தன்னம்பிக்கை
அதிசயம் - ஆனால் உண்மை. மும்பையைச் சேர்ந்தவர் கிஷன், மாநில அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மகன் அஜய் மும்பையில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். தேர்வு அன்றைக்கு தந்தைக்கு திடீர் நெஞ்சுவலி - அந்த நேரத்தில் மகனை அழைத்தார், ஒருக்கால் நான் மரணம் அடைந்துவிட்டால் தேர்வு எழுதாமல் இருந்துவிடாதே, இதுதான் என் கடைசி ஆசை என்று என்று கூறினார். உண்மையிலேயே இறந்தும் விட்டார்.
பத்தாம் வகுப்பு பையன் என்ன செய்தான்? உற்றார், உறவினர்கள் தடுத்தனர் - உறுதியாக இருந்தான் தன் முடிவில். தந்தையை வீட்டில் சவமாகக் கிடத்திவிட்டு, தேர்வு எழுதச் சென்றான்; மாலை வந்து இறுதிச் சடங்குகளை நிகழ்த்தினான்; தொடர்ந்து அடுத்தடுத்த தேர்வுகளை எழுதினான்.
ஆச்சரியப்படும் விதத்தில் 70 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றிபெற்றான். அவனை நேரில் பார்க்காவிட்டாலும் ஒரு முறை கைதட்டலாம் என்று தோன்றவில்லையா?
பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும். தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
இன்று ஏடுகளில் இன்னொரு செய்தியும் வெளிவந்துள்ளது. ராகுல்காந்தியைப் பற்றிய செய்தி அது. மாணவர்களிடையே அவர் பேசும்போது ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறார். நான் சிறுவயதில் இருட்டைக் கண்டு பயப்படுவேன். அப்பொழுது என்னுடைய பாட்டி (இந்திரா காந்தி அம்மையார்) இருட்டில் தனியாக நடந்து பழகிப் பார், பயம் போய்விடும் என்றார். அவ்வாறே பழகினேன். பயத்திலிருந்து விடுபட்டேன் என்று கூறியிருக்கிறார்.
பேய், காட்டேரி, மூன்று கண்ணன், நான்கு கண்ணன் கதைகளை பிஞ்சுப் பருவத்திலேயே தாய்ப் பாலோடு ஊட்டி வளர்த்தால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் இருட்டாகத்தானே முடியும்!
கடவுள் நம்பிக்கை என்பது இந்த மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் கொழுத்த அப்பன்! அதிலிருந்து தான் இத்தியாதி, இத்தியாதி சங்கதிகள் எல்லாம் அணி வகுக்கின்றன.
மூடநம்பிக்கைகளில் ஊறித் திளைத்த பெற்றோர்கள்தான் இப்படி நடந்துகொள்வார்கள் என்றால், தொலைக்காட்சி பெட்டிகளும் இதே தொல்லையை கொடுத்துக் கொண்டுதான் வருகின்றன.
பத்தாம் வகுப்பு மாணவன் அஜய்யின் செயலும், ராகுல் காந்தியின் உரையும் கவனிக்கத் தக்கவை - பின்பற்றத்தக்கவை.
--------- மயிலாடன் அவர்கள் 6-7-2008 "விடுதலை" இதழில் எழுதியது
Search This Blog
7.7.08
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல பதிவு. நன்றி
தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து கருத்து தெரிவிக்கவும்
Post a Comment