Search This Blog
27.6.08
புத்தரின் அறிவுரை காலத்தால் அழிக்க முடியாதது
பவுத்தத்தைப் பரப்பிய ஒரு மக்கள் இனம் உண்டென்றால் அவர்கள் நாகர்கள்தான் என் பதை, பவுத்த வரலாற்று இலக் கியங்களைப் படித்தவர்கள் அறிவார்கள். ஆரியர்களுடைய மிகக் கடுமையான எதிரிகள் நாகர்கள், ஆரியர்களுக்கும் - ஆரியர் அல்லாதவர்களுக்கும் கடுமையான போர், பல காலம் நடைபெற்றுள்ளது. நாகர்களை, வந்தேறிகளான ஆரியர்கள் எப்படியெல்லாம் துன்புறுத்தி னார்கள் என்பதை புராணங் களில்கூடக் காணலாம்.
புத்தரின் அறிவுரைகளை, நாகர்கள் நாடு முழுவதும் பரப்பினார்கள். எனவே தான், நாம் அனைவரும் நாகர்கள் எனப்பட்டோம். நாகர்கள் பெருமளவில் நாகபுரியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்ததாகத் தெரி கின்றது. எனவேதான், இந்நகரம் நாகபுரி எனப் பெயர் பெற்றுள்ளது.
நாம் தன்மானத்திற்காகவே போராடுகின்றோம். மனித இனத்தையே சரியான பாதையை நோக்கி இட்டுச் செல்ல நாம் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். இதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நாம் தயார். நமக்குரிய உரிமைகளை நாம் வென்றெடுப்போம். நாம் பவுத்தர்களாகி விட்ட பிறகும், நமக்குள்ள அரசியல் உரிமைகளைப் பெற்றிட என்னால் முடியும். (`பாபாசாகேப் அம்பேத்கர் வாழ்க! - விண்ணைப் பிளக்கும் அதிரொலியுடன் கைதட்டல்கள்).
நான் இந்துவாகப் பிறந்திருந்தாலும் - இந்துவாகச் சாக மாட்டேன் என உறுதி ஏற்றேன். நேற்று அந்த வாக்கை நிறைவேற்றினேன். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி; எல்லையற்ற இன்பம், கடுங்கொடிய நரகத்திலிருந்து விடுதலை பெற்ற உளம்பூரிக்கும் உணர்வு. கண்மூடித்தனமான தொண்டர்கள் எனக்குத் தேவை இல்லை. பவுத்த மார்க்கத்தில் இணைந் திடுபவர்கள், பவுத்த நெறிமுறைகளை மிக நன்றாகப் புரிந்து கொண்டு - உளமாற உணர்ந்து பவுத்தத்தை ஏற்றிட வேண்டும். நாம் இந்துக்களாகவே இருப்பதால்தான், நம்மால் எதையும் செய்ய முடியவில்லை.
இந்து மதத்தில் இருக்கும்வரை, எவரும் முன்னேற முடியாது. ஏற்றத் தாழ்வு என்ற கட்டுமானத்தின்மேல் கட்டப்பட்டுள்ள இந்து மதம், சிலருக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். குறிப்பாக, மேல் சாதியினருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் நிலை என்ன?
ஒரு பார்ப்பனப் பெண் - குழந்தையைப் பெற்றால், அவள் குழந்தையைப் பெற்ற நாள் முதலே - எந்த உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் நாற்காலி காலியாக உள்ளதோ, எப்பொழுது காலியாகுமோ என்பதைப் பற்றியே குறியாக இருக்கிறார். ஆனால், துப்புரவுப் பணி செய்யும் நம் சகோதரி, ஒரு குழந்தை பெற்றாள் எனில், தாம் பெற்ற குழந்தைக்கும் ஒரு துடைப்பக் கட்டை கிடைக்காதா? என்றே ஏங்குகின்றாள்.
இப்படிப்பட்ட விந்தையான ஏற்பாடுகள், இந்து மத சாதி அமைப்புகள் விளைவித்துள்ள கூறுகளின் வெளிப்பாடே யாகும். இதுபோன்ற தொரு அமைப்பு முறையிலிருந்து நாம் எத்தகைய முன்னேற்றத்தைக் காண முடியும்? பவுத்த மார்க் கத்தின் மூலம் மட்டுமே நாம் மேம்பாடு அடைய முடியும். நம்மடைய வழியில் நாம் போய்க் கொண்டிருக்கின்றோம். மற்றவர்கள் அவர்களுடைய வழியில் போகட்டும்.
நமக்கென ஒரு புதிய மார்க்கத்தை நாம் கண்டுள்ளோம். இந்த நாள் ஒரு நம்பிக்கைக்குரிய நாள். வெற்றிக்கு வழிகண்ட நாள். வளமான வாழ்விற்கு வழி கண்ட நாள். மாபெரும் விடுதலை நாள். இவ்வழி ஏதோ புதிய வழி அல்ல. இவ்வழி வேறு எங்கிருந்தோ இங்கு இறக்குமதி செய்யப்பட்டதுமல்ல. இம்மார்க்கம் இங்கிருந்தே தோன்றியதுதான்.பவுத்தம், இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலை பெற்றிருக்கிறது. புத்தரின் அறிவுரைகள் காலத்தால் அழிக்கப்படாதவை.
--------------------------15.10.1956 அன்று, நாகபுரியில் அம்பேத்கர் அவர்கள் நிகழ்த்திய பேருரை. இதே இடத்தில்தான் 14.10.1956 அன்று பத்து லட்சம் மக்களுடன் அம்பேத்கர் பவுத்தத்தைத் தழுவினார்
Labels:
அம்பேத்கர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment