Search This Blog

19.6.08

இழிவுகளை அடியோடு நீக்க இந்து மதத்தை விட்டொழியுங்கள்
இந்த நாட்டில் மருத்துவக் குலத்தவராய் நீங்கள் ஒரு பெருங்கூட்டமாக மனித சமுதாயத்திற்கே மிகவும் பயன்படக்கூடிய தொழிலைக் கொண்டு பழங்குடி மக்களின் கூட்டமாக விளங்குகிறீர்கள். ஆனால் இந்த நாட்டு இந்து சமுதாயத்திலே மிகவும் தாழ்மையாகக் கருதப்படுகிறீர்கள். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்வை இழிவை மறைத்து வைக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு கேடுதான் சூழும். நன்றி நலமற்ற மக்கள் சமுதாயத்திலே பெருங்கூட்டமான நீங்கள் மிகவும் தாழ்மையாகக் கருதப்படுகின்றீர்கள்.

நீங்கள் முடி எடுக்கிறவர்கள் என்றும், சவரம் செய்கிறவர்கள், முக அலங்காரம் பண்ணுகிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறீர்கள். இவற்றில் இழிவு சிறிதளவாவது இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால், நீங்கள் அத்தொழிலைச் செய்கிறீர்கள் என்பதற்காக, உங்களை இழிவாகக் கருதுவதுதான் மடமை. இன்று பெரிய ராஜாக்களும் சவரம் செய்து கொள்ளுகிறார்களே! ஆகவே இத்தகைய இழிவு வகுப்பிற்கு ஏற்பட்ட இழிவே தவிர, தொழிலுக்கு ஏற்பட்ட இழிவு அல்ல. உதாரணமாக, பார்ப்பனர் அத்தொழிலைச் செய்தாலும் அவர்களுக்கு இழிவு இல்லை. இப்பேர்ப்பட்ட சூழ்ச்சி, இழிவான எண்ணம் உலகில் நம்நாடு என்று சொல்லப்படும் இத்தேசத்திலன்றி வேற்று நாட்டில் எங்கும் கிடையாது.

மேல் நாட்டிலே ஒரே குடும்பத்தில் ஒருவன் கவர்னராக இருப்பான்; அவன் தம்பி செருப்புத் தைக்கும் கடையை வைத்து வியாபாரம் செய்வான்; மற்றொருவன் முடி கத்திரிப்பான்; மற்றொருவன் பாதிரியாக இருப்பான். ஆனால் முறைப்படி காரியாதிகள் நடைபெற்றுவரும் இப்பாழும் நாட்டிலே, தகப்பன் செய்து வந்த தொழிலையே மகன் செய்ய வேண்டிய நிலையும், அதன் காரணமாக சமுதாயத்திலே உயர்வு அல்லது தாழ்வு என்ற பட்டத்தைச் சுமக்கும் நிலையும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தாண்டவமாடுகிறது. இந்த மாதிரி நம்மை இழிவு செய்யும் நிலை நிலைத்து இருப்பது, நம்முடைய கையாலாகாத் தனத்தை விளக்குகிறதே தவிர, எதிரிகளுடைய, நம்மை மோசம் செய்பவர்களுடைய பலத்தையோ, அல்லது வீரத்தன்மையையோ விளக்குவதாக இல்லை.

நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள இந்து மதத்தால் தான் நீங்கள் இகழப்படுகிறீர்கள். உண்மையாகவே உங்களைப் பிடித்துள்ள இழிவு நீங்க வேண்டுமானால், அம்மதத்தை இழுத்து எறியுங்கள். வேண்டுமானால் தனிப்பட்ட மனிதன், இந்து மதத்தின் பெயராலேயே தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளலாம் என்று ஏமாற்றிக் கொண்டு திரியலாம். ஆனால், தாசி மகன், வேசி மகன், கோயிலுக்குள் சிற்றுண்டிச் சாலைக்குள் பிரவேசிக்கக் கூடாத இழிநிலையோன் என்பதான பட்டங்கள் என்றும் நிலைத்திருக்கும்.

இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களிலே பார்ப்பனரல்லாதாரிலே, தேவாங்கர்கள், கம்மியர்கள் தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்வதாலேயும், படையாச்சிகள், நாயுடுகள், நாடார்கள் தங்களை சத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்வதிலேயும், இன்னும் இது போன்ற போலிப் பட்டங்களைச் சூட்டிக் கொள்வதிலும் பெருமை கொள்கிறார்கள். அதற்கு மாறாக, நாவிதர், கம்மாளர், பறையர், படையாச்சி, நாடார் என்று சொல்லிக் கொள்வதால் என்ன குடி முழுகிவிட்டது என்று கேட்க ஆசைப்படுகிறேன். பெயரில் என்ன இருக்கிறது? நாமெல்லோரும் தமிழர்- திராவிடர். நமக்குள் ஜாதி வேற்றுமை உணர்ச்சி இல்லை என்பதான மனப்பான்மை ஏற்பட வேண்டுமானால், சாதியை மாற்றி ஆரியமாக்கக் கூடாது. திராவிடர்களாகிய நமக்குள்ளே கூட்டு வளர்ச்சி வளர வேண்டும்.

தோழர்களே! ஒரு அய்ந்து வருடத் திட்டம் போட்டுக் கொள்ளுங்கள். உங்களை சமுதாயத்தில் தாழ்மையாகக் கருதுகிறவர்களுக்கு நீங்கள் உதவி செய்வதில்லை - தொண்டாற்றுவதில்லை என்ற உறுதியை ஏற்படுத்திக் கொண்டீர்களானால், இழிவுகளைப் பறக்கடிக்க ஒற்றுமையோடு, உள்ளத்துணிவோடு அந்த அய்ந்து ஆண்டுத் திட்டத்தை செவ்வனே செய்து முடித்தீர்களானால் - புரோகிதன் உங்களை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைப்பான்.

ஆகையினால், சமுதாயத்தின் பெயராலே, தொழிலின் பெயராலே உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழிவுகளை நீக்க, மதத்தை உடைத்தெறியுங்கள். எதிரிகளை பகிஷ்கரியுங்கள். இம்மாநாட்டை பண்டிகையாக நினைத்துப் போய்விடாதீர்கள். இந்து மத உணர்ச்சியை ஒழித்து, காரியத்தில் இறங்குங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். நான் இந்துவல்ல, இந்தியன் என்றும் சொல்லிக் கொள்ள மாட்டேன். இந்து மதத்திற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்ற முடிவிற்கு ஒவ்வொரு மருத்துவ வாலிபனும் வந்து, அதன்படி தொண்டாற்ற முற்பட்டால்தான் ஏதாவது பயன் விளையும்.

---------------- சென்னை மாநில 3ஆவது மருத்துவக் குழு மாநாடு திறப்பு விழாவில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை ‘குடியரசு' 27.5.1944

1 comments:

Thamizhan said...

1944 லே தந்தை பெரியார் சொன்னது!
அமெரிக்காவிலே முடி வெட்டுபவரும்,பெரிய டாகடரும் பக்கத்து வீட்டுக் காரர்கள்.கோல்ப்ஃ விளையாடுகிறார்கள்.
வீட்டு வேலைக்கு வருகிறவர் ஏழையாக இருக்கலாம்,ஆனால் மரியாதையுடன் நடத்தப் படுகிறார்.
பிளம்பர் என்னும் கழிவுகள் சம்ப்ழ்ந்தப்பட்ட தொழிளாளர்கள் நன்கு சம்பாதித்து வாழ்கின்றனர்.

உழைப்பிற்கு மதிப்பு உலகெங்கும் கொடுக்கப் படுகிறது,இந்தியா தவிர.

உழைப்பவன் கீழ்,உஞ்ச விருத்தி செய்பவன் மேல்.

அதை இன்றும் மறுக்காது ஏற்றுக் கொண்டு நடக்கும் மனிதர்கள் வாழ்வது,வெட்கமும் வேதனையும் ஆகும்!