சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் இரவு மணி 9 அல்லது 10 இருக்கலாம். தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட்டில் உள்ள எல்லா கடைகளும் மூடப்பட்டு வியாபாரிகள் தங்கள் தங்கள் வீடுகளுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த நேரம். நான் கையில் அன்றுதான் நூலகத்திலிருந்து எடுத்து வந்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தை சிறிது நேரம் படித்து விட்டு பின்னர் கடையை அடைத்துப் படுக்கலாம். (அந்தக் காலங்களில் நான் கடையிலேயே படுத்து விடுவது வழக்கம்) என்று எண்ணிக்கொண்டு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். அது மட்டும்தான் தெரியும். பின்னர் டீக்கடைக்காரர்களின் அடுப்பு பற்ற வைக்கும் சத்தமும், மீன் கடைக்காரர்களின் கூச்சல்களும் கேட்டவுடன் தான் எனக்கு இந்த உலகமே நினைவுக்கு வந்தது. ஆ ! இதென்ன விடிந்து விட்டது என்று அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்து பாhக்கும்போது தான் மணி காலை 5.30 ஆகி விட்டதென்று தெரிந்தது. அந்த முழு இரவும் என்னை எதனையும் சிந்திக்க விடாது பிடித்துக் கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ நாவல்களை மீண்டும் இப்பொழுது வர்த்தமானன் பதிப்பக வெளியிடுகளாக படிக்க நேர்ந்தது. அன்று படித்தது போலவே கதை வேகம் குன்றாமல் சென்றாலும் அன்று என்னை பிரமிக்க வைத்த “பொன்னியின் செல்வன்” இன்று அச்சத்துடனும், கவனத்துடனும் அணுக வேண்டிய பிரதியாகத் தெரிகிறது. ஆம் தேனில் விஷம் கலந்து கொடுப்பதுபோல கதைப் போக்கின் ஊடே பார்ப்பனியம், இந்துத்துவ சொல்லாடல்கள், அவைதீக மதங்களான ஜைன பௌத்தத்தின் மீது அக்கிரமமான அவதூறுகள், ஆணாதிக்க மனோபாவம் ஆகிய அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வாசகனின் நெஞ்சில் ஒரே அடியில் இறக்கி விடுகிறார் கல்கி.
கடந்து போன காலங்களிலும் கல்கி சிறு பத்திரிக்கைக்காரர்களால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர்கள் கல்கியின் படைப்புகளில் இலக்கியத்துவம் குறைந்து இருக்கிறது என்றும் சனரஞ்சகப் பன்பு நிறைந்திருக்கிறது என்றும் தான் விமர்சித்தார்களே தவிர மற்ற பகுதிகளை யாரும் சுட்டிக் காட்டியதாக எனக்கு நினைவில்லை. இன்றும் ‘லெண்டிங்’ நூலகங்களில் அதிகம் படிக்கப்படும் நூல்களில் ஏறத்தாழ முதலிடம் பெற்று இருப்பதும், இன்றும் கூட மறுபதிப்பு வெளியீடுகள் விரைந்து விற்பனையாகும் தன்மை பெற்றிருப்பதுமான கல்கியின் நூல்களை நாம் சிறிது மறுவாசிப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன்.
இராசராச பெருமன்னனுடைய அண்ணன் ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் என்று அக்கால கல்வெட்டுக்களில் பதிவாகி உள்ள குற்றவாளிகள் அனைவரும் பர்ப்பனர்களாக உள்ளனர். ஹ.சு.நு. 557/1920 கல்வெட்டில் உள்ள பெயர்கள் 1. சோமன் 2. ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராயன் 3. இவன் தம்பி இருமூடி சோழ பிரமாதிராயன் 4. உடன்பிறப்பு மலையனூரான் 5. இவர்கள் தம்மக்கள் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் கல்வெட்டு குறிக்கின்றது. ‘பிரமாதிராயன்’ என்னும் பட்டம் பிற்கால சோழ அரசில் படைத்தலைமை பூண்ட பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் இராசராசன் பதவி ஏற்று இரண்டாண்டுகள் சென்று விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். முடிவில் அவர்கள் சொத்துக்கள் மட்டும் பறிமுதல் செய்யப்படுகின்றது. தமிழக வரலாற்றில் பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வழக்கம் இல்லை.
ஆனால் தன் நாவலில் கல்கி இவர்களை பிராமணர் அல்லாதவர்களாகவும், கிட்டத்தட்ட பாண்டிநாட்டு மறவர் குலத்தவர்களைப் போன்றும் காண்பிக்கிறார். நடந்தவை வரலாற்று உண்மைகளாக இருப்பினும் பார்ப்பனர்களை கொலைகாரர்களாக சித்தரிக்க கல்கியின் பார்ப்பன உள்ளம் இடம் கொடுக்கவில்லை. அதனால்தான், ‘பொன்னியின் செல்வன்’ தொடராக வந்து விளக்கங்களைக் கூற வந்த கல்கி “நந்தினி உயிரோடு இருந்தவரையில் ஆதித்த கரிகாலனுடைய அகால மரண ரகசியம் பற்றி விசாரிக்கப்படவில்லை. அதில் நந்தினியின் பெயரும் வரும் என்ற காரணத்தினால் தான். நந்தினியின் மரணத்திற்குப் பிறகு, இராஜராஜ சோழன், ரவிதாசன் முதலிய ஆபத்து கவிகளைக் கைப்பற்றித் தண்டனை விதித்து அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கட்டளை பிறப்பிக்கிறான்” (பக்.2727) என்று கூசாமல் பொய்யான செய்தியை எழுதுகின்றார்.
‘சிவகாமியின் சபதம் நாவலில் அவைதிக மதத்தினரின் மடங்களான பௌத்த விகாரைகளும், ஜைன மடங்களும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு புகலிடமாக இருப்பதாக சித்தரிக்கின்றார். நூலின் 2 வது பாகம் - பக்கம் 585 இல் மகேந்திர பல்லவன் கூறுகின்றான் : “வாதாபி ஒற்றர்கள் பல்லவ ராஜ்யமெங்கும் பௌத்த சங்கங்களின் மூலமாக வேலை செய்து வருவதை அறிந்தேன்.” பக்-834 இல் பிரதான வில்லன் பாத்திரமாக, படைக்கப்பட்ட புத்த பிட்சுவான நாகநந்தி கூறுகின்றார். “ தென்னாடெங்கும் பௌத்த மடங்களும் , ஜைன மடங்களும் ஏராளமாக இருந்தபடியால் என்னுடைய வேலை (ஒற்று வேலை) மிகவும் சுலபமாயிருந்தது. காஞ்சி இhஜ விகாரத்திலே கூட நமக்காக (ஒற்று) வேலை செய்யும் பிட்சுகள் கிடைத்தார்கள்.”
இந்த கதை நடந்த காலகட்டம் பற்றி நண்பர்களுக்கு சில கூற வேண்டும். இக்காலகட்டத்தில் காஞ்சிபுரம் அன்றைய பாரதம் முழுமையும் புகழ் பரப்பிய நகரமாக விளங்கியது. இந்திய தத்துவத்தின் வரலாற்றில் ஒளி மிகுந்த பக்கங்களை பிடித்துக் கொண்ட தின்னாகரும், தருமகீர்த்தியும் போன்ற ஏராளமான பௌத்த அறிஞர்கள் அறிவின் ஒளி தான் அன்றைய காஞ்சியின் புகழுக்கு காரணமாக விளங்கியது. இந்த அறிஞர்களின் நூல்களை, சீனர்கள் இலங்கையைச் சேர்ந்த பௌத்தர்கள், திபெத்திய அறிஞர்கள் என்று பலரும் வந்து மொழி பெயர்த்துச் சென்றார்கள்.. இன்றும்கூட இந்தியாவில் இந்துத்துவவாதிகளால் அழிக்கப்பட்ட அந்நூற்கள் சீன, திபெத்திய, சிங்கள மூலங்களில் இருந்துதான் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இது பற்றி விரிவான தகவல்களைப் பெற விரும்பும் நண்பர்கள் செர்பாட்ஸ்கி, ராகுல்ஜி, மயிலை. சீனி. வேங்கடசாமியின் நூல்களைப் பார்க்கலாம்.
இத்தகைய காலகட்டத்து அவைதிக மதத்தினரைப் பற்றித் தான் மேற்சொன்னபடி கல்கி துணிந்து எழுத முற்படுகின்றார். அவைதிக மதத்தினரான ஜைன முனிவர்களை “கட்டையாகவும், குட்டையாகவும், மொட்டைத் தலையுடனும் விளங்கிய அந்த திகம்பர (அம்மண சாமியார்) சமணரைப் பார்த்து” என்று, வர்ணிக்கும் கல்கியின் பேனா பார்ப்பன ஞான சம்பந்தரை சித்தரிக்கையில் “அம்பிகை விக்ரகத்தின் அருகில் திவ்ய மோகனரூபம் கொண்ட ஒரு பாலன் நின்றிருப்பதைப் பார்த்தேன்” - பாத்திர உருவ சித்தரிப்புக்களில் கூட வைதிகத்திற்கு எதிரானவர்களை பிசாசுகள் போல காட்டுகின்றார்.
அடுத்து வெளிப்படையாகவே இந்துத்துவத்தைப் புகுத்தும் இடங்கள் பல இருப்பினும் சிலவற்றைப் பார்ப்போம். மகேந்திர பல்லவன் மரணப்படுக்கையில் இருக்கிறார். அருகில் மந்திரி பிரதானிகள் கூடி கவலையுடன் உள்ளனர். மன்னன் அவர்களை நோக்கி” “ என் வாழ்நாளின் இறுதி நெருங்கி விட்டது. தேகத்திலிருந்து என் ஆவி பிரிந்து போய் விடும். என் அருமை குமாரன் நரசிம்மன் வேத விதிப்படி இறந்து போன தந்தைக்குச் செய்ய வேண்டிய உத்திரிகிரியைகளைச் செய்வான்” (பாகம் 3 பக்.915) மரணப்படுக்கையில் உள்ள மனிதன் வேத விதியை நினைவூட்டுகிறானா கல்கி நினைவூட்டுகிறாரா? மற்றொரு இடம். சிவகாமி சாளுக்கியர் வசப்படும்போது ஆசிரியர் கூற்றாக “துன்பம் என்பது உண்மையில் துன்பம் அல்ல. அவ்விதம் நினைக்கச் செய்வது மாயையின் காரியம். துன்பத்திற்குள்ளேயும் இன்பந்தான் இருக்கிறது! என்று சொல்லும் வேதாந்த உண்மையை..” இது போல நாவலின் பல இடங்களில் இந்துத்துவத்தையும், வேதாந்தத்தையும் உயர்த்திப் பிடிக்கிறார்.
இறுதி முத்தாய்ப்பாக நரசிம்ம பல்லவனை திருமணம் செய்ய முடியாது போகும் சிவகாமி பாத்திரத்தின் முடிவு நமக்கு பெரிதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நூல் முழுமையும் பெரும் கலைச் செல்வியாக, நடனக் கலையில் தீராத மோகம் கொண்ட சிவகாமி இறுதியில் கோவிலுக்கு பொட்டுக்கட்டி தாசியாக மாறி விடுகின்றாள். இதில் என்ன முக்கியத்துவம் என்றால் இந்தக் கதையை கல்கி எழுதும் காலத்திற்கு சிறிது காலம் முந்தி தான். கோவில்தாசி ஒழிப்புப் பற்றிய சட்டமன்ற விவாதங்களும், சனாதனிகளுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் இடையே விவாதங்களும் நடந்து, இறுதியாக கோவில்தாசி முறை சட்டப்படி ஒழிக்கப்பட்ட வரலாற்று நிகழ்ச்சி நடந்தது என்பதை வாகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.
நம்முடைய சிறு பத்திரிகைக்காரர்களுக்கும் அறிவுஜீவி மேதாவிகளுக்கும் இந்தப் பிரச்சினைகள் இதுவரை கண்ணில் படாது போனதேன்? ஒரு வேளை இத்தகைய பிரச்சினைகளில் இன்றைய மேதாவிகளின் கருத்தும் இதுதான் என்பதாலா!
---- நன்றி:நிறப்பிரிகை
ஆசிரியர் குழு :
அ.மார்க்ஸ், போ. வேல்சாமி
வெளியீட்டாளர் : நிறப்பிரிகை வெளியீடுகள்
47, ருக்மணி நகர்,
செட்டிமண்டம், கும்பகோணம் - 612001
விலை : ரூ 20/-
Search This Blog
15.6.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment