக்கப்போகிறோமோ என்பது தெரியவில்லை. அதுதான் என்னுடைய ஆதங்கம் என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.
அய்ந்தாம் முறையாக கலைஞர் ஆட்சிக்கு வந்தார் நல்ல வாய்ப்பாக தமிழக மக்களுடைய தெளிந்த ஒரு மீட்பினாலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அய்ந்தாம் முறையாக கலைஞர் அவர்கள் வந்து அவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடனே சொன்னதை செய்தே பழக்கப்பட்ட இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெருமைக்குரிய அவருடைய தேர்தல் அறிக்கையிலே அவர்கள் சொன்னதைப் போல, எங்களுக்கெல்லாம் ஆறுதல் அளிப்பதை போல அவர்கள் வாக்குறுதி அளித்ததைப் போல அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலே முதல் தீர்மான மாக எடுத்த முடிவு ஆதிதிராவிடர் உட்பட அனைத்து ஜாதியி னரையும் அர்ச்சகராக்கக் கூடிய சட்டத்தை நிறைவேற்றினார்கள். அற்புதமான ஒரு சட்டம் சூத்திரப்பட்டதை ஒழித்து, பஞ்சம பட்டத்தை ஒழித்து அவர்கள் ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அடையாள மாக கருவறையிலே உள்ளே நுழைந்த ஜாதிப் பாம்பை அடித்து விரட்டக்கூடிய அளவிற்கு அற்புதமான ஒரு சட்டத்தை அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டன. ஆனால், அவர் அதைப்பற்றிக் கவலைப் படவில்லை.
கலைஞரின் சாமர்த்தியம், நுண்ணறிவு கலைஞர் அவர்களுடைய சாமர்த்தியம், அவருடைய நுண்ணறிவு, அதன் காரணமாக மிகத் தெளிவான அளவிலே அருமையாக சட்டத்தைப் போட்டு உண்மையாக அற்புதமாக அதை நடைமுறைப்படுத்தியது மட்டுமல்ல நண்பர்களே, பெரியாருடைய சிலை இன்றைக்கு இலட்சிய வெற்றியின் கம்பீரச் சின்னமாக இன்றைக்கு இந்த குத்தாலம் நகரத்திலே அமைந்திருக்கிறது என்பதற்கு அடையாளம் தான் இந்த சிலை. 69 சதவிகித இட ஒதுக்கீடுப்படி கோவில் அர்ச்சகர்கள் 69 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையிலே ஆதிதிராவி டரிலிருந்து அனைத்து ஜாதியனர் வரையிலும் அய்ந்து இடங்களில் தமிழ் நாட்டில் பயிற்சி கொடுத்து சைவ வைணவ பயிற்சி கொடுத்து இன்றைக்கு அனைத்து கோயில்களிலும் நம்மவர்கள் அர்ச்சகர்களாக வரப்போகிறார்கள்.
எப்படி முஸ்லிம் - கிறித்தவருக்கு இருக்கின்றதோ எப்படி இஸ்லாமிய மதத்திலே முல்லாவாக வேண்டும் என்றால், அவர் அதற்குரிய படிப்பை படித்தால் அவர் முல்லா வாக முடியுமோ, எப்படி கிறித்துவ மதத்திலே பாதிரியாராக வேண்டுமானால், அதற்குரிய முறையிலே பயிற்சி எடுத்தால் அவர்கள் பாதிரியராக வர முடியுமோ அதுபோல அனைத்து ஜாதியினராக இருந்தாலும், எந்தச் ஜாதியினராக இருந்தாலும் அவர்கள் கோயில்களில் அர்ச்சகராக வரமுடியும் என்பதற்கு சட்டம் கொண்டு வந்து இன்றைக்கு 69 சதவிகித அடிப் படையிலே சிறீரங்கத்திலே, திருவண்ணாமலையிலே, திருவல் லிக்கேணி போன்ற கோயில்களில் அர்ச்சகராக வருவதற்குப் பயிற்சி நடந்துகொண்டிருக்கின்றது. அந்த பிள்ளைகள் எல்லாப் பயிற்சியைப்பெற்று முடித்து கோவில்களில் அர்ச்சகராக அனைத்து ஜாதியினரும் வரப்போகிறார்கள்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சி இது அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சியை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள். கும்பகோணம் சாரகங்பாணி கோவிலிலே கருப்பான உருவம் மணி அடித்துக் கொண்டு வரும். அது நம்முடைய உருவமாக இருக்கும் இதுவரையில் வராத புரட்சி இந்தப் புரட்சி. ஒரு துளி ரத்தம் கூட சிந்தாமல் நடக்கின்ற புரட்சி. அத்தகைய புரட்சியை செய்ய வைக்க வைத்தவர் தந்தை பெரியார். அதை செய்தவர் கலைஞர். உலக வரலாற்றிலே சமுதாயத்தை புரட்டிப் போடக் கூடிய அத்தகைய புரட்சியை கலைஞர் அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக்கு இணையான செய்தியை வேறு எங்கே பார்க்க முடியும்?
சூத்திரப் பட்டம் சொல்லாமல் ஓடியது
எங்களுக்கெல்லாம் பெரியார் தொண்டர்களுக்கெல்லாம் கருப்புச் சட்டைத் தொண்டர்களுக்கெல்லாம் ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்று சொன்னால், எங்கள் காலத்திலே பெரியார் காலத்திலே உங்களை சூத்திரனாக விட்டுவிட்டுப் போகிறேனே என்று தந்தை பெரியார் அவர்கள் சங்கடப்பட் டார். ஆனால், பெரியாருடைய தொண்டர்களாகிய நாம் கலைஞர் அவர்கள் உட்பட இணைந்த காரணத்தாலே உழைத்த காரணத்தினாலே சூத்திரப் பட்டம் சொல்லாமல் ஓடிவிட்டது.
இனிமேல் அந்தப் பட்டத்திற்கு இடமில்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று ஆக்கப்பட்டிருக்கின்றது.
தமிழனுடைய ஆண்டை வாயால் சொல்ல முடியுமா? அதேபோல தமிழனுக்கு ஆண்டு என்று சொன்னால், அது தமிழனுடைய வாயிலே நுழையமுடியாது. விரோதி, குரோதி, பிரபவ, விபவ, ஒரு வார்த்தையாவது 60 ஆண்டுகளிலே தமிழ்ச் சொல் உண்டா? கிடையாது. தமிழ் வார்த்தையே கிடையாது.
ஆபாசமான கதைகள் அதே நேரத்திலே தமிழனுக்குரிய ஆண்டு என்று வைதீகர்கள் ஆபாசமான கதையை எழுதி வைத்திருக்கின்றார்கள்.
ஆணும், ஆணும் சேர்ந்து பிறந்த குழந்தைகள்தான் இந்த தமிழ் 60 ஆண்டுகள் என்று எழுதி வைத்திருக்கின்றான்.
ஆணும் ஆணும் சேர்ந்தால் குழந்தை பிறக்குமா? அல்லது எய்ட்ஸ் நோய் வருமா? என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.
ஒரு நொடிப்பொழுதில் முடிவெடுத்தவர் கலைஞர்
தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் திரு.வி.க. போன்றவர்கள் தமிழ் அறிஞர்கள் புலவர்கள், சான்றோர்கள் தந்தை பெரியார் போன்ற சமுதாயப் புரட்சியாளர்கள் இவர்கள் எல்லாம் சொன்னதை வைத்து ஒரு நொடிப்பொழுதில் முடிவாக எடுத்து இந்த ஆண்டு முதல் தை முதல்நாள்தான் தமிழர் திருநாள். அது தான் என்று சொல்லி ஒரு சமுதாயப் புரட்சியை செய்திருக்கிறவர் கலைஞர் அவர்கள். இதுபோல எத்தனையோ சாதனைகளை செய்திருக்கிறவர் கலைஞர் அவர்கள்.
--------------மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 1-6-2008 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து --"விடுதலை" 9-6-2008
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment