Search This Blog

5.7.08

தமுக்கு அடித்தே கூட்டம் சேர்க்க முடியும்!





பொதுமக்கள் தந்த காசு

பெரியார் சிதம்பரத்தில் பொதுக் கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றிவிட்டு, தொடர் வண்டியில் திண்டுக்கல் வழியாக மதுரைக்குப் பயணமாகிறார். அவர் பயணித்தது சென்னை செங்கோட்டை மெதுவு ரயில். நான்கு பேர் கூடி கைகாட்டினால் கூட வழியில் நிற்கும் அசமந்த வண்டி. பயணக் கட்டணம் மிகமிகக் குறைவு. அதற்காகவே அய்யா அந்த வண்டியை மனமுவந்து தேர்ந்தெடுத்தார். நினைத்திருந்தால் பின்னால் வந்த துரித ரயிலை தேர்ந்தெடுத்திருக்கலாம்; ஆனால் கட்டணம் கூடுதல்.

எனக்கோ ரயில்வேயில் பயணச் சீட்டு தரும் வேலை. இரயில்வே நிலையம் புக நான் அறியலானேன். மூன்றாம் வகுப்பு நான்கு பேர் உட்கார வேண்டிய இருக்கையில் எட்டுப் பேர். அவர்கள் நடுவில் அய்யா. நான்கு தோழர்கள் அவரைச் சுற்றி அவர்களில் ஒருவர் புலவர் கோ.இமயவரம்பன் அவர் கையில் பிளாஸ்டிக் வாளி!

சின்னாளப்பட்டித் தோழர் கூடியிருந்தவர்களில் ஒருவர் அய்யாவை கும்பிட்டவாறு உரத்த குரலில் சொல்கிறார்: அய்யா! இந்த வண்டியிலேயே பயணம் செய்து மதுரையிலே இறங்குறீங்க. அங்கே நாளை இரவுதான் பொதுக்கூட்டம்; அதுவரை தங்களுக்கு வேறு நிகழ்ச்சி எதுவுமே இல்லே. நீங்க பெரிய மனசு வைத்து இங்கே இறங்கினால், இன்று மாலை சின்னாளப்பட்டியில் சிறப்பா கழக கூட்டத்தில் பேசலாம் என்றார்.

பெரியார் பாக்கெட் கடிகாரத்தை எடுத்துப் பார்த்துவிட்டு, இப்பவே பகல் மணி மூன்று. அதெப்படி மாலை ஆறு மணிக்கு கூட்டம் நடத்துவே என்டு எதிர் கேள்வி போட்டார், அய்யா! கேட்ட தோழர் விடுவதாயில்லை. அய்யா! தமுக்கு அடித்தே கொஞ்ச நேரத்தில் கூட்டம் சேர்க்க எங்களால் முடியும். இரவு இங்கேயே தாங்கள் தங்கலாம். காலையில் தங்களை சின்ன கார் வைத்து மதுரையில் கொண்டு விடுவது எங்கள் கடமை என்றார். அந்தத் தோழர் பேசி முடிக்கும் முன்பே அய்யா தலையசைத்து விட்டார். எல்லோரும் திண்டுக்கல்லில் இறங்கி விட்டனர். திண்டுக்கல் இரயில் நிலையம் அருகே இருக்கும் நகராட்சி பயணிகள் விடுதியில் தான் அய்யா ஓய்வு எடுக்கிறார். அய்யாவை பணிந்து ஒரு கும்பிடு போட்டேன். அய்யா யாரு? ஊர் உலகுக்-கெல்லாம் அய்யாவான அவருக்கு நான் அய்யாவாம்! என்ன வேடிக்கை!

அய்யா - நான் கழகத்தவன் புதுக்கோட்டை பூர்விகம் என்றேன்.
அப்ப, நீங்க செட்டிநாடா...
ஆமாம் அய்யா! எனக்கு இரயில்வே வேலை. இந்த ஸ்டேஷனே தான். அய்யா வருவது அறிந்து வண்டிக்கு ஓடி வந்து பார்த்தேன் என்றேன்.
நம்மவர்கள் இரயிலில் நுழைந்து உத்தியோகம் பார்ப்பது மிக அபூர்வம். பார்த்துப் பிழையுங்க! பார்க்கும் வேலையை நழுவ விட்டுடக் கூடாது என்றவர். அதுசரி, நாங்க சிதம்பரத்திலிருந்து மதுரை வரை டிக்கெட் எடுத்திருக்கோம். ஆனால் திண்டுக்கல்லில் இறங்கிவிட்டோம். திண்டுக்கல் - மதுரை இடைப்பட்ட தூரம் பயணம் செய்யாமல் போச்சு. ஆனால், பணத்தை வசூல் செய்து விட்டது. இரயில்வே நிர்வாகம். நாங்க பயணம் செய்யாத தூரத்துக்கு காசு ஏதும் திருப்பி கிடைக்க சட்டத்தில் வழியுண்டா?

வழி வகையிருக்குங்க அய்யா! பயணம் செய்யாத டிக்கெட்டை திண்டுக்கல் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சரண்டர் செய்தால் ஒரு இரசீது தருவார். அதை திருச்சி இரயில்வே தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி பாக்கிப் பணம் கேட்டு எழுதினால் பணம் வரும்
வரட்டுமே, நம்ம பணமாச்சே, கசக்கவா செய்யும்

மொத்தம் அய்ந்து பேர். பத்து ரூபாய் திருப்பி கிடைக்கும். இது வாங்க நாம நமக்கு ரூபாய் தபால் செலவு அது இதுன்னு ஆகுமே!

ஆகட்டுமே! பைசாவே ஆனாலும் அதுவும் காசுதானே! அதுவும் கழகத்துக்கு வரவேண்டிய காசு. சொல்லப்போனால் பொதுமக்கள் தந்த காசு! புலவரே! அய்யாவோட ஸ்டேஷன் போங்க; முதலில் இரசீது வாங்குங்க; இந்தாங்க அய்ந்து பேர் டிக்கெட். இரசீதை அய்யாவை வைத்து அவர் சொல்ற முகவரிக்கு உடனே கடிதம் எழுதிப் போடுங்க பெரியார் உத்தரவிட்டார். உடனடியாகச் செய்து முடித்தோம். இப்படியெல்லாம் அய்யா பைசா பைசா-வாகத் சேர்த்தது தான் இன்று பொறியியல் கல்லூரிகளாக - மருத்துவமனைகளாக - கல்விக் கூடங்களாக பூத்துக் குலுங்குகின்றன!


- சந்தனத் தேவன் அவர்கள் "உண்மை" -ஜூலை 1-15 2008 இதழில் எழுதியது.

0 comments: