Search This Blog

4.7.08

"செல்வர் - வறியர்" தன்மை மாறவேண்டாமா





இந்திய நாட்டிலே ஏன் செல்வர் - வறியர் இருக்கிறார்கள்? சர்க்காரின் சட்டத்தின்படி சர்க்கார் பாதுகாப்புப்படி சில பணக்காரர்களும் ஏழைகளும் இருக்கிறார்களே தவிர, மேல்-கீழ் சாதியைப் போல, பணக்காரன் அவன் தாய் வயிற்றில் இருந்து வரும்போதே கொண்டு வந்ததல்ல; அதாவது அந்த மாதிரியான அமைப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதுதான். ஒருவனுக்கு நிறையப் பணமும், வீடுவாசலும், வியாபாரமும் இருக்கின்றன. இவற்றினுடைய பலனை இல்லாதவர்கள் - ஏழைகள் அனுபவிக்க முடியாதபடி சட்டம் இருக்கிறது. ஒரு மனிதன் ஏழ்மையினால் கஷ்டப்படுகிறான்; இன்னொருவன் செல்வத்தில் புரளுகிறான். இந்தத் தன்மை மாறவேண்டாமா?

சாதாரணமாக நம்முடைய ஏழ்மை நிலையை எடுத்துக்கொண்டால் கடந்த யுத்தத்திற்கு (1936-39) முன் எவ்வளவு ஏழ்மை நிலை இருந்ததோ அதைவிட அதிகமான ஏழ்மை நிலையும் - சோற்றுக்கும் துணிக்கும், வீட்டிற்கும், பண்டங்களுக்கும் கஷ்டமும் தரித்திரமும் இருப்பதோடு; பணக்காரர்களின் நிலையைப் பார்த்தால் முன்புள்ள பணக்காரர் நிலையும், இப்போதுள்ள பணக்காரர் நிலையும் - முன்பு பத்தாயிரக் கணக்கில் வைத்திருந்த பணக்காரனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இப்போது அவர்கள் இலட்சக் கணக்கிலும்; இலட்சக் கணக்கில் வைத்திருந்தவர்கள் பல இலட்சக் கணக்கிலும்; பல இலட்சக்கணக்கில் வைத்திருந்தவர்கள் கோடிக் கணக்கிலும் பணக்காரராய் இருக்கிறார்கள்.

அப்போதெல்லாம், ஒரு கோடி ரூபாய் சொத்துள்ளவர்கள் நம்முடைய நாட்டில் ஒருவர் இருவர் இருப்பார்கள். அதுவும் என்னவென்று கணக்குப் பார்த்தால் தகராறில்தான் இருக்கும் - அவ்வளவு ரூபாய் சொத்துக் கணக்கு வருவதற்கு! அதேபோல் இலட்ச ரூபாய் சொத்தும் ஊருக்கு இரண்டு மூன்றுக்கு மேல் காணமுடியாது. இப்போது நிலைமை என்ன வென்று பார்க்கும்போது, நமக்குத் தெரியாத கோடீஸ்வரர்கள் எத்தனையோ பேர் வந்துவிட்டார்கள்; இலட்சாதிபதிகள் ஏராளமாக ஆகிவிட்டார்கள்.


--------------------- சென்னை ஆயிரம்விளக்கில், 29.2.1952-இல் தந்தைபெரியார் அவர்கள் சொற்பொழிவு "விடுதலை" 4.3.1952

0 comments: