Search This Blog

15.6.08

குழப்பமான கட்சி பா.ம.க.


பா.ம.க. - தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறதா? என்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பதில் அளித்துள்ளார்.

தி.மு.க.வைக் குட்டிக் கொண்டிருப்பது முறையாகாது என்று தமிழர் தலைவர் அவர்கள் மேலும் விளக்கமளித்து பேட்டியில் கூறியுள்ளார்.

குற்றாலத்தில் இன்று காலை செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

சென்னையில் பகுத்தறிவாளர் மாநாடு

சென்னையில் பகுத்தறிவாளர் கழக மாநாடு நடைபெறுகிறது. செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் முதல் நாள் மாநாட்டில் காலை இளைஞரணி மாநாடு நடைபெறுகின்றது.
அன்று மாலை திராவிடர் கழக மகளிரணி மாநாடு நடைபெறுகின்றது.
7 ஆம் தேதி பகுத்தறிவாளர் கழக மாநாடு நடைபெறுகிறது!

உலக முக்கிய பிரமுகர்கள் வருகிறார்கள்

இந்த மாநாட்டில் உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் வருகிறார்கள்.

உலகப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பால்கர்ட்ஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக மாநாட்டில் பங்கேற்கிறார்.

பெரியார் பன்னாட்டு மய்யம் கலைஞருக்கு விருது

அமெரிக்க நாடு - சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற பெரியார் பன்னாட்டு மய்யம் ஆண்டு தோறும் தலைசிறந்த அறிஞர்களுக்கு கி. வீரமணி சமூகநீதி விருதை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்குப் பெரியார் பன்னாட்டு மய்யத்தினர் சமூகநீதி விருதை வழங்குகிறார்கள்.

முதல்வர் கலைஞர் சிறப்புரையாற்றுகிறார்

சென்னையில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் பங்கேற்று நிறைவுரையாற்றுகின்றார்.

பெரியார் பன்னாட்டமைப்பைச் சேர்ந்த நிருவாகிகள் டாக்டர் சோம. இளங்கோவன் போன்றவர்களும் மற்றும் பல நாடுகளைச் சார்ந்த முக்கியப் பேராளர்களும் மாநாட்டிற்கு வருகிறார்கள்.

அக்டோபரில் திருநெல்வேலியில் மாநாடு...

வரும் அக்டோபர் மாதம் திருநெல்வேலியில், மாநில மாணவரணி மாநாடு நடைபெறுகிறது.

செய்தியாளர்: மாநாட்டில் என்னென்ன தீர்மானங்களை முன்வைப்பீர்கள்...?

தமிழர் தலைவர்: குறிப்பாக மூட நம்பிக்கை ஒழிப்பு, மதச் சார்பின்மை, சமூகநீதி, பெண்ணியம் இவை தொடர்பான பிரச்சினைகளை தீர்மானங்களாகக் கொண்டு வருவோம். இது தொடர்பாக தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்வோம்.

பா.ம.க. - தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா?

செய்தியாளர்: பா.ம.க. - தி.மு.க. கூட்டணியில் தொடருகிறதா? அதனால், தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா?

தமிழர் தலைவர்: திராவிடர் கழகம் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத ஓர் இயக்கம். எந்தக் கூட்டணியிலும் நாங்கள் இடம்பெறாதவர்கள்.

பா.ம.க. கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா? என்பதை தி.மு.க. தலைமையும், அதன் அமைப்பும்தான் முடிவு செய்ய வேண்டும். தி.மு.க. கூட்டணியில் தற்போது பா.ம.க. இருக்கிறது. தி.மு.க. ஆட்சியின் பல நல்ல திட்டங்களை, பல நல்ல சாதனை களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி தி.மு.க. கூட்டணிக்கு உதவிகரமாக இருக்கவேண்டும்.

குழப்பமான கட்சி பா.ம.க.

ஆனால், பா.ம.க.வைப் பொறுத்தவரையிலே அது ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கின்றதா? அல்லது எதிர்க்கட்சியாக இருக்கின்றதா? என்ற அளவில் பொதுமக்களுக்கே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அந்தக் கட்சி அன்றாடம் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது.
குட்டிக் கொண்டிருப்பது முறையாகாது

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களோ நாள்தோறும் தி.மு.க. அரசுக்கு எதிராக அறிக்கை விடுவதையே தன்னுடைய வேலையாக வைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்.

குட்டக் குட்டக் குனிவதும் பொறுமையாகாது - குனிந்து கொடுக்கிறார்கள் என்பதற்காக குட்டிக் கொண்டிருப்பதும் முறையாகாது பா.ம.க.வைப் பொறுத்தவரை இதுதான் எங்களுடைய கருத்து.


விலைவாசி உயர்வுபற்றி...

செய்தியாளர்: இன்றைக்கு விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறதே, இதற்குத் தீர்வுதான் என்ன?

தமிழர் தலைவர்: விலைவாசி உயர்வு என்பது பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் ஏற்பட்ட ஒன்று. இது இன்றைக்கு உலகப் பிரச்சினையாக இருக்கிறது.

லண்டனிலே கூட பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்கள்.
இந்திய அரசு விவசாயிகளினுடைய கடனுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது.
காய்கறி, அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருள்களை மக்கள் பையிலிருந்து பணம் கொடுத்து வாங்கும்பொழுதுதான் விலைவாசி உயர்ந்ததால் ஏற்படும் துன்பத்தை உணர்கிறார்கள்.

மத்திய அரசு கட்டுப்படுத்தவேண்டும்

மத்தியில் இருக்கின்ற ஆட்சிதான் விலைவாசி உயர்வுக்கு முக்கிய பங்கு வகிக்கிறதே ஒழிய, மாநில அரசுக்கு இதில் முக்கியமான செயல்பாடு கிடையாது.

அப்படியிருந்தும் மாநில அரசு இரண்டரை சதவிகிதம் வரியைக் குறைத்திருக்கிறது.
விலை உயர்வையும், பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் இருக்கிறது.

இன்னும் ஓர் ஆண்டுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரப் போகிறது. வாக்கு வங்கியை நினைத்து, மத்திய அரசு இதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.
ஏதேதோ காரணங்களைச் சொல்வதால், எந்தப் பயனும் இல்லை.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி மக்களுடைய சுமையைக் குறைக்க மத்திய அரசு இதில் தீவிரமாக கவனம் செலுத்தவேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோளாகும். - இவ்வாறு தமிழர் தலைவர் கூறினார்.


---------------நன்றி: "விடுதலை" 14-6-08

0 comments: