Search This Blog

8.6.08

இந்தியாவின் பூர்வீகக் குடி மக்களை அடிமையாக்கி ஆரியர் சூழ்ச்சி --- இந்து மதத்தைப் பற்றிய பாரதியின் பழுதுபட்ட பார்வை

இந்தியாவின் பூர்வகுடிமக்கள் அவர்கள்
மண்ணிலேயே அடிமையாக்கி ஆரியர் சூழ்ச்சிஇந்தியாவின் பூர்வீகக் குடி மக்களை, அவர்களது இருப்பிடத்திலேயே அடிமைகளாக ஆக்கி, அவ்வாறு இருப்பதே அது ஆண்டவனால் விதிக்கப்பட்ட கட்டளை என்பதை நம்ப வைக்க வேதங்களையும், சாத்திரங்களையும் கொண்டு வந்த இரண்டாவது கட்டத்தில்தான் மனுவும், அவரையெபாத்த எஜமான தத்துவவாதிகளும் புகுந்தனர்.

கரடு முரடாக இருந்த அடிமை முறைக்கு சாத்திரப் பூச்சுப் பூசி, சாதி, விதி, கர்மம் என்ற பட்டய்ங்களைப் போட்டு, இவை நிரந்தமாக, தெய்வத்தின் பெயரால் இருக்க வைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்த கட்டத்தில்தான் ஆரியர்களின் கைவரிசை, இந்தியாவின் பெரும் பகுதியில் வெற்றியைப் பெற்றது.

இவர்கள் கைவரிசை, தத்துவம், மிரட்டல் வெற்றி பெறாத இடங்களும் நிறைய இருந்தன. இன்றும் இருக்கின்றன.

இந்தியாவிலுள்ள சாதிகளில் பிராமணர்களே தலைச் சாதியினர் என்பது உண்மையல்ல.
பிராமணன் வாயிலிருந்து பிறந்தான்.

க்ஷத்திரியன் தோளிலிருந்து பிறந்தான். வைசியன் தொடையி லிருந்து பிறந்தான். சூத்திரன் பாதத்திலிருந்து பிறந்தான் என்ற கட்டுக் கதை காட்டு மிராண்டித்தனமான கதை எல்லா இடங்களிலும் வெற்றி பெறவில்லை.

பாரதியாரின் கட்டுரையிலேயே இமயமலைப் பகுயில் பிராமணர்கள் முதல் சாதியாகக் கருதப்படுவது இல்லை என் பதையும், நெல்லையில் கம்பளத்து நாயக்கர்கள் பிராமணர்களை மதிப்பது இல்லை, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுவதில்லை என்பதையும் சாதி வினோதங்கள் என்ற கட்டு ரையில் குறிப்பிடுகிறார்.

உத்தரப் பிரதேசத்தில் அதிகமாகவுள்ள ஜாட் சாதியினர் பிராமணர்களை மிகவும் கீழான சாதியினராகக் கருதுவதுடன், அவ்வாறுன் நடத்தியும் வருகின்றனர்.

ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திரர்களும் பிராமணர்களை ஏவல் வேலை செய்வோராக மட்டுமே கருதி அவ்வாறே நடத்துகின்றனர். தேவர் சமூகத்தைச் சேர்ந்த சில பிரிவினர் பிராமணர்களைத் தங்களது திருமண விழாக்களில் பங்கெடுக்க விடுவதில்லை. தங்களது கோயில்களுக்கு தங்கள் சாதிப் பூசாரிகளை மட்டுமே வைத்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த பூசாரி கூட இருக்கிறார். மருத்துவ வகுப்பைச் சேர்ந்த பூசாரி இருக்கிறார். பிராமண குரு அனுமதிக்கப்படவே இல்லை.

இவ்வித விதிவிலக்குகள் இருந்தாலும், மன்னர்கள் இந்து மதச் சடங்காச்சாரங்களைப் பின்பற்றத் தொடங்கி, பிராமணர்கள் கூறுகிறபடி பூஜை, சாத்திர முறைகளை மேற்கொண்டபோது, அதற்கொரு ராஜமரியாதை கிட்டி, சமூக அந்தஸ்யும் பெற்றதால், காலப்போக்கில், பெரும் பகுதி இடங்களில் வேதத்திற்கு பிராமணம் என்பது நியதியாயிற்று.

பிராமணர்களை உயர் ஜாதியினர் என்று ஏற்காதவர்களும் உள்ளனர்

தென்னிந்தியாவில்தன் பிராமணர்கள் தனிக் குடியிருப்புப் பகுதிகளைக் கட்டிக் கொண்டு, அதற்கு அக்கிரகாரம் என்று பெயர் வைத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. வட இந்தியாவில் இத்தகைய தனிக் குடியிருப்புகள் இல்லை என்கின்றனர். பலர் மத்தியிலே பிராமணர்களும் வாழ்கிறார்கள். பிராமணர்கள் பீகாரில் விவசாயமும் செய்கிறார்கள். உணவு அருந்துவதில் கூட, தனியிடம் தேடாமல், சகலருடனும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். மீன் சாப்பிடுகிறார்கள்.
உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங் களில் பிராமணர்கள் தாழ்த்தப் பட்டோருக்கு ஒத்துழைப்பாக இருக்கிறார்கள். ஜாட் சாதியின் ஆதிக்கத்தை எதிர்த்து, பிராமணர் உள்ளிட்ட பிறர் கூட்டாக நிற்கின்றனர். இங்கெல் லாம் பிராமணர் முதல் சாதி என்று தங்களை வருணித்துக் கொண்டாலும், ஜாட் சாதியினர் அதனை ஏற்பது இல்லை. வடநாட்டு ராஜபரம்பரையினர் யாருமே இதனை ஏற்பதாகத் தெரியவில்லை.


இந்து மதத்தைப் பற்றிய பாரதியின் பழுதுபட்ட பார்வை

பொய் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தைகளை நம்பி, இவன் சைவன், இவன் அரிபக்தன் என்று சண்டையிடுவதைக் குலைத்து இகழ்ந்த செயலாகக் குறிப்பிடும் பாரதி, இந்து மதத்தில் குறைகள் இல்லாதது போலவும், பாதிரிகள் சிலர் இட்டுக் கட்டிப் பொய்க் கதைகளைத் திரித்து விட்டது போலவும் எழுதுவது பக்தியின் ஆழத்தைக் காட்டுகிறதே அன்றி, நடுநிலையில் நின்று பார்க்கும் பார்வை பழுதுபட்டது என்பதையே காட்டுகிறது.

இந்து மதத்தில் -
கணவனை இழந்த பெண் சுட்டெரிக்கப்பட்டது உண்டு.
குழந்தைகள் ஆற்றில் வீசி எறியப்பட்டது உண்டு.
குழந்தையை அறுத்து சமைத்து ஆண்டவனுக்கு உணவு படைத்த கதை உண்டு.
மனைவியை சாமியார்களுக்கு விட்டுக் கொடுத்த கதை உண்டு.
இரண்டு, மூன்று மனைவிகளை மணந்த தெய்வக் கதைகள் உண்டு.
குடும்பச் சண்டை, சொத்துச் சண்டை போட்ட சாமிகள், கடன் வாங்கி அதைக் கட்ட உண்டியலோடு நிற்கும் வெங்கிடா சலபதி வரை எத்தனையோ உண்டு.
சாமிக்கதைகள் ஒரு புறமிருக்க, சடங்காச்சாரங்கள், மூடப் பழக்க வழக்கங்கள் மண்டிக் கிடப்பதையும் நாமறிவோம். பாரதியும் நன்கறிவார்,
வரதட்சிணைக் கொடுமை
பெண்கள் ஏட்டைத் தீண்டக் கூடாது எனத் தடுத்த கொடுமை,
விதவைகளுக்கு (இன்றைக்கும்) சித்திரவதை செய்யும் பழக்கம்.
பெண்களுக்கு சொத்துரிமை இல்லாது வைத்திருந்த இந்து சம்பிரதாயம், ஆகியவற்றை எடுத்துச் சொல்லித்தான் நாடு தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அளவிற்கு அது ரகசியம் அல்ல.
இந்து மதத்திலேயே சண்டாளத்தனமானது பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதுதான்.
இதையெல்லாம் பாரதியார் வேறுபல இடங்களில் சாடி யிருக்கிறார் எனினும், இந்த இடத்தில் ஏனோ வழுக்கி விடுகிறார்.

அந்த வழுக்கல் அவரை எங்கே கொண்டு போகிறது என்பதையும் பார்ப்போம்.

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடமை எனப்பாடிய பாரதி,
முப்பது கோடி முகமுடையாள் - உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் என்று பாடிய பாரதி,
அறுபது கோடி தடக் கைகளால் நல்லறங்கள்
நடத்துவள் எங்கள் தாய் என்றும்,
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழ்ந்திடில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் எனப் பாடிய பாரதி,

எந்த மதமாக இருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் எல்லோரும் இநதியரே என்று எழுதிய பாரதி,
இருபது கோடி இந்துக்களையும் ஒரே குடும்பம் போல செய்துவிடவேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினால்தான் ஒருவன் கைக் கொள்ளப்பட்டால் அவள் ராஜாங்கம் முதலிய சகல காரியக்ஙளைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.
எல்லா தர்மங்களைக் காட்டிலும் வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேண்டும். இதற்குரிய உபாயங்களை சரியான காலத்தில் தெரிவிக்கிறேன் என்று எழுதுகிறார் பாரதியார்.

இந்து, இந்து மதம் என்று எழுதத் தொடங்கிய உடன் முப்பது கோடி, இருபது கோடியாகக் குறைந்து விடுவதைப் பார்க்கிறோம். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர், சிக்கியர், சமணர் நீங்கலாக இந்திய மக்களைக் கழித்துப் போட்டு, பத்துக் கோடி போக, மீதி இருபது கோடி என்று குறைத்துவிடுகிறார்.

முப்பது கோடி முழுமையும் விழ்வோம் -
என்ற ஒற்றுமை கீதத்தில் கீறல் விழுந்துவிட்டதா? பத்துக் கோடிப் பேரை இந்து மதம் கழிக்கிற வேகத்தைப் பாருங்கள்.


---------------- தா. பாண்டியன் - "பாரதியும் சாதிகளும்" என்ற நூலிலிருந்து...

0 comments: