Search This Blog

1.7.08

திராவிடம் என்ற சொல் தமிழ்ச் சொல்லா? -'சன் டி.வி.' இராமாயணத்தை எதிர்த்து போராட்டம்? -- கி.வீரமணி பதில்கள் - 2




குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில் (16-6-2008) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பயிற்சி மாணவர்களுக்கு அளித்த பதில்கள்.:

கருப்புச் சட்டை அணிவது எப்பொழுது முதல்?


மாணவர் கேள்வி: திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிவது என்பது எப்பொழுது முதல் நடைமுறைக்கு வந்தது?

தமிழர் தலைவர்: 1944-இல் திராவிடர் கழகம் உருவானது. நம்முடைய இயக்க வரலாற்றிலேயே ரொம்பத் தெளிவாக இருக்கிறது. தோழர்கள், தமிழர் தலைவர் மற்றும் இயக்க வரலாறு நூல்களை வாங்கிப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். இப்பொழுது புதிதாகப் போட்டிருக்கின்ற நூலிலிலும் இது தெளிவாக இருக்கிறது. 29-9-1949 முதல் கருப்புச் சட்டை அணியப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

கடவுளர் படங்களை அகற்ற என்ன செய்யலாம்?

மாணவர் கேள்வி: அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் இருப்பதை அகற்றுவதற்கு என்ன செய்யலாம்?

தமிழர் தலைவர்: தொடர்ந்து போராடிக் கொண்டேயிருக்க வேண்டும். நாம் விடுதலையில் எழுதும்போது அரசாங்கம் புரிந்துகொள்கிறது, கேள்வி கேட்கிறது.
ஆங்காங்கே இருக்கக் கூடிய இந்துத்துவா மனப்பான்மை உள்ள சில அதிகாரிகளுடைய கோளாறுகளினாலே இது நடக்கிறது. போராடலாம். எங்கெங்கே இது ஏற்படுகிறதோ, அங்கு அவர்களுக்கு கண்டன அறிக்கை கொடுக்கலாம். அதற்கடுத்து வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நம்முடைய வழக்கறிஞர்கள் ஏராளம் இருக்கிறார்கள். நீதிமன்றங்களுக்கே சென்று தடை ஆணையை வாங்கி அதை நிறுத்தலாமே.

நீதிமன்றங்களின் தீர்ப்புகள் இருக்கின்றன

நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் சாதகமாக இருக்கின்றன. மதுரை உயர்நீதி மன்றத் தீர்ப்புகளினாலே பல இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடிய, போக்குவரத் திற்கு இடைஞ்சலாக இருக்கக் கூடிய கோயில்கள் இடிக்கப் பட்டிருக்கின்றன. அதையெல்லாம் பயன்படுத்தி நாம் இடையறாமல் போராடி வெற்றிபெற வேண்டும். போராடாமல் வெற்றி பெற முடியாது.

சமஸ்கிருத மொழியில் உள்ள ஊர்ப் பெயர்கள்

மாணவர் கேள்வி: சமஸ்கிருத மொழியில் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழில் மாற்றுவதற்கு அரசை வற்புறுத்துவீர்களா?

தமிழர் தலைவர்: ஏற்கெனவே கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டுதான் வருகிறது. தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று தான் வருகின்றன. அது தொடரும்.

திராவிடம் என்ற சொல் தமிழ்ச் சொல்லா?

மாணவர் கேள்வி: திராவிடம் என்ற சொல் தமிழ்ச் சொல்லா?

தமிழர் தலைவர்: இதைப்பற்றி ரொம்பத் தெளிவாக அய்யா அவர்களே எழுதியிருக்கின்றார்கள். அது தமிழ்ச் சொல்லாக இருந்தாலும், தமிழ்ச் சொல்லாக இல்லாவிட்டாலும் தெளிவாக நம்முடைய இனத்தைக் குறிக்கக் கூடிய ஓர் ஆழமான அடை யாளச் சொல். எனவே நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். காபி தமிழ்ச் சொல் இல்லை என்பதினாலே யாரும் காபி குடிக்கமாட்டோம் என்று சொல்வதில்லை.

காபி என்பது வழக்கமாகிவிட்டது

நாம் தூங்கி எழுந்திருந்தவுடன் காபியைத்தான் குடிக்கின்றோம். இல்லை, இல்லை, அது தமிழ்ச் சொல் இல்லைங்க, நான் குடிக்கமாட்டேன் என்று யாரும் சொல்லுவதில்லை.
பழக்கத்தில் வந்தாகிவிட்டது. நமக்குத் தேவை என்பதில் வந்தாகிவிட்டது. தவிர்க்கவேண்டிய இடத்தில் தவிர்ப்போம். கையாளவேண்டிய இடத்தில் தாராளமாக கையாளுவோம். அதனால் ஆராய்ச்சி இரண்டு வகையாக இருக்கிறது.
அந்த ஆராய்ச்சிக்காகவே நாம் நம்முடைய உயிரை விட வேண்டிய அவசியமில்லை. திராவிடர் என்று சொல்லுவது தமிழ்.
வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய நூலைப் பார்த்தால் தெரியும். வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? என்பதிலே ரொம்பத் தெளிவாக எழுதியிருக்கின்றார்.
பல அறிஞர்கள் எழுதியிருக்கின்றார்கள். வேறு சிலர் மாறுபட்ட கருத்தையும் சொல்லுகிறார்கள். அந்த ஆராய்ச்சியில் நாம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நமக்கு நடைமுறைக்கு இது பயன்படுகிறது. ஆரியத்திற்கு எதிரான இனம் திராவிடர் இனம் என்பது தெளிவாக்கப்பட்டு விட்டது. ஆகவே அதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.


திரிசூலத்தை முறிக்கவேண்டும்

மாணவர் கேள்வி: உலக மயமாக்கல் தனியார் மயம், தாராள மயம், இவற்றை எப்படி எதிர் கொள்வது?

தமிழர் தலைவர்:திரிசூலத்தை முறிக்கவேண்டியது அவசியம். இந்த மூன்றும் திரிசூலம் மாதிரி. இந்த கொள்கையில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை. ஆகவே அதிலிருந்து மீட்சி தேவை என்பதால் ஒத்த கருத்துள்ள நாம் இடையறாமல் போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றோம்.
அந்தப் போராட்டம் உலக அளவிலே வெற்றி பெறாவிட் டாலும் கூட, இன்றைக்கு வெற்றி பெறக்கூடிய ஒரு சூழல் நிச்சயமாக ஏற்படும்.
இந்த நிலையை உருவாக்கக் கூடிய துணிவு நமக்கு உண்டு. ஆகவே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம். போராட்டம் இல்லாத வாழ்க்கையே இல்லையே. அந்த உணர்வை நாம் இதிலும் கடைப்பிடிக்க வேண்டும். முன் னெடுத்துச் செல்ல வேண்டும்.

'சன் டி.வி.' இராமாயணத்தை எதிர்த்து போராட்டம்?

மாணவர் கேள்வி: சன் டி.வி.யில் ஒளிபரப்பப்படும் இராமாயணத் தொடரை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா?

தமிழர் தலைவர்: தனிப்பட்ட முறையிலே அவர்களுக்கு பெரிய விளம்பரத்தை இதன்மூலம் நாம் கொடுக்கவேண்டிய அவசிய மில்லை.
எதோ `சன் டி.வி. மாத்திரம் இதுவரை ரொம்ப பகுத்தறிவு பிரச்சாரம் செய்த மாதிரியும், சன் டி.வி. ஒன்றுதான் இந்த மாதிரிப் பிரச்சாரம் செய்கிற மாதிரியும் நினைக்கத் தேவையில்லை. `சன் டி.வி. நாள்தோறும் ராசி பலன் நிகழ்ச்சி முதற்கொண்டு ஒலி - ஒளி பரப்பிக் கொண்டு வருகின்றது.

நமது பிரச்சாரத்தை முடுக்கிவிட வேண்டும்

ஆகவே பொதுவாக நமது பிரச்சாரத்தை இராமாயணத்தை எதிர்த்து இராமனுடைய யோக்கியதை என்ன என்பதை நமது கூட்டங்களில் எடுத்து விளக்க வேண்டும். நாம் நிறைய இராமாயண ஆராய்ச்சிப் புத்தகங்கள் போட்டிருக்கின்றோம்.

இராமன் எப்படி எப்பொழுது பிறந்தான் என்கிற விசயத்தை எடுத்து சொன்னாலே பொதுமக்கள் விளங்கிக் கொள்வார்கள். ஆகவே நாம் நம்முடையப் பிரச்சாரத்தை தொடர்ந்து முடுக்க வேண்டும். அதுதான் அதற்கு பதிலே தவிர தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு விளம்பரம் கொடுக்கிறமாதிரி அது ஆகிவிடக் கூடாது.

நம்முடைய போராட்டத்தை எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்

மாணவர் கேள்வி: அன்னை மணியம்மையார் அவர்கள் இராவண லீலாவை நடத்தினார்கள். அப்படி இப்பொழுது இயக்கம் நடத்துமா?

தமிழர் தலைவர்:அந்தக் காலகட்டம் அப்பொழுதே தேவைப் பட்டதைப் போல இன்னொரு அவசியம் வருகிறபொழுது செய்யலாம்.
ஏனென்றால் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் மாதிரி பல திட்டங்கள் இருக்கின்றன. இதிலே எதிரி ரொம்ப முட்டினான் என்றால் நிச்சயமாக அது இராவண லீலாவில்தான் முடியுமே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
ஆகவே அவசியம் வரும்பொழுது நாம் எதை நடத்துவது என்பதை தீர்மானிப்பதைவிட நம்முடைய எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். ஆகவே எதிரிகள் அதிலே தீவிரம் காட்டு கின்ற நேரத்திலே நாமும் பின் வாங்காமல் செய்யலாம்.
ஆகவே அவர்கள் செய்தார்கள் என்பதற்காக இன்னும் தீவிரமாக நாம் செய்வோமே தவிர பின்வாங்க மாட்டோம். அதற்குரிய அவசியம் வரவேண்டும். போராட்டங்கள் தேடி அலைய வேண்டிய ஒன்றல்ல. போராட்டத்திற்கு அவசியம் வரும்பொழுது பின் வாங்குவது நம்முடைய பழக்கமல்ல.

- இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் விடையளித்தார்.

-----------நன்றி: "விடுதலை" 29-30-6-2008

0 comments: