Search This Blog

2.6.08

பெரியார்தான் நம்மை ஆளாக்கி விட்டவர் - முதல் அமைச்சர் கலைஞர்







பெரியார் ஆதரிக்கிறார்!

பெருமைக்குரிய செய்தி நமக்கு!

தம் எண்ணங்களை ஈடேற்றும் தனயனைத் தந்தை போற்றுவது தகாத செயல் அல்ல!
ஆனாலும், தடுமாறிடும் அரசியல்வாதிகள் பெரியார் தி.மு. கழகத்தை ஆதரிக்கிறார். ஆகவே தி.மு.க. பயங்கரமானது, பாவகரமானது என்ற பெரும் பழியைப் பரப்பினார்கள் - 1971ஆம் ஆண்டுத் தேர்தலில்!

அந்தப் பரிதாபத்திற்குரிய வர்களின் பழுதுபட்ட பார்வையை உணர்ந்த தமிழ்ச் சமுதாயமும் சரியான பாடம் புகட்டியது.

பெரியார் என்றால் ஒரு கட்சியின் தலைவர் என்று கணக்கிட்டவர்களின் நினைவு தவறாகி, நெடுங்காலமாகிறது!

பெரியார் -
ஒரு சகாப்தம் -
ஒரு கால கட்டம் - தமிழினப் பெருவரலாற்றினில் ஓர் அத்தியாயம்!


அந்தப் பெரியார் என்ற சொல்லை உச்சரிக்கிற நேரத்திலேயே அதனுள் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி திராவிடர் இயக்கம் ஆகிய அனைத்தும் அடங்கியிருக்கின்றன.
அதுமட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வளர்ச்சியும் அந்தச் சொல்லிலே உள்ளது.


பெரியார் என்றாலே தன்மானப் பேரிகை என்றல்லவா பொருள்?
அந்த தன்மானப் பேரிகையின் முழக்கம் இன்று உலகு எங்கும் கேட்கிறது!
கடந்த ஆண்டில் அமெ-நாட்டிற்கு நான் சென்றிருந்தபோது சிகாகோ நகரில் - சிகாகோ பல்கலைக் கழகத்தில் நான் வரவேற்கப்பட்டேன். அந்தப் பல்கலைக் கழகத்தில் நான் பேசினேன். பேசி முடித்தபின் பல்கலைக் கழகப் பேராசிரியர்களைச் சந்தித்தபோதும், மாணவர்-களைத் தனியாகச் சந்தித்து உரையாடியபோதும் பெரியாரைப் பற்றிக் கேட்டார்கள்.
அங்குள்ள நூல் நிலையத்தில் பெரியார் அவர்கள் எழுதிய நூல்களும் இடம் பெற்றிருக்கக் கண்டேன்.

சிகாகோ பல்கலைக் கழக மாணவர்கள் பெரியாரைப் பற்றிய ஆராய்ச்சியை நடத்திக்-கொண்டிருக்கிறார்கள்.


இந்த செய்திகளை அறிந்த போழ்து எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி எப்படி இருந்தது தெரியுமா?
இந்த மண்ணில் தந்தை பெரியார் அவர்கள் தன்மான இயக்கப் பணிகளைத் தொடங்கிய போது, அவர் மீது வீசப்பட்ட பழிச் சொற்களும் இழி சொற்களும் கொஞ்சமா?
அந்த ஏச்சும் பேச்சும் பூச்சரமாக மாறிட, காலத்தைக் கனிய வைத்த பெருமை, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கே உரியது!

ஆண்டாண்டு காலமாகப் பெரியார் அவர்கள் சொல்லி வந்த சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்படி செல்லுபடியாக்கிடப் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரானவுடன் சட்டம் கொண்டு வந்தார்கள்.

எதிர்த்தரப்பிலிருந்தவர்கள் கேலியாகக் கேட்டார்கள் - “இந்தச் சட்டம் என்ன பெரியாருக்கு நீங்கள் அளிக்கின்ற பரிசா” என்று! அண்ணா அவர்கள் அடக்கத்தோடு சொன்னார்கள், “இந்தச் சட்டம் மட்டுமல்ல, இந்த அமைச்சரவையையே நாங்கள் பெரியாருக்கு அளிக்கும் பரிசு” என்று.

அப்படிப்பட்ட பரிசு அளித்த எங்களைப் பெரியார் ஆதரிப்பதில் என்ன ஆச்சரியம்!
அவர் பெற்ற பிள்ளைகள், நாடாளுகிறோம்! பார்க்கிறார்! மகிழ்ச்சி அடைகிறார்! பரவசப்படுகிறார்! கட்டித் தழுவுகிறார்! கரும்பே தேனே என்று முத்தமாரி பொழிகிறார் - அவர் பெற்ற பிள்ளைகளை! இதனை மாற்றுக் கட்சியினர் கசப்போடு பார்க்கிறார்கள், ஏன்?
நாங்களென்ன திறமையற்ற பிள்ளைகளா? நாங்களென்ன புத்தியற்ற பிள்ளைகளா?
நாங்களென்ன அவர் கொள்கைகளை எதிர்த்துச் செல்கிற பிள்ளைகளா?
அவரளவுக்குச் செல்ல முடியாவிட்டாலும் அவர் செய்ய வேண்டுமென்று சுட்டிக் காட்டுவதை எதிர்நோக்கி அரசு பீடத்தில் அமர்ந்திருக்கின்ற காரணத்தால் அவர் வரையறுத்துக் கொடுத்-திருக்கின்ற அளவுக்குச் செய்கிறோம். அவரே சொல்லுவார் நான் இந்த அளவுக்குச் செல்லு-வேன், செங்கோலைப் பிடித்திருக்கின்ற எனது பிள்ளைகள் இந்த அளவுதான் செல்ல-வேண்டும் என்று.

எனவே, அந்த அளவில் பெரியார் அவர்களின் இலட்சியங்களை நிறைவேற்றும் வகையில் இந்த அரசு நடைபெறுகிறது.

இது ஏழை எளியவர்களுக்காக நடைபெறுகிற ஆட்சி; ஆகவே தந்தை பெரியார் ஆதரிக்கிறார்.
இது சாதாரண மக்களுக்காக நடைபெறுகிற ஆட்சி, ஆகவே தந்தை பெரியார் ஆதரிக்கிறார்.
இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக நடைபெறுகிற ஆட்சி, ஆகவே தந்தை பெரியார் ஆதரிக்கிறார்.
இது தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நடைபெறுகிற ஆட்சி, ஆகவே தந்தை பெரியார் ஆதரிக்கிறார்.
தமிழ்ச் சமுதாயம் உயர்வடைய வேண்டும் என்பதற்காக நடைபெறுகிற ஆட்சி, ஆகவே தந்தை பெரியார் ஆதரிக்கிறார்.

அந்தப் பெரியார் - பகுத்தறிவுப் பகலவன்! அவர்தான் நம்மை ஆளாக்கி விட்டவர்!

தமிழினத்தின் விடிவெள்ளியான அவரை வாழ்த்துவதற்கு நமக்கு அருகதை இல்லை; வயதும் இல்லை; அந்த அளவுக்கு நமக்குத் தகுதியும் இல்லை. எனினும் நன்றிப் பெருக்கால் வணங்குவோம்!

அவர் தொண்டு நாட்டுக்கு என்றென்றும் தேவை! எனவே நாம் வாழ்ந்திட அவரை வாழ்த்திடுவோம்!

- தந்தை பெரியார் பிறந்தநாள் ‘விடுதலை’ மலர், 17.9.1972

0 comments: