Search This Blog

1.10.08

பக்தி செய்யும் பரிதாபத்திற்குரிய கொலைகள்! புத்தி வரவேண்டாமா?






இராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் அருகில் உள்ள மெரங்கார் (30.9.2008) கோட்டையில் வைக்கப்பட்டுள்ள சாகுண்டதேவி என்ற கடவுளை தரிசிக்கும் நவராத்திரி திருவிழாவில் கூடிய பக்தர்களின் கூட்டத்தில் 210 பேர் செத்தனர்; பல நூறு பேர் படுகாயம் என்ற செய்தி, கடவுள் நம்பிக்கையற்ற நம்மைப்போன்ற மனித நேயர்கள் நாத்திகர்களின் நெஞ்சைப் பிழிவதாக இருக்கிறது!

கடவுள் பக்தி மூட நம்பிக்கை எத்தகைய சோகத்தினை - இந்த உயிர்ப் பலிகள்மூலம் உருவாக்கியுள்ளது!

பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் முதிர்ந்த மூதுரைக்கு இதைவிட சரியான எடுத்துக்காட்டு வேறு வேண்டுமா?

இச்செய்தியை வெளியிட்ட தமிழ் நாளேடுகள் பயங்கர வாதம் என்ற சொல்லைச் சரியாகவே பயன்படுத்தியுள்ளன. இதன்படி இந்தப் பயங்கரவாதிகளின் படுகொலைகளையும் மிஞ்சிடும் கொடுமையை நிகழ்த்தியவர் யார்? நம்பிக்கையாளர்களே, மதவாதிகளே சொல்லுங்கள்! எல்லாம் வல்ல கடவுளா? கருணையே வடிவான கடவுளா? எங்கும் நிறைந்த கடவுளா? சொல்லுங்கள்!

சிலரைக் கொல்ல குண்டுகளை வைக்கும் பயங்கரவாதிகளுக்குச் சட்டப்படி கொலைத் தண்டனையும் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறோமே, அதே வாதம் இந்தக் கடவுள், கடவுளச்சிகளுக்குப் பொருந்த வேண்டாமா?

இது ஒரு முறையா? இல்லையே!

இதோ பட்டியல்!
2003 ஆகஸ்ட் 27 - நாசிக் கோயில் (மகாராட்டிரம்) 39 பேர் சாவு; 125 பேர் படுகாயம்.
2005, ஜன 25 - மந்திரதேவி கோயில் (மகாராட்டிரம்) 340 பேர் சாவு.
2008, ஆகஸ்ட் - நயினாதேவி கோயில் (இமாச்சலப்பிரதேசம்) 162 பேர் சாவு; 47 பேர் படுகாயம்.
2008 செப்டம்பர் 30 ஆம் தேதி - சாமுண்டிதேவி (ராஜஸ்தான்) 210 சாவு; 300 பேர் படுகாயம்!


கடவுள் கருணையே வடிவானவனா?

பக்தர்களே சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!

மதவாத பயங்கரவாதிகள் செய்த கொலை
2008 இல் - 157; பக்தியினால் ஏற்பட்ட கொலை 361.


யாரைத் தண்டிப்பது? எப்படி தண்டிப்பது? புத்தி வரவேண்டாமா?

மூட நம்பிக்கைகளின் முதுகெலும்பை முறித்து பகுத்தறிவுப் பாதைக்கு வாருங்கள்!

------------------கி. வீரமணி அவர்கள் 1-10-2008 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

2 comments:

ers said...

மதவாத பயங்கரவாதிகள் செய்த கொலை
2008 இல் - 157; பக்தியினால் ஏற்பட்ட கொலை 361.


கொலை கார சாமிகள் கையில் ஆயுதங்கள் தானே இருக்கு... அப்புறம் கும்பிடுறவங்களுக்கு வக்ரங்களை தானே அவற்றால் கொடுக்க முடியும்?

தமிழ் ஓவியா said...

சரியாகச் சொன்னீர்கள் தோழரே.
நன்றி