Search This Blog

3.6.08

கலைஞரிடம் நாடு நிரம்ப எதிர்பார்க்கிறது! - அறிஞர் அண்ணா -





கலைஞரிடம் நாடு நிரம்ப எதிர்பார்க்கிறது!



தம்பி கருணாநிதியினுடைய ஆற்றல் பற்றியும், ஆற்றல் காரணமாகப் பெற்ற வெற்றிகள் பற்றியும், பெற்ற வெற்றிகளெல்லாம் நாட்டு முன்னேற்றத்திற்குப் பயன்பட்டன என்பது பற்றியும், அந்த ஆற்றலும் வெற்றியும் நாட்டுக்கு இனியும் நல்ல முறையில் பயன்படும் என்பது பற்றியும் நண்பர்கள் பலர் எடுத்துச் சொல்லிக் கேட்பதில் எனக்கு மிகுந்த பெருமிதம் உண்டாகும் என்பதில் யாருக்கும் அய்யப்பாடில்லை.

வண்ணமான எண்ணத்தை மிகச் சிறு பருவத்தில் பெற்றவர் கருணாநிதி. அவர் இளமைப்பருவ முதல் நாட்டு மக்களுக்கு எதையாவது சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தோடு சில எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு கையேட்டுப் பிரதிகள் மூலமாகச் சொல்லி, அதற்குப் பிறகு மேடையிலே பேசுவதன் மூலமாகச் சொல்லி - கட்டுரை வடிவத்தில் - சினிமாத்துறை மூலம் சொல்லி, இன்றைய தினம் அமைச்சராக இருந்து அந்த எண்ணங்களுக்கெல்லாம் அமைச்சர் என்ற முறையில் எந்த அளவுக்கு வடிவம் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு வடிவம் கொடுத்து வருவதை நாமெல்லாம் மகிழ்ச்சியோடு பாராட்டுக்கிறோம்.

கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர் பொறுப்புகளை நிறைவேற்றுவாரா என்ற அய்யப்பாடு இருந்தது. ஒரு நல்ல கலைஞர் - சிறந்த கலைஞர் என்றால், அவர் கலையில் எந்த அளவு திறமை காட்டுகிறாரோ, அந்த அளவு திறமை அவர் எடுத்துக் கொண்ட பொறுப்பு ஒவ்வொன்றிலும் காட்டுவார் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். ஒரு நாளைக்கு கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதை யாராவது அவருக்குத் தெரியாமல் பார்த்தால்தான் அவர் இத்தகைய திறமையைப் பெற்றதன் அடிப்படை - உழைப்பு என்பதை உணருவார்கள். உழைக்காமல் இந்தத் திறமை வந்துவிடவில்லை. உழைக்காமல் ஒரு திறமை வராது. சிலப்பதிகாரத்தைக் கருணாநிதி இன்றைய நடைக்கு ஏற்ற அளவில் ஆக்கித் தந்திருக்கிறார் என்றால் அதற்கு நூறு முறையாவது முறைப்படி படித்திருப்பார். அப்படிப்பட்ட கடுமையான உழைப்புக்குக் காரணம், நாம் பெற்றிருப்பது நாட்டுக்கு அளிப்பதற்குப் போதாது என்ற அடக்க உணர்ச்சிதான். எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒருவர் எண்ணியவுடன் அவருடைய சரித்திரத்தை எழுதி மலிவுப் பதிப்பு வெளியிட்டு, இரண்டாம் பதிப்பு வராது என்று உலகத்துக்கு அறிவித்துவிடலாம்.

நான் கருணாநிதி அமைச்சரானபோது அடைந்த மகிழ்ச்சியைவிட, அவர் மாற்றாரால் அமைச்சர் என்ற முறையிலும் தாக்கப்படுவாரானால், நிமிர்ந்த நடைபோட்டு என் தம்பி எதையும் ஏற்றுக் கொள்கிறவன் என்று சொல்வேன். என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்தில் இருக்கிறார்கள். அவர்களிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. அவர் மூலமாக நானும் நாடும் நிரம்ப எதிர்பார்த்திருக்கிறோம். இப்பொழுது செய்திருக்கின்ற காரியங்களைப் போல் பல மடங்கு அதிகமான காரியங்கள் அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்கு கிடைக்க வேண்டியிருக்கிறது.

0 comments: