Search This Blog

30.6.08

வீர மன்னர்களின் ஆதிக்கமெல்லாம் அழிந்திருக்க, புல்லேந்தும் பார்ப்பனர் எம்மாத்திரம்?









குறிப்பாக நான் சென்று வந்த நாடுகளுக்கும், இந்நாட்டிற்கும் வித்தியாசம் என்னவெனில் அந்நாடுகளெல்லாம் சுதந்திர வாழ்க்கையுடன் வாழும் மக்களைக் கொண்டதாக இருக்கின்றன. அங்கு உயர்வு தாழ்வு என்ற ஜாதி வேற்றுமைகள் இல்லை. பஞ்சம், பட்டினி என்ற பரிதாப நிலைமைகள் கிடையாது. மற்றவனுக்கு அடங்கி வாழும் மக்கள் அங்கே கிடையா.

ஆங்கிலேயரின் மேல் பார்வையில் இருந்தாலும், சிங்கப்பூர் மக்கள் ஒருவிதத் துன்பமுமின்றி சிறந்த நாகரிகம் நிறைந்தவர்களாக உள்ளனர்

விஞ்ஞான சாதனங்களிலும், மின்சார சாதனங்களிலும் மிக மிக மேன்மையாகவும் நம் நாட்டுமக்கள் கண்டு வியக்கும் படியான நிலையிலும் ஆச்சரியமான முறையிலும் ஒவ்வொரு துறையிலும் அதிசய அற்புதங்கள் காணப்படுகின்றன. ஏதோ வெள்ளையர்கள் கடந்த சில காலமாக நம் நாட்டினை ஆளும் வாய்ப்புக் கிடைத்ததால் நாம் அங்கு சென்று அவற்றைப் பார்த்தவுடன், இவைகளும் மனித சாதனங்களே விஞ்ஞானத்தின் பலனால் ஏற்பட்டவைகளே என்று எண்ணும் அளவுக் காவது சிறிதளவு பகுத்தறிவுவாதிகளாகவும், ஓரளவு விஞ் ஞான சாதனங்களையும், மின்சார சாதனங் களையும் கொண் டுள்ளவர்களாகவும் இருக்கிறோம். இல்லையேல், நம்நாட்டின் நிலை வெள்ளையர் ஆளுமுன் இருந்த நிலையில் இருந்து நாம் அங்கு சென்றால், இவை தான் சொர்க்கம் கடவுளின் சிருஷ்டியால் உண்டாக்கப்பட்ட இன்பலோகம், இவற்றை மனிதன்சாதிக்க முடியாது, கடவுள் ஒருவர்தான் செய்ய முடியும் என்று கண்டு வியப்படையும் அளவில் இருப்போம். ஏனெனில், அங்கு வாழும் மக்கள் அவ்வளவு சுகவாழ்க் கையை அடைகின்றனர். நான்கூட அதற்குத்தான் அங்குள்ள நம் தமிழ் மக்களிடம் நீங்கள் வைதிகர்களால் கூறப்படுகின்ற நரகலோக வாசிகளாக இருந்து, சொர்க்க லோகவாசிகளாக மாறி இருக்கிறீர்கள். இந்தச் சொர்க்க பூமியை விட்டு மறுபடியும் நரகம் வருவதற்குப் பிரியப்படாதீர்கள். இந்நாட்டுப் பிரஜைகளாகப் பதிவு செய்து கொண்டு இங்கேயே வாழும் உரிமையை அடைய முயற்சியுங்கள் என்று கூறிவந்தேன். ஏனெனில், அவ்வளவு மோசமான முறையிலும் நம் நாடு அமைந்துவிட்டது. நம் மக்கள் வாழ்க்கை நடத்துகின்ற இந்நாடே மிகவும் பரிதாபகரமான பஞ்சம் நிறைந்த நாடாகிவிட்டது. பட்டினியால் சாகும் நிலையில் உள்ள மக்களாகிவிட்டோம். கண்டவன் ஆளும் கொடுமைக்கு உள்ளாகிவிட்டோம், சுதந்திரம் என்ற பெயரால் நம் நாட்டிற்குத் தொடர்பில்லாத ஒரு கூட்டம், நம்மை மிகமிகக் கீழாக அடிமையாக்கி ஆளுகிறது. நம்மைக் காட்டிக் கொடுத்து அதைக்கொண்டு வயிறு வளர்க்கும் மோசமான ஜாதி இருந்து கொண்டு நம்மை ஒவ்வொரு விதத்திலும் முட்டாள்களாக்கி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அதனால் நாம் அடிமைகளாக இருப்பதும் அன்றி, உழைப்பாளிகளாகவும், பாட்டாளி மக்களாகவும், சூத்திர பஞ்சம ஜாதி என்ற இழிஜாதி மக்களாகவும் இருக்கிறோம். இந்நிலையில்தான் இன்று நம் நாட்டில் நம் நாட்டு மக்கள் வாழுகின்றனர். இதற்குக் காரணம், நம் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவற்றவர்களாகவும், பகுத்தறி வில்லாத முட்டாள்களாகவும் வாழ்ந்ததே காரணம்! இவ்விதமான அறிவீனமான நிலைமைக்குக் கொண்டு வந்தவர்கள்தான் பார்ப்பனர்கள். இந்நாட்டின் வளத்தையும், உயர்ந்த நாகரிகத்தையும் கண்டு நிரந்தரமான முறையில் குடிசைகளை அமைத்துவிட்டனர். ஆடு, மாடுகள் மேய்வதற்கு ஏற்றதும், வளப்பமான முறையில் உள்ள செழுமை யான நிலங்களையும் கண்டவர்கள் இங்கேயே தங்களின் வாழ்க்கையை உறுதிப் படுத்திவிட்டனர். அன்றியும் அவர்கள் நாளடைவில் இந்தியா முழுவதும் பரவி, திராவிடத்தினுள்ளும் புகுந்து நம் பழங்குடி மக்களை வஞ்சித்து ஏமாற்றி, அவர்களின் அநாகரிகப் பழக்கவழக்கங்களைப் புகுத்தி அவற்றை நம்பும்படி செய்து, அதன்படி நம் மக்களை முட்டாள்களாகவும், பகுத்தறிவற்ற வர்களாகவும் செய்து விட்டனர். அன்று முதல் தான் நாம் உணர்ச்சியற்ற நிலைமையிலும் இருந்துவருவதால், நம்மை மிகவும் சுலபமான முறையில் ஏய்த்துப் பிழைக்க முடிகிறது. ஆனால் இதுபோன்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேறு எந்த நாட்டிலும் இருந்தது கிடையாது. அப்படி இருக்குமேயானால் சிறிது காலம் இருந்து பிறகு யாராவது ஒரு அறிவாளியால் சீர்திருத்தப்பட்டிருக்கும். குறிப்பாகக் கூற வேண்டுமானால் நம்மைவிட மிக மிக அநாகரிக முறையிலும், நாகரிகமே இன்னதென்று தெரியாத முறையிலும் இருந்து பச்சை மாமிசத்தையும், மீனையும் புசித்தவர்கள் தான் ஆங்கிலேயர்கள். அந்தக் காலத்தில்கூட நம்மக்கள், மேம்பாட்டில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை சரித்திர வாயிலாக அறிகிறோம். அப்படி இருந்தும் நம்மை முந்தி விட்டனர் ஆங்கிலேயர்கள். அவர்களிடம் எதற்கும் பாடம் கற்கும் முறையில் அவ்வளவு மோசமாகி விட்டோம். அவர்கள் கண்டுபிடிக்கும் அதிசய அற்புதங்களையெல்லாம் நாம் மனதினாலும் நினைக்க முடியாத அளவு ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகக் கூறினால், நம் நாட்டைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் இதைப்போன்றே முன்னேறி வருகின்றன.

இதைத்தான் புரட்சிக்காலம் என்றும், ஆராய்ச்சிக்காலம் என்றும் கூறுவது, எதையும் அறிவைக்கொண்டு ஆராய்ந்து நன்மை தீமைகளை உணர்ந்தும் மனித சமுதாயத்திற்கு வேண்டிய சவுகரியங்களுக்கேற்ற பழைமையை மாற்றிய மைத்துக் கொள்ளும் நிலைமையில் உள்ளது. அதன் பலனாகத்தான் அந்நாடுகள் ஆராய்ச்சியில் மேம்பட்டு, புரட்சியின் தன்மை அடைந்து வியக்கும் அளவில் வளர்ந்து கொண்டுவருகின்றன.

ஆனால், நம் நாடோ தொன்று தொட்டே இந்த நிலைமையில் இருந்து வருகிறது. ஓரளவு நாகரிகமும், விஞ்ஞான மின்சார சாதனங்களையும் கொண்டுள்ள தென்றால், வெள்ளையர் சிறிது காலம் நம்மை ஆட்சி புரிந்ததன் பயனேயாகும். அவ்வாய்ப்பும் நமக்குக் கிட்டியிராதாயின் நாம் பழைமையில் ஊறிய பஞ்சாங்கப் பித்தர்களாகத்தான் இருக்க நேரிடும்.

ஆகவேதான் நம் நாடும், பிற நாட்டைப்போல் சுதந்திர நாடாக வேண்டும். இந்நாட்டை இந்நாட்டு மக்களே ஆளும்படியாகச் செய்யவேண்டும் என்பது திராவிடர் கழகத்தின் முதன்மையான நோக்கம். திராவிடத்தின் எல்லைக்கும் அப்பாலிருந்து எந்த அந்நியரும் உள்ளே அனுமதி இன்றிவந்து போகும் நிலைமை மாறவேண்டும். இந்நாட்டிற்குத் தொடர்பில்லாத அந்நிய பார்ப்பனர்களை இங்கிருந்து வெளியேற்றவேண்டும். வடநாட்டுக்காரர்களின் ஆட்சியினின்று பிரிந்து தனித் திராவிடத்தின் ஆட்சி அமையவேண்டும். கதவில்லா வீட்டில் கண்ட நாய்களும் புகுவதைப் போன்று அந்நியர்கள் இந்நாட்டில் புகுவதைத் தடுக்கவேண்டும். நாங்கள் இப்பபோழுது வெளிநாடுகள் சென்றபொழுது எப்படி நாங்கள் ஆள் ஒவ்வொருக்கும் அய்ந்தாயிரம் ரூபாய் செக்யூரிட்டி கட்டி அனுமதி பெற்று சென்றோமோ அதைப் போன்றே இந்நாட்டின் எல்லையைத் தாண்டி உள்ளே வருபவர்கள் எவராயிருந்தாலும் செக்யூரிட்டி செலுத்தி அனுமதிபெற்று வரவேண்டும். இவ்வித நிலைமையில் மாற்றினால் ஒழிய, நம்மக்கள் முன்னேறுவதற்கு வழியில்லை.

ஆனாலும் நான் முன்கூறியபடி இக்காலம் அறிவியல் புரட்சிக்காலம் என்று கூறியபடி, இப்பொழுது நம்நாட்டின் நிலைமையும், புரட்சியின் பலனை அனுபவித்துக்கொண்டே வருகிறது. சரித்திர காலத்திலிருந்து நம்மக்கள் அரசர்களாலும், ராஜாக்களாலும் ஆண்டு வந்ததாக அறிகிறோம். அக்காலம் முதல் வெள்ளையர்வரை நம்நாட்டினை ராஜாக்கள் ஆண்டுகொண்டுதான் இருந்தனர். ஆனால் ராஜாக்கள் ஆட்சியெல்லாம் சென்றவிடம் தெரியாமல் மறைந்து விட்டது. வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, ஆட்சிசெய்தது போதும் உனக்கும் இந்நாட்டிற்கும் என்ன சம்மந்தம்? என்று கேட்கும்படி நிலையில் வந்து வெள்ளையனே வெளியேறு என்று கூறியவுடன், இதற்கு அவர்கள் மறுத்துப் பேசிய வார்த்தைகளில் கூட கடுமையான சொற்கள் காணப்பட வில்லை. விதவிதமான ஆயுதங்களும், இந்தியாவையே இரண்டு மூன்று குண்டுகளுக்கு இரையாக்கும் வல்லமை படைத்தவர்களையும், தரைப்படை, கப்பல்படை, ஆகாயப் படையிலும் நம்மிலும் எவ்வளவோ அதிக வல்லமை மிக்கவர் களாக இருந்தும் நம்முடைய வார்த்தையைக் கேட்டவுடன் உடனே சென்று விட்டனர்.

இதன்றியும் நம்நாட்டில் உள்நாட்டு சிற்றரசர்கள் சுமார் 650 பேர்கள் ஆண்டுவந்தார்களே அவர்கள் இப்போது எங்கே? அவர்கள் இந்திய நாட்டின் அடிமையான முறையில் தான் பதவியேற்று கவர்னர்கள் என்ற முறையில் இருந்து வருகிறார்கள். இதுமட்டுமின்றி ஜமீன்தார்கள் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் எங்கே? அவர்களும் இன்றைய நிலை யில் சாதாரண மக்களைப்போன்று வாழ்க்கையைப் பெற்று வாழும் நிலைமையில் ஆக்கப்பட்டு விட்டனர். இன்னமும் செல்வந்தர்கள் என்றும் பணக்காரர்கள் என்றும் கூறிக் கொள்பவர்களுக்கும் ஆணவத்தை அடக்க சட்டமியற்றப் படவிருக்கின்றன. இவ்விதமாக ராஜாக்களும், சிற்றரசர்களும், ஜமீன்தார்களும் ஏன் என்றுகேட்டு அவர்களையே அழித்து வாழ்கின்ற நிலைமையில் உள்ளபோது இப்பார்ப்பனர்கள் எம்மாத்திரம்? வெள்ளையர்களாவது ஆயுதம் கொண்டவர்கள். அவர் களை எதிர்த்துத் துரத்திய நமக்குப் பார்ப்பனர்களின் பஞ்சாங்கமும் குழவிக்கல் சாமிகளும் என்ன செய்யும் என்று எண்ணும் நிலையையும் மக்கள் அடைந்துவிட்டனர். அவர்கள் இதுவரை தங்களின் பாதுகாப்பு கருவிகளாக மதத்தையும், சாஸ்திர புராணங்களையும் அமைத்துக் கொண்டிருந்ததால்தான் அவைகளையும் அழித்து, அவர்களையும் இந்நாட்டினை விட்டுத் துரத்த வேண்டுமென்று கூறிவருகிறோம்.
அதற்காகத்தான் நாங்கள் இவைகளில் எல்லாம் ஈடுபட்டு கடவுள்கள், சாஸ்திர, புராணங்கள் இவைகளின் ஆபாச அநாகரிகங்களை விளக்கிக் கூறி வருகிறோம். சென்ற ஆண்டில் பிள்ளையாரின் ஆபாசப் பிறவிகளையும், அதற்கு எழுதப் பட்டுள்ள அநாகரிகக் கதைகளையும் மக்களிடம் விளக்கிக் கூறியபின் அதை உடைத்தோம். இப்படி ஒவ்வொன்றி னுடைய யோக்கியதையையும் எடுத்துக் கூறி உடைத்துத் தூளாக்கி, மக்களிடம் இவற்றின்மேல் உள்ள மூடத்தன்மை களை ஒழித்து வருகிறோம். அதற்காகத்தான் இராமாயணத்தின் ஊழல்களை இப்போது விளக்கி வருகிறோம். எப்படி மக்கள் பிள்ளையாரின் ஆபாசத்தை உணர்ந்து நான் திருச்சியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் முன்பாக எவ்வித ஆட்சேபணையும் இன்றி உடைத்தேனோ, அதைப்போன்றே இராமாயணத்தின் ஊழலை மக்கள் யாவரும் உணர்ந்ததும் அவர்கள் முன்பாக இதை நெருப்பிலிட்டு பொசுக்கப்போகி றேன். இராமனின் படத்தைக் கொளுத்தப் போகிறேன். இப்படித்தான் ஒவ்வொரு கடவுளையும் உடைப்பதன் மூல மும், எரிப்பதன் மூலமும் மக்கள் கடவுள்கள் மீது கொண்டுள்ள மூடநம்பிக்கைகளைப் போக்க முடியும் என்ற நோக்கத் தால் செய்து வருகிறேன்.


-------------27.2.1955 அன்று தஞ்சை மாவட்டம் - குடந்தையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை (`விடுதலை, 16.3.1955)

1 comments:

bala said...

//வீர மன்னர்களின் ஆதிக்கமெல்லாம் அழிந்திருக்க..//

தமிழ் ஓவியா அய்யா,
அதானே.வீர மன்னர்களின் ஆதிகமெல்லாமே அழிந்து போயின.அப்படியிருக்க இந்த தாடிக்கார பேடியின் சூழ்ச்சியும்,பிரிவினை தூண்டும் வெறுப்பும்,அயோக்யத்தனமும், நிலைத்திருக்கவா போயிருக்கிறது.சரியா சொன்னீங்க.

பாலா