Search This Blog

2.6.08

மனிதனுக்குப் பிறப்புரிமை தன்மானமே!

பிறப்புரிமை என்பது யாருடைய பிறப்புரிமை என்தை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். நான் எடுத்துக் கொண் டது மனிதனுடைய பிறப்புரிமை என்பதுதான். தடைகள் என்பன மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தான்.

``அரிது அரிது மானிடராய்ப் பிறத் தலரிது என்று பெரியோர்கள் சொன்னதாகச் சொல்லுவார்கள். நான் அதை ஒப்புக்கொள்ள முடியாத தற்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். ``கொடுமை கொடுமை மனிதராகப் பிறப்பது மிகக் கொடுமை என்பது என தாழ்மையான அபிப்பிராயம். உலகில் உள்ள ஜீவகோடிகளில் எல்லாவற்றிலும் மனிதப் பிறப்பே மிகத் தாழ்ந்த பிறப்பு என்பதும் மனிதராகப் பிறப்பது மிகவும் கொடியது என்பதும், மனிதனைப் போல் அடிமை, உலகில் வேறு ஜீவன்கள் இல்லை என்பதும் என் அபிப்பிராயம். மனிதனைத் தவிர மற்ற ஜீவகோடிகள் எவ்வளவோ சந்தோசத் துடனும், அடிமை உணர்வில்லாமலும் சுதந்திரமாய் வாழ் வதை நாம் பார்க்கிறோம். அவற்றில் சிலவற்றிற்குக் கஷ்டமும், அந்நியரால் கஷ்டப்படுத்தத் தக்க நிலைமையும் ஏற்பட்டு இருந்தாலும், மனிதனைப் போல் உணர்ந்து துக்கிக்கிற சக்தியாகிய கொடுமை அவற்றிற்கு இல்லை.

மனிதன் என்போன் மானமுடையவன்

ஏனெனில், பகுத்தறிவு என்கிற ஒரு உபத்திரவம் கொடுக்கத் தக்க குணம், அவற்றுக்கில்லாததால்தான். உதாரணமாக குதிரைகளை ஜட்கா வண்டியில் பூட்டி ஒரு முரட்டு நூல் கயிற்றை மடித்துக் கொண்டு ஓட ஓட அதனின் மிகு மெல்லி யதும், அதிக உபத்திரவம் கொடுக்கத் தக்க இடமுமாகிய மர்ம ஸ்தானத்தில் அடித்தாலும், நல்ல வாலிபமுள்ள காளை மாடுகளைக் கட்டித் தள்ளி அதன் விதர்களை மரக் கட்டையின் மேல் வைத்து மரக்கொட்டாப் பிடியினால் தண்ணீர் போல் கரையும்படி தட்டினாலும் அவற்றுக்குக் கஷ்டமாத்திரம் தோன்றுமே அல்லாமல், ``அதற்குத் தன் பிறப்புரிமை இழந்து இப்படிக் கஷ்டமனுபவிக்கிறோமே என்கிற உணர்ச்சி இருக்காது. தவிரவும், அதற்கு மானம், அவமானம் என்கிற உணர்ச்சியும் இல்லை. இதோடு நாளைக்கு வேண்டுமே என்கிற கவலையும் இல்லை. எவ்வளவுக் கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை என்னும் அடிமைத் தன்மையும், இழிதன்மையும் மற்ற ஜீவராசிகளை விட, மானம் அவமானம் என்கிற உணர்ச்சியும், நாளைக்கு என்ன செய்வது என்கிற தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத் தாலும் திருப்தியடைய முடியாத ஆசை என்னும் அடிமைத் தன்மையும், உடைத்தாயிருப்ப தால் மனித ஜன்மமானது பிறவியிலேயே மிகுதியும், இழிவானதும் கொடுமையானதும் அடிமைத்தன்மை கொண்ட தானதுமாய் இருக்கிறது என்பது நான் கொண்ட கருத்து.

இப்படிப்பட்ட மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ளவேண்டி இருக்கிறது. ஏனெனில், மனிதன், மானிடன் என்கிற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடை யோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம் தான். அத் தன்மானமாகிய சுயமரியா தையைத் தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக் கிறான். இது ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் உரிமையுடையது. திலகர் பெருமான் ``சுயராஜ்ஜியம் பிறப்புரிமை என்று சொன்னார் என்றால், அவரும் வருணா சிரம தர்மப் பார்ப்பனராதலால் பார்ப்பனர்களுக்குப் பிறரை தாழ்வாய்க் கருதுவதே பிறப்புரிமை என்று நினைக்கிற முறையில் பொருளில்லாததும், அனுபவத்தில் பெரிதும் ஏமாற்றமே பொருளாகக் கொண்ட அரசியல் சம்பந்தமான சுயராஜ்ஜியம் என்னும் வார்த்தையை அவர் பிறப்புரிமைக்கு உபயோகிக்க வேண்டியவரானார். நாம் யாரையும் ஏமாற்றிப் பிழைக்க வேண்டியவர்கள் அல்லோம். உண்மையான மானிடத் தன்மையை அறிய வேண்டியவர்களாய் இருக்கிறோம்; ஆதலால், மனிதனுக்குப் பிறப்புரிமை தன்மானம் தான்! அதற்கு நம் முன் நிற்கும் தடைகள் என்ன என்பது இரண் டாவது விசயம். தடைகள் இரண்டு விதம். ஒன்று இயற்கையாய் ஏற்பட்ட தடை. மற்றொன்று மற்றவர்களால் ஏற்பட்ட செயற்கைத் தடை.
நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கை யற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன் மானத்திற்கு இயற்கைத் தடைகள். இத்தடைகள் நீங்குவதென் பது முற்றும் துறந்த துறவிகளுக்கே முடியக் கூடியது.

ஆதலால், நான் செயற்கைத் தடைகளைப் பற்றியே பேசப் போகிறேன். இந்தச் செயற்கைத் தடையென்பது ஒவ்வொரு தேசத்திற்கு ஒவ்வொரு மாதிரியாகக் காணப்படுகிறது; நமது நாட்டில் நமது பிறப்புரிமையாகிய சுயமரியாதைக்கு முக்கியமாய் இரண்டுவிதமான செயற் கைத் தடைகளைச் சொல்லலாம். ஒன்று அரசியல் சம்பந்தமாக பார்ப்பனர் என்னும் வகுப்பார், நம்மை ஏமாற்ற நமது சுயமரியாதையைக் கெடுத்திருப்பது, மற்றொன்று அதே வகுப்பார் மதம் என்கிற பெயரால் நம்மை ஏமாற்றி நிரந்தர அடிமையாக்கி நமது சுயமரியாதையை அடியோடு களைந்து வருவது ஆகிய இந்த இரண்டு விசயத்திலும் நம் மக்கள் ஏறக்குறைய எல்லோருமே சிலர் ஏதாவது ஒன்றில் - சிலர் இரண்டிலும் மயங்கி அவ்வகுப் பாருக்கு அடிமையாகி மொத் தத்தில் சுயமரியாதையற்று இருக்கிறோம்.

``அது கடவுள் சொன்னது என்று சொல்லி, ஏய்த்து விடுவதாக இருந்தால் அது பொருத்தமாய் இருக்க வேண்டாமா? அநாதியும், கடவுள் சொன்னதாயும் இருந்தால், கடவுளால் உண்டாக்கப்பட்ட எல்லா தேசத்திற்கும், கண்டத்திற்கும் இதுவே வேதமும், மதமுமாய் அல்லவா இருக்கவேண்டும்? பல்வேறு மதங்கள் இருப்பானேன்? கடவுளால் சொல்லப்பட்ட வேதம் எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடியதாயல்லவா இருக்கவேண்டும்? உலகத்தில் உள்ள கடவுளின் மக்களாலும் முக்காலே அரைக்கால்வாசிப் பேர்களுக்கு இவ்வேத சம்பந்தமே இல்லாமல் வேறு வேறு வேதம் இருப்பானேன்? இம் மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்பவருக்குள்ளாகவே சிலர் இவ்வேதத்தைப் படித்தால், கண்ணைக் குத்த வேண்டியதும், சிலர் காதினால் கேட்டால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டியதும், எதற்காக? கிறிஸ்தவருக்கும், முகம்மதியருக்கும் முறையே ஞாயிற்றுக் கிழமையும், வெள்ளிக்கிழமையும், மத சம்பந்தமான விசேச நாள்களாய் இருக்கும் போது இந்துக்கள் என்பவர்களுக் குள்ளாகவே ஒருவருக்குத் திங்கள்கிழமை, ஒருவருக்குச் சனிக்கிழமை, ஒருவருக்கு வெள்ளிக்கிழமை இப்படியாக ஒரு வாரத்திலுள்ள நாள்களுக்கும் வெவ்வேறு மனிதர்களாகவும் இன்னும் சிலருக்கு நாள்கள் போதாமலும், போவானேன்?

மதச் சின்னங்கள்

மதச் சின்னங்கள் விசயத்தில் ஒருவர் நாமம், ஒருவர் விபூதி ஒருவர் கருப்புப் பொட்டு, ஒருவர் சந்தனக்கீறல், ஒருவர் முத்திரை, ஒருவர் நெடுக்கு, ஒருவர் குறுக்கு இப்படியாகப் பல மாறுதல்கள் ஏற்படுவானேன்? இந்த மாறுதல்களோடு இதற்குக் காரணங்கள் ஆளுக்கு ஒருவிதமாய்ச் சொல்லுவானேன்? இந்த வித்தியாசங் களை சுவாமிகளுக்கும் புகுத்துவானேன்? நாமம் என்பது என்ன என்று கேட்டால், சிலர் சுவாமியின் பாதம் என்கிறார்கள். வெள்ளை நாமம் இரண்டும் பாதமானால், நடுவில் உள்ள சிவப்பு நாமத்திற்குப் பெயர் என்ன? அப்படியே சுவாமியின் பாதம் என்பதாகவே ஒப்புக்கொள்வோமானால், சுவாமியின் பாதத்தையே சுவாமியின் நெற்றியில் கொண்டு போய் வைப்பானேன்? இந்த நாமத்திற்கும், பாதம் வைத்த நாமம், பாதமில்லாத நாமம் என்பதாக வடகலை, தென்கலை என்று ஒருவருக்கொருவர் உதை போட்டுக் கொள்வானேன்? இவற்றில் ஒரு நாமம் மூன்று நாமம், பதினோரு நாமம் என்கிற கணக்குச் சண்டை எதற்கு? இந்துக்களிலேயே ஒரு சாரார் இந்த நாமத்தைப்பற்றி கேவலமாகப் பேசுவானேன்? இதுபோலவே, விபூதி, பொட்டு, முத்திரை இவற்றுக்குப் பலப் பல மாதிரி வியாக்கியானங்கள் இருப்பானேன்? இதை மற்ற தேசத்தாரும் ஒப்புக்கொள்ளாதது ஏன்?

லிங்கத்தையும், ஆவுடையாரைப்பற்றியும் பல விதமாகப் பேசுவானேன்? நமது சுவாமிகளுடைய பெயரெல்லாம் குறிகளெல்லாம் நமது தமிழ்ப் பாஷையில் இல்லாமல் அந்நிய பாஷையாகிய ஆரிய பாஷையில் இருப்பானேன்? சுவாமியைப் பூஜிப்பதற்கும், நமக்கும், சுவாமிக்கும் மத்தியில் ஒரு அந்நியன் இருப்பானேன்? அன்னிய பாஷையில் மந்திரங்களும், தோத்திரங்களும் இருப்பானேன்? ஆளுக்கு ஒரு விதமாகப் பூசை செய்வானேன்? இதற்காக நாம் பணம் கொடுப்பானேன்? ஒவ்வொரு சுவாமிக்கும், ஒவ்வொரு வித வாகனங்கள் ஏற்படுத்துவானேன்? சுவாமிக்குப் பெண்டு பிள்ளைகள், வைப்பாட்டிகள், தாசிகள், விபச்சாரத் தன்மைகள் ஆகியவற்றைக் கற்பிப்பானேன்? சிலர் சுவாமியைப் பார்த்தால் சுவாமி சக்தி ஓடிப்போவானேன்? சிலர் கோவிலுக்குள் வந்தால் கோவிலும் சுவாமியும், தீட்டாய்ப் போவானேன்? சிலர் சுவாமியைத் தொட்டால் சுவாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும் ரூபமும் உள்ள சுவாமிகளுக்கு ஊருக்கு ஒரு விதமாய் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்? காசி, ஜகந்நாதம், பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சுவாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. கோவிலுக் குப் போகிறவர்கள் எல்லாம் தாங்களே நேரில் சுவாமியைத் தொட்டு தலையில் தண்ணீர் விட்டு புஷ்பம் போட்டு கும்பிடு கிறார்கள். அதே பெயருள்ள சுவாமிகள் நமது நாட்டில் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறது. சிறீரங்கம், சிதம்பரம், பேரூர், பவானி, கொடுமுடி, திருச்செங் கோடு, கரூர் முதலிய முக்கிய ஷேத்திரங் களில் உள்ள சுவாமிகள் நாடார்கள் கோயிலுக்குப் போய் கும்பிட்டால் அக் கோவில்களும், சாமிகளும் சாவதில்லை. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஜில்லாக்களில் உள்ள கோயில்களும், சுவாமிகளும் மாத்திரம் நாடார்கள் போய் கும்பிட்டால் உடனே செத்துப் போய்விடு கின்றன. இப்படி சுவாமிகளின் சக்தியும், உயிரும் கோவில் களின் யோக்கியதையும் ஊருக்கு ஒருவித மாய் இருப்பானேன்? பிறகு பார்ப்பனருக்கு மாத்திரம் அந்த சுவாமியை உயிர்ப்பிக்கும் சக்தி இருப்பானேன்?

சுயமரியாதை பறிப்பு

நமது வேதம், சுவாமி பூஜை, வணக்கம் முதலியன சம்பந்தமான விசயங்கள் இப்படி இருக்கிறதென்றால், இந்த லட்சணத்தில் இம்மாதிரி சுவாமியினாலும், கோவிலினாலும் நமது சுயமரியாதை எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது என்பதோடு நமது பணம் எவ்வளவு செலவு ஆகிறது என்பதையும் கவனித்துப் பாருங்கள். சென்னை மாகாணத்தில் மாத்திரம் இந்து மத சம்பிரதாயப் படிக்கு ஏற்பட்ட கோவில் களுக்கும், மடங்களுக்கும் வருடம் ஒன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் வரும்படி வருகிறது. இரண்டு கோடி ரூபாய் வரும்படி வந்தால், மக்களுக்கு எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகும். சாதாரணமாக திருப்பதிக்கு மாத்திரம் சர்க்கார் கணக்குப்படி வருடம் ஒன்றுக்கு 20 லட்சம் வரும்படி வருகிறதாக ஏற்படுகிறது. கணக்குக்கு வராமல் மகந்துகளுக்கும், கோவில் அதிகாரி களுக்கும், பூசாரிகளுக்கும் போகும் பணங்களுக்கு அளவே யில்லை. யாத்திரைக்காரர்கள் காணிக்கையாகக் கொண்டு வரும் தொகை மகந்துவிடம் கொடுத்தால்தான் சுவாமிக்குப் போய்ச் சேரும்; ``நீர் இவ்வளவு ரூபாய், இவ்வளவு நகை கொண்டு வருவதாக சுவாமி என் சொப்பனத்தில் சொல்லிற்று என்று ஏமாற்றி வழிப்பறி செய்வதில் கொள்ளை போகும் பணம் இந்த 20 லட்சத்தில் சேர்ந்ததல்ல; இன்னமும் யாத்திரைக் காரன் ரயில் சார்ஜ், சில்லரைச் செலவு, மெனக்கேடு, தேங்காய், பழம் முதலிய செலவுகள் எத்தனை லட்சம் ஆகும் என்று கணக்குப் பாருங்கள்.

திருவிழா

திருவிழா, இன்னும் உற்சாவதிகள், சுவாமிக்கும், அம்மனுக்கும் கலியாணம், சுவாமி தாசி வீட்டுக்குப் போகாமல், ஒரு காலைத் தூக்கி ஆடுதல், நரியைக் குதிரையாக ஆக்குதல் முதலிய திருவிழாக்களும், 10- பவுண்டு இடையுள்ள சுவாமியை 200 டன் எடையுள்ள தேரில் வைத்து, 10,000 பேர் இழுப்பதும், அதற்கு 50,000 பேர் வேடிக்கைப் பார்க்கப் பல இடங்களிலிருந்து வருவதும் ஆகிய காரியங்களுக்கு ஆகும் செலவுகளும், சுவாமிகளுக்கும் அபிசேகம், பூஜை, சதிர், பாட்டுக் கச்சேரி, நகை, பட்டுப் பாவாடை, புனுகு, ஜவ்வாது, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ முதலியவற்றின் செலவுகளும், எல்லாம் சேர்த்து இந்து மத சாமிகளின் பூஜைக்கும், உற்சவங்களும் மாத்திரம் தென் இந்தியாவில் வருசத்திற்கு 25 கோடி ரூபாய்க்குக் குறைவில்லாமல் செலவாகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த 25 கோடி ரூபாய் நாம் சுயமரியாதை அற்றுக் கிடக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்து வதற்கும், தினம் தினம் நமக்கு ஞாபகப்படுத்துவதற்கும் செய்யும் செலவே அல்லாமல் இதனால் வேறு என்ன பலனை அடைகிறோம்? இப்பேர்ப்பட்ட `இந்து மதம்தான் சென்னை சட்டசபையில் இந்து பரிபாலன மசோதாவினால் அடியோடு பாதிக்கப்பட்டுப் போய் விட்டதாம். இம்மாதிரி நமது சுயமரியாதையை ஒழிக்கும் இந்துக்கள் தான், ``மதம் போச்சுது, ``மதம் போச்சுது என்று மாயக் கண்ணீர் விடுகிறார்கள். சாமி, பூஜை, உற்சவம் முதலியவற்றில் நமது யோக்கியதையும், சுயமரியாதைக் கேடும் இப்படி இருப்பதோடு இந்து மதச் சடங்கு என்னும் பேரால் நமது தோள்களில் எவ்வளவு பளுவைச் சுமத்தி நமது பணம் எவ்வளவு கொள்ளை கொண்டு, நமது பிறப்புரிமையிலான சுயமரியாதையை எவ்வளவு தூரம் நசுக்கி இருக்கிறார்கள் என்பதை கவனிப்போம்.

இந்து மதச் சடங்கு, இந்து மதம் என்பதாக ஒன்றை நாம் ஒப்புக் கொள்வதால் நமது நிலை பிறவியிலேயே இழிவான தாகவும், இந்து மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள் வோரிலேயே ஒரு வகுப்பாருக்கு நாம் அடிமைகளாகவும், வைப்பாட்டி மக்களாகவும், கடவுளாலேயே உண்டாக்கப் பட்டவர்கள் ஆகிறோம். நம்மை இழிவாய்க் கருதுபவர்கள் காலிலேயே விழுந்து கும்பிட வேண்டியவர்கள் ஆகிறோம். இன்னும் நமது வாழ்நாள் முழுவதும் அதாவது தாய் வயிற்றில் கருத்தரித்த நிமிடம் முதற் கொண்டு நமது மதச் சடங்கு செலவைப் பாருங்கள். சர்க்கார் நம்மிடம் வரி வசூல் செய்கிறார்கள். இதை நாம் கட்டுகிறோம். தவிர, நம்மிடம் வசூலிக்கும் வரியை நமக்காக செலவு செய்வதில்லை. இது நமது சுயமரியாதைக்கு அவமானம் என்றும் சொல்லி, சர்க்காருடன் சண்டை போடு கிறோம். பாமர மக்களைச் சர்க்காருக்கு விரோதமாய் கிளப்பி விட்டு பெரிய பெரிய சர்க்கார் உத்தியோகங்களைப் பார்ப்பனர்கள் பெற்று நமது சுயமரியாதைக்கும், அவ்வுத்தியோகங்கள் மூலமாய் இழிவை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

ஆனால், மதத்தின் பேரால் பார்ப்பனர் நம்மிடம் வசூலிக்கும் வரியைப்பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப்படுவதில்லை. சர்க்கார் வரிக்காவது ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள். அதாவது பூமி வரி, வருமான வரி, ஸ்டாம்பு வரி என்ப தாகக் குறிப்பு இருக்கிறது. இவற்றுக்குப் பூமி உள்ளவர்கள், இவ்வளவு ரூபாய் வரும்படி உள்ளவர்கள், பிராது உள்ள வர்கள் முதலியவர்கள்தான் இந்த வரிகள் கொடுக்கப்பவர்கள். வரி கொடுக்கக் கட்டுப்படாத வர்கள் 100-க்கு 90 பேர்கள் இருக்கிறார்கள். இந்த வரியையும் நமக்காக ஏதோ செலவு செய்வதாய் கணக்கும் காட்டுகிறார்கள். ஆனால், மதச் சடங்குகளின் பேரால் பார்ப்பனர்கள் வசூல் செய்யும் வரிக்கு அளவே இல்லை. மனிதனாகப் பிறந்தவன் எல்லாம் அதாவது தன்னை எவனாவது இந்து என்று சொல்லிக் கொண்டால், அவனை உடனே ``பார்ப்பன வரி சனியன் பிடித்துக் கொண்டது என்பதுபோல் காலவரையற்ற ஒன்றுமே இல்லாமல் கர்ப்பந்தரித்தது முதல் சாகும் வரை செத்தும் விடாமல், அதாவது கர்ப்பதான வரி, சீமந்த வரி, பிள்ளைப் பேறு வரி, தீட்டுக் கழித்தல் வரி, தொட்டிலிடல் வரி, பேர் வைத்தல் வரி, ஆயுசு ஓம வரி, சோறூட்டல் வரி, கிரக தோஷ வரி, வித்தியாப்பியாச வரி, கல்யாண வரி, சாந்தி முகூர்த்த வரி, சாவு வரி, காசு 10 நாழிகை வரி, செத்த பின்னும் வரி, செத்தவர் மக்களைப் பிடித்து வருசா வருசம் வரி ஆகிய பல துறைகளில் இவற்றைப்பற்றி மதுரை மகாநாட்டில் சிறீமான் கே.வி ரெட்டி நாயுடுகாரு, அன்னிய வகுப்புப் புரோகிதரை விலக்க கொண்டு வந்த தீர்மானத்தில் பேசியவற்றை அனுசரித்ததாகவே பேசினார். ஆதலால், அதைப் பார்த்துக் கொள்ளலாம். காலாவதி இல்லாமலும், ஒரு நபரைக்கூட விடாமல், 100-க்கு 100 பேரிடம் பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடே இல்லாமல் கொடுப்போர் முட்டாள்தனத்துக்கும், களிமண் மூளைக்கும் தகுந்தபடி வரி கறந்து விடுகிறார்கள்.

இந்த வரி வசூலுக்கு ஏதாவது பலன் உண்டா என்று பர்த்தால், இதைவிட முட்டாள்தனமான காரியம் உலகில் வேறொன்றும் இல்லை என்று சொல்லத் தக்க மாதிரி அதாவது - ``சுவாமிகளே! நான் கொஞ்சமாகச் செய்திருந்தாலும் என்னுடைய பக்தி சிரத்தையை மதித்து அதைப் பெரிதாக எண்ணி காசி கங்கையில் செய்தது போலவும் ஆகும்படி செய்து என் பெற்றோர்களுக்கு மோட்சமும், திருப்தியும் உண்டாகும் படி அருளுவதுடன், என்னையும் சிரஞ்சீவியாக்கி எனது பாவங்களை மன்னித்து மோட்சம் லபிக்கும்படி கிருபை செய்யவேண்டியது என்று சொல்லி, பார்ப்பனர் காலில் நமது தலை முட்டும்படி விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் பெறுவதுமாய் நடந்து வருகிறோம். இவ்வித சடங்குக்குச் செலவாகும் பணம் எத்தனைக் கோடி, தங்கச் செம்பு, வெள்ளிச் செம்பு, வீடு, பூமி, கன்னிகை முதலிய தானங்கள், சமாராதனைகள், சாந்திகள் முதலிய காரியங்களில் ஆகும். செலவுகள் இவை எத்தனை கோடி ஆகும் என்பதைக் கவனித்துப் பாருங்கள். இதற்கு ஏதாவது பிரயோஜனமுண்டா என்பதை யோசியுங்கள். இந்தச் செலவுகள் ஒருபுறம் நம்மைப் பிச்சுப் பிடுங்கித் தின்னவும், இதன்மூலம் நமது பிறப்புரிமை யாகிய சுயமரியாதை எவ்வளவு பாதிக்கப்பட்டு அடிமையாகி வாழுகிறோம் என்பதையும் யோசியுங்கள். இப்படி எத்தனையோ விதமான தடைகள் செயற்கையிலேயே அதாவது நமது அறிவீனத்தினாலேயே நம்மைச் சூழ்ந்து கொண்டு வாட்டுகின்றன. இவற்றைக் களைந்தெறிய வழி தேடுங்கள். பிறகு சுயராஜ்ஜியம் தானாக வந்துவிடும். பார்ப்பானுக்குப் பணம் கொடுத்து அவன் காலில் விழுந்தால் நமது பெற்றோர்கள் மோட்சத்திற்குப் போவார்கள், நம் பாவம் தீரும் என்று நினைத்துக் கொண்டிருக் கும் ஜன சமூகத்திற்குச் சுயராஜ்ஜியம் வேண்டுமென்பது யாராவது நம்பக் கூடிய காரியமா? வீணாக அதாவது சில பார்ப்பனர்கள் பிழைக்க இந்துக்களாக இருப்பது போலவே சில புரட்டுக்காரர் களும், பித் தலாட்டக் காரர்களும் அயோக்கியர் களும் பிழைக்க சுயராஜ்ஜியம், சுயராஜ்ஜியம் என்று கத்தி ஏமாறாதீர்கள்.

சுயமரியாதை கண்டவிடம்தான் சுயராஜ்ஜியமே தவிர, சுயராஜ்ஜியம் என்று ஒரு தனி வஸ்துவில்லை என்பதை உணர வேண்டும். ஆதலால் பிறப்புரிமை இன்னது என்பதும், அது இன்ன விசயங்களால் தடைபட்டிருக்கிறது என்பதும் அத் தடைகளிலிருந்து விலக இன்னின்னது செய்ய வேண்டும் என்பதும் சுயராஜ்ஜியம் என்பது இதுபோலவே மக்களை ஏமாற்றும் ஒரு புரட்டான மார்க்கமென் பதும், சுய மரியாதைக் கண்டவிடத்தில் உண்மையான சுயராஜ் ஜியம் என்பது துலங்கும் என்பதும் விளங்கி இருக்குமென்று நினைக்கிறேன்.

-------------- 29.12.1926 இல் சென்னிமலை - பாப்பாரப்பட்டியில் தந்தை பெரியார் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு (`குடிஅரசு, 9.1.1927).

0 comments: