Search This Blog

11.6.08

தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது எப்படி?



எப்படி ராமசாமி பெரியார் ஆனார்?

எப்படி இராமசாமி பெரியார் ஆனாரோ அது போல சித்தார்த்தர் பிறகு புத்தரானார். நாங்கள் `புத்தநெறி’ என்று ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றோம். சென்னை, எழும்பூர் போதி சொசைட்டியில் தந்தை பெரியார் உரையாற்றினார். அங்கு அவர் ஆற்றிய உரைதான் புத்த நெறி என்று புத்தகம் வந்திருக்கிறது.

புத்தியைப் பயன்படுத்துகின்றவன்

அய்யா பேசும் பொழுது சொன்னார். புத்தர் என்றால் யார்? உங் களைக் கேட்கும் பொழுது சொல்லுகின்றேன். யார் புத்தியைப் பயன்படுத்துகின்றானோ அவன் புத்தன் என்று தந்தை பெரியார் சொன்னார். (பலத்த கைதட்டல்) புத்தி என்ற சொல்லில் இருந்துதான் புத்தன் என்ற சொல் வந்தது. புத்தியைப் பயன்படுத்துகின்றவன் எல்லாம் புத்தன் தான் என்று சொல்லி அப்படி அவர் மட்டும் தான் புத்தன் என்று சொல்லாதீர்கள் பகுத்தறிவாளர் எல்லோரும் புத்தர் தான் அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. (பலத்த கைதட்டல்). ரொம்பத் தெளிவாக அய்யா அவர்கள் எடுத்துச் சொன்னார்.

புத்தர், புத்தா என்பதற்கு புத்தி என்பதுதான் மூலம், வேர் என்று அய்யா அவர்கள் சொன்னார்கள். அய்யா அவர்களுடைய சிந்தனை எப்படிப்பட்ட தனித்த சிந்தனை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனித குலத்தில்
பிறவி பேதம் கூடாது


அய்யா அவர்கள் நினைத்தார்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் பேதம் இருக்கக் கூடாது. மனித குலத்தில் சரி பாதி பெண்கள். அவர்கள் உரிமை பெற வேண்டாமா? நம்முடைய பெண்களின் நிலை என்ன ஆவது? பெண்களின் நிலை முன்னேற வேண்டாமா? என்ற கவலைதான் அவர்களிடத்திலே இருந்தது.
பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமையில் நம்முடைய தாய்மார்களுக்கு வேண்டிய கருத்துக்களை அய்யா அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

`பெரியார்’ படத்தை மாட்டுங்கள்

பெரியார் அவர்களைப்பற்றி மகளிர்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். வேறு எந்தத் தலைவர் படம் இருக்கிறதோ இல்லையோ தந்தை பெரியார் அவர்களுடைய படம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும். (பலத்த கைதட்டல்) காரணம் என்னவென்றால், பெரியார் அவர்-களுடைய கொள்கை பெண்களுக்காகத்தான் அதிக அளவிற்குப் பயன்பட்டிருக்கின்றது.

`எஜமானனாக நீ இருக்காதே!’

ஆண்களுக்கு இன்னமும் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. ``எஜமானனாக நீ இருக்காதே!’ என்று யாருக்காவது சொன்னால் அது பிடிக்குமா? பிடிக்காது. பெண்கள் வேலைக்காரன்களாக இருக்க வேண்டும். அதுவும் `திருமணம்’ என்ற ஏற்பாட்டின் மூலம் பெண்களை அடிமைப்படுத்துகின்ற ஏற்பாடு வேறில்லை என்கிறார் பெரியார். அதாவது சம்பளம் இல்லாத வேலைக்காரி.

சரிபகுதி பெண்கள் முன்னேற வேண்டாமா?

பந்தம். அதுவும் இந்து மதம் என்றால் புனிதத் தன்மை கொண்டது. புனித கட்டுக்கொண்டது. `கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன்’’ கணவன் அடித்தாலும், உதைத்தாலும் அவன்தான் கணவன். இப்படி எல்லாம் சொல்லி வைத்த இந்த சமுதாயத்திலே தந்தை பெரியாருடைய தாக்கம் ஏற்பட்டு மனித குலத்தில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்கள் முன்னேற வேண்டாமா? என்று கேட்டுவிட்டு, பெரியார் சொல்லுகின்றார்.

பெண் விடுதலையே நாட்டின் முன்னேற்றம்

``பெண் விடுதலையே நாட்டின் முன்னேற்றம். நான் பகுத்தறிவுவாதி. சமுதாய பற்று இருப்பதால் உண்மை என்று எனக்குத் தோன்றிய கருத்துக்-களை ஆதாரமாகக் கொண்டு, மனித சமுதாய முன்னேற்றத்தைக் கருதி தொண்டாற்றி வருகின்றேன். மனித சமுதாய முன்னேத்திற்கு, வளர்ச்சிக்கு தடையாக உள்ளவைகளை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகின்றேன். அதில் ஒன்றுதான் இந்த திருமண முறை மாற்றமும் ஆகும்’’ சுயமரியாதைத் திரு-மணத்தை ஏன் கொண்டு வந்தேன் என்பதற்கு அய்யா அவர்கள் விளக்கம் சொல்லுகின்றார். திரைப்படத்திலும் இந்த கருத்துக்கள் வைக்கப்பட்டிருக்கின்றது. ஜாதி மறுப்புத் திருமணம் என்கிறபோது நடைமுறையில் என்ன சொல்லு-கிறோம். கலப்புத் திருமணம் என்று சொல்லுகின்றோம்.

கலப்புத் திருமணமா?

இதைப்பற்றிச் சொல்லும்-பொழுது பெரியார் கேட்டார். என்னைய்யா கலப்புத் திருமணம். ஆணுக்கும், பெண்ணுக்கும்தான் திருமணம் நடக்கிறது. அப்படி இருக்கும் பொழுது மாட்டுக்கும், மனிதனுக்கும் பண்ணினால்தான் கலப்பு.
மனிதர்களுக்கு திருமணம் நடக்கும்பொழுது எங்கே கலப்பு வந்தது என்று அய்யா அவர்கள் கேட்டார். கலப்படம் என்று சொன்னாலே எது இருக்கக் கூடாதோ அதைக் கொண்டு போய் சேர்ப்பதுதான் கலப்படம். அரிசியில் கொண்டு போய் கல்லை சேர்க்கிறார் கள். இதில் கலப்படம் செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம்.

அது மாதிரி ஆணும், பெண்ணும் என்பது இயற்கையானது. ஜாதி என்பது பாதியில் வந்தது.
அய்யா அவர்களுக்கு இருந்த கவலை இருக்கிறது பாருங்கள். மனித சமுதாயத்தைப்பற்றி, பெண்-களைப்பற்றி இதைப்பற்றி தொடர்ந்து சொற்பொழிவாற்றலாம். மகளிர் உரிமை - 1, மகளிர் உரிமை - 2 என்று தொடர்ந்து சொற்பொழிவாற்றலாம். பெண்ணுரிமைக்காக தந்தை பெரியார் பேசிய கருத்துக் கள் மகளிர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். ஏனென்றால் ஆண்களை யும் திருத்துவதற்கு அதுதான் வாய்ப்பாக இருக்கும். அய்யா அவர்கள் மேலும் சொல்லுகின்றார்.

நாடு முன்னேற பெண் விடுதலை

``மனித சமுதாயத்தில் சரிக்குச் சரியாக இருக்கும் பெண் சமுதாயமானது (அய்யா அவர்களுடைய கவலையைப் பாருங்கள்) எந்த வகையிலும் பயன்படாத சமுதாய-மாக இருப்பதால் நம் நாட்டில் நடைபெற வேண்டிய முன்னேற்றங்களில் பகுதிக்கு மேல் நடைபெற முடியாமல் போனதோடு அடைய வேண்டிய வளர்ச்சி அடையாமல், உலக நாடுகளில் மிகவும் பின் தங்கிய நாடாக நம் நாடு இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இருக்க வேண்-டியதாயிற்று. நம்முடைய நாடு முன்னேற்றமடையவும், வளர்ச்சி அடையவும், பெண்கள் சமுதாயமானது விடுதலைப்பெற்று ஆண்களைப்போல சகல துறைகளிலும், சுதந்திரமாக ஈடுபட வேண்டும். அப்பொழுது தான் நம் நாடு இன்னும் வளர்ச்சியினைப் பெற முடியும் என்பதால்தான் பெண் விடுதலையை முதன்மையாகக் கொண்டு இக்காரியத்தில் இறங்கியிருக்கிறோம்’’ என்று சொல்லு-கிறார்.

ஜாதி ஒழிப்பு - பெண் விடுதலை இந்த இரண்டும் தான் சுயமரியாதை இயக்கத்தினுடைய குறிக்கோள் மூடநம்பிக்கை ஒழிப்பெல்லாம் அடுத்து வரிசையாக வருகிறது.
இனி பெண்கள் சோறு
ஆக்கக் கூடாது
மேலும் சொல்லுகிறார்: `நான் சொல்லுவது ஆண்களுக்கு சற்று கஷ்டமாக இருக்கலாம். இனி பெண்கள் சோறு ஆக்கக் கூடாது’’ (சிரிப்பு கைதட்டல்) அதாவது இன்றைக்கு இதெல்லாம் நடக்குமா? என்று கேட்பீர்கள்.


அய்யா அவர்கள் சொன்னதெல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக வந்தாகி விட்டது. ``ஆண்களை சோறு ஆக்கச் சொல்ல வேண்டும். பெண்கள் சோறாக்க வேண்டியது தங்களுடைய கடமை என்று சொல்லுகின்றார்கள் ஆணும், பெண்ணும் நன்றாகப் படித்து உத்தியோகத்திற்குப் போக வேண்-டும்’’ இவை எல்லாம் நடைமுறைக்கு வந்தாகிவிட்டதே புதி-தாகக் கேட்பவர்களுக்கு வேண்டு-மானால் இது ஆச்சரியமாக இருக்கலாம்.

வெளிநாட்டில் ஆண்கள் சமைக்கிறார்கள்

வெளிநாட்டிற்குப் போகிறார்கள். கருவிகள் எல்லாம் மாறுதலாக வந்தாகிவிட்டது. வெளிநாட்டில் அவர்கள் சமைக்கிறார்களே.

பொத்தானை அழுத்தியவுடன் சமையல் வேலை நடக்கிறது. கணவர் முதலில் வந்தால் அவர் சமைத்து வைக்கிறார். மனைவி வேலைக்குப் போய் விட்டு முதலில் வந்தால் அவர் சமைத்து வைக்கிறார். இரண்டு பேரும் வேலைக்கும் போகும் பொழுது யார் சமைத்தால் என்ன?
ஆனால் பழைய காலத்தில் என்ன நிலை? கணவர் சாப்பிடுகிற வரை மனைவி காத்திருக்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் சாப்பிட்டு விட்ட பிறகுதான் கடைசியாக இந்த அம்மையார் சாப்பிட வேண்-டும். இந்த காலத்தில் இது நடக்குமா? கணவனுக்காக மனைவி காத்திருந்தால் பட்டினியாலே செத்துப் போக வேண்டியதுதான். (சிரிப்பு கைதட்டல்)
ஆகவே பெரியார் அவர்கள் நடைமுறையில் எவ்வளவு பெரிய மனித நேயத்தோடு சொன்னார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த மாதிரி பல செய்திகளை எடுத்துச் சொல்லலாம். எப்பொழுதுமே தந்தை பெரியார் அவர்-களுடைய கருத்துக்கள் ரொம்ப ஆழமான கருத்துக்கள் மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத கருத்துக்களை அறிவார்ந்த நிலையிலே பிடிவாதத்தோடு எடுத்துச் சொன்னார்கள்.

பழைய சமுதாய நிலையில் ஓர் சம்பவம்

அதோடு பழைய சமுதாய நிலையை தந்தை பெரியார் அவர்கள் மாற்றிக் காட்டிய சம்பவம் பெரியார் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இங்கு முத்துலட்சுமி ரெட்டி அவர்களைப்பற்றி எடுத்துச் சொன்னார்கள். முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் இசை வேளாளர் ஜாதியைச் சார்ந்தவர்கள்.

கடவுளுக்கு `தாசி’ என்ற பெயரில் பொட்டுக் கட்டி விடுவதை அந்த அம்மையார் அவர்கள்தான் நீதிக் கட்சி ஆட்சியில் ஒழித்தார்கள்.

ஒரு பெண் பிள்ளை தேவாசியாக

இரண்டு பெண் குழந்தை பெற்றால் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணை தேவதாசியாக ஆக்கி விடுவது அன்றைய நிலை இன்றைய இருபால் இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இன்றைக்குப் பெண்களைப் பார்த்தீர்களேயானால் கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள், டாக்-டர்கள், நீதிபதிகளாக வருகிறார்கள். பெரியார் பெண்கள் சமுதாயத்-திற்காக என்ன செய்தார் என்பதே தெரியாது.

உங்கள் அப்பா வண்டிக்காரர்
எங்கள் அப்பா மண்டிக்காரர்


சமீரா மீரான் அவர்கள்கூட சொன்னார்கள். பெண்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பற்றித் தெரிய-வில்லை என்று வெயிலில் நின்றால்தானே நிழலினுடைய அருமை தெரியும். நிழலிலேயே இருந்து, ஏ.சி.,யிலேயே இருந்து விட்டால் என்ன பண்ண முடியும்? பெரியார் அய்யா அவர்கள் அவருடைய தந்தையாரைப் பார்த்துச் சொன்னார். `என்னப்பா நீ இவ்வளவு செலவு செய்கிறாயே!’ என்று கேட்டார். உங்க அப்பா வண்டிக்காரர். எங்க அப்பா மண்டிக்காரர். எங்கப்பா பணக்காரர் அதனாலே நான் தாராளமாக செலவு பண்ணலாம் என்று சொன்னார் + ஒரு கால கட்டத்திலே.

அன்றைக்கே பெரியார் சொல்லியிருக்கிறார். பெரியார் அவர்களுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை.
ரொம்ப நாளைக்கு முன்னாலே எழுதியிருக்கின்றார். இதை எல்லாம் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

கோயிலில் பொட்டுக்
கட்டி விடும் முறை


1959+இல் ஒரு பழைய சம்பவத்தை பேசும் பொழுது சொல்லுகின்றார்.

`பெண்களுக்கு கடவுள் பெயரால் பொட்டுக் கட்டி, விபச்சாரத்திற்கு விடுவது என்பது நேற்றைய வரையில் இருந்து வந்ததே. கடவுள் காரியம் என்றும்; சா°திரம் என்று சொல்லி பொட்டுக் கட்டி விடுவது என்றால் அவர்கள் நம் அக்காள், தங்கைகள் தானே, நம் சூத்திர ஜாதி தாய்-மார்கள் தானே. முதலாவது நான்-தான் இந்த முறையை வெறுத்தேன். என் காலத்தில் நான் தேவ°தான செகரட்டரியாகவும் 10 ஆண்டுகள் தேவ°தான கமிட்டித் தலைவ-னாகவும் இருந்தேன். அப்பொழுது-தான் இந்த கொடுமையான நிலைகளை எல்லாம் பார்த்தேன்.
பத்து பதினைந்து `தேவடியாள்கள்’
நான் எந்த ஊர் கோவிலுக்குப் போனாலும், பத்து இருபது தேவடியாள்கள் கோயில் மரியாதை மேள தாளத்துடன் எங்களை வரவேற்கக் காத்துக் கிடப்பார்கள். அவர்கள் எல்லாம் யார்? தேவடி-யாள் என்ற ஒரு ஜாதியிலிருந்து வந்தவர்களா? கொடுமுடியில் தேவடியாள்களுக்கு கவுண்டர் என்ற பட்டம். திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களில் பிள்ளை என்ற பட்டம், சென்னையில் முதலியார் என்ற பட்டம் இவர்கள் எல்லாம் நம்மவர்கள்தானே.

நான்தான் முதலில்
உத்தரவு போட்டேன்


அந்த காலத்தில் தேவடியாள் கோயிலில் இருக்கும் உரிமை 45 வயதிலிருந்து 90 வயது வரை வாழ்ந்த அவர்களை விலைக்கு விற்று விடுவார்கள். குடும்பப் பெண்களில் சூழல் பிழைப்-புக்காக வழுக்கி விழுந்த தாசிப் பெண்கள் அந்த உரிமையை வாங்கிக் கொண்டு, தேவடியாள் போல் காலில் சலங்கை கட்டிக் கொண்டு ஆட ஆரம்பித்-தார்கள். நான்தான் முதன் முதலாக இப்படி உரிமைகளை விற்றால் செல்லாது என்று உத்தரவு போட்-டேன். அந்த காலத்தில் அப்பீல் எல்லாம் கலெக்டர் அளவில் நின்று விடும். இப்பொழுது போல அய்க்கோட்டுகளுக்கெல்லாம் வராது. பிறகு காலியாக இருக்கும் இடங்களில் வேறு புதிதாக தேவதாசிகளை நியமிக்கக் கூடாது என்றும், ஆள், இல்லா விட்டால் அந்த பதவியோடு முடித்துவிட வேண்-டும் என்று நான் உத்தரவு போட்டேன்.

இதற்கு போய் லைசென்ஸ்சா?

பிறகு சட்டசபையில் இது பற்றித் தீர்மானமெல்லாம் வந்தது. பார்ப்-பனர்கள், வைதீகர்கள் எதிர்த்ததோடு அல்லாமல், தேவடியாள்கள் என்பவர்கள் எல்லாம் கூட்டம் போட்டு என்னைக் கண்டித்தார்கள். நாங்கள் நொடித்துப் போய்விட்டால் என்ன செய்வது என்று கேட்டார்கள்.(சிரிப்பு கைதட்டல்) எப்படியோ நம் உணர்ச்சி உள்ளவர்கள் ஏராளமாக இருந்ததால் இது சட்டமாகி விட்டது’’ என்று பெரியார் சொல்கிறார்.

இந்த கொடுமையை நினைத்துப் பாருங்கள். இதற்கு என்ன லைசென்° வாங்குவதா? அதை இன்னொருவருக்கு விற்று, 40, 50 ரூபாய்க்கு அந்த காசை வாங்கி இருக்கிறார்கள் என்றால் நம்-முடைய சமுதாயம் எப்படி இருந்தி-ருக்கிறது?
இந்த நிலை ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்தது. தேச பக்த திலகம் என்று அழைக்கப்பட்ட இதே சத்திய-மூர்த்தி அய்யர் இந்தப் பிரச்சினையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசினாரே.
முதல் நாள் சொல்கிறார் தேவதாசி ஒழிப்பு மசோதாவை நான் எதிர்க்கிறேன் என்று பேசினார். நீதிக்கட்சி ஆட்சியிலே இவர் எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார்.
இந்த சட்டம் பா° ஆக நான் அனுமதிக்க மாட்டேன். ஏன் என்றால், இது சா°திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவேனே தவிர, சா°திரத்தை எதிர்த்து நான் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டேன். இதுதான் அவருடைய சட்டமன்ற உரை.

பெரியாரிடம் ஆலோசனை கேட்டார்

பெரியாரிடம் வந்து இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் பெரியாரிடம் ஆலோசனை கேட்டார்கள்.

இனிமேல் உங்க
ஜாதியில் செய்யுங்கள்


அய்யா அவர்கள் சொன்னார்கள். நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள் என்று சொல்லிக் கொடுத்தார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் பேசினார். கனம் சத்தியமூர்த்தி பேசினார். தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவரை ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். இனி-மேல் அந்தத் தொண்டை அவர்களுடைய ஜாதிப் பெண்களே செய்யட்டும் என்று பேசினார். (பலத்த கைதட்டல்).

பெரியார் சொல்லி அனுப்பிய மாதிரியே தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால் அய்யா அவர்கள் மனித சமுதாயத்தைத் திருத்துவதற்கு அவர்கள் எவ்வளவு அரும்பாடு-பட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


---------மும்பையில் 30-5-2007 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் கி. வீரமணி ஆகியோரின் நூல்கள் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து - "விடுதலை"-10-6-2007

0 comments: