Search This Blog

18.6.08

பெண்களுக்கு உரிமை கொடுக்கலாமா?




தோழர்களே!

இதுவரை பல தோழர்கள் பெண்ணுரிமைப்பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் பேசியவைகளைக் கேட்டீர்கள். நான் தலைமை வகித்ததற்கு ஆக முடிவில் இதைப்பற்றி ஏதாவது இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.

நான் சொல்லுவது உங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறாய் இருந்தாலும் இருக்கலாம். அதனால் பாதகமில்லை. இந்தக் கூட்டம் வாக்குவாதக் கூட்டமானதால் பலவித அபிப்பிராயங்களையும் தெரிய வேண்டிப் பேசுவதே ஒழிய வேறில்லை. யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு சுருதி, யுக்தி, அனுபவம், என்கின்ற மூன்று தன்மையிலும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

தோழர்களே!

இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டுபேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ உரிமையோ உண்டா? நாம் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ முடிவோ நமக்கு ஆதாரமா?அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவனற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றி பேசவேண்டும்.

ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்தவர்களுடைய வேதத்திலும் முகமதியர்களுடைய வேதத்திலும் இந்துக்கள் வேதத்திலும் பெண்களுக்குச் சம உரிமை இல்லை.சில உரிமைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்டு அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் இருக்கிறோம்.

ஆகவே இப்போது நமது ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவு வருவோமானால் அம்முடிவு நமது மதவேத கட்டளையை மீறி நாஸ்திகமாவதா? அல்லது ஆஸ்திகத்துக்கு பயந்து நமது முடிவுகளைக் கைவிட்டு விடுவதா? என்பதை முதல் தீர்மானித்துக் கொண்டு பிறகு இந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால் நமது வேலைகள் எல்லாம் வீண் வேலையாகப் போய் விடாதா?

முன் பேசிய சிலர் பெண்கள் சுதந்திர விஷயம் முன்னமேயே முடிவு கட்டப்பட்டது என்று சொன்னார்கள். மற்றொருவர் நம் பெரியோர்கள் நன்றாய் யோசித்துச் செய்திருக்கிறதாகச் சொன்னார். ஆகையால் இம்மாதிரியான பெரியதொரு சீர்திருத்தவாதிகள் உண்மை சீர்திருத்தவாதிகளால் மேற்கண்ட பிரச்சனையை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நிற்க ஆணும் பெண்ணும் மனிதர்கள் தான். உருவபேதம் மனிதத்தன்மையைப் பாதிக்கக் கூடியதல்ல.

மனிதவர்க்கத்தில் புத்திக்குறைவு, பலக்குறைவு என்பது இயற்கையில் ஆண்கள் பெண்கள் ஆகிய இருவருக்கும் ஓன்றுபோலவே தான் இருக்கிறது. அப்பியாசத்தால் இருபாலரும் ஒன்று போலவே தான் அடைகிறார்கள். ஆண்களில் எவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்களோ? எவ்வளவு பலவீனமானவர்கள் இருக்கிறார்களோ? எவ்வளவு கெட்டகுணமுடையவர்கள் இருக்கிறார்களோ? அதுபோல் தான் பெண்களிலும் இருக்கலாம்.

மேல்கொண்டு ஏதாவது இருந்தால் அது செயற்கையால் அதாவது ஆண்களாகிய நாம் அவர்களைக் குழந்தைப்பிராய முதல் அடிமைப்படுத்தி கல்வியில்லாமல் உலக ஞானம் அறிய இடம் இல்லாமல் அடக்கி வைத்து விட்டதால் ஏற்பட்டதே ஒழியவேறில்லை. தாசிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வியாபாரத்தில் எவ்வளவு கெட்டிக்காரர்களாய் இருந்து எவ்வளவு ஆண்களை ஏமாற்றி எவ்வளவு பணம் சம்பாதித்து எப்படி நிர்வகித்து வருகிறார்கள் பாருங்கள்.

ஆண்களில் எழுத்து வாசனை அற்றவர்களுடையவும் சமத்துவமில்லாமல் அடக்கி வைத்திருக்கும் மிருகங்களுக்கு ஒப்பான சில தாழ்த்தப்பட்ட மக்களுடைய அறிவு வீரம் பராக்கிரமம் எல்லாம் எப்படி இருக்கிறது? வியாபாரம் செய்யும் பெண்களும் உத்தியோகம் பார்க்கும் பெண்களும் இன்று அவரவர்கள் தொழில்களைச் சரியாய் செய்யவில்லையா? உபாத்தியார் பெண்கள் தங்கள் உத்தியோகத்தை சரியாய் செய்யவில்லையா? எந்த விதத்தில் அவர்கள் தகுதி அற்றவர்கள் ஆவார்கள்?

ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஆண்களாக இருந்தும் ஜெயிலரையும் ஜெயில் சூப்ரண்டையும் கண்டால் நடுங்குகிறார்களே அவர்களுக்கு ஆண்மை, வீரம், பராக்கிரமம், சுயபுத்தி எல்லாம் எங்கு போய்விட்டது?

இந்தியாவில் கிருஸ்தவப் பெண்கள் முக்காடிட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள்.முஸ்லீம் பெண்கள் உறைபோட்டு மூடிவைத்திருக்கிறார்கள்.இந்துப் பெண்கள் கல்வி இல்லாமல் சொத்து இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இன்று சுதந்திரம் கொடுத்தால் அதை வகிக்க அருகதை அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டிவரும். அதுபோலவே இன்று எல்லா ஆண்களுக்கும் நிர்வாக சபை மெம்பர் பதவி கொடுத்தால் ஆண்கள் அருகதை அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டிவரும். எல்லோருக்கும் படிப்பு கொடுக்க வேண்டும். உலக விஷயங்களைக் கற்க தாளாரமாய் வசதி அளிக்க வேண்டும். 18-வயது 20-வயது ஆன பிறகே கல்யாணம் செய்து வாழ்க்கையில் ஈடுபடச் செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தான் சுகமாய் வாழத் தகுந்த ஓரு தொழில் அல்லது ஒரு மார்க்கத்துக்குத் தயார் செய்யப்பட வேண்டும். தன் புருஷனை வயது வந்த பிறகு தானே தெரிந்தெடுத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

இவை செய்து விட்டால் நீங்கள் எந்தப் பெண்ணையும் தேடிப் போய் சுதந்திரம் கொடுக்கஅலைய வேண்டாம். பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கலாமா? வேண்டாமா? என்று இம்மாதிரி கூட்டம் போட்டு வாக்குவாதம் செய்ய வேண்டாம். தானாகவே பெற்று விடுவார்கள்.

பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்தால் வீட்டு வேலை யார் பார்ப்பது என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இன்றைய வீட்டு வேலைகள் என்பது மக்களின் முட்டாள் தனத்தால் ஏற்பட்டதே ஒழிய அவை எல்லாம் இயற்கையாய் உள்ள வேலை அல்ல. இன்றைய வீட்டு வேலை இனி 20- வருஷத்துக்குள் முக்கால்வாசி குறைந்து போகும். உலக முற்போக்கு வீட்டு வேலைகளைக் குறைத்து வருகிறது. நம்முடைய அர்த்தமற்ற பேராசை சுயநலங்களே நமக்கு இவ்வளவு வீட்டு வேலைகளை ஏற்படுத்திக் கொண்டது.

கற்பு கெட்டுப் போகும் என்கின்ற கவலை எவரும் அடைய வேண்டியதில்லை.பெண்கள் கற்பு பெண்களுக்கே சேர்ந்ததே ஒழிய, ஆண்களுக்கு அடமானம் வைக்கப்பட்டதல்ல.கற்பு என்பது எதுவானாலும் அது தனிப்பட்ட நபரைச் சேர்ந்ததாகும். கற்பு கெடுவதால் ஏற்பட்ட தெய்வத் தண்டனையை அவர்கள் அடைவார்கள்.அதற்காக மற்றொருவர் அடையப்போவதில்லை. இது தானே மதவாதிகள் ஆஸ்திகர்கள் சித்தாந்தம். ஆதலால் பெண் பாவத்துக்குப் போகிறாளே என்று ஆண் பரிதாபப்பட வேண்டாம். பெண் அடி மையல்ல.அவளுக்கு நாம் எஜமானல்ல கார்டியன் அல்ல என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப்பற்றியும் காத்துக் கொள்ள தகுதி பெற்றுக் கொள்ள விட்டு விட வேண்டுமே ஒழிய ஆண்காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.

கற்பு கெடுதலால் நோய் வரும் என்றால் இருவருக்கும் தான். ஒருவருக்கு மாத்திரம் வராது. ஆதலால் பெண்களைப் படிக்க வைத்து விட்டால் தங்கள் கற்பு மாத்திரம் அல்லாமல் ஆண்கள் கற்பையும் காப்பாற்றக் கூடிய தன்மை வந்து விடும்.

ஆகவே தோழர்களான நீங்கள் நன்றாய் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்தப்படி உங்கள் தங்கை, குழந்தை ஆகியவர்கள் விஷயத்தில் நடவுங்கள்.



------------------------- 18.10.1935 - அன்று ஈரோடு லண்டன் மிஷன் கம்யூனிட்டி டிரெய்னிங் பள்ளிக்கூட மாணவர் சங்க கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை, "குடிஅரசு" - 03.11.1935

0 comments: