Search This Blog

3.6.08

சமுதாயச் சீர்திருத்தமே அடிப்படை! - கலைஞர்






திராவிட இயக்கத்தினு டைய வேர்க்கொள்கை - அடிப்படைக் கொள்கை என்னவென்றால், தந்தை பெரியார் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும் வகுத்துத் தந்த கொள்கை - சமுதாயச் சீர்திருத்தக் கொள்கை - சமுதாயத்தில் பகுத்தறிவு மணம் கமழ வேண் டும் என்பதற்காக, பாடுபடுவ தற்காக நாம் நெஞ்சிலே பதிய வைத்துக் கொண்டிருக்கின்ற கொள்கைதான் திராவிட இயக்கத்தின் சமுதாயக் கொள்கையாகும்.

சமுதாயக் கொள்கையை திராவிட இயக்கத்தின் சார்பில் பெரியார் அவர்களும், பேரறி ஞர் அண்ணா அவர்களும் எடுத்துரைத்தபோது, தமிழகத்திலே வேறு சில கட்சிக்காரர் கள் சமுதாயக் கொள்கைக்கு இப்போது என்ன வந்து விட் டது; அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் பொருளாதாரக் கொள்கைதான் முக்கியம் என்றெல்லாம் கூட பேசியதுண்டு.

சமுதாயக் கொள்கையை நிலைநாட்டியோர் பெரியாரும், அண்ணாவும்!
அப்பொழுது பெரியாரும், அண்ணாவும் அவர்களுக்கு அளித்த விளக்கம்: என்னதான் பொருளாதாரத்திலே உயர்ந்தாலும், அரசியலிலே அதிகாரங்களைப் பெற்றாலுங்கூட, சமுதாயத்திலே அவர்களுக்கு ஏற்படக் கூடிய கவுரவம், அவர் களுக்கு வழங்கப்படக் கூடிய உரிமை, அவர்கள் பெற வேண்டிய மதிப்பு, மரியாதை இவைதான் முக்கியம். சமுதாய அந்தஸ்து இல்லாமல் என்ன தான் பொருளாதாரத்திலே உயர்ந்தாலும், அது தனி ஒரு வனுடைய உயர்வாக இருக்கு மேயல்லாமல், மொத்தச் சமுதாயத்தின் உயர்வாக இருக்க இயலாது என்று ஆரம்பத்தி லேயே சமுதாயக் கொள்கை தான் அடிப்படைக் கொள்கை என்பதை வலியுறுத்திப் பேசிய வர்கள், எழுதியவர்கள் - அதை நிலைநாட்டுவதற்காகத் தமி ழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்தவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் என்பதை யாரும் மறந்துவிட இயலாது.


அன்றைக்கு அதைக் கேலியும் கிண்டலும் செய்தவர்கள், அதைக் கண்டித்துப் பேசியவர் கள் எல்லாம் அரசியலைக் கவனிக்காமல், பொருளாதாரத் துறையைக் கவனிக்காமல் சமுதாயம், சமுதாயம் என்று இன்றைக்கு அலைந்து கொண் டிருக்கின்றார்கள் என்று ஏசிய வர்கள், பேசியவர்கள் எல்லாம் இன்றைக்கு நம்மைவிட அதிகமாக சமுதாயக் கொள்கையைப் பேசுகிறார்கள்.

மதவெறி கூடாது என்பதை வலியுறுத்தியவர்கள்

ஒரு காலத்திலே பெரியாரும், அண்ணாவும் மத வாதங்களால் ஏற்படுகின்ற தீமைகளை எடுத்துரைத்தார் கள். மதவெறி கூடாது, மத அடிப்படையிலே மக்கள் இன்றைக்கு வாழ வேண்டிய நிலை இருந்தாலும் கூட, மதங்கள் ஒன்றுக்கொன்று பகைத்துக் கொள்வதும், அதன் காரணமாக மோதுதல் ஏற் படுவதும் தேவையில்லை என்ற கருத்தை எடுத்துச் சொன்ன வர்கள் தமிழகத்திலே பெரி யாரும் அண்ணாவும்தான் என் பதையும் யாரும் மறக்க இயலாது.

அதைப்போலவே நாம் பல்வேறு சாதிகளின் பெயரால் இன்றைக்குப் பட்டம் சூட்டப் பெற்று வாழ்ந்தாலும் - உலவி னாலும்கூட, எந்தச் சாதிக் காரர்களாக இருந்தாலும் எல்லோரும் தமிழர்கள்தான் - ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றுரைத்து, வெவ்வேறு சாதிகளின் பெயரால் நம்மைப் பிரித்து இன்றைக்கு வாழக் கூடாது, அனைவரும் தமிழன் என்ற உணர்வைப் பெற வேண்டுமென்று எடுத்துரைத்தவர்களும், பெரியாரும் அண்ணாவும்தான். அந்த வழியிலே வந்தவர்கள்தான் இன்றைக்கு இருக்கின்ற திராவிட முன் னேற்றக் கழகத்தார்.
ஆனால், இன்றைக்குத் திடீரென்று சில பேர் நமக்கு ஏதோ சமுதாயத்தைப் பற்றிக் கவலையில்லை என்பதைப் போலவும், மதவாதங்கள் நாட்டிலே பெருக நாம் அனுமதிக் கிறோம் என்பதைப் போலவும் சாதிச் சச்சரவுகளை நாம் இன் றைக்கு அனுமதிக்கிறோம். அவைகளுக்கு உரிமை வழங்கு கிறோம் என்பதைப் போலவும் இன்றைக்குப் பேசிக் கொண் டிருக்கிறார்கள்.

வாய்ச் சொல் வீரர்கள்

அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல் லாம், இன்றைக்கு தமிழ்நாட் டிலே சமுதாயத் துறையிலே மதச்சீர்த்திருத்தம், சாதி ஒற்றுமை இவைகள் எல்லாம் வேண்டுமென்று வலியுறுத்தி ஒரு சமத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகப் பாடு பட்ட ஒரே இயக்கம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அந்த அங்கீகாரம் திராவிட இயக்கத்திற்குத்தான் உண்டு. வாய்ச் சொல் வீரர்கள் சிலர் இன்றைக்கு இருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் இல்லை என்பதை நான் திட்டவட்ட மாகத் தெரிவித்துக் கொள்கி றேன்.
இன்றைக்கு இங்கே நடை பெறுகின்ற இந்தத் திருமணத்தைப் போல் 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருந்தால் இந்த மண்டபத்திலே இடம் இல்லாத அளவிற்கு இப்போது குழுமியிருக்கிறீர்களே, இதே போன்ற திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய போது, அண்ணா அவர்கள் நடத்திய போது நாங்கள் எல்லாம் சென்று நடத்திய போது அந்தத் திருமண விழாவில் 50 அல்லது 60 பேர் கலந்து கொண்டால் அதுவே பெரியது. அப்படிக் கலந்து கொள்கின்ற அந்த 50 பேரும் கூட மணமக்களை வாழ்த்து வார்கள் என்று சொல்ல முடியாது. மணமக்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் என்று கூற முடியாது.

என்ன பேசிக் கொள்வார்கள் தெரியுமா? இப்படி ஒரு திருமணத்தைச் செய்கிறார்களே, அய்யர் இல்லாமல் அரசாணிக்கால் இல்லாமல், முப்பத்து முக்கோடி தேவர்க ளுடைய சாட்சி இல்லாமல், நாற்பத்தெட்டாயிரம் ரிஷீஸ் வரர்கள் இல்லாமல், கந்தர்வர், கின்னரர், கிம்புருடர், அட்டத் திக்குப் பாலகர்கள் இவர் களையெல்லாம் சாட்சிக்கு அழைக்காமல் - இவர்கள் வந்து பேசி இந்தத் திருமணத்தை நடத்தி வைத்து விட்டுப் போகி றார்களே; இந்த மணமக்கள் வாழ்க்கை நன்றாக இருக்குமா? என்று சந்தேகத்தைக் கிளப்பிக் கொண்டுதான் பேசிக் கொண்டு போவார்கள். இது 70 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாரே நடத்திய திரு மணத்தில், அண்ணாவே நடத் திய திருமணத்தில், நாங்கள் எல்லாம் முன் நின்று நடத்திய திருமணத்தில் பேசப்படுகின்ற பேச்சாக இருந்தது.

சமுதாய முன்னேற்றத்திற்குச் சான்றுகளாக விளங்குபவை

ஆனால், இன்றைக்கு இந்த மண விழா மண்டபம் நிரம்பி வழிகின்ற அளவிற்கு குழுமியி ருக்கின்ற நீங்கள் சமுதாயத் திலே ஏற்பட்டிருக்கின்ற மாறு தலின் காரணமாக இந்த மணமக்களை மனப்பூர்வமாக வாழ்த்துகின்ற காட்சியை என்னால் காணமுடிகின்றது. அதிலும் குறிப்பாக எந்த அளவிற்கு ஒரு முன்னேற்றத்தை இந்தச் சமுதாயத்திலே திராவிடர் இயக்கம் உருவாக்கியிருக் கின்றது என்பதற்கு மணமக்க ளுடைய பெயருக்குப் பின் னால் இருக்கின்ற இரண்டு எழுத்துக்களுமே சான்றுகளாக விளங்குகின்றன.

மணமகன் ரகுநாதன், பி.ஈ., மணமகள் சுகந்தி பி.ஏ., திரா விடர் இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இப்படி மணமகன், மணமகள் பெயருக்குப் பின் னால் இந்த இரண்டு ஆங்கில எழுத்துகளைக் கண்டிருக்க முடியுமா? படிப்பதே பாவம்; சாதாரண மக்கள், சாமான்ய மக்கள், பிறப்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் இவர்கள் படிக்க விரும்பினால் அவர்களுடைய நாக்கைச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று தைரியமாக அன்றைக்கு எழுதிய வைத்த சாத்திரங்களைக் காட்டி - நீ படிக்கக் கூடாது; பிற்படுத்தப்பட்ட வனுக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும் படிப்பு வராது என்றெல்லாம் சாபமிட்ட அந்தக் காலத்திலே நாமும் அல்லவா - ஆமாம், அவர் சொல்வதை விட நாமே, நம்முடைய வீட் டிலே உள்ள பெரியவர்களே, அது வன்னியர் வீடாக இருந் தாலும் சரி, முதலியார் வீடாக இருந்தாலும் சரி, செட்டியார் வீடாக இருந்தாலும் சரி, முக்குலத்தோர் வீடாக இருந் தாலும் சரி, தாழ்த்தப்பட்டோர் வீடாக இருந்தாலும் சரி, யாதவருடைய வீடாக இருந் தாலும் சரி யாருடைய வீடாக இருந்தாலும் அங்கேயுள்ள மூத்தவர்கள், வீட்டிலே உள்ள வர்கள் சொல்லாவிட்டால் அந்த வீதியிலே உள்ளவர்கள், உற்றார் உறவினர்கள் கூட - என்ன, படிக்க வைக்கிறாயா பிள்ளையை? இதெல்லாம் படித்து முன்னுக்கு வரப் போகிறதா? இவர்களுக்கெல் லாம் படிப்பு வருமா? என்று நாமே பேசிக் கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. அந்தக் காலத்தை மாற்றிக் காட்டிய பெருமை பெரியாருக்கும், அண்ணாவுக்கும், இந்த இயக் கத்திற்கும்தான் உண்டு.

அந்தப் பெருமையின் அடையாளச் சின்னமாகத் தான் இங்கே மணமகன் ரகு நாதன் பி.ஈ., என்றும், மண மகள் சுகந்தி பி.ஏ., என்றும் போட்டுக் கொண்டு வீற்றி ருக்கின்ற அரிய காட்சி. இந்தக் காட்சிக்குக் காரணமான திராவிடர் இயக்கத்தில் அன்று முதல் இன்றுவரை தன்னை ஒப்படைத்துக் கொண்டு அருந்தொண்டாற்றி வருகின்ற அருமைத் தம்பி முருகேசன் இல்லத்தில் இந்த இனிய விழா நடைபெறுவது கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகின்றேன். இந்த விழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதிலே நான் பூரிப்புக் கொண்டு மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண் டுமென்று வாழ்த்துகின்றேன்.

இவ்வாறு முதல்வர் கலை ஞர் அவர்கள் உரையாற்றினார்.

--------------(காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலைஞர் - 28.5.1999)

0 comments: