Search This Blog
28.6.08
சுயமரியாதைத் திருமணமும் - புரோகிதத் திருமணமும்!
சென்னை, ஜூன் 28- சுயமரியாதைத் திருமணத்தையும் புரோகிதத் திருமணத்தையும் ஒப்பிட்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் பேசினார்.
சென்னை அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்த தொ.மு.ச. உறுப்பினர் பி.ராமமூர்த்தி இல்ல மண விழாவுக்குத் தலைமை ஏற்றுப் பேசியபோது கலைஞர் அவர்கள் இவ்வாறு ஒப்பிட்டுப் பேசினார். அதன் விவரம்:
தொண்டுக்கு - தியாகத்துக்கு
என்ன செய்யவேண்டுமோ அதை கழகம் செய்யும் நான் குடியரசு அலுவலகத்திலே ஒரு காலத்திலே பணி புரிந்தேன் என்றால், அந்த வேலைக்காக நான் அலைந்து திரியவில்லை. ஆனால் அந்த வேலை கிடைத்ததை என்னுடைய மனதிலே இதயத்திலே இன்றைக்கு பதிந்திருக்கின்ற அந்தப் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு, அது அவைக்களமாக அன் றைக்கு இருந்தது. என்றைக்கும் இருக்கும். எல்லா இளைஞர் களுக்கும் அதைப் போல அமையும் என்ற காரணத்தி னாலேதான் சொல்லுகிறேனே அல்லாமல் வேறல்ல. இவைகள் எல்லாம் வாய்ப்புகள். நாம் வளர்வதற்கு அல்ல. தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியதைப்போல நம்முடைய வளர்ச்சிக்காக, எதிர்காலத்தின் வளர்ச்சிக்காக, நாம் நம்மை வருத்திக் கொள்ள வேண்டும், நம்மை தியாகங்களுக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டும், அத்தகைய தியாகங்களுக்கு ஆட்படுத்திக் கொண்ட வர்களைக் கொண்ட பாசறைதான் திராவிட இயக்கமாக, திராவிடர் கழகமாக, திராவிட முன்னேற்றக் கழகமாக, சுயமரியாதை இயக்கமாக அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் பரிணமித்திருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
தி.மு.க. சுயமரியாதை இயக்கமாக
அன்று முதல் இன்றுவரை பரிணமித்திருக்கிறது
தமிழர் தலைவர் சொன்னார், சுயமரியாதைத் திருமணங்கள் 1948 இல் சைனாவில் தோன்றியது. அறிமுகப்படுத்தப்பட்டது என்று சொன்னார். அவர் சொல்லும்போது நான் நினைத்துக் கொண்டேன். என்னுடைய சுயமரியாதைத் திருமணம் 1944 இல் நடைபெற்றது. 13-9-1944 - அந்தத் தேதியில் நான் சுய மரியதைத் திருமணத்தை நடத்திக் கொண்டேன். என்னுடைய மைத்துனர் சிதம்பரம் ஜெயராமன், அதே நாளில், அதே நேரத்தில் தன்னுடைய திருமணத்தை புரோகிதத் திருமணமாக நடத்திக் கொண்டார். என்னுடைய திருமணத்திற்கும், அவர் திருமணத்திற்கும் சேர்த்து கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கிந்தனார் கதா காலட்சேபத்துக்கு வந்திருந்தார். இவைகளை யெல்லாம் நான் சொல்லக் காரணம், என் திருமணம் பகுத்தறிவுத் திருமணம், நாகை விஜயராகவ நாயுடு என்ற சுயமரியாதைக்காரருடைய தலைமையில் நடைபெற்றது. அதே பந்தலில் பக்கத்தில் தாழ்வாரத்தில் என்னுடைய மைத்துனர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களுக்கு புரோகிதத் திருமணம் நடைபெற்றது. என் திருமணத்தில் நாவலர் நெடுஞ்செழியனும், பேராசிரியர் அன்பழகனும் மற்றவர்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள். என் திருமணத்திற்குப் பிறகு நான்காண்டு காலம் என்னுடைய துணைவியார் வாழ்ந்தார். அதற்குப் பிறகு நோய்வாய்ப்பட்டு அவர் மறைந்தார். சுயமரியாதைத் திருமணத் திலே அன்றைக்கு மங்கலநாண் அணிந்து கொண்டவர்கள் மூன்றாண்டு காலம் வாழ முடிந்தது. ஆனால் புரோகிதத் திருமணம் நடைபெற்றது என்னுடைய மைத்துனருக்கு. மூன்று மாதம் கூட அவருடைய துணைவியார் வாழவில்லை. அவர்கள் மறைந்து விட்டார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், சுயமரியாதை திருமணம் - புரோகிதத் திருமணம் இரண்டும் ஒரே இல்லத்தில் நடைபெற்றது. ஆனால் இரண்டு பேருடைய வாழ்க்கையும் எப்படி அமைந்தது என்பதை எடுத்துச் சொல்வதற்காகத்தான் இதைக் குறிப்பிடுகிறேனே அல்லாமல் வேறல்ல. அவரவர் களுடைய உடல் நிலைமைக்கேற்ப சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கை அமைகிறது. அப்படிப்பட்ட வாழ்க்கையை வைதீகத்தோடு ஜாதகத்தோடு, ஆரூடத்தோடு இணைத்து இவைகளுக்கெல்லாம் காரணம் எவையெவை என்று கற்பனை செய்து அந்தக் கற்பனைகளிலே காலத்தையோட்டி தமிழர்கள் தங்களுடைய இன உணர்ச்சி, மான உணர்ச்சி, பகுத்தறிவு உணர்ச்சி இவைகளையெல்லாம் இழந்த காலம் ஒன்று இருந்தது. அதை மாற்றியமைக்கத்தான் தந்தை பெரியார், அவர் வழியிலே பேரறிஞர் அண்ணா இவர்கள் எல்லாம் பாடுபட்டார்கள், நாங்களும் அந்த வழியிலே பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம்.
- இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் பேசினார்.
Labels:
கலைஞர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment