Search This Blog
2.6.08
கலைஞர் பற்றி எம்.ஜி.ஆர்
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் இருபதாண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையில் இருந்தேன். ஊருக்குள் பிளேக் நோய் பரவிக் கொண்டிருந்த காரணத்தால் குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு, கலைஞர் என் வீட்டில்வந்து தங்கினார். என் வீடு என்றால், அப்போது 12 ரூபாய் வாடகை வீடுதான். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். ஆனால், அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன். அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால், நிலைமை எப்படி ஆயிற்று? நான் அவர் பக்கம்தான் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும், நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு நடைபெற்றுள்ளது.
கலைஞர் அவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்குப் பெருமையும் புகழும் என்று யாராவது நினைத்தால் அது மாபெரும் தவறாகும். இந்தப் பதவிகளெல்லாம் அவரைத் தேடி வந்து அமைவதற்கு முன்பே பேருக்கும் புகழுக்கும் உரியவராக இருப்பவர் கலைஞர். கோவையில் இருந்தபோது பல்லாண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி, அபிமன்யு என்ற படங்களுக்கெல்லாம் கலைஞர் உரையாடல்களை எழுதினார்.
அந்தப் படங்களில் அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. இப்படிப் பிரபலப்படுத்தப்படவில்லையே என்பதற்காக அவர் தம்முடைய உழைப்பை + திறமையைக் காட்டாமல் இருந்ததில்லை. சலியாது உழைத்தார். அதுவும் கொள்கைப் பிடிப்புள்ள தம் கருத்துகளைப் படத்தில் அவர் நுழைக்கத் தவறியதே இல்லை.
தனக்கென ஒரு கொள்கை, தனக்கெனஒரு தலைவன் என்று வகுத்துக் கொண்டு பற்றோடும், பிடிப்போடும் அயராதுஉழைத்து வந்தவர் கலைஞர். கொள்கைப் பிடிப்புக் காரணமாகச் சமயம் வரும்போது அண்ணாவுடனும் சரி.. என்னுடனும் சரி.. கலைஞர் வாதிடுவதற்கு ஒரு போதுமே தயங்கியதில்லை. அதேபோல கழகத்துக்கு ஒரு கேடு வருகிறது என்றால் தன் உயிரைக்கூட மதிக்காமல் முனைந்து பாடுபடுவதில் அவருக்கு இணையான செயலாற்றல் யாருக்கும் இருந்திருக்க முடியாது. சிலருக்குப் பதவி கிடைத்தால் நாடு குட்டிச்சுவராகி விடுகிறது. ஆனால், நமது கலைஞருக்குப் பதவி கிடைத்ததால் நாடு வாழ்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழகத்தின் முதலமைச்சர் ஆகிய இந்த இரண்டு பெரிய பொறுப்புகளையும் வகித்து வரும் கலைஞர் அவர்கள், எத்துறையில் திரும்பினாலும் அத்துறை சிறப்படைகிறது. ஒவவொரு தொண்டனையும் தலைவனையும் நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டு அவர் கழகத்தைச் சீராக நடத்திச் செல்கிறார்.
தமிழர்களுக்குத் தனது கடமையைச் செய்ய வேண்டும் என்கிற துடிதுடிப்பு கலைஞருக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது நான் அறிந்தேன்.
டாக்டர் கலைஞரின் திட்டம் + அண்ணா அவர்களின் கொள்கை + ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் + அவர்கள் வாழ்வு முன்னேற திட்டம் தீட்டப்பட வேண்டும் என்பதுதான். டாக்டர் கலைஞரின் அமைச்சரவை செய்து வருகின்ற நல்ல பல காரியங்களை எண்ணி எண்ணி நாடு மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நமது தலைவர் + முதல்வர் டாக்டர் கலைஞர் பல்லாண்டு வாழ வேண்டும் + பல்லாண்டு ஆள வேண்டும்.
----------------------- கலைஞரின் சட்டப் பேரவை பொன் விழா மலரிலிருந்து
Labels:
கலைஞர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment