மன அமைதி இல்லாதவர்கள் உலகத்திலே கடவுளருளிய நன்மைகளை மட்டும் பார்க்கிறார்கள். அமைதியான மனம் படைத்தவர்கள் உலகத்திலே நன்மையும் தீமையும் நிறைந்திருப்பதைப் பார்க்கிறார்கள். நாம் உயிர் வாழ்வதே கடவுள் கருணையினாலென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நமது வாழ்க்கை எப்பொழுதும் இன்பமயமாக இருக்கிறதா? ``சூரியனைப் பார்! மக்கள் நன்மைக்காகத்தானே அவன் வெளிச்சம் தருகிறான். வெப்பம் தருகிறான் என்று வேறு சிலர் கூறுகிறார் கள். ``பூமியைப் பார் பழங்கள், புஷ்பங்கள் தருகின்றன. நதிகள் தண்ணீர் தருகின்றன. உலகத்தைச் சூழ்ந்திருக்கும் கடல் வர்த்தகத்துக்கு உதவி செய்கிறது. மிருகங்கள் நமக்குப் பலவித உதவிகள் செய்கின்றன என்றெல்லாம் பின்னும் சிலர் கூறுகிறார்கள். ஆம்! நானும் அவைகளை எல்லாம் பார்க்கிறேன். சாத்தியமான பொழுதெல்லாம் அவைகளால் இன்பமும் அடைகிறேன். ஆனால் சில தேசங்களில் இந்த அழகான சூரியன் மக்களுக்குக் கொடுமையே செய்கிறான். சில தேசங்களில் இந்தச் சூரியனைக் காணவே முடியவில்லை. அநேக பிரதேசங்களில் சூரிய வெப்பத்தினால் புயல் காற்றுகள், நோய்கள் உண்டாகின்றன. வயல்கள் உலர்ந்து போகின்றன. மைதானங்களில் புல் பூண்டுகள் இல்லாமல் செய்து விடுகிறான். மரங்களில் பழங்கள் காணப்படவில்லை; கழனிகள் கரிந்து தரிசாய்க் கிடக்கின்றன. கோடைக் கொடுமையினால் நதிகள், கிணறுகள் வறண்டு கிடக்கின்றன. இயற்கையின் கொடுமையைக் பார்த்து நான் ஏக்கமடைகிறேன்; மனம் புண்ணாகிறேன். உங்கள் பார்வையில் கருணையுடையதாகத் தோன்றும் இயற்கை இவ்வளவு கொடுமையாக இருப்பதைப் பார்த்து ஏக்கமடைகிறேன். வாசனைத் திரவியங்களையும், செல்வத்தையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவர உதவி புரியும் கடல், திரவியம் தேட வெளிநாடு செல்லுவோரை ஆயிரக்கணக்காகக் கொல்லுவதில்லையா?
மனிதன் தற்பெருமையினால் தானே உலகத்துக்கு நாயகன் என எண்ணிக் கொள்கிறான். தனக்கென ஓர் உலகத்தையும், கடவுளையும் சுயமாகச் சிருஷ்டித்துக் கொள்கிறான். தன்னிஷ் டப்படி இயற்கை அமைப்புக்களை மாற்றி விடலாமென்றும் பெருமை பாராட்டுகிறான். இதர ஜீவராசிகள் விஷயத்தில் ஒரு நாஸ்திகனைப் போல் பேசுகிறான். மனிதன் ஒழிந்த இதர ஜீவராசிகள் எல்லாம் கடவுளின் படைப்பு அல்லவென்றும், கடவுளின் கருணையைப் பெற மிருகங்களுக்கு உரிமையில்லை யென்றும் நம்புகிறான். மக்களுக்கு நன்மையுண்டானால் அது கடவுளின் கிருபை என்கிறான்; தீமையுண்டானால் கடவுளின் தண்டனையென்கிறான். ஆனால், மிருகங்கள் விஷயத்தில் மட்டும் அவன் அவ்வாறு ஏன் எண்ணவில்லை? நீதிமானான கடவுள் பார்வையில் மிருகங்கள் சுக துக்கங்கள் அனுபவிப்பதையும், ஆரோக்கியமாயும் நோயுற்றும் இருப்பதையும், உயிரோடிருந்து இறப்பதையும் மனிதன் பார்க்கவில்லையா? நோய்கள், துன்பங்கள், மரணம் மூலம் தண்டனை அனுபவிக்க, மிருகங்கள் கடவுளுக்கு என்ன தீமை செய்தன? இதற்குச் சமாதானம் கூற முடியாமல், சமய வாதிகள் மிருகங்களுக்கு உணர்ச்சியில்லை யென்று நொண்டிச் சமாதானம் கூறுகிறார்கள்.
அகம்பாவப் பேச்சுகளை மக்கள் எப்பொழுதுதான் விடுவார்கள்? இயற்கை தமக்காகச் சிருஷ்டிக்கப்படவில்லையென்பதை இனிமேலாவது அவர்கள் உணர்வார்களா? பிராணிகள் பிறப்பதும் இறப்பதும் சுக துக்கங்கள் அனுபவிப்பதும் இயற்கை என அறிந்து கொள்வார்களா? தாம் பெரிய புத்திசாலிகள் எனக் கூறிக் கொண்டாலும் தமது செயல்களால் துன்பங்கள் வருவித் துக் கொள்வதையும் மிருகங்கள் தமக்குத் தாமே துன்பம் செய்யாமல் சுகமாக வாழ்வதையும் ஒப்புக் கொள்வார்களா?
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment