Search This Blog

16.6.08

கடவுள் மதம் சாஸ்திரம் முதலியன ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்


முதலாவதாக சட்ட எரிப்பில் இரண்டு ஆண்டு சிறை சென்று மீண்ட
திரு. சண்முகம் அவர்களுக்கு இந்தப் பாராட்டு இதழை முதலில் வழங்குகிறேன்.

நமது கழகம் இப்படிப்பட்ட போராட்டங்கள், கிளர்ச்சிகள் இன்னும் செய்ய வேண்டி வரும்.

மற்றவர்கள் மாதிரி ஓட்டு பெற, பதவிக்குப் போக வெறும் விளம்பரத்துக்காக செய்யக் கூடிய கிளர்ச்சி அல்ல.

மனித உரிமைக்காகச் செய்யப்படும் கிளர்ச்சியாகும்!

நமது கிளர்ச்சி எல்லாம் எவரும் கேலி பண்ண இடம் இல்லாத படி
வெற்றி பெற்றுக் கொண்டு தான் வந்து இருக்கிறது. சாதியைப் பாதுகாக்கும் சட்டத்தைக் கொளுத்தி நான்காயிரம் பேர்களுக்கு மேல் சிறைக்குப் போனோம். ஆறுமாதம், ஒருவருஷம், இரண்டு வருஷம், மூன்று வருஷம் என்று இப்படி தண்டனை அடைந்து அனுபவித்து 307-வெளியே வந்த ஒரு வருஷத்துக்குள் எல்லாம், அரசாங்கமும் தமது போக்கினை மாற்றிக் கொண்டு சாதியை ஒழிக்கும் பணியில் இறங்கிவிட்டது.

இந்தியாவிலேயே ஏதாவது ஒர் ஆள் சாதி ஒழிய வேண்டும் என்று
கூறி இருந்தால் அது நான் தான்.

ஒர் இயக்கம் இருக்கிறது என்றால் எங்கள் (திராவிடர் கழக) இயக்கம் தான்.

புத்தனுக்குப் பிறகு வெளிப்படையாக சாதியை மதத்தை எதிர்தது எவனும் பிரச்சாரம் பண்ண முன்வரவே இல்லை. நாங்கள் தான் முன்வந்து உள்ளோம்.

100- க்கு 3-பேர்களாக உள்ள பார்ப்பான் ஏன் மேல் ஜாதி? அவன்
மட்டும் ஏன் உடல் உழைப்பு இல்லாமல் பிழைக்க வேண்டும்?
100-க்கு 97-பேர்களாக உள்ள நாம் ஏன் சூத்திரர்களாக பஞ்சமர்களாக இருக்க வேண்டும்? உடல் உழைப்புச் செய்தும் நாம் ஏன் வயிறாரக் கஞ்சி குடிக்கும் நிலை இல்லாமல் அவதியுற வேண்டும்? என்று எங்களைத் தவிர எவன் இந்த நாட்டில் கேட்கிறான்? நாங்கள் தானே பாடுபட்டு வருகிறோம்.

நமது இழி நிலைக்கும், மடமைக்கும் காரணமான கடவுள், மதம், சாஸ்திரம், கோயில், குளம், பார்ப்பான்- ஆகியவற்றை ஒழிய
வேண்டும் என்று பாடுபட்டு வருகின்றோம்.

எங்கள் சட்ட எரிப்புக் கிளர்ச்சிக்குப் பிறகு அரசாங்கத்தில் சாதி
ஒழிப்புப் பற்றி மனமாற்றம் ஏற்பட்டு உள்ளதாகக் கூறினேன். காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலேயே சாதி ஒழிப்புப் பற்றி ஆறு,
ஏழு இடங்களில் குறிப்பிட்டு உள்ளார்கள்.

இன்றைய தினம் அரசாங்கத்துக்கு ஒர் எதிர்கட்சி இருக்கிறது என்றால் சாதியைக் காப்பாற்றும் கட்சி தான். சில கட்சிகள் சாதியைக் காப்பாற்ற ஆதரவு கொடுத்துப் பொறுக்கித் தின்னும் கட்சிகளாகத் தான் இருக்கும்.

காங்கிரஸ் தான் சாதியை ஒழிக்கிறேன் என்று கூறுகிறது. மற்றக் கட்சிகள் எல்லாம் இதுபற்றி மூச்சு விடுவதே இல்லை. பார்ப்பான் ஆதரவு விளம்பரத்துக்காகச் சொல்லவே நடுங்ககுகிறார்கள்.

இன்று காங்கிரசுக்கு, காமராசருக்கு நேரான எதிரிகள் பார்ப்பனர்கள்.
அவர்கள் கட்சிக்குத் தலைவர் இராஜாஜி! அந்தக் கட்சியின் கொள்கை
சாதி முறையினைப் பாதுகாப்பது ஆகும்.

திராவிடர் கழகம் சமூதாயமாற்றத்துக்காகப் பல கிளர்ச்சிகள் செய்து சிறை சென்று இருக்கின்றது. கடவுள் ஒழிய வேண்டுமென்று கூறினோம் என்றால் சும்மாவா இருந்தோம்?

பிள்ளையாரை வீதிக்கு வீதி மண்ணில் போட்டு உடைத்தோமே?

இராமன் படத்தை எரித்தோமே?

புராணங்கள் ஒழிய வேண்டும் என்று கூறி விட்டு சும்மா இல்லையே!

இராமாயணம், பாரதம், கீதை முதலியவற்றைக் கொளுத்தி இருக்கிறோமே!

மற்றவன் மாதிரி வாய்ப்பேச்சோடு நின்று விடவில்லையே!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது சமூதாயத்துக்கு இருந்து
வரும் சாதி இழிவை கொடுமைகளை ஒழிக்க நாங்கள் தான் பாடுபடுகின்றோம்.


நாங்கள் 35- ஆண்டுகளாக நாட்டில் எதை எதைக் கூறிவந்தோமோ அவை எல்லாம் இன்றைக்குக் காமராசர் ஆட்சியில் அமலுக்கு வருவதைக் காண்கிறோம். இந்த ஆட்சியினைப் பாதுகாப்பது தமிழ் மக்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும். கடவுள் மதம் சாஸ்திரம் முதலியன ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.(05-04-1963- அன்று அலங்காநல்லூரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.
"விடுதலை"- 16-04-1963 )

0 comments: