Search This Blog

15.10.08

குரான் பள்ளி வாசலில் இருக்கட்டும். அதற்கு அரசாங்க அலுவலகத்தில் வேலையில்லை!



இப்போது பகுத்தறிவாளர்கள் ஆட்சியான அறிஞர் அண்ணா ஆட்சியானது அரசாங்க சம்பந்தப்பட்ட அலுவலகங்களின் சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடவுள் மத சம்பந்தமான படங்களளை அகற்ற வேண்டும்ன்று உத்தரவு போட்டிருக்கிறது. சாதாரண ஒரு படம் எப்படிக் கடவுளாக முடியும்? அதை எடுத்து எறிவதால் மனம் புண்படுகின்றது எடுக்கக்கூடாது என்று பார்ப்பானும் அவனோடு சேர்ந்துக் கொண்டு பார்ப்பன அடிமைகளும் கூப்பாடு போடுகிறார்கள். எந்த சிறு மாற்றத்தையும் செய்ய பார்ப்பானும் காங்கிரஸ்காரனும் இடம் கொடுப்பதில்லை.

துருக்கி தேசத்தை அய்ரோப்பாவின் நோயாளி நாடு என்று சொல்லி வந்தார்கள். அந்த நாட்டுக்குக் கமால்பாட்சா சர்வாதிகாரியானான்; மதத்தலைவனை (கலிபாவை) ஆட்சியை விட்டு விரட்டிவிட்டதோடு அரசாங்க அலுவலகங்களிலிருந்த குரான் வாக்கியங்கள் அனைத்தையும் அழிக்கச் செய்தான். புனிதமான குரான் பள்ளி வாசலில் இருக்கட்டும். அதற்கு அரசாங்க அலுவலகத்தில் வேலையில்லை என்று சொல்லி அத்தனையும் அழிக்கச் செய்தான். பெண்களின் கோஸாவை நீக்கி அவர்களைப் படிக்கச் செய்தான். அரபி எழுத்துக்களை ரோமன்லிபியாக மாற்றினான். ஆண்கள் வைத்திருந்த தாடியையும் குல்லாவையும் மாற்றி அய்ரோப்பியர்களைப் போல உடை அணியச் செய்தான். இன்றைக்கு அந்த நாடு அய்ரோப்பியர்களால் பாராட்டப்படும் அளவிற்கு வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. மற்ற நாடுகளுடன் போட்டிப்போடுகின்றது. உலக வல்லரசுகள் என்பவைப் பயப்படும் அளவிற்கு அந்த நாடு வளர்ச்சியுற்றிருக்கிறது. அப்படித் துணிந்து காரியம் செய்தால் தான் முன்னேற முடியுமே தவிர மனம் புண்படுகிறது வெங்காயமென்று சொல்லிக் கொண்டிருந்தால் இன்னமும் காட்டு காட்டுமிராண்டியாக வேண்டியதுதானே தவிர முன்னேற்றமடைய வழியே கிடையாது.

------------------தந்தைபெரியார் - "விடுதலை" 5-12-1968

2 comments:

Unknown said...

ஐரோப்பாவின் நோயாளி என்றழைக்கப்படும் நாடு எது?

தமிழ் ஓவியா said...

பெரியாரின் சொற்பொழிவிலேயே விடை உள்ளது. நன்கு படியுங்கள்.
நன்றி.