Search This Blog

15.6.08

கலைஞரின் - கங்கையின் காதல்!


கைலாயத்தில் சிவபெரு மான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் கழுத்திலிருந்த பாம்பு கீழே இறங்கி மான் குட்டியோடு விளையாடிக் கொண்டிருந் தது. ஆழ்ந்த நித்திரையி லிருந்த பார்வதி தேவிக்கு பாதங்களை.. காளைமாடு சொரசொரப்பான நாக்கால் நக்கிக் கொண்டிருந்ததுகூட தெரியவில்லை. தேவலோகத் துப் பெண்களுக்கே தூக் கத்தில் இடி விழுந்தாலும் தெரியாது போலிருக்கிறது. இல்லாவிட்டால் சீதா பிராட்டி தூங்கும்போது அவள் மேனியை இந்திரன் மகன் காக்கை உருவில் ரசித் திருக்க முடியுமா? பார்வதி யின் முகத்தில் வியர்வை அரும்பு கட்டி இருந்தது. பரமசிவனாரின் உடலும் தூக்கத்தில் அசைவற்றுக் கிடந்தது. மகேஸ்வரனுக்கு அய்ந்து தலைகள் அல்லவா? நான்கு தலைகளைக் கழற்றி மான் தோலில் சுருட்டி ஒரு மூலையில் வைத்திருந்தார். இல்லா விட்டால் தூங்கு வதற்கு வசதிப்படாதே!
ஆழ்ந்த உறக்கம் - அமைதி - அந்த அமை தியைக் கிழித்துக் கொண்டு கிளம்பும் சிவன் தம்பதி களின் பெரிய மூச்சுக்கள்.
சிவனின் தலையிலே ஒரு ஜடை சற்று வேகமாக அசைந்தது. அந்த அசை வைத் தொடர்ந்து கங்கா நடந்து கொண்டிருந்தாள். பூனையைப் போன்ற.. பஞ்சுப் பாதங்களை சிவனின் தலை யில் வெகு லாவகமாக வைத்து, சுற்று முற்றும் பார்த்தபடி எங்கேயோ போய்க் கொண்டிருந்தாள்.
ஒரு ஜடையின் அடியில் போய் நின்று கொண்டு, தங்கக்கரங்களை கிளை களில் நீட்டியபடி யாரையோ எதிர்பார்த்திருந் தாள். அவள் நீலக் கரு விழிகளை கிளைகளின் நடுவே நீண்ட இரண்டு கரங்கள் பொத்தின.
கங்கையின் கைகள் அவளையறியாமல் அந்தக் கைகளைப் பிடித்துக் கொண்டன. அல்லித்தண் டில் ரோஜாமலரைப் பொருத்தி வைத்தது போலி ருந்தது அந்தக் கைகலப்பு.
`சந்திரா! தேனுண்டமயக் கத்தில் - களைப்புற்ற வண் டின், கீழ்ஸ்தாயி ரீங்காரம் போலிருந்தது அந்த அழைப்பு.
சந்திரா.. ஆம் சந்திரன் தான். சிவனாரின் தலையில் குடியிருக்கும் அந்த வாலி பன்தான். பஞ்சோடு நெருப்பை வைத்தலாகாது என்பார்கள். முருகனின் மயிலோடு.. பாம்பை வைத் திருப்பவர்தானே. பரமேஸ் வரன். கங்கையைத் தலையில் கொண்டவர் சந்திரனை காலிலாவது வைத்திருக்க லாம்; என்னமோ `பாவம் அவர் தலை எழுத்து!
`கங்கை! கண்ணே!
``சந்திரா!.. சல்லாப ரூபா!...
``அன்பே!.. நேற்று ஏண்டி வரவில்லை?
``நேற்று என்முறை. இன்று பார்வதி முறை.
``மெதுவாகப் பேசு.. சிவன் விழித்து விடப் போகிறார்
`நல்லவேளை.. தலையில் கண்ணில்லை. விழித்தாலும் பயமில்லை..
``நீ கிண்டல்காரி கங்கா!
``நீ மட்டும் என்னவாம்
``கங்கா! உனக்கு அந்தக் கிழவனோடு பேசப் பிடிக் கிறதா?
``பிடித்திருந்தால்.. சந்தி ரனை ஏன் தேடுகிறேன்..
``தாரை பேசுகிற மெட் டில் பேசுகிறாயே.. அவளும் இப்படித்தான். அவள் புரு ஷன் தாடியும் மீசையுமாய் தள்ளாத காலத்தில் அவ ளைக் கஷ்டப்படுத்துகிறா னாம்
``எங்களைப்போல தாரை யும் கங்கையும் தள்ளாத கிழவன்களுக்கு வந்து சேர்ந் தால், உன்னைப் போலச் சந் திரர்களுக்கு வேட்டை தான்
``என்ன இருந்தாலும் நாம் செய்வது பாபந்தான்.. இல்லையா?
``சந்திரா...! பூலோகத்திலே பாவம் செய்தால் கைலாசத் துக்கு வர முடியாது. நாம்தான் கைலாசத்திலேயே இருக்கிறோமே. இதை விட பெரிய பாபம் இருந்தாலும் கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த பாபத்துக் கெல்லாம் நாமா பொறுப் பாளி? தாரை உன்னை நேசித்தாள். கணவனுக்குத் துரோகம் செய்தாள் என் கிறார்கள் மூடர்கள். தாரைக்கு நெஞ்சம் - அதில் ஆவல் - ஆனந்த வாழ்வைச் சுவைக்கும் துடிப்பு - இதையெல்லாம் உண்டாக்கிவிட்டு.. அவளை விபசாரி என்றால் யார் கேட்பது...? நீ குருபத் தினியைக் கூடியது பாப மாம். பைத்தியக்காரரின் உளறல். குருவுக்குச் செய்ய வேண்டிய தொண்டு; அவர் மனைவியின் கவலையைப் போக்கினாயே அது பெரிய தொண்டல்லவா?
நான்தான் என்ன செய்து விட்டேன்!
ஆகாயத்திலிருந்து என் னைப் பகீரதன் கூப்பிட் டான். பகீரதனுடைய அழ கைக்கண்டு என்மேனி குலுங்கிற்று, மேனி மட் டுமா? இதயமே குலுங்கிற்று. அந்தக் காம தாகத்தை வர்ணிக்க என்னால் முடி யாது சந்திரா...! கம்பன் பிறந்துவர வேண்டும்; அவ் வளவு எல்லை மீறி விட்டது என் உணர்ச்சி. ஒரு நாட்டு மன்னன். சகல போக போக் கியமுமுள்ள சக்ரவர்த்தி. அவனோடு சரசசல்லாப மாடி.. ஜென்ம சாபல்யமடை யலாம் என்று கனவு கண்டேன். ஆனால் அந்தக் கையாலாகாதவன்.. என்னை இந்தக் கைலாசக் கிழவனி டம் தள்ளிவிட்டான். இவனோ கிழவன்.. கிழவன் மட்டுமா.. தாருகாவனத்து ரிஷிகளின் மனைவிகளுக் காக... உடலையே தேய்த்து விட்ட எலும்புக்கூடு. அது மட்டுமா சந்திர...! பக்கத் திலே பார்வதி. இன்பக் கேளிக்கைக்கு கால அட் டவணை. ஒருத்திக்கு ஒரு நாள் முறை. என்னால் முடி யுமா?... என்போன்ற யுவதி களால் முடியுமா?.. ஏன்.. பார்வதியால் தான் முடிந் ததா? பிர்மாவையல்லவா கேட்க வேண்டும் அந்தக் கதையை.
"இரண்டு பெண்டாட் டிக் காரன் பாடெல்லாம் இப்படித்தான்...
"சந்திரா! தினந்தினம் பூலோகத்துக்குப் போகி றாயே.. அந்த மக்களிடம் இந்த ஒரு வார்த்தையை உபதேசம் செய்வாயா?
"என்ன கங்கா? "கிழவனுக்குப் பெண் கொடுக்காதே! இருதார மணத்துக்கு இணங்காதே! இதைச் சொல்வாயா?.. என் பொருட்டுச் சொல்.. என் போன்ற பெண்கள் இனியும் தோன்றாமலிருக்க இதைச்சொல்."
"ஆகட்டும் கண்ணே.. வா.. பிடரிப் பக்கம் போவோம். அங்கேதான் இருட்டாயிருக்கும்"
"சந்திரனும் கங்காவும் மறைந்து விட்டார்கள். சற்று நேரத்தில்.. எம்பெருமாள் திடுக்கிட்டு விழித்தார். பக் கத்தில் பார்வதி அசைவற்று உறங்கிக் கொண்டிருந்தாள். தலையைத் தொட்டுப் பார்த் தார்.. அப்போதுதான் அவ சர அவசரமாக கங்கா ஓடி வந்து அங்கே உட்கார்ந்தாள்.

---------------- மு. கருணாநிதி -'குடிஅரசு' 15.1.1949

0 comments: