Search This Blog

27.6.08

நாம் ஓர் ஆட்சியை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் கொள்கைக்காகவும், இனநலனுக்காகவுமே இருக்கும்!


எம்.ஜி.ஆர். அவர்களை பாராட்டுகிறோம்

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு அறிவித்ததற்காக நாம் உடனே எம்.ஜி.ஆர். அவர்களைப் பாராட் டுகிறோம் என்று அறிக்கை கொடுத்தோம். எனவே நம்முடைய அணுகுமுறை என்பது கொள்கை ரீதியானதே தவிர, தனிப்பட்ட முறையிலே விருப்பு, வெறுப்புகள் கிடையாது. எம்.ஜி.ஆர். அறிவித்ததை வரவேற்கிறோம்; எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டுகிறோம்! என்று அறிக்கை எழுதினோம்.
இதற்காக யாராவது எம்.ஜி.ஆரை எதிர்த்தால் அவர்களை நாங்கள் எதிர்ப்போம் என்று பார்ப்பனர்களுக்கு சவால் மாதிரி நாம் தெளிவாக எடுத்துச் சொன்னோம்.

உத்தரவு போட்டது போட்டதுதான்

பார்ப்பனர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று கேட்டார்கள். எம்.ஜி.ஆர். சொன்னார்: வீரமணி ஒரு வருடமாகப் பிரச்சாரம் செய்தார். நீங்கள் பார்ப்பன சங்கங்களை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள்? உங்களுடைய காரியம் ஒன்றும் எடுபடவில்லை. நான் போட்ட உத்தரவு போட்டதுதான் என்று சொல்லிவிட்டார்.
அதன் பிறகு எம்.ஜி.ஆர். அம்பாசங்கர் கமிஷன் என்ற ஒரு கமிஷனைப் போட்டார். இதற்கெல்லாம் நாம் விடாமல் இருந்து முயற்சி பண்ணி, பிற்படுத்தப்பட்டோருடைய இட ஒதுக்கீட்டை நிலைக்க வைத்தோம்.

ஆதரிக்க வேண்டிய நேரத்தில் ஆதரிப்போம்

ஆகவே நாம் எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்ப்போம், ஆதரிக்கவேண்டிய நேரத்தில் ஆதரிப்போம். அதற்குப் பிறகு ஜானகி அவர்களது ஆட்சி ஏற்பட்டது. அடுத்து கலைஞர் அவர்களது ஆட்சி ஏற்பட்டது. கலைஞர் ஆட்சியை வேண்டு மென்றே விடுதலைப்புலிகள், அது இது என்று சொல்லி கலைத்து விட்டார்கள். கலைஞர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது தவறு என்று நாம் எடுத்துச் சொன்னோம். அந்த சூழ்நிலையில்தான் மீண்டும் தேர்தல் நடந்தது. ஜெயலலிதா வந்தார்.

சொன்னதை செய்பவர் கலைஞர்

இன்றைக்கு கலைஞர் ஆட்சிக்கு வந்தார். சொன்னதை செய்தார்; செய்வதையே சொன்னார். நல்ல வாய்ப்பாக அவரு டைய ஆட்சி அய்ந்தாம் முறையாக அமைந்தது. ஒரு பொற்கால ஆட்சியை இன்று தந்து கொண்டிருக்கக் கூடிய அற்புதமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதனுடைய விளைவாக இன்றைக்கு ஒரு பெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. நாமெல்லாம் தலை நிமிர்ந்து நிற்கின்றோம்.

இன்றோடு அர்ச்சகர் மாணவர் பயிற்சி முடிவடைகிறது

கடைசியாக ஜாதி, சூத்திரப்பட்டம் பதுங்கிக் கொண்டிருந்த இடம் கோயில் கருவறை என்று அய்யா அவர்கள் சொன்னார் கள். இப்பொழுது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பயிற்சி கொடுத்தார்கள். இன்றோடு அந்த மாணவர்களுக்குப் பயிற்சி முடிவடைகிறது. 69 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் - அதில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஆதிதிராவிடர்கள் உட்பட எல்லோரும் இருக்கிறார்கள். எல்லோரும் பயிற்சியை முடித்து இன்னும் கொஞ்சநாள் ஆனவுடனே அர்ச்சகர் ஆகப் போகிறார்கள்.

