Search This Blog
3.6.08
இராகு காலமா? - கலைஞரின் அனுபவம்
இராகு காலமா?
1967-ஆம் ஆண்டு அண்ணா தென் சென்னையில் போட்டியிட்டார். நான் தென் சென்னை பாராளுமன்றத் தொகுதிக் குட்பட்ட சைதாப்பேட்டையில் போட்டியிட்டேன். நான் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த நேரம் இராகுகாலம். அப்போதும் வெற்றி பெற்றேன்; பொதுப் பணித் துறை அமைச்சரானேன், முதலமைச் சரானேன். அந்த ராகுகாலம் என்னை முதலமைச்சர் நாற்காலியிலும் இருத்தியது.
காலம் பார்த்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் உருப்பட்டு விட்டதா? அல்லது காலம் பார்க் காமல் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் உருப்படாமல் போய்விட்டதா? உங்கள் அனுபவத்தைக் கணக்குப் போட்டுப் பாருங்கள். இதற்கு மேல் நான் ஆழமாகச் சொல்ல விரும்பவில்லை. அந்தக் காலத்தில் பெரியார் சொல்லுவார்: உலகத்தில் பெரிய புரோகிதர் - பெரிய மகரிஷி வசிஷ்டர். அவர் பார்த்த நாளில்தான் இராமருக்கு பட்டாபிஷேகம். ஆனால், அந்த நாளில் இராமர் பட்டாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாமல் வனவாசம் சென்றார். வசிஷ்டர் பார்த்த அந்த நாளிலே அந்தக் கதி என்றால், மற்றவர்கள் பார்க்கும் நாட்கள் என்ன ஆகும் என்று தெரியாதா? அந்தச் சிந்தனை இந்த நேரத்தில் தேவை தானா என்று நீங்கள் கேட்டால், தேவைதான்!
படித்த இளைஞர்களுக்குப் புதிய யுகத்தைப் படைக்க போகின்ற இளைஞர்களுக்கு இந்தச் சிந்தனைகள் தேவை. அந்தச் சிந்தனை தான் ஒரு சமுதாயத்தை உயர்த்தும். விழிப்புறச் செய்யும். வானத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். அங்குக் காணும் அதிசயங்களை படமெடுத்துக் காட்டுகிறார்கள். அதை நாம் தொலைக்காட்சியில் பார்க்கிறோம். அந்தக் காலத்தில் - புராணக் காலத்தில் இது பற்றிய சிந்தனைகள் இருந்ததா? சிந்தனைச் செல்வம் பெருகி ஓடும் இந்தக் காலத்தில் நாம் நம்மை உணர்த்திக் கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான் பெரியார் இனிவரும் உலகம் என்ற புத்தகத்தை எழுதினார். அதன்படிதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
-------------------------- கலைஞர் (மதுரைமணி, 18.12.2006)
Labels:
கலைஞர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment