Search This Blog
15.12.08
வி.பி.சிங் தமிழ்நாட்டைத்தான் நேசித்தார்
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் படத்திறப்பு
தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு நிரந்தர நினைவுச்
சின்னம் அமைக்கவேண்டும் டெல்லி பெரியார் மய்யத்தை
பிப்ரவரியில் முதல்வர் கலைஞர் திறக்கிறார்
தமிழர் தலைவர் முக்கிய அறிவிப்பு- வேண்டுகோள்
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுடைய படத்தை தமிழக முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமிழகத்தில் வி.பி.சிங் அவர்களுக்கு சிறப்பான நிரந்தர நினைவுச் சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வரும் பிப்ரவரியில் டெல்லி பெரியார் மய்யத்தை தமிழக முதல்வர் கலைஞர் திறக்கிறார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
தமிழர் தலைவர் உரை
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து ஆற்றிய உரையின் முக்கிய செய்தி வருமாறு:-
வி.பி.சிங் அவர்களுடைய படத்திறப்பு
மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அடக்கப் பட்ட, ஒடுக்கப்பட்ட - ஆமைகளாய், ஊமைகளாய் இருந்த மக்களுக்கு எப்படி பாடுபட்டார்? அவருடைய பெருமைகள் என்ன? என்பதை நாடறியச் செய்ய வேண்டும் என்றும்; அவருக்குப் படத்திறப்பு விழாவை விரைவில் நடத்திட வேண்டும் என்று ஆணையிட்டதைப்போல கலைஞர் அவர்கள் கூறினார்கள்.
திராவிடர் கழகம் நடத்துகின்ற விழாவிலே வி.பி.சிங் அவர் களுடைய படத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டு வந்திருக்கின்றார்கள். இதில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று நாம் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாம் எல்லோரும் இணைந்துதான் - வி.பி.சிங் அவர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகின்ற இந்தப் படத்திறப்பு விழாவை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
வி.பி.சிங் தமிழ்நாட்டைத்தான் நேசித்தார்
வி.பி.சிங் அவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்திலே பிறந்திருந் தாலும் கூட, அவர் தமிழ்நாட்டை - தமிழ் நாட்டு மக்களைத்தான் நேசித்தார் என்பது உலகம் அறிந்து ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு செய்தியாகும்.
தந்தை பெரியார் அவர்கள், இதுபோன்ற மாமனிதர்கள் மறைந்த பொழுது இயற்கையின் கோணல் புத்தி என்று சொல்லு வார்கள். இயற்கையின் அந்தக் கோணல் புத்தி - பாயக்கூடாத வர்கள் மீது பாய்ந்திருக்கிறது. இங்கே பேசிய நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் அறிவுக்கரசு, எப்படிப்பட்ட புரட்சியை வி.பி.சிங் அவர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள் என்பதை இங்கே சுட்டிக் காட்டினார்.
60 கோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு
60 கோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசிலே வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர்கள். அதற்கு முன்பு மத்திய அரசிலே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத நிலைதான் இருந்தது.
இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நீதிக்கட்சித் தலைவர்களின் முன்னோடியான சர்.பிட்டி தியாகராயர் அவர்களுடைய பெயராலே அமைந்த அரங்கத்தில் நடைபெறுகிறது.
தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சித் தலைவர்கள் போன்றவர்கள் சமூக நீதிக்காகப் பாடுபட்டார்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம்முடைய தலைவர் கலைஞர் போன்றவர்கள் சமூக நீதிக்காகப் பாடுபட்டார்கள்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களாலே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்ச்சி, காமராசர் அவர்களாலே ஏற்படுத்தப்பட்ட கல்விப் புரட்சியின் விளைவாக இந்தியாவிற்கு தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்தது.
மண்டல் அறிக்கை வி.பி.சிங் அறிவித்தார்
மண்டல் கமிசனைப் பற்றி யாரும் கவலைப்படாத நிலை - நெருங்க முடியாத நிலை இருந்தது. வி.பி.சிங் அவர்கள் தேர்தல் அறிக்கையிலே சொன்னார்கள். நாங்கள் மத்தியிலே ஆட்சிக்கு வந்தால் மண்டல் கமிசன் அறிக்கையை அமல்படுத்துவோம் என்று சொன்னார்கள்.
வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்தவுடன் துணிச்சலாக மண்டல் கமிசன் அறிக்கை அமல்படுத்தப்படும். நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தார்கள்.
கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித அடிப்படையில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். கல்வித் துறைக்கு அதை அவர்கள் அமல்படுத்த முடியவில்லை.
பார்ப்பனர்கள் எதிர்ப்புக் காட்டினார்கள்
வி.பி.சிங் இதை அறிவித்தபொழுது டெல்லியிலே உயர் ஜாதிக்காரப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பலரை ஏவிவிட்டார்கள்.
சில அப்பாவி மாணவர்களைத் தள்ளி - திட்டமிட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயராலே தீயிலே தள்ளி தீக்குளிக்க வைத்தார்கள்.
நாடாளுமன்றத்திலே வி.பி.சிங் பேசினார்
பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நாடாளுமன்றத்திலே பேசும் பொழுது, இட ஒதுக்கீட்டிற்காகப் பாடுபட்ட சமூகநீதித் தலைவர்களான தந்தை பெரியார் அவர்களையும், அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், ராம் மனோகர் லோகியா ஆகியோர் களுடைய பெருமைகளையும், அவர்களுடைய தொண்டுகளையும் பாராட்டி பதிவு செய்தார்கள். அப்படிப்பட்ட மாபெரும் புரட்சியாளர்தான் இன்றைக்குப் படமாக காட்சியளிக்கின்ற வி.பி.சிங் அவர்கள்.
ஒன்பது நீதிபதிகளில்
அதேபோல இந்திரா சகானி வழக்கிலே மண்டல் கமிசன் சம்பந்தப்பட்ட வழக்கிலே - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒன்பது பேர் தீர்ப்புக் கொடுத்தார்கள். உச்ச நீதிமன்ற ஒன்பது நீதிபதிகளில் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் மட்டும் மாறுபட்ட தனித்தன்மையான தீர்ப்பைக் கொடுத்தார்கள். பிரதமர் வி.பி.சிங் அவர்கள் - பாராளுமன்றத்திலே தந்தை பெரியார் அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசியதை - உச்சநீதிமன்றத் தீர்ப்பிலேயே அதை அவர்கள் லாவகமாகக் கொண்டு போய் பதிவு செய்திருக்கின்றார்கள்.
ராஜபரம்பரையிலே பிறந்த வி.பி.சிங்
புத்தர் எப்படி அரச வம்சத்திலே பிறந்தாலும் ஜாதியை ஒழிக்க பகுத்தறிவைப் பரப்ப எளிய மக்களுக்காக எப்படிப்பாடுபட் டார்களோ அதேபோல வி.பி.சிங் அவர்கள் ராஜ பரம்பரையிலே, பிறந்திருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர் அவர்கள்.
கலைஞரைப் பார்க்காமல் சென்றதில்லை
வி.பி.சிங் அவர்கள் எப்பொழுதெல்லாம் சென்னைக்கு வருகிறாரோ - அது கலைஞர் அவர்கள் அழைத்திருந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அல்லது மற்றவர்கள் அழைத்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்துப் பேசாமல் சென்றதில்லை. கலைஞர் அவர்கள் மீது அத்தகைய அன்பை, மரியாதையை காட்டியவர் அவர்.
ஆயிரம் முறை பிரதமர் பதவியை இழக்கத் தயார்
இந்தக் காலத்திலே ஒரு சாதாரண பஞ்சாத்து போர்டு பதவியைக்கூட பிறர் இழக்கத் தயாராக இல்லை. ஆனால் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது இடஒதுக்கீட்டிற் காக மண்டல் பரிந்துரையை அமல்படுத்துவேன் என்று அறி வித்ததற்காக - ஒரு கொள்கைக்காக தம்முடைய பிரதமர் பதவியையே இழந்தவர் அவர்.
அது மட்டுமல்ல - அவர் சொன்னார், இந்த மண்டல் கமிசனுக்காக, சமூக நீதித் தத்துவத்திற்காக நான் ஒரு முறை அல்ல - ஆயிரம் முறை பிரதமர் பதவியை இழக்கத் தயார் என்று அன்றைக்கு மாபெரும் அறிவிப்பைச் செய்து பதவியைத் துறந்த ஒரு கொள்கை வீரர், இலட்சிய வீரர் தான். இன்றைக்கு உங்கள் முன்னாலே படமாகக் காட்சியளிக்கக்கூடிய வி.பி.சிங் அவர்கள்.
ஒரு நல்ல பொருளை வாங்க வேண்டுமா? அதற்கு ஒரு நல்ல விலை கொடுக்கவேண்டும். நான் நல்ல பொருளை வாங்குவதற்காக நல்ல விலையைக் கொடுத்திருக்கிறேன் என்று துணிச்சலுடன் சொன்னார்.
அம்பேத்கருக்கு சிலை
வி.பி.சிங் அவர்கள் பாராளுமன்றத்திலே அம்பேத்கர் அவர்களுக்கு சிலை திறந்த பொழுது சொன்னார், கோயிலுக்குள் கொண்டுவரக் கூடிய சிலையை வடித்த சிற்பிக்கு கர்ப்பக் கிரகத்தில் அனுமதி இல்லை. அதுபோல, அரசியல் சட்டத்தை வடித்த சிற்பியான அண்ணல் அம்பேத்கருக்கு - கோயில் சிலைகளை வடித்தவர்கள் எப்படி கருவறைக்குள் செல்ல முடியாதோ அதுபோல பாராளுமன்றம் என்ற கர்ப்பக்கிரகத்திற்குள் இப்பொழுதுதான் அவருடைய சிலை உள்ளே நுழைய முடிந்தது; இன்றைக்கு அவருக்கு சிலை திறக்கப்படுகிறது என்று சொன்னார். அதேபோன்று, மாபெரும் புரட்சியாக இங்கு யார் கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைய முடியாது என்ற நிலை இருந்ததோ அவர்களுக்கெல்லாம் வாய்ப்புக் கதவுகளை திறந்து விட்டவர் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் ஆவார்கள்.
அப்படிப்பட்ட புரட்சியாளருடைய படத்தைத்தான் நம்முடைய தலைவர் - முதல்வர் கலைஞர் அவர்கள் இங்கே திறந்து வைத்திருக்கின்றார்.
வி.பி.சிங் திடீரென்று கேட்டார்
இதே தியாகராயர் நகரில் உள்ள பனகல் பார்க்கில் நடந்த ஒரு மாபெரும் நிகழ்ச்சியில் வி.பி.சிங் அவர்கள் பேசிக் கொண்டு வரும்பொழுது திடீரென்று ஒரு செய்தியைச் சொன்னர்கள்.
யாராவது உங்கள் முகத்தில் எச்சில் துப்பினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். எல்லோரும் சற்று அமைதியாக அவரைப் பார்த்தனர். இயல்பாக என்ன செய்வீர்கள்? துணிந்து சொல்லுங்கள் என்று கேட்டார்.
ஒரு தோழர் அந்த மாபெரும் கூட்டத்தில் எழுந்திருந்து பதில் சொன்னார், ஓங்கி அறைவேன் என்று. இதற்குப் பெயர்தான் சுயமரியாதை என்று விளக்கம் சொன்னார் வி.பி.சிங்.
இதற்கு முன் தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கருத்துக்களை அறிந்திராத அவர் இயல்பாக சுயமரியாதைத் தத்துவத்திற்கு இப்படி ஒரு விளக்கம் சொன்னார்.
டெல்லியிலிருந்து வந்த ஒரு செய்தி
இன்றைக்கு ஒரு நண்பர் - இண்டியன் எக்ஸ்பிரசில் வந்த செய்தியை டெல்லியிலிருந்து அனுப்பினார். அதில் வி.பி.சிங் அவர்களைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ராஜவம்சத்திலே வி.பி.சிங் பிறந்தவர் என்றாலும், எங்கெங் கெல்லாம் மக்களுக்கு குறைகள் இருந்ததோ அதை எல்லாம் முன்னின்று போக்கியவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
இன்றைக்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாத னையாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப் பட்டிருக்கின்றது.
வி.பி.சிங் அவர்களுடைய காலத்திலே இதற்காக அவர் போராடியிருக்கின்றார். வேலை வாய்ப்பு கிட்டாத ஒடுக்கப்பட்ட இளைஞர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பு கிட்ட வேண்டும் என்று பாடுபட்டவர் அவர்.
டில்லியிலே பெரியார் மய்யம் இடிக்கப்பட்டது. அப்பொழுது டெல்லி மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றார். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் சென்னை சைதையில் நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில் இங்கு வந்து பேசும்பொழுது சொன்னார்.
புல்டோசர் முன்னால் நின்று தடுத்திருப்பேன்
எனக்கு அந்தத் தகவல் தெரிந்திருக்குமேயானால் - நான் அந்த புல்டோசர் முன்னாலே நின்று என்மீது ஏற்றி என்னை அழித்து விட்டுத்தான் அந்த புல்டோசர் நகர்ந்திருக்க முடியும். அதற்காக என்னுடைய உயிரைத் தந்தாவது தடுத்திருப்பேன் என்று சொன்ன மாபெரும் கொள்கைப் பிடிப்பு கொண்ட மனித நேயர்தான் வி.பி.சிங் அவர்கள்.
மண்டல் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசிலே 27 சதவிகித இட ஒதுக்கீட்டுபடி வேலைவாய்ப்பு வழங் கப்பட்டது. அப்பொழுது சீத்தாராம் கேசரி அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தார். ராஜசேகர் என்ற முதல் பிற்படுத்தப்பட்டவர்
அவர்தான் விசுவ கர்ம இனத்தைச் சார்ந்த ராஜசேகர் என்ற பிற்படுத்தப்பட்டவரை கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்று அந்த முதல் வேலை வாய்ப்புப் பணியினை துவக்கி வைத்து நடைமுறைப்படுத்தினார்கள். இந்தச் செய்தியை அறிந்து சீத்தாராம்கேசரி அவர்களுக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தேன்.
வி.பி.சிங் அடைந்த மகிழ்ச்சிக்கு
அடுத்ததாக - அமெரிக்காவிலே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த வி.பி.சிங் அவர்களிடத்திலே தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, அவருடைய மகத்தான பணியைப் பாராட்டிச் சொன்ன பொழுது, நீங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்று விட்டீர்கள் என்று சொன்ன பொழுது அவர் அன்றைக்கு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
எனக்கு இப்பொழுதே உடல் நலம் குணம் ஆனது போல் தோன்றுகிறது என்று - அளவுகடந்த மகிழ்ச்சியோடு சொன்னார்.
வி.பி.சிங் கையெழுத்திட்டிருக்கிறார்
இங்கே இந்த மேடையிலே திறக்கப்பட்ட படம் வி.பி.சிங் படம் - ஏதோ சிறியதாக இருக்கிறதே என்று கூட நீங்கள் நினைக் கலாம்! வேறொன்றுமில்லை. விபி.சிங் அவர்களுடைய படத்தின் மீது வி.பி.சிங் அவர்களே தமிழில் கையெழுத்துப் போட்ட அதே படத்தைத்தான் இங்கு வைத்திருக்கின்றோம்!
அதைத்தான் நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திறந்தார். வி.பி.சிங் தமிழ்மொழியை நேசித்தார்.
தமிழ்நாட்டு மக்களைநேசித்தார்
தமிழ்நாட்டு மக்களை நேசித்தார். வி.பி.சிங் சிறந்த கவிஞர். சிறந்த ஓவியர். அவர் எழுதிய இந்திக் கவிதை நூல் - நாங்கள் அப்படியே தமிழில் மொழி பெயர்த்து, திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிட்டோம்.
ஒரு துளி பூமி - ஒரு துளி வானம்
அந்த நூலின் பெயர்தான் ஒரு துளி பூமி - ஒரு துளி வானம் அவருடைய கவிதையில் பகுத்தறிவுக் கருத்துகள் மிளிர்கின்றன. பிள்ளையார் சாணம் என்ற கவிதையிலும் சோதிடர் என்ற கவிதையிலும் சொல்லியிருக்கின்றார்.
அந்த நூலை சென்னைக்கு வந்து கலைஞர் அவர்களுடைய கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து அந்த நூலைக் கொடுத்திருக்கின்றார்.
வி.பி.சிங் அவர்களுக்குத் தமிழ் நாட்டிலே எப்படி நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்பதை நாங்கள் கேட்டு நம்முடைய தலைவர் செய்யக் கூடியவர் அல்லர். அவருக்குத் தெரியும் - எப்படி செய்வது? எப்பொழுது செய்வது? எதைச் செய்வது என்று. இதை எல்லாம் யாரும் கேட்காம லேயே செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவர் முதல்வர். நாங்கள் எல்லாம் அவருடைய ஆற்றலைக் கண்டு மகிழ்ச்சி அடைகின் றோம். எனவே, வி.பி.சிங் அவர்களுக்குத் தகுந்த நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த வேண்டும்.
பெரியார் மய்யத்தை கலைஞர் திறக்கிறார்
வடபுலத்திலே டெல்லியிலே விரிவாக கட்டப்பட்டுக் கொண் டிருக்கின்ற பெரியார் மய்யத்தை வரும் பிப்ரவரி மாதத்திலே நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் தான் திறந்து வைக்க இருக்கின்றார். அந்த இரண்டாவது பெரியார் மய்யம் வருவதற்கே காரணமாக அமைந்தவர் வி.பி.சிங் அவர்கள்.
அரங்கத்திற்கு வி.பி.சிங் பெயர்
எனவே டெல்லியிலே இருக்கிற பெரியார் மய்யத்தில் உள்ள ஒரு அரங்கம் வி.பி.சிங் அவர்களுடைய பெயராலே அமையும் என்பதை இந்த நேரத்திலே சொல்கிறேன் அது இயக்கம் சார்பானது.
ஆனால் மக்கள் சார்பாக - தமிழ் நாட்டின் சார்பாக அவருக்கு எப்படிப்பட்ட பெருமைகளை உருவாக்க வேண்டும் - எப்படிப் பட்ட நினைவுச் சின்னங்களை உருவாக்க வேண்டும் என்பதை நம்முடைய தலைவர் அவர்களே கூறுவார்கள்.
கலைஞர் அவர்கள் தான் சொன்னார்கள். இந்தக் கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டும். நாம் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கலைஞர் அவர்கள் சொன்னார். பல் வேறு நெருக்கடிகளுக்கிடையிலே இந்த படத்திறப்பு விழாவை முக்கியக் கடமையாகக் கருதி இங்கே வந்திருக்கின்றார்கள்.
வி.பி.சிங்கிற்கு தமிழ்நாட்டிலே நினைவுச் சின்னம்
வி.பி.சிங் அவர்களுக்கு தமிழ்நாட்டிலே, தலை நகரத்திலே எப்படிப்பட்ட ஒரு சிறப்பான நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களோ அவர்களோடு உடனிருந்து பெரியார் தொண்டர்கள் நாங்கள் பணியாற்ற இருக்கின்றோம் என்பதை எடுத்துக்கூறி அவருடைய உரையைக் கேட்க உங்களைப் போலவே நாங்களும் காத்திருக்கிறோம் என்ற காரணத்தால் என்னுடைய உரையை முடித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
-------------------நன்றி: "விடுதலை" 13-12-2008
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல பதிவு
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி சங்கரராம்
Post a Comment