Search This Blog

1.7.08

சொன்னதைச் செய்தேன்



ஓர் எசமான் குதிரை மேல் போனான். ஓர் ஆள் பாதுகாப்புக்குப் பின்னே போனான், குதிரை மீதிருந்த மூட்டை ஒன்று விழுந்துவிட்டது. எசமானுக்கு அது தெரியாது. ஆனால் வேலையாள் பார்த்தும் எடுக்காமல் வந்து விட்டான். வீட்டிற்கு வந்ததும் எசமான் “மூட்டை காணவில்லையே எங்கே” என்று கேட்டான். “எசமான், மூட்டை வழியில் விழந்துவிட்டது” என்றான் வேலைக்காரன், “அட! மடையா ஏண்டா விட்டுவிட்டு வந்தாய்? ஏன் எடுத்து வரவில்லை” என்றான் எசமான். “நீங்கள் எடுத்து வரும்படி சொல்லவில்லையே” என்று வேலையாள் சொன்னான். மடையா இனி எது விழுந்தாலும் எடுத்துவா என்றான் எசமான். வேலையாள் சரி, ஆகட்டுங்க என்றான்.

மற்றொரு தடவை எசமான் குதிரையில் போகும் போது குதிரை சாணம் போட்டது. உடனே வேலையாள் அவைகளை எல்லாம் எடுத்து வைத்து வேட்டியில் மூட்டை கட்டிக் கொண்டு போய் “எசமான் கீழே விழுந்தவை களை எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான். அதற்கு எசமான், “ஏண்டா மடப் பயலே இப்படி இதையெல்லாம் ஏன் கட்டிக் கொண்டு வந்து இருக்கின்றாய்?” என்றான். அதற்கு அவன் “எசமான் நீங்கள்தானே விழுகின்ற எதையும் விடாமல் எடுத்துவாடா என்று கூறினீர்கள்” என் றான். அதற்கு எசமான் “மூட்டை விழுந்ததற்குச் சொன்னால் அதற்காக இப்படியா செய்வது? போடா மடையா” என்று கூறினான். அவன் என்ன பண்ணுவான். அவன் புத்தி அப்படி, அவன் புத்தி வளர்ச்சியடையும்படி அவனுக்குப் பக்குவம் அளிக்கப்படவில்லை. அதுபோலத்தான் இன்று நமது சமுதாயத்தின், அறிவின் நிலையும் உள்ளது.

-----------தந்தைபெரியார் - "விடுதலை" - 6-10-1960த

0 comments: