திராவிடர் என்னும் பிராமணரல்லாத வகுப்பினர் சென்னை ராஜதானியின் எல்லாப் பாகங்களிலும் அனுபவிக்கும் கஷ்டங்களும், நிர்ப்பந்தங்களும், கணக்கிலடங்காதென்றும் அதற்குக் காரணம் வேஷப் பிராமணர்களென்றும், அந்தக் கஷ்டங்களையும், நிர்ப்பந்தங்களையும் அறவே தொலைக்கவேண்டிய ஏற்பாடுகள் உடனே செய்ய வேண்டுமென்றும், சென்னை மாநகரிலும் வெளியிலும் உள்ள கனவான்கள் ஒன்று சேர்ந்து தென்னிந்திய மஹாஜன சங்கம் என்னும் மகுடத்துடன் ஒரு சபையைச் சென்னை மாநகரின் முக்கிய ஸ்தானமாகிய மவுண்டுரோட் என்னும் இடத்தில் ஸ்தாபித்து அதன் ஆதரவின் கீழ் ஜஸ்டிஸ் என்னும் ஆங்கிலத் தினசரியும், திராவிடன் என்னும் தமிழ் தினசரியும் ஆந்திரப் பிரகாசிகா என்னும் தெலுங்கு தினசரியும் நடைபெற்று வருகின்றனவென்பது நமது நேயர்களறிந்த விஷயமே.
பத்திரிகை நடத்துவதென்றால் லேசான விஷயமல்லவென்பது, பத்திரிகா அவசியமும் பத்திரிகா அனுபவமும், ஞானமும் உள்ளவர்களுக்கு விளக்க வேண்டிய தவசியமேயல்ல.
இப்போது தென் இந்திய மஹாஜன சபையின் கீழ் நடைபெறும் மேற்சொன்ன மூன்று தினசரிப் பத்திரிகைகளும் ஆழ்ந்த கருத்தும், நீண்ட நோக்கமும், பழுத்த தேசாபிமானமும் குற்றமற்ற பாஷாஞானமும் கொண்டு கோடிய மனமும், பரபக்ஷமும் இல்லாப் புருஷ சிங்கங்களே பத்திராதிபர்களாக அமர்ந்து நடந்தி வருகிறார்கள்.
இந்த மஹாசபைக்குக் காரியதரிசியாக இருக்கும் கனவானோ, பாஷர் அனுபவமும், தேசானுபவமும், ராஜதந்திரமும் குறைவற அடைந்து, சென்னை கார்பரேஷன், (சுகாதார சீர்திருத்த சங்கத்தில்) நெடுநாளாக அங்கத்தினராகவும் இருந்து முதிர்ந்த அனுபவத்தோடு கூடிய ராவ்பகதூர் பட்டமும் பெற்ற கனம் பி. தியாகராஜ செட்டியார் அவர்கள் இந்தக் கனவானின் பெயர் அறியாதார் நம் சென்னை ராஜதானியில் மிகக் குறைந்தேயிருப்பார்கள்.
``ஜஸ்டிஸ் என்னும் ஆங்கிலப் பதத்திற்கு ``ஞாயம் என்று அர்த்தம்.
இந்த பத்திரிகை வெளிவந்தது முதல் அநேக அநியாயங்கள் தலையெடுக்காமல் அமிழ்ந்துபோயின. ஞாயம் தலையெடுத்தால் அநியாயம் அமிழ்ந்து போவது சகஜமேயாம்.
அப்படித் தலையெடுக்காமல் அமிழ்ந்து போனவைகளில் முதன்மையானது சுயராஜ்யம் சுயராஜ்யம் என்று கத்திவந்த பெருங்கப்பலேயாம். இந்தச் சுயராஜ்ய விஷயங்கள் வேண்டும் என்பதைக் கூடாதென்றாவது, அவசியமில்லா விஷயமென்றாவது நாம் சொல்லவந்ததல்ல. இந்த விஷயம் மிகவும் பெருத்ததென்றும், இது விஷயத்தைக் கோருமுன், காலதேசவர்த்தமானத்தை யோசித்து, சாதக பாதகங்களைக் கவனித்துச் செய்ய வேண்டியிருக்க எடுத்த ஒரு காரியத்தில் ஒன்றையாவது திருப்திகரமான முடிவுக்குக் கொண்டுவராத ஒரு அந்நிய தேசத்து ஸ்திரீரத்தினத்தைத் தலையாகக் கொண்டு ஆத்திரத்தோடும், ஆவேசத்தோடும் வெளிக்குவந்தது மிகவும் விசனிக்கத்தக்கதேயாம்.
தத்காலம் நமது மாட்சிமைதங்கி இங்கிலீஷ் ராஜாங்கத்தார் கேவலம் ஞாயம் என்னும் ஒரு விஷயத்தை யுத்தேசித்து கொடும்போரில் சிக்கிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கதியில் நமக்கு சுயராஜ்யம் வேண்டும், என்று ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும், வரம்பு மீறிக் கதறியதைச் சென்னை மாகாணக் கவர்னராகிய அதிமேன்மை தங்கிய பெண்ட்லண்டு பிரபு ஆரத்தீர யோசித்து இவர்கள் கதறுவது வரம்புமீறிய தென்றும், பொது ஜனங்களின் ராஜபக்திக்கும், விசுவாசத்திற்கும் ஹானி சம்பவிக்குமென்றும் தீர்மானித்து ஸ்ரீமதி அன்னிபெசண்டு அம்மையாரையும், அவர்கள் பக்கத் துணைவர்களையும் பந்தோபஸ்தில் வைத்தார்கள். இது இப்படியிருக்க, தென் இந்திய மஹாசபையின் கௌரவ காரியதரிசியாராகிய ராவ்பஹதூர் பி. தியாகராஜசெட்டியாரவர்களுக்கு பிரைவேட் ``ரஹசியம் என்று மேல் குறிப்பிட்டு ஒரு கடிதம் தபாலில் சீட்டொட்டாமல் அனுப்பப்பட்டது. அதைப் பிரித்துப் பார்க்க, நமது அருமை ஜஸ்டிஸ், திராவிடன் பத்திரிகைகளைக் கொளுத்திய சாம்பலும் கொஞ்சம் மயிரும் அடங்கியிருந்தது. இந்தக் கேட்டை நமது காருண்ய செட்டியாரவர்களின் கரம் தாங்கியதாகத் திராவிடன் வாயிலாக அறிந்தோம். இந்த வர்த்தமானம் நமக்கெட்டியதும், மனந்துடித்தது செய்கை மறந்து அசைவற்றிருந்தோம், என் செய்வோம்? இச்செய்கையை என்னென்று சொல்லுவது, கேவலம் சண்டாளர் செய்கையென்றே சொல்லலாம்! எந்தவிதமான கொடுஞ்செயல்களையும், சற்றும் அச்சமில்லாமல் செய்யும் வேஷப்பிராமணாள் செய்கையேதான் இது.
இவ்விஷயம் நிகழ்ந்த சங்கதியை திராவிடன் - தன் அங்கத்தில் தாங்கி ஒவ்வொரு வீடாகத் தெரிவித்திருக்கிறது. இதை நம்மோடுகூட நடந்து வரும் நேசப் பத்திரிகைகள் ஏதாவதொன்று சண்டாளர் செய்த சகிக்க முடியாத தீச்செயல்களைக் கண்டித்து நம்முடன் அனுதாபங்காட்டியதா? என்று கவனிப்போம். இதுவரை அப்படி ஒன்றுங்காணோம். அந்தோ என்ன பரிதாபம்! கேவலம் சென்னையில் எச்சில் சோற்றுக்குக் கச்சைகட்டி சண்டை செய்யும் `சோமாரிகள்கூட இத்தகைய காரியம் செய்யத் துணியவே மாட்டார்கள்.
நமது அருமையுள்ள திராவிடச் சகோதரர்களே!
நமக்கு நன்மை செய்து நமது தாழ்ந்த, பரிதாப நிலையிலிருந்து நீக்கி பிராமணர்கள் பொறாமைப்படும்படி முன்னேற்றத்திற்கு கொண்டு வர வேண்டுமென்று கங்கணங்கட்டிக் கொண்டு எந்தவிதமான பயமும் பீதியும் இல்லாமல் மாட்சிமைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் நம்மிடம் அனுதாபங்காட்டும் கடமையில் உலாவிவரும் தினசரிப் பத்தரிகைகளை உல்லங்கனப்படுத்தி பிராமணர் என்னும் ஒரு கூட்டத்தார் நடத்திவரும் வர்த்தமானப் பத்திரிகைகள் யாருடைய ஆதரவின்பேரில் நடைபெறுகிறது? முட்டிப் புகும் பார்ப்பார்கள் ஆதரவிலா? அல்லது அன்பும் அனுதாபமும் கொண்ட திராவிடர்கள் ஆதரவிலா? என்பதைச் சற்று சாவதானமாக யோசியுங்கள் தீர்க்காலோசனை செய்யுங்கள், செய்தால் - நமது திராவிடர்கள் அனுபதாபத்தால்தான் நடைபெறுகிறதென்னும் முடிவுக்கு கட்டாயம் வருவீர்கள்.
வந்தபின் அன்பர்காள்! தாங்கள் செய்யவேண்டிய தென்னவென்று யோசியுங்கள்; யோசித்துச் செய்ய வேண்டியதொன்றே. அதென்னவென்றால், இந்த நாளே, நல்லநாள், நல்ல முகூர்த்த நாள் நல்ல லக்கினம் அமைந்த நேரம் என்று முடிவு செய்து தாம் வழிபடும் கடவுள் சாக்ஷியாக நமக்குத் தீங்கே விளைக்கவேண்டுமென்னும் கங்கணத்தைக் கட்டிக் கொண்டு வேலை செய்யும் பார்ப்பனர்களால் நடைபெறும் பத்திரிகைகளின் சந்தாதாரர்களாக இருப்பவர்கள் அதைவிட்டு நீங்க வேண்டும். இதில் கொஞ்சமேனும் அஞ்சவாவது, பின்வாங்கவாவது கூடாது.
எந்த விஷயத்திலும் குறையில்லாமல் 3 பாஷைகளில் நம்மவர்களின், க்ஷேமத்தையே முதன்மையாகக் கொண்டு நடத்திவரும் தினப்பத்திரிகைகளை ஆதரியுங்கள். அவைகளிடம் அன்பு பாராட்டுங்கள்; நன்மையடையுங்கள்.
-------------- "திராவிடானுதாபி" -"திராவிடன்", 3.7.1917
Search This Blog
6.7.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment