Search This Blog

6.7.08

கல்லும் - கடவுளும் ------- புரட்சிக்கவிஞர்



புரட்சிக்கவிஞர் சொன்ன கதை

பெரியவர் ஒருவர், சிறுவன் ஒருவனை அழைத்துக் கொண்டு வழிப்பயணம் போனார். காலில் கல் தடுக்கி சிறுவன் கீழே விழுந்து விட்டான். எழுந்த அவன், எரிச்சலுடன் கல்லை எடுத்து வீசி எறிந்தான். பெரியவர் குனிந்து கல்லை எடுத்துப் பார்த்தார்.

அய்யய்யோ! தம்பி... மோசம் போனாய். சாமியை மிதித்தாய்! இப்போது அதை வீசி எறிந்துவிட்டாய். சாமி உன் கண்களை அவித்துவிடும். அந்தச் சாமிக் கல்லை எடுத்து வா. அதோ தெரியும் அங்காளம்மன் கோவில் முன் நட்டு வைத்து கும்பிடு! கும்பிடு! என்று அதட்டினார்.

சிறுவன், கல்தானே தாத்தா! அதுக்குப் போய் கும்பிடு போட வேண்டுமா? என்று கேட்டான்.
நீ கல்... கல் என்று மீண்டும் சொல்கிறாய். நன்றாக உற்றுப் பார். பூசை போட்டு, பொட்டும் வைக்கப்பட்டு இருக்கிறதே... தெரியவில்லையா? என்றார்.

ஆமாம், தாத்தா என்று கூறி ஓடிச் சென்ற சிறுவன், அந்தக் கல்லை எடுத்து நட்டு, விழுந்து விழுந்து கும்பிட்டான். கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

சிறுவன் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லி பெரியவரும் சாமிக்கு கும்பிடு போட்டுவிட்டு நடந்தார். சிறுவன் பின்தெடர்ந்தான்.

மதிய உணவு நேரம். சத்திரத்தில் சாப்பிட்டு விட்டுப் போய்விடலாம் என்று எண்ணி இருவரும் சென்று உண்ணத் தொடங்கினர். அப்போது, பெரியவர் வாயில் கல் ஒன்று சிக்கிற்று. தூவென்று துப்பினார்.

சிறுவன், என்ன தாத்தா? என்றான்.

கல் என்றார், தாத்தா.

சிறுவன் ஓடிச் சென்று கை அலம்பினான். தாத்தா உமிழ்ந்த கல்லை எடுத்து ஓரமாய் வைத்துவிட்டு, அதன்முன் விழுந்து கும்பிட்டான்.

ஏன்டா... மடையா.. சோற்றில் விழுந்த கல்லைக் கும்பிடுகிறாய்... அறிவு இருக்கிறதா, உனக்கு? ஆத்திரப்பட்டார் பெரியவர்.

என்ன தாத்தா... தெருவில் கிடந்த கல்லை சாமி என்று சொல்லி கும்பிடச் சொன்னீர்கள். இந்தக் கல் சோற்றில் அல்லவா கிடந்தது. இந்தச் சாமி உயர்ந்த சாமியாயிற்றே! இதைக் கும்பிட வேண்டாமா? என்றான், சிறுவன்.

தாத்தாவால் பதில் சொல்ல முடியவில்லை!



--------------- நன்றி: "பெரியார்பிஞ்சு"

0 comments: