Search This Blog

16.7.08

கற்பும்-பெரியாரும்



ஆஸ்திகப் பெண்: என்ன அய்யா நாஸ்திகரே! மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற விஷயங்களைப் பற்றி ஆட்சேபணைகள் எப்படி இருந்தாலும், பெண்களைக் கடவுளே விபசாரிகளாய்ப் பிறப்பித்துவிட்டார். ஆதலால் அவர்கள் விஷயத்தில் ஆண்கள் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டுமென்று சொல்லி இருப்பது மாத்திரம் பெரிய அயோக்கியத்தனம் என்பதே எனது அபிப்பிராயம். அது விஷயத்தில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.


நாஸ்திகன்: அம்மா! அப்படித் தாங்கள் சொல்லக்கூடாது. மனு தர்ம சாஸ்திரத்தில் மற்ற எந்த விஷயங்கள் அயோக்கியத்தனமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் மனு தர்ம சாஸ்திரம் சொல்லுவதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


ஆ-பெண்: அதென்ன அய்யா, நீங்கள் கூட அப்படிச் சொல்கின்றீர்கள். இதுதானா உங்கள் அறிவு இயக்கத்தின் யோக்கியதை ? எல்லாப் பெண்களுமா விபசாரிகள் ?


நா-ன்: ஆம் அம்மா! எல்லோருமேதான் 'விபசாரிகள் '. இதற்காக நீங்கள் கோபித்துக்கொள்வதில் பயனில்லை.


ஆ-பெண்: என்ன அய்யா உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரையுமா விபசாரிகள் என்று நினைக்கிறீர்கள் ?


நா-ன்: ஆம். ஆம். ஆம். இந்த உலகத்தில் உள்ள பெண்கள் மாத்திரமல்லர். மேல் உலகத்தில் உள்ள பெண்களையும்கூடத்தான் நான் 'கற்பு உள்ளவர்கள் ' என்று சொல்வதில்லை.


ஆ-பெண்: சொல்லுவது தர்மமாகுமா ?


நா-ன்: கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தின் சாரமானது மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவது எப்படிப் பொய்யாகும்; அதர்மமாகும். சொல்லுங்கள் பார்ப்போம். வேண்டுமானால், அது சரியென்று ருஜுப்படுத்தவும் தயாராய் இருக்கிறேன்.


ஆ-பெண்: என்ன ருஜூ! நாசமாய்ப்போன ருஜூ! சற்றுக் காட்டுங்கள் பார்ப்போம்.


நா-ன்: நமது பெரியவர்கள் கற்பைப் பரீஷிக்கத்தக்க பரீஷைகள் வைத்திருக்கின்றார்கள். ஆதலால் அவர்களை நாம் சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது.


ஆ-பெண்: என்ன பரீஷை அய்யா அது ?


நா-ன்: சொல்லட்டுமா; ,கோபித்துக்கொள்ளக் கூடாது.


ஆ-பெண்: கோபமென்னையா ? மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம். தாராளமாய்ச் சொல்லுங்கள்.


நா-ன்: 'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை ' என்கிற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கைக் கேட்டிருக்கிறீர்களா ?


ஆ-பெண்: ஆம், கேட்டிருக்கிறேன்.


நா-ன்: சரி...ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுது. குடிக்கத் தண்ணீர் கிடையாது. தயவு செய்து ஓர் இரண்டு உளவு (2 அங்குலம்) மழை பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.


ஆ-பெண்: இது நம்மாலாகின்ற காரியமா ? தெய்வத்திற்கு இஷ்டமிருந்தாலல்லவா முடியும் ? இந்த ஊர்க்காரர்கள் என்ன அக்கிரமம் பண்ணினார்களோ! அதனால இந்தப் பாவிகள் மழை இல்லாமல் தவிக்கின்றார்கள்.


நா-ன்: எந்தப் பாவி எப்படித் தவித்தாலும், நீங்கள் கற்புள்ளவர்களாயிருந்தால், மழை பெய்யுமென்றால் பெய்துதானே ஆகவேண்டும். அல்லது இந்த ஊரில் ஒரு கற்புள்ள பெண்ணாவது இருந்தால் மழை பெய்துதானே தீர வேண்டும். எப்போது பெண்கள் சொன்னால் மழை பெய்வதில்லையோ, அப்போதே பெண்கள் எல்லாம் கற்புள்ளவர்கள் அல்லர். விபசாரிகள் என்று ருஜுவாகவில்லையா ? பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். இதையெல்லாம் நான் சொல்லவில்லை. வேதங்களும் சாஸ்திரங்களும் சொல்லுகின்றன. ஆகையால், இனிமேல் சாஸ்திரங்களைப் பற்றிச் சந்தேகப்படாதீர்கள். அதிலும் ரிஷிகளும் முனிவர்களும் சொன்ன வாக்கியமும், கடவுள் சொன்ன வேதத்தின் சத்தாகியதும், இந்த மதத்திற்கு ஆதாரமானதும், மோட்சத்திற்குச் சாதனமானதுமான மனுதர்ம சாஸ்திரம் பொய்யாகுமா ? அதனால்தானே நான்கூட கலியாணம் செய்துகொள்ளவில்லை.


ஆ-பெண்: எதனால்தான் ?


நா-ன்: பெண்களைக் கலியாணம் செய்து கொண்டால் புருஷன்மார்கள் அவர்கள் விபசாரித்தனம் செய்யாமல் ஜாக்கிரதையாகக் காப்பாற்ற வேண்டுமென்று மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்கிறதனால்தான்.


ஆ-பெண்: பின்னை என்ன செய்கின்றீர்கள் ?


நா-ன்: கடவுளோ பிறவியிலேயே பெண்களை விபசாரிகளாய்ப் பிறப்பித்துவிட்டார். யார் காப்பாற்றிப் பார்த்தும் முடியாமல் போய்விட்டது. சாஸ்திரங்கள் நிபந்தனையின்படி ஒரு சொட்டு மழைக்கும் வழியில்லை. கற்பு உள்ள பெண் என்று தெரிவதற்கு மனித முயற்சியை மீறி நடக்க முடியாத காரியங்களைச் செய்து காட்டவேண்டுமென்ற கதைகளும் எழுதி வைத்திருக்கிறார்கள்.


மழை பெய்ய வைப்பவளும், வாழைத் தண்டை எரிப்பவளும், சூரியனை மறைப்பவளும், இரும்புக் கடலையை வேக வைப்பவளுமே பத்தினிகள் என்று லைசென்ஸ் பெற முடிகிறது. ஆதலால் எவனோ கட்டிக் கொண்டு காப்பாற்றட்டும். கடவுள் செயல் பிரகாரம் நமக்குக் கிடைப்பது கிடைக்கட்டும் என்பதாகக் கருதிச் 'சிவனே ' என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றமாட்டானா என்கிற தைரியம் உண்டு.



ஆ-பெண்: அப்படியானால், நீங்கள் முன் சொல்லிக் கொண்டிருந்ததில் ஒன்றும் குற்றமில்லை. இந்த மனுதர்ம சாஸ்திரமும், வேதமும், பொய்யாமொழியும், நீதியும் இவற்றை உண்டாக்கியதோ அல்லது ஒப்புக்கொண்டதோ ஆன கடவுளும் நாசமாய்ப் போகட்டும். இனிமேல் இந்த ஆஸ்திகம் நமக்கு வேண்டவே வேண்டாம். நம் எதிரிகள் நாட்டுக்கும் வேண்டாம்.


----------------- ஆகஸ்டு 1, 1945 'குடி-அரசு ' இதழில் தந்தை பெரியார் அவர்கள் 'சித்திர புத்திரன் ' என்ற புனை பெயரில் எழுதிய கட்டுரை.

4 comments:

bala said...

தமிழ் ஓவியா அய்யா,

கற்பு பற்றி தாடிக்காரரின் கருத்தும்,குஷ்பு அம்மாவின் கருத்தும் ஒத்துப் போவதால்,நம்ம மானமிகு அய்யா குஷ்பு அம்மாவுக்கு "தாடி இல்லாப் பெரியார்" என்ற பட்டத்தை கொடுத்து கெளரவிக்கலாம்.நீங்க தான் இதை மானமிகு கருப்பு சட்டை அய்யாவிடம் சிபாரிசு செய்யணும்.செய்வீங்களா?

பாலா

Thamizhan said...

கூழைக் கும்பிடுகளின் கவண்த்திற்கு.....

மாமி:பிரமோஷன்,பிரமோஷன்?
வெள்ளைக்கார துரை:சேங்ஷ்ன் ட்
சேங்ஷன் ட்!

மகளிர் மன்னிக்கவும்.இது மர மண்டைகளுக்காக!

தமிழ் ஓவியா said...

அரைவேக்காடு பாலா,

கடவுள்கள் கற்பித்தவைகள் என்று சொல்லப்பப்பட்ட புளுகினிக் கதைகள் அடிப்படையில் பெரியார் எழுதியுள்ளார். உங்கள் கோபம் கடவுள் அல்லது அதைக்கற்பித்தவன் மீது இல்லாமல் பெரியார் மீது பாய்கிறது.

மனுதர்மசாஸ்திரம் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
இதோ உங்கள் பார்வைக்கு:

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய் ,துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். ( அத் 9. சு.17)

பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்போது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்திரவு பெற்றுக்கொண்ட தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாம். (அத் 9. சு.59)

கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல பூசிக்கவேண்டியது. (அத் 5. சு.154)

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யெளவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. (அத் 5. சு.148)

பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. (அத் 11 சு.65)
இதைவிட மோசமாக கீதை போன்ற நூல்களில் காண்ப்படுகிறது.

இப்ப உங்கள் கோபம் யார் மீது திரும்ப வேண்டும் நியாயமா பார்ப்பனர்கள்மீதும் அவர்கள் உண்டாக்கிய சாஸ்திரங்கள் மீது அல்லவா ?
இதையும் பொருட்படுத்தாமல் பெரியார் மீதுதான் என்றால் உங்களையே >>>>...உங்களைப்போல் எழுத எனக்கு கூசுகிறது.

bala said...

//அரைவேக்காடு பாலா,
உங்கள் கோபம் கடவுள் அல்லது அதைக்கற்பித்தவன் மீது இல்லாமல் பெரியார் மீது பாய்கிறது.//

//கூழைக் கும்பிடுகளின் கவண்த்திற்கு.....

மாமி:பிரமோஷன்,பிரமோஷன்?
வெள்ளைக்கார துரை:சேங்ஷ்ன் ட்
சேங்ஷன் ட்!//


மானமிகு கருப்பு சட்டை அய்யாவின் அரை டிக்கட் தொண்டரிப்பொடிகளில் முக்கியானமாவரான தமிழ் ஓவியா அய்யா,

நான் எங்கே அய்யா கோபம் கொண்டேன்?திராவிடத் தமிழர்கள் கோவில் கட்டி தொழுத குஷ்பு அம்மாவுக்கு,"தாடி இல்லாப் பெரியார்"
பட்டம் தருமாறு மானமிகு அய்யாவிடம் சிபாரிசு செய்யுமாறு சொன்னேன்.கண்டபடி கண்டவர்களுக்கு பட்டம் கொடுத்து மகிழ்வது திராவிட பாரம்பர்யம் தானே;பின் ஏன் உங்களுக்கு கடுப்பு ஏற்படுகிறது?தமிழன் அய்யாவைப் பாருங்க, ஏதோ காமெடியா எழுத சீரியஸா முயற்சி செய்யறாரு.முடியலன்னாலும் முயற்சியைப் பாரட்டணும் அல்லவா?அவர் தான் தாடிக்கார மாமாவின் உண்மையான சீடர்,நீங்களல்ல.மன்னிக்கவும்.

பாலா