நம்முடைய வாழ்நாளில் பார்க்கப் போகிறோம்

மறுபடியும் தந்தை பெரியார் நினைத்த ஜாதி ஒழிந்த, தீண்டாமை ஒழிந்த - ஒரு சமுதாயத்தை நம்முடைய வாழ்நாளிலே பார்க்கப் போகிறோம். தந்தை பெரியார் எடுத்தார். கலைஞர் சட்டத்தைத் தொடுத்தார். நம்முடைய காலத்தில் முடித்தோம் என்ற பெருமையோடு நாம் இன்றைக்கு இருக்கக் கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம் (கைதட்டல்). இதில் ரொம்ப மிக முக்கியமான ஒரு கேள்வி - நம்மாட்களிலேயே சில பேர் புரியாமல் கேட்கின்றார்கள். ஏங்க, கடவுள் இல்லை என்பவர்களுக்கு யார் அகச்சகராக இருந்தால் என்ன? என்று கேட்கிறார்கள். கடவுள் இல்லை என்பது கொள்கை.

சூத்திரர் என்ற பட்டம்

நான் கோவிலுக்குப் போகாதவன்; என்னுடைய அண்ணன் போகிறானே, என்னுடைய உறவினன் போகிறானே, என் மாமன் போகிறானே, என்னுடைய மைத்துனன் போகிறானே. என்னு டைய சகோதரன் பார்ப்பனிடம் கையேந்தும்போது, நீ சூத்திரன் - எட்டி நில் என்றுதானே கருவறைக்கு வெளியே நிறுத்துகின் றான். சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்? பார்ப்பனனுக்கு வைப்பாட்டி மகன் என்று அர்த்தம்.
எனக்கு ஒன்றும் இழிவு இல்லீங்க. என்னுடைய அண்ணனைத்தான் பார்ப்பனருக்கு வைப்பாட்டி மகன் என்று சொல்லுகின்றான் என்றால் என்ன அர்த்தம்? என் அண்ணனுக்கு இழிவு வந்தால் எனக்கு இல்லையா? ஆகவேதான் உரிமை என்கிற அடிப்படையிலே இதனைத் தெளிவாக வைத்திருக்கின்றோம்.
எனவே தந்தை பெரியார் அவர்களுடைய இந்தக் கொள்கை வெற்றி பெற்றது. பண்பாட்டுப் புரட்சி அடிப்படையிலே இன்றைக்கு நல்ல வாய்ப்பாக கலைஞர் அவர்கள் தமிழகத்திலே மட்டும் ஆட்சி அமைக்கவில்லை.

மத்தியில் மத சார்பற்ற ஆட்சி அமைய

மத்தியில் மத சார்பற்ற ஓர் ஆட்சி அமைவதற்கும் காரணமாக இருந்திருக்கின்றார். தி.மு.க. கூட்டணி சார்பில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்றதனாலே அங்கே பி.ஜே.பி. ஆட்சி கீழே விழுந்தது. இந்தியா ஒளிர்கிறது. நாம் வந்து விடலாம் என்று பார்த்தார்கள் - பி.ஜே.பி.யினர். தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதாலே பி.ஜே.பி.யினர் மைனாரிட்டி ஆனார்கள். ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

ஆதரிக்க - வேண்டிய நேரத்தில் ஆதரிக்கிறோம்
அதனாலே மத்தியிலே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி சோனியா காந்தி அவர்களுடைய தலைமையிலே (UPA) ஏற்பட்டது. இதில் பெண்ணுரிமைச் சட்டம், தகவல் உரிமைச் சட்டம், பெண்களைப் பாதுகாக்கின்ற சட்டம் இப்படியெல்லாம் வரும்பொழுது நாம் ஆதரிக்கின்றோம். எதிர்த்து சொல்ல வேண்டியதை சொல்கின்றோம்
பெட்ரோல் வரி உயர்வு, விலைவாசி உயர்வு, பண வீக்கம், உலகமயம், தாராளமயம் இந்தக் கொள்கைகளுக்கு பலியாகும் பொழுது அந்த அரசாங்கத்தையும் நாம் எதிர்த்து, சொல்ல வேண்டிய கருத்துகளை தெளிவாக எடுத்துச் சொல்லுகின்றோம்.
அதே மாதிரி 27 சதவிகித இட ஒதுக்கீடு வரும்பொழுது நாம் ஆதரிக்கின்றோம். இதுவரையில் மத்திய அரசாங்கத்தினுடைய கல்வி நிறுவனங்களில் கதவு திறக்கவிகலலை.

இந்த ஆட்சியில்தான் கதவு திறந்தது

இந்த ஆட்சியில் தான் கதவு திறக்கும்படியாக ஆனது. நம்முடைய போராட்டம் கலைஞர் அவர்களுடைய பேராதரவு - ஆட்சி இது அத்தனையும் வந்ததனாலே வந்தது.
தந்தை பெரியார் அவர்கள் எதை விரும்பினார்களோ அந்த சமூக நீதியும், ஜாதி ஒழிப்பும் இன்றைக்குத் தொடர்ந்து இந்த இயக்கத்தினாலே மிக ஆழமாகத் தொடர்ந்து நடந்துகொண்டி ருக்கின்றது. ஆகவே இந்த இடஒதுக்கீடு என்பது இருக்கின்றதே இதிலும் நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம்.

``மகளிர் உரிமை காத்த ஆட்சி மாண்பாளர்

எனவே பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, சமூகநீதி இந்த மூன்றையும் இந்த ஆட்சிகளில் நாம் பெற்றிருக்கின்றோம். பெண்களுக்கு சொத்துரிமை கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே வந்தது. கலைஞர் அவர்களுக்கு மகளிர் உரிமை காத்த ஆட்சி மாண்பாளர் என்ற பட்டத்தை நாம் கொடுத்திருக் கின்றோம். மிகப் பெரிய மனிதநேயர் என்பதையும் நாம் சொல்லி யிருக்கின்றோம். செங்கற்பட்டு மாநாட்டுத் தீர்மானம் நிறைவேற் றப்பட்டிருக்கின்றது - அதை நாம் வரவேற்றிருக்கின்றோம்.

எந்த ஆட்சியை நாம் ஆதரித்தாலும் - எதிர்த்தாலும்


எனவேதான் எந்த ஆட்சியை நாம் ஆதரித்தாலும், எந்த ஆட்சியை நாம் எதிர்த்தாலும், சமுதாய நலனுக்காக, இன நலனுக்காக, மனித நேயத்திற்காக, பகுத்தறிவு வளர்ச்சிக்காக, மூடநம்பிக்கை ஒழிப்பிற்காக என்பதுதான் அடித்தளமான செய்தி.

திராவிடர் கழகத்தின் அணுகுமுறையே இதுதான்


ஆகவே திராவிடர் கழகத்திற்கு தொடர்ந்து இந்த அணுகு முறைதான் என்பது தெளிவாகிறது. அய்யா தந்தை பெரியார் அவர்கள் 1967 தேர்தலின் பொழுது காங்கிரசை ஆதரித்துக் கொண்டிருந்தவர். திடீரென்று தி.மு.க.வை ஆதரிக்கிறார். எப்படி, இப்படி மாறிவிட்டார்? மாறிவிட்டார் பாருங்கள்; மாறிவிட்டார் பாருங்கள் என்று அய்யா அவர்களைப் பார்த்துச் சொன்னார்கள். அய்யா அவர்கள் நான் மாறிவிட்டேனா? என்று ஒரு தலையங்கத்தில் எழுதினார். அய்யா அவர்கள் 1968 போன்ற கால கட்டங்களில் எழுதியிருக்கின்றார். அய்யா அவர்களுக்கு அப் பொழுது 90 வயது. அப்படி எழுதும்பொழுது அய்யா அவர்கள் சொல்லுகின்றார்:

நீதிக்கட்சி காலத்தில் இருந்து வரிசையாக சொல்லுகின்றார்

நீதிக் கட்சிக் காலத்தில் இருந்து அவர் ஆதரித்ததை எல்லாம் வரிசையாக எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தார், நான் கட்சிக் காரனாக இருந்ததில்லை; நான் கொள்கைக் காரனாகவே இருந்திருக்கின்றேன் என்று அய்யா அவர்கள் சொன்னார்கள்.
1968-இல் அய்யா அவர்கள் சொல்லுகின்றார்: நேற்று காம ராசர் ஆட்சியை ஆதரித்தேன்; இன்றைக்கு தி.மு.க.வை ஆதரிக்கின் றேன்; நாளைக்கு இப்படியே இருப்பேனா என்பதை சொல்ல முடியாது.

``நாளைக்கு யாரை ஆதரிப்பேன் என்பது எனக்கே தெரியாது!

``நாளைக்கு யாரை ஆதரிப்பேன் என்பது எனக்கே தெரியாது என்று அய்யா அவர்கள் சொன்னார் (பலத்த கைதட்டல்). யாராக இருந்தால் என்ன? நமது கொள்கைக்கு மாறாகப் போனால், நாம் எப்படி ஆதரிக்க முடியும்? ஆகவேதான் நம்முடைய அணுகு முறை என்பது இருந்திருக்கின்றதே - முழுக்க முழுக்க அது கொள்கை சார்ந்த ஒன்று. மேலெழுந்த வாரியாகப் புறத்தோற்றத் திலே கொஞ்சம் குழப்பமாக - கொஞ்சம் மயக்கமாக இருந்தாலும் கூட ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் நிச்சயமாக என்றைக்கும் நமக்கு தடுமாற்றமே கிடையாது. நம்முடைய கொள்கை தெளி வானது. மறுபடியும் நான் என் உரையை முடிக்கும் முன்பு உங்களுக்கு ஒரு செய்தியை நினைவூட்டுகின்றேன்.
பிரின்சிபில்ஸ் என்பது அடிப்படைக் கொள்கை என்பதை நான் ஆரம்பத்தில் சொன்னேன். திட்டம் என்பது அதை அடை வதற்கான வழிமுறை. வழிமுறைகள் மாறும் - நாளைக்கும்கூட.

அடிப்படைக் கொள்கைகள் ஒருபோதும் மாறாது

ஆனால், அடிப்படைக் கொள்கைகள் என்பது ஒருபோதும் மாறாது; மாற்றப்பட முடியாது. அந்த இடத்தை நோக்கி நம்முடைய பயணங்கள் தொடரும் - பயணங்கள் முடிவதில்லை. நன்றி, வணக்கம் (பலத்த கைதட்டல்). வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


---------------------குற்றாலத்தில் 16-6-2008 அன்று மாணவர்களுக்கு நடத்திய பெரியாரியல் பயிற்சி வகுப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி

2 comments:

bala said...

`//`நாளைக்கு யாரை ஆதரிப்பேன் என்பது எனக்கே தெரியாது!//

தமிழ் ஓவியா அய்யா,

இது செம காமெடி.மானமிகு கருப்பு சட்டை ஆட்சியில் இருப்பவர்களை கொளகை ரீதியாக ஆதரிப்பார்.விடுதலை ராஜேந்திரன் போன்ற அரை டிக்கட்டுகளுக்கு கூட இந்த விஷயம் தெரிந்திருக்கும் போது தமிழர் தலைவர் மானமிகு அய்யாவுக்கே இது தெரியாதாம்.தமிழ் ஓவியா போன்ற பிரியாணி குஞ்சுகளுக்கு வேணா இது புரியாமல் இருக்கலாம்.அவர்களுக்கு பிரியாணி சாப்பிட வாயை திறக்கவேண்டும் என்ற அளவுக்கு மட்டும் பகுத்தறிவு இருக்கிறது.

பாலா

தமிழ் ஓவியா said...

அறிவு பூர்வமாக இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காமல் எள்ளலுடன் எகத்தாளம் பேசும் "பொறுக்கி" எடுக்கப்பட்ட பாலாவுக்கு,

உங்களுடைய கருத்தைப் படிக்கும் போது கோபமோ வெறுப்போ வரமறுக்கிறது. காரணம் முட்டாள்களின் உளறல்கலாகத்தான் தோன்றுகிறது. பதில் எழுதுவது கூட பின்னூட்டம் படிப்பவர்கள் உங்களைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.