Search This Blog

7.6.08

மகளிர் ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அவசியமே!

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடம் அளிக்கப்படவேண்டும் என்கிற பிரச்சினை 1996 இல் அய்க்கிய முன்னணி ஆட்சிக் காலத்திலிருந்தே நிலுவையில் இருந்து வருகிறது. பொதுக் கருத்து எட்டப்படவில்லை என்று தொடக்கத்தில் கூறப்பட்டது.

12 ஆண்டு காலமாக இது சட்டமாக்கப்படாததற்குக் காரணம் என்ன? மக்களவை உறுப்பினர்கள்தானே?

மக்களவையில் 545 உறுப்பினர்கள் என்றால், அதில் பெண்கள் வெறும் 45 பேர்கள்தான் (அதாவது 8.3 விழுக்காடு). 90 விழுக்காட்டுக்குமேல் ஆண்கள் ஆதிக்கம் இருப்பதே - இது சட்டமாக நிறைவேற்றப்படாமைக்குக் காரணமாகும்.

1952 இல் நடைபெற்ற தேர்தல் முதல் 2004 இல் நடைபெற்ற தேர்தல் வரை மக்களவையில் பெண்கள் 8.3 விழுக்காட்டைத் தாண்டிடவில்லை. அதுவும் நடந்து முடிந்த 2004 தேர்தலில்தான் இந்த அதிகபட்சமாகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையை எடுத்துக்கொண்டாலும், 1991 ஆம் ஆண்டில் மட்டும்தான் 13.67 விழுக்காடாகும். மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதி உடைய பெண்கள் பிரதிநிதித்துவம் இந்த அளவுக்குத்தான் இருக்கிறது என்பது - மக்கள் நாயகத்தையே கொச்சைப்படுத்துவதாகும்.
உலக நாடுகளை எடுத்துக்கொண்டால், இந்தியா - இதில் 104 ஆம் இடத்தில் இருக்கிறது என்பது பெருமைக்கு உரியதுதானா? முசுலிம் நாடான பாகிஸ்தான் கூட இதில் 42 ஆம் இடத்தில் இருக்கிறது. ருவாண்டா முதல் இடத்திலும் (48.8 விழுக்காடு), சுவீடன் இரண்டாம் இடத்திலும் (47.3 விழுக்காடு) இருக்கின்றன.

பாரதத் தாய் என்று பேசுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. அந்தத் தாய்க் குலத்துக்குரிய பிரதிநிதித்துவம் தேவை என்றால் மட்டும் எல்லாம் மவுன சாமியார்கள் ஆகிவிடுகிறார்கள்.
இதில் ஏதோ ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில்தான் எதிர்ப்பு என்று இல்லாமல், அனேகமாக பெரும்பாலான கட்சிகளும் ஒரே சுருதியில்தான் இதில் கச்சேரி நடத்துகின்றன.
இதில் குறிப்பிட்ட ஒரு பிரச்சினை மிகவும் முக்கியமானது. பெண்களுக்கு ஒதுக்கப்படும் 33 சதவிகிதத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை பெரும்பாலான கட்சிகள் நிராகரித்து வருகின்றன.

லாலு பிரசாத் அவர்களின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சிகள்தான் உள் ஒதுக்கீடு தேவை என்பதில் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.அய்.) இந்திய மாதர் சம்மேளனமும் அண்மையில் இதற்குப் பச்சைக்கொடி காட்டியிருப்பது வரவேற்கத் தக்கதாகும்.

இது மிக முக்கியமானதோர் பிரச்சினையாகும். இந்த உள் ஒதுக்கீடு அளிக்கப்படாவிட்டால், 545 உறுப்பினர்கள் (அதிகபட்சம்) கொண்ட மக்களவையில், 180-க்கும் மேற்பட்ட பெண்களில் பெரும்பாலோர் உயர்ஜாதி பெண்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டு விடுவார்கள். தமிழ்நாடு வேண்டுமானால் இதில் விதிவிலக்காக இருக்கலாம். மற்ற மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் பெரும்பாலும் உயர்ஜாதிக்காரர்கள்தான் இடங்களைப் பிடித்துக் கொள்பவர்களாக இருப்பார்கள்.

மக்களவையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயர்ஜாதிக்காரர்களாக - குறிப்பாகப் பார்ப்பனர்களாக இருக்கும் பட்சத்தில், அதன் விபரீதம் எப்படியிருக்கும் என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். கட்சிகளைக் கடந்து அவர்கள் ஒன்று சேர்வார்களானால், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மம்தான் (அது பெண்களுக்கு அநீதி இழைத்தாலும்கூட) கோலோச்சும்.

உள்ளாட்சிகளில் பல்வேறு சமுதாயங்களைச் சார்ந்த பெண்கள் தேர்வாவது வேறு - மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது வேறு? இரண்டும் ஒன்றல்ல!
நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் திரு. ஈ. சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான குழு இதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க இருக்கிறது. அந்தக் குழு இந்தக் கண்ணோட்டத் திலும் பிரச்சினையைப் பார்க்கவேண்டும் - ஆய்வு செய்ய வேண்டும் என்பதே நமது அழுத்தமான வேண்டுகோளாகும்.

சமூகநீதியில் அக்கறை உள்ள அத்தனை அமைப்புகளும், தலைவர்களும் இந்தக் குழுவிடம் இந்த வகையிலான கருத்தினை அறிக்கைகளாகக் கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


-------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 06-06-2008

0 comments